பிரிட்டன் பிரதமருக்கு எவ்வளவு சம்பளம்? அவரது வேலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாம் எட்கிங்டன் & ஜெனிஃபர் கிளார்க்
- பதவி, பிபிசி நியூஸ்
2024, ஜூலை 4-ஆம் தேதி பிரிட்டன் நாட்டு மக்கள் தங்களின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறார்கள். எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அந்தக் கட்சியின் தலைவர், அமையவிருக்கும் புதிய அரசுக்கு தலைமை தாங்குவார்.
பிரிட்டன் பிரதமர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
இந்தியாவைப் போன்றே பிரிட்டனிலும் பிரதமர் தான் அரசாங்கத்தை வழிநடத்துபவர்.
இந்தியாவில் எப்படி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சியின் தலைவர், குடியரசுத் தலைவரிடம் ஆட்சிக் கோர அனுமதி கேட்பாரோ, அதே போன்று, பிரிட்டன் பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் தலைவர், பக்கிங்காம் மாளிகைக்கு வரச் சொல்லி, ஆட்சி அமைக்க அரசர் அழைப்பு விடுப்பார்.
ஒரு ஆளும் கட்சி, பொதுத் தேர்தல் இல்லாமலே புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிரிட்டன் பிரதமரின் வேலை என்ன?
சில அதிகாரங்கள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவற்றுக்கு பிரித்து வழங்கப்பட்டிருந்தாலும், அரசு கொள்ளைகளை மற்றும் முடிவுகளுக்கு பிரிட்டன் பிரதமரே இறுதியாக பொறுப்பாவார்.
அரசின் பிற உறுப்பினர்களான அமைச்சர்கள் பிரதமர் தேர்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதில் மூத்த அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் உள்துறை, நிதி போன்ற துறைகளை வழிநடத்துவர்.
அமைச்சர்களை எந்நேரமும் நியமிக்கவோ, பொறுப்பிலிருந்து நீக்கவோ, பிரதமருக்கு அதிகாரம் உண்டு. அமைச்சகத்தை புதிதாக உருவாக்குவோ, நீக்கவோ முடியும்.
அரசருடன் சேர்ந்து, வரி மற்றும் செலவின கொள்கைக்கு பிரதமரும் பொறுப்பாவார்.
பிரதமரும் அவரது அமைச்சர்களும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று புதிய சட்டங்கள் இயற்றலாம்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் பிரதமருக்கு இருக்கும் வேறு சில அதிகாரங்கள் என்ன?
அரசின் முடிவுகளை அமல்படுத்தும் துறைகள் அனைத்தின் மீதும் பிரதமருக்கு முழு அதிகாரம் உண்டு.
வாரந்தோறும் அரசருடன் நடக்கும் சந்திப்பின் போது, அரசின் விவகாரங்கள் குறித்து அவருக்கு தெரிவிக்கப்படும். இந்தச் சந்திப்புகள் தனிப்பட்ட முறையில் நடக்கும். இந்த சந்திப்புகளின் போது என்ன பேசப்படுகிறது என்பது அதிகாரப்பூர்வமாக எங்கும் பதிவு செய்யப்படாது.
நாட்டின் பாதுகாப்பு குறித்த முடிவுகளையும் பிரதமர் எடுப்பதற்கு அதிகாரம் உண்டு. உதாரணமாக, பிரிட்டனின் படைகளை போர்க்களத்துக்கு அனுப்ப உத்தரவிட முடியும். எனினும், சமீப காலமாக, இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது.
பல்வேறு சிறப்பு பொறுப்புகளும் பிரதமருக்கு உண்டு. உதாரணமாக பிரிட்டன் வான் எல்லைக்குள் நுழையும் அடையாளம் தெரியாத அல்லது கடத்தப்பட்ட விமானத்தை சுட்டு வீழ்த்த வேண்டுமா இல்லையா என்று அவர் முடிவு செய்யலாம்.
பிரிட்டனின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அவர் அனுமதி வழங்க முடியும்.
