டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழிவாங்கி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா

பட மூலாதாரம், Getty Images
கயானாவில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
கடினமான ஆடுகளத்தில் 171 ரன்களை இந்தியா எடுத்தது. ஆனால் 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு இங்கிலாந்து வீரர்கள் சுருண்டனர். இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஒவ்வொருவரும் திணறியதைக் காண முடிந்தது.
கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள் எடுத்தார். ஃபில் சால்ட் 5 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 3 பந்தில் ரன் எடுக்காமலும் மற்றும் மொயீன் அலி 10 பந்துகளில் 8 ரன்களிலும் வீழ்ந்தனர்.
ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா குறிப்பிடத்தக்க ஸ்கோரை எட்ட முடிந்தது. எனினும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி மீண்டும் ஒருமுறை ரசிகர்களை ஏமாற்றினார். அவரால் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
13 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்லாத இந்தியா, முதல் முறையாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை தோற்கடிக்கப்படாத தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.
டாஸ் வென்ற இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்ய இருக்கிறது. இரு அணிகளும் எந்தவிதமான மாற்றமும் இன்றிக் களமிறங்குகின்றன.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “மிகப்பெரிய ஆட்டம். ஸ்கோரை பெரிதாக உயர்த்த வேண்டும். ஆடுகளம் நன்கு உலர்ந்திருக்கிறது, பந்து பேட்டரை நோக்கி, மிகவும் மெதுவாக வரும் என நினைக்கிறேன்,” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில், “விக்கெட் நன்றாக இருக்கிறது. இந்த விக்கெட்டில் பந்து தாழ்வாக வரும் என்று பலரும் கூறுகிறார்கள். மழை பெய்திருப்பதால், ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பந்துவீசுவோம், அதனால்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தோம்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பவர்ப்ளேவில் க்ளீன் போல்டான விராட் கோலி
ரோஹித் சர்மா, கோலி ஆட்டத்தைத் தொடங்கினர். டாப்ளி வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா தேர்டுமேன் திசையில் பவுண்டரி அடித்தார். ஆர்ச்சர் வீசிய 2வது ஓவரில் ரன் சேர்க்க, கோலி, ரோஹித் திணறினர்.
டாப்ளி வீசிய 3வது ஓவரின் 2வது பந்தில், கோலி சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் 2 ரன் அடித்த கோலி, 3வது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
இந்த டி20 உலகக்கோப்பைத் தொடர் முழுவதும் கோலிக்கு மோசமான தொடராக அமைந்தது. அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி ரோஹித்துடன் சேர்ந்தார். இந்த உலகக்கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி கூட்டணி 4 ஓவர்கள்கூட முழுமையாக ஆடவில்லை, பவர்ப்ளே ஓவர்கள் வரைகூட நிலைக்கவில்லை. அதிகபட்சமாக இருவரும் முதல் விக்கெட்டுக்கு 39 ரன்களை வங்கதேசத்துக்கு எதிராகச் சேர்த்தனர்.
ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் ரோஹித் சர்மா இருமுறை பெரிய ஷாட்டுக்கு முயன்றும் பந்து பவுண்டரி செல்லவில்லை. இதனால் இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
டாப்ளே வீசிய 5வது ஓவரில் ரோஹித் சர்மா துணிந்து அதிரடிக்கு மாறினார். 2வது பந்தில் கிராஸ்பேட் மூலம் பவுண்டரியும், 4வது பந்தில் கவர் திசையில் ஒரு பவுண்டரியும் என11 ரன்கள் சேர்த்தனர்.
பவர்ப்ளேவின் கடைசி ஓவரை சாம் கரன் வீசினார். முதல் பந்தை நல்ல லென்த்தில் வீசினார். 2வது பந்தை ரிஷப் பந்த் பிளிக் ஷாட் அடிக்க முயன்று பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சூர்யகுமார் களமிறங்கி ஸ்ட்ரைட் திசையில் பவுண்டரி அடித்தார்.
பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் சேர்த்தது.

பட மூலாதாரம், Getty Images
மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தம்
ஏழாவது ஓவரை ரஷித் வீசினார். முதல் பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப்பில் ரோஹித் சர்மா பவுண்டரியும், 3வது பந்தில் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி விளாசி 9 ரன்கள் சேர்த்தார்.
எட்டாவது ஓவரை ஜோர்டன் வீசினார், இந்த ஓவரின் 4வது பந்தில் சூர்யகுமார் ஃபைன் லெக் திசையில் அருமையான சிக்ஸர் அடித்தார். கயானாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ரோஹன் கனாய் அடித்த சிக்ஸர் போன்று, காலை மடக்கி, ஃபைன் லெக்கில் சூர்யகுமார் பிரமாதன சிக்ஸரை விளாசினார்.
எட்டு ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் சேர்த்தது. அப்போது திடீரென மழை பெய்யத் தொடங்கவே ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ரோகித் சர்மா சூர்யகுமார் ஆட்டத்தால் இந்தியா 171 ரன்களை எட்ட முடிந்தது. இதன் பிறகு இந்தியப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை மிக எளிதாகச் சுருட்டினர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய அக்சர் படேல் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. அதேபோன்ற ஒரு போட்டியில் இந்திய அணி பழிவாங்கியிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












