ஸ்டார்லைனர் விண்கலனில் கோளாறு - சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் தாமதம்

பட மூலாதாரம், NASA
- எழுதியவர், பல்லப் கோஷ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலமான ஸ்டார்லைனரை சோதிக்க, விண்வெளிக்குச் சென்ற இரண்டு விண்வெளி வீரர்கள் இந்நேரம் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். புதன்கிழமை இரவே புறப்பட்டிருக்க வேண்டிய அவர்கள், இன்னும் கிளம்பவில்லை. தற்போது அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
பூமிக்குத் திரும்ப வேண்டிய விண்கலனில் சில கோளாறுகள் இருப்பதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. விண்கலனில் உள்ள த்ரஸ்டர் (thruster), விண்கலனை உந்தித் தள்ளும் இயந்திரமாகும். அதில் சில பிரச்னைகள் இருப்பதாலும், ஹீலியம் வாயு கசிவாலும் விண்கலன் குறித்த நேரத்தில் கிளம்ப முடியவில்லை.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உயர்மட்ட ஆய்வுகளை நடத்தி வருகிறது. அதன் பிறகே, விண்கலனும் அதிலுள்ள விண்வெளி வீரர்களும் பூமிக்குத் திரும்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த விண்கலனில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் இருவருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது. ஆனால் விண்கலனில் ஏன் இந்தக் கோளாறுகள் ஏற்பட்டன, அவர்கள் பூமிக்குத் திரும்புவதை இது எப்படி பாதிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஹீலியம் வாயுக் கசிவு எப்போது நடைபெற்றது?

பட மூலாதாரம், NASA
ஹீலியம் வாயு சிறிதளவில் கசிந்த போதும், ஸ்டார்லைனர் ஜூன் 5ஆம் தேதி, விண்ணில் செலுத்தப்பட்டது. விண்கலனை வான்வெளியில் இயக்குவதற்கும், பூமியின் வளி மண்டலத்தில் நுழையும்போது அதன் வேகத்தைக் குறைப்பதற்கும் உதவும் த்ரஸ்டர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஹீலியம் வாயு பயன்படுத்தப்படுகிறது.
ஹீலியம் கசிவு மிகச் சிறிய அளவிலேயே இருந்ததால், விண்வெளி பயணத் திட்டத்தை இது எந்த வகையிலும் பாதிக்காது என்று பொறியாளர்கள் நம்பினர். எனவே விண்கலன் வானில் செலுத்தப்பட்டது.
ஆனால், தனது விண்வெளி பயணத்தைத் தொடங்கிய பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் நான்கு முறை ஹீலியம் கசிவு ஏற்பட்டது. விண்கலனை திசை மாற்றி இயக்குவதற்காக உள்ள 28 த்ரஸ்டர்களில் ஐந்து விண்வெளி மையத்தை அடையும் முன்பே பழுதாகிவிட்டன. பழுதான ஐந்து த்ரஸ்டர்களில் நான்கு மீண்டும் இயக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
இந்தப் பயணம் எட்டு நாட்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டது. ஆனால், பொறியாளர்கள் இந்தக் கோளாறுகளை ஆய்வு செய்து வருவதால், விண்கலன் பூமிக்குத் திரும்புவது தாமதமாகியுள்ளது.
அமெரிக்க நேரப்படி ஜூன் 26ஆம் தேதி இரவு பத்து மணிக்கு (இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 7.30 மணி) ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கும் என்று நாசா அறிவித்திருந்தது.
ஹீலியம் கசிவால் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பா?