‘நைட்ஹூட்’ ‘டேம்ஹூட்’ போன்ற பட்டங்களை பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவருக்கு வழங்க முடியும்.
இந்திய நாடாளுமன்றத்துக்கு இரு அவைகள் இருப்பது போல, பிரிட்டன் நாளுமன்றத்தின் மேலவை, ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ எனப்படும். அந்த அவையில் உறுப்பினராவதற்கு பிரதமர் பரிந்துரை செய்யலாம்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டன் பிரதமருக்கு சம்பளம் எவ்வளவு?
பிரிட்டன் பிரதமருக்கு இரண்டு வகையான சம்பளம் உண்டு.
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு, பிரிட்டன் நாட்டு நாணயத்தில் 91,346 பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.96.36 லட்சம்) வழங்கப்படும்.
பிரதமராக இருப்பதற்கு 80,807 பவுண்ட் வழங்கப்படுகிறது. எனினும் இதில் 75,440 பவுண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் 79.58 லட்சம்) மட்டுமே கோரிப் பெறப்பட்டிருக்கிறது.
பிரிட்டன் பிரதமர் எங்கு வசிப்பார்?
வழக்கமாக பிரதமர், எண் 10, டவுனிங் தெருவில் வசிப்பார். அங்கிருந்துதான் தனது பணிகளையும் மேற்கொள்வார். 1735-ஆம் ஆண்டு முதல் இதுவே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமாக உள்ளது.
எனினும், முன்னாள் பிதமர் போரிஸ் ஜான்சன் உட்பட சமீபத்திய பிரதமர்கள் சிலர், எண்.11-ல் வசித்து வந்துள்ளனர். எண்.10-ல் இருக்கும் இடத்தை விட, எண்.11-ல் அதிக இடம் இருக்கிறது.
இதை தவிர பிரதமருக்கு பக்கிங்காம்ஷைரில் ‘செக்கர்ஸ்’ என்ற ஒரு பண்ணை வீடும் உள்ளது.
செக்கர்ஸ் அறக்கட்டளைக்கு சொந்தமான அந்த 16-ஆம் நூற்றாண்டு பண்ணை வீடு நூறு ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. அங்கு உள் அரங்கு நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.
அரசின் விருந்தினர்கள் தங்குவதற்கும், இளைப்பாறும் இடமாகவும் அது பயன்படுத்தப்படுகிறது.
பிரிட்டன் பிரதமரின் பொறுப்புகள், கட்டுப்பாடுகள் என்னென்ன?
அதிகாரங்கள் பல இருந்தாலும், பிரதமர்கள் தாங்கள் நினைத்த முடிவை எடுத்துவிட முடியாது.
பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே சட்டங்கள் இயற்றப்படும்.
ஒரு அரசு மீண்டும் மீண்டும் தனது ஆதரவை இழந்து வந்தால், அந்த அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டு வர முடியும்.
இந்த வாக்கெடுப்பில் பிரதமர் தோற்றுவிட்டால், மற்றொரு பொதுத் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவாகலாம்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனின் முன்னாள் பிரதமர்கள் எவ்வளவு பணம் பெறுகிறார்கள்?
முன்னாள் பிரதமர்கள், தங்கள் பதவிக்கான ஆண்டு வருமானத்தின் 25% தொகையை பெற தகுதிப் பெற்றவர்கள்.
இதை தவிர, பொதுப்பணி படிகள் என 115,000 பவுண்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.21 கோடி) வரை பெற முடியும். இது, பொது வாழ்வில் அவர்கள் கொண்டிருக்கும் சிறப்பு அந்தஸ்து காரணமாக ஏற்படும் அலுவலக மற்றும் நிர்வாகச் செலவுகளுக்காக வழங்கப்படுகிறது.
2022ம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 2023ம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆறு முன்னாள் பிரதமர்கள் ரூ.6.51 கோடி பொதுப்பணி படிகள் கோரியுள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












