இந்தியாவுக்கு வங்கதேசம் வழியாக புதிய ரயில் போக்குவரத்து வசதி - எப்படி செயல்படும்? பலன் யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கு ரயில் போக்குவரத்து வசதி வழங்க முடிவு செய்ததால், தனது நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டது குறித்து வங்கதேசத்தின் பிரதமர் அலுவலகமான கணபாபனில் (ganabhaban) செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஷேக் ஹசீனா இவ்வாறு தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷேக் ஹசீனா, "நம் நாடு அளவில் சிறியது என்றாலும் இறையாண்மை கொண்ட நாடு. அந்த இறையாண்மையைப் பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் நமது அடையாளத்தைத் தக்க வைக்கவும் பணியாற்றி வருகிறோம்" என்றார்.
இந்தியா வங்கதேச மண்ணில் ரயில் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்த அனுமதிக்கும் முடிவு குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து வரும் விமர்சனங்கள் பற்றி அவர் கேள்வி எழுப்பினார்.
"ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் ஒப்பந்தங்கள் செய்வதால் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடும்? ஐரோப்பாவை பாருங்கள். அதற்கு எல்லைகள் இல்லை. அப்படி இருப்பதால் ஒரு நாடு இன்னொரு நாட்டை விற்றுவிட்டதாகக் கருத வேண்டுமா என்ன? தெற்காசியாவில் நாம் ஏன் இந்த ஒப்பந்தங்களில் பின்தங்க வேண்டும்?" என்றார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தியாவுடனான ரயில் போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்துவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
“இவ்வளவு காலம் மூடப்பட்டிருந்த இந்தியாவுடனான ரயில் போக்குவரத்து வசதிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்தத் திட்டங்கள் நம் வணிகத்தை எளிதாக்குகிறது. மேலும் தகவல் தொடர்பு அமைப்புகளும் திறக்கப்பட்டால், நம் நாட்டு மக்கள் அதிக பயன் பெறுவார்கள். மக்கள் கல்வி மற்றும் சிகிச்சைக்காக இந்தியா செல்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் அவர்களும் பயனடைவார்கள். வணிகங்கள் மேலும் மேம்படும்," என்று விளக்கினார்.
'நான் நாட்டை விற்கவில்லை'

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த ஷேக் ஹசீனா, நான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக நாட்டை யாரிடமும் விற்கவில்லை என்று கூறினார்.
"நான் எப்போதும் நாட்டின் நலன்களைப் பாதுகாப்பேன். நான் இந்த நாட்டை விற்கவில்லை, இந்த நாட்டை சுதந்திரமாக்கி விடுவித்துள்ளோம்" என்றார்.
``ஹசீனா நாட்டை விற்பதாகச் சொல்பவர்கள் இந்தியாவின் செல்வாக்கிற்கு அடிபணிவார்கள். ராணுவ ஆட்சியாளர்களான ஜியா, எர்ஷாத், கலீதா ஜியா ஆகியோர் முதலில் இந்தியாவுக்கு எதிராகப் பேசிவிட்டு, பிறகு அவர்களின் காலடியில் சரணடைந்தனர். இதை நாமே பார்த்து அறிந்திருக்கிறோம்" என்றார் காட்டமாக.
ஷேக் ஹசீனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இந்திய பயணத்தின் போது பத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்த விஷயங்களைக் கூறினார்.
பத்து ஒப்பந்தங்களில் ரயில் போக்குவரத்து ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வங்கதேச நிலத்தைப் பயன்படுத்தி இந்தியா தனது வணிகப் பொருட்களை நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ரயில் மூலம் நேரடியாகக் கொண்டு செல்ல உதவும்.
இந்தியா மற்றும் வங்கதேச எல்லையில் அதிகளவிலான சந்தைகள் மற்றும் விற்பனையகங்களை அமைக்க அரசாங்கம் ஆரம்ப முடிவை எடுத்துள்ளதாக ஷேக் ஹசீனா கூறினார்.
ரயில் போக்குவரத்து வசதி என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மேற்கொண்ட இந்திய பயணத்தின் போது கையெழுத்தான பத்து ஒப்பந்தங்களில் ரயில் போக்குவரத்து ஒப்பந்தமும் ஒன்று.
இது நடைமுறைக்கு வந்தால், வங்கதேச நிலத்தைப் பயன்படுத்தி ரயில் மூலம் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு நேரடியாக பொருட்களைக் கொண்டு செல்லும் வசதி இந்தியாவுக்கு கிடைக்கும்.
