சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளவிருக்கும் ஈலோன் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ - ஏன்?

ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தை அழிக்க பணியமர்த்தப்பட்ட ஈலோன் மஸ்க்கின் `ஸ்பேஸ் எக்ஸ்’

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, 2000-ஆம் ஆண்டு முதல், விண்வெளி நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்
    • எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
    • பதவி, பிபிசி அறிவியல் நிருபர்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ் - International Space Station - ISS) ஆயுட்காலம் இன்னும் சில ஆண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் அதைச் செயலிழக்கச் செய்து அழிக்க, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளில், கலிஃபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4.3 லட்சம் கிலோ எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் தள்ளக்கூடிய ஒரு வாகனத்தை உருவாக்க உள்ளது.

கடந்த புதன்கிழமை (ஜூன் 26), இந்தப் பணிக்கான 843 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ஏழாயிரம் கோடி) மதிப்புள்ள ஒப்பந்தம் பற்றிய தகவல் வெளியானது.

ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் 1998-இல் துவங்கப்பட்டன. மேலும் 2000-ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்களின் குழு நடவடிக்கைகளுடன் இயங்கத் துவங்கியது.

ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும், இந்த விண்வெளி நிலையம் 400 கிலோமீட்டர்கள் உயரத்தில் பூமியை முழுவதுமாகச் சுற்றி வருகிறது. அதாவது 90 நிமிடங்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் ஒரு நாளைக்கு சராசரியாக 16 முறை பூமியை சுற்றி வருகிறது.

மனிதர்களுக்கு வயதாகும் செயல்முறை முதல், புதிய வகை பொருட்களுக்கான சூத்திரம் வரை பலவிதமான முக்கியத் தலைப்புகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான அறிவியல் சோதனைகள் அங்கு நடத்தப்பட்டுள்ளன.

ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தை அழிக்க பணியமர்த்தப்பட்ட ஈலோன் மஸ்க்கின் `ஸ்பேஸ் எக்ஸ்’

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, நிலவுக்கு அருகில் விண்வெளி நிலையத்தை உருவாக்க ஐ.எஸ்.எஸ் கூட்டாளிகள் தயாராகி வருகின்றனர்

‘தானே பூமியின் மேல் விழக்கூடும்’

பொறியாளர்களின் கூற்றுப்படி, ஐ.எஸ்.எஸ் ஆய்வகத்தின் கட்டமைப்பு இன்னும் அப்படியே நல்ல நிலையில் இருந்தாலும், அதனை அகற்றுவதற்கான எதிர்காலத் திட்டங்களை இப்போதே உருவாக்க வேண்டும். எந்த உதவியும் வழங்கப்படாவிட்டால் அது இறுதியில் தானே பூமியின்மேல் விழுந்து, பூமியில் உள்ள மக்களுக்குக் குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தும்.

"ஐ.எஸ்.எஸ் விண்வெளி நிலையத்தின் நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் சமயத்தில், அதனை குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான முறையில் தரையிறக்க நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி நிலையங்களுக்கு அமெரிக்க டி-ஆர்பிட் (US De-orbit) வாகனம் உதவும்," என்று நாசாவின் விண்வெளிச் செயல்பாடுகளுக்கான இயக்குநர் கென் போவர்சாக்ஸ் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

மேலும் "இந்த முடிவு நாசாவின் எதிர்கால வணிகத் திட்டங்களை ஆதரிக்கும், பூமிக்கு அருகில் உள்ள விண்வெளியின் பகுதியைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கிறது," என்றும் கூறினார்.

ஐ.எஸ்.எஸ் திட்டத்தை அமெரிக்காவும் ரஷ்யாவும் வழிநடத்துகின்றன. ஐரோப்பா, கனடா மற்றும் ஜப்பான் துணைப் பாத்திரங்களை வகிக்கின்றன. ரஷ்யா குறைந்தபட்சம் 2028-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஈடுபடும் என்று கூறினாலும், மேற்கத்திய பங்காளிகள் அனைவரும் 2030-ஆம் ஆண்டு வரை நிலையத்திற்கு நிதியளிக்க உறுதிபூண்டுள்ளனர்.

ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நாசா தேர்வு செய்துள்ளது

பசிபிக் கடலில் விழவிருக்கும் விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஆயுட்காலம் முடியும் போது அதனை அகற்றுவதற்கான (end-of-life disposal) பல்வேறு வழிகளை நாசா இதுவரை ஆய்வு செய்துள்ளது.

விண்வெளி நிலையத்தைத் தனித்தனியாகப் பிரித்து எடுத்து, அதில் புதிய கூறுகளை இணைத்து எதிர்காலத்திற்கான ஒரு தளமாக ஒருங்கிணைக்கத் திட்டமிட்டது. மற்றொரு யோசனை என்னவென்றால், அதை இயக்க மற்றும் பராமரிக்க ஒரு இலாப நோக்கற்ற நிறுவனத்தைசர்வதேச தேர்ந்தெடுத்துப் பொறுப்பை வழங்க வேண்டும்.

ஆனால் இந்த தீர்வுகள் அனைத்தும் சிக்கலானவை. செலவும் அதிகம். அத்துடன், உரிமை தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதில் சட்டரீதியான சவால்களும் உள்ளன.

நாசாவோ அல்லது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனமோ டி-ஆர்பிட்டிங் இழுவைப் படகு (டக் போட் - tug boat) வடிவமைப்பின் விவரங்களைத் தற்போதுவரை வெளியிடவில்லை. ஆனால் சரியான இடத்தில் மற்றும் சரியான நேரத்தில் வளிமண்டலத்தில் நிலையத்தைப் பாதுகாப்பாக வழிநடத்தி மாற்றுவதற்கு கணிசமான உந்துதல் தேவைப்படும்.

விண்வெளி தளத்தின் பெரிய நிறை மற்றும் அளவு தோராயமாக ஒரு கால்பந்து ஸ்டேடியத்தின் அளவு இருக்கும். எனவே அதன் சில கட்டமைப்புகள் மற்றும் கூறுகள்பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது ஏற்படும் வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு, பூமிப்பரப்பினை வந்தடையும்.

இந்தப் புதிய திட்டத்தின் கருவிகள் ஐ.எஸ்.எஸ் விண்வெளி மையச் சுற்றுப்பாதையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் இயற்கையாகவே சிதைக்க அனுமதிக்கும். மேலும், கடைசி குழுவினரை வெளியேற்றிய பிறகு, இறுதி டி-ஆர்பிட் திட்டத்தை செயல்படுத்த இழுவைப் படகுக்கு (tug boat) கட்டளையிடப்படும்.

தேவையற்ற விண்கலங்கள், 'பாயிண்ட் நீமோ’ எனப்படும் பசிபிக் பகுதியில் உள்ள தொலைதூர இடத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இங்கு தான் அவை அழிக்கப்படுகின்றன.

'நீமோ’ என்னும் பெயர், எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்னின் '20,000 லீக்ஸ் அண்டர் தி சீ’ புத்தகத்தில் உள்ள புகழ்பெற்ற நீர்மூழ்கிக் கப்பல் மாலுமியின் பெயர் ஆகும். விண்கலங்களுக்கான இந்தக் 'கல்லறை’ அருகிலுள்ள நிலத்திலிருந்து 2,500கி.மீ. தொலைவில் உள்ளது.

ஐ.எஸ்.எஸ் விண்ணில் இருந்து வெளிவருவதற்குள் பல தனியார் கூட்டமைப்புகள் வணிக விண்வெளி நிலையங்களைத் துவங்கும் என்று நாசா நம்புகிறது.

விண்வெளி அமைப்புகள், சந்திரனைச் சுற்றி வரும் கேட்வே பிளாட்பார்ம் அமைப்பதற்கான திட்டத்தில் தங்கள் முயற்சிகளை மீண்டும் கவனம் செலுத்தும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)