பட மூலாதாரம், NASA
ஹீலியம் கசிவுகளால் விண்வெளி வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று நாசா முன்னரே தெரிவித்திருந்தது. “விண்கலன் செய்யவேண்டிய இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொள்ள ஏழு மணிநேரம் மட்டுமே ஆகும். ஸ்டார்லைனரில் 70 மணிநேரங்களுக்குத் தேவையான ஹீலியம் இருப்பில் உள்ளது.”
ஆனால் சில நாட்கள் கழித்து, ஸ்டார்லைனர் ஜூலை மாதத்தில் பூமிக்குத் திரும்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாசா முடிவு செய்தது. பூமிக்குத் திரும்பும் தேதி ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தக் கோளாறுகள் எதனால் ஏற்பட்டது என்று, விண்கலன் பூமிக்குத் திரும்புவதற்கு முன்பாகவே, முழுவதுமாகக் கண்டறிய விண்கலனின் பொறியாளர்கள் விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. ஏனென்றால், விண்வெளியில் இருந்து திரும்பி வரும்போது, பூமியின் வளிமண்டலத்தில் விண்கலம் நுழையும் நேரத்தில், ஸ்டார்லைனரின் கோளாறுகள் நிறைந்த கீழ் சர்வீஸ் மோட்யூல் (service module) எனும் பகுதி எரிந்துவிடும். அதிலுள்ள தகவல்களை இழந்துவிட்டால், கோளாறு எதனால் ஏற்பட்டது என்று தெரிந்துகொள்ள முடியாது.
விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் சிக்கிக் கொள்ளவில்லை என்று நாசா வலியுறுத்துகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், விண்கலன் உடனடியாக பூமிக்குத் திரும்பத் தயார் நிலையில் உள்ளது என்று நாசா கூறியுள்ளது.
அடுத்து என்ன நடக்கும் என்பது நாசாவின் மறு ஆய்வுகளைப் பொருத்ததாகவே இருக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும் விண்ணில் செலுத்தியது சரியா?
தற்போது நடைபெற்றுள்ளதைப் பார்க்கும்போது, ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், ஸ்டார்லைனர் விண்ணில் செலுத்தப்பட்டது சரியா என்ற கேள்விகள் எழுகின்றன.
விண்கலன்கள் உந்து இயந்திரங்களைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற, பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ‘ராக்கெட் என்ஜினியரிங்’ என்ற நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஆதாம் பேகர், ஹீலியம் கசிவு ஏற்பட்ட பிறகும், விண்கலன் ஏன் விண்ணில் செலுத்தப்பட்டது என்று தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்.
இருப்பினும் கசிவு ஏற்பட்ட போதே, எதனால் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்து அதை முழுமையாகச் சரி செய்திருக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“எல்லாவற்றையும் மிகச் சரியாகச் செய்ய வேண்டும் என்று வெகு காலம் எடுத்துக்கொள்ளும்போது, அதற்கான செலவு அதிகரிக்கும். மக்கள் மற்றும் அரசியல் ஆதரவும் மறைந்துவிடும்” என்று கூறிய அவர், அதே நேரம், “விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு இந்தக் கசிவுகள் மோசமடையலாம் என்று போதுமான அளவு கணித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். நாசாவும் போயிங் நிறுவனமும் செய்திருக்க வேண்டியது இதுதான்” என்றார்.
அதாவது, விண்கலனை அதன் ஏவுதளத்தில் இருந்து விலக்கி, விண்கலனில் உள்ள உந்து இயந்திரங்களை நீக்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்வது அதிக செலவுகளை உள்ளடக்கிய நடவடிக்கை.

பட மூலாதாரம், NASA
நாசா கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயத்தை ஒபன் யூனிவர்சிட்டியில் உள்ள விண்வெளி விஞ்ஞானி டாக்டர் சிமோன் பார்பர் சுட்டிக்காட்டுகிறார். இந்த விண்கலன் ஏற்கெனவே இரண்டு முறை ஆளில்லாமல் பயணம் மேற்கொண்டபோது, இந்தக் கோளாறு ஏன் கண்டறியப்படவில்லை என்பதை நாசா ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.
“கடந்த சில வாரங்களாக ஏற்படும் கோளாறுகள், பொதுவாக இறுதிக் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் விண்கலனில் ஏற்படும் என்று யாரும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்” என்றார் அவர்.
“இந்தத் திட்டத்தின் நோக்கமே, விண்கலனை விண்வெளி வீரர்கள் இயக்கினால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும் என்று சோதித்துப் பார்ப்பதுதான். ஆனால் அதைவிட்டு, சில அடிப்படையான விஷயங்களைக் கையாண்டு கொண்டிருக்கிறோம்” என்றார்.
இந்த ஹீலியம் கசிவுகள் எதனால் ஏற்பட்டன என்ற சரியான காரணத்தைக் கண்டறியும் முக்கியப் பணி நாசாவுக்கு உள்ளது. அதைக் கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவது குறித்து திட்டமிடுவதும், அவசர காலத் திட்டமிடல்களும் முழுமை பெறாது என்று டாக்டர் பார்பர் தெரிவிக்கிறார்.
“கோளாறுகளுக்கான ஆணிவேர் என்னவென்று கண்டறியும் வரை, விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்புவது குறித்து என்ன கணிப்பு இருந்தாலும் அது முழுமையான தகவல் கையில் இல்லாமல் எடுக்கப்படுவதாகும். தவறு எதனால் நடந்தது என்று புரிந்து கொள்ளவில்லை என்றால், அடிப்படை உந்து இயந்திரங்கள் மட்டுமல்லாமல் மாற்று இயந்திரங்களையும் பாதிக்கும் கோளாறுகள் எதுவும் விண்கலனில் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது”
வேறு வழியே இல்லை என்றால், விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ட்ராகன் விண்கலனில் (ஈலோன் மஸ்க்-க்கு சொந்தமான நிறுவனம்) பூமிக்குத் திரும்ப அழைத்து வரலாம். ஆனால் அது போயிங் நிறுவனத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை உருவாக்கும். இன்னும் அப்படி ஒரு சூழல் ஏற்படவில்லை என்கிறார் டாக்டர் பேகர்.
“ஒரு புதிய விண்கலனில் எதிர்பார்க்காததை எதிர்பார்க்க வேண்டும்” என்கிறார் அவர். “இந்தப் பயணத்தில் இது முழுவதுமாக எதிர்பார்க்கப்பட்ட தடங்கல்தான். இது மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்று நான் கருதவில்லை. இதை ஆய்வு செய்து, அடுத்த முறை ஆட்களுடன் விண்வெளிக்குச் செல்லும் முன் சீரமைக்க வேண்டும்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