ஜூலை மாதம் வங்கதேசம் வழியாகத் தனது ரயில்களை இயக்கலாம் என்று இந்தியா தரப்பு கூறியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, வங்கதேசத்தின் சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி சாலை வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளைக் கொண்டு செல்ல இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வங்கதேசம்-இந்தியா இடையே ஐந்து வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், மூன்று பயணிகள் போக்குவரத்துக்காக, மீதமுள்ள இரண்டு சரக்கு பரிமாற்றங்களுக்காக இயக்கப்படுகிறது.
ஆனால், தற்போதைய நடைமுறைப்படி, ரயில்கள் எல்லையை அடைந்ததும், வங்கதேச எஞ்சினுடன் வங்கதேசத்திற்குள் நுழையும்.
புதிய ஒப்பந்தத்தின்படி, இந்திய சரக்கு ரயில்கள் மேற்கு வங்கத்தில் உள்ள கெடே எல்லையில் இருந்து வங்கதேசத்தில் உள்ள சுடங்கா பகுதிக்குள் நுழையும்.
இந்த ஒப்பந்தத்தால் வங்கதேசத்துக்கு என்ன பலன்?

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான இந்தப் புதிய ஒப்பந்தத்தின் பலன்கள் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் இரு அரசாங்கங்களும் ஒப்பந்தம் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் வங்கதேசத்திற்குப் பெரிய பலன் கிடைக்காது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் வங்கதேச வெளியுறவுச் செயலர் தௌஹீத் ஹொசைன் பிபிசி பங்களாவிடம் பேசுகையில், "இதுவரையிலான அனுபவத்தில், இந்தப் புதிய ஒப்பந்தத்திற்கு ஈடாக வங்கதேசம் அதிக பலன்களைப் பெறாது," என்றார். 2010இல் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, வங்கதேச அரசு இதன் மூலம் நாடு பொருளாதார ரீதியாகப் பயனடையும் என்று கூறியது.
உண்மையில் நடந்தது வேறு, வங்கதேசத்துக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக இந்தியா டன் கணக்கிலான போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்துகிறது. இதன் மூலம் டன் ஒன்றுக்கு ரூ.300 மட்டுமே வங்கதேசத்துக்கு கிடைக்கிறது என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தௌஹீத் ஹுசைன் "ஆண்டுக்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் லாபம் கிடைக்கும் என்று அப்போது கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவ்வளவு சம்பாதிக்கப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், வங்கதேச பொருளாதார நிபுணர் முஸ்தாபிசுர் ரஹ்மான், புதிய ஒப்பந்தம் கட்டண விகிதங்களை அதிகரிக்க அரசு ஒரு வழியைக் கண்டறிந்துள்ளது என்று நம்புகிறார். முந்தைய ஒப்பந்தத்தில் இந்த ஏற்பாடு செய்யப்படவில்லை என்கிறார் அவர்.
"வங்கதேசம் வழியாகப் பொருட்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு முன்பைவிட இந்தியாவிற்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான செலவை வெகுவாகக் குறைக்கும். எனவே, இந்தியாவுக்கு இந்த விதத்தில் உதவுவுதற்கு பதில் உதவியாக வரிகள் மூலம் வளர்ச்சியில் பங்களிக்குமாறு கேட்கலாம்" என்றார்.
"தர்ஷனா முதல் சிலஹாத்தி வரையிலான ரயில் பாதையின் வளர்ச்சி மற்றும் நிர்வாகச் செலவுக்கு இந்தியா நிதியளிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது போக்குவரத்து ஆரம்பமானதும் இந்தியாவால் பயன்படுத்தப்படும். எனினும், ஒப்பந்த விதிமுறைகளிளின்படி இந்தியா செலவை ஏற்றுக் கொண்டால், வங்கதேசம் பயனடையும்” என்றார்.
நேபாளம், பூட்டான் ஆகியவை முறையே 1976 மற்றும் 1984இல் வங்கதேசப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால் வங்கதேச சரக்கு வாகனங்கள் இந்திய நிலப்பரப்பைப் பயன்படுத்தி செல்ல முடியாததால் இது மிகவும் பயனுள்ளதாக இல்லை.
முஸ்தாபிசுர் ரஹ்மான் பிபிசி பங்களாவிடம், "இந்தப் புதிய ஒப்பந்தத்தை வங்கதேசம் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தலாம்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












