நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் எவ்வளவு, சலுகைகள் என்னென்ன? - முழு விவரம்

எம்பி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் எம்.பி.க்கு தரப்படும்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்றவர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளனர்.

எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தைத் தவிர தினசரி படி, அலுவலக வசதிகள், பயணச் செலவுகள், தங்குமிடம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள எம்.பி.களில் புதுமுகம், அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.பிக்களின் அனுபவத்திற்கு ஏற்ப வீடு, ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது.

எம்.பி மேம்பாடு நிதி எவ்வளவு?

ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யலாம்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளம் எவ்வளவு?

எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம். அத்துடன் எம்.பிகளுக்கு தினசரிப் படியாக நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற செயலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டால்தான் இந்த தினசரிப் படியைப் பெற முடியும்.

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதும், நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் உணவு மற்றும் பிற செலவுகளுக்காக இந்த தினசரிப் படி வழங்கப்படுகிறது.

எம்.பி.க்களின் அலுவலக செலவுகளுக்கு எவ்வளவு பணம் தரப்படுகிறது?

எம்.பிக்கள் தங்களது தொகுதியில் உள்ள அலுவலகத்தை நிர்வகிக்கவும், நாடாளுமன்ற மக்களைச் சந்திக்கவும் மாதம் 70,000 ரூபாய் கொடுப்பனவாக (Allowance) வழங்கப்படுகிறது.

அத்துடன் அலுவலக செலவிற்காக 60,000 ரூபாய் கொடுப்பனவாகத் தரப்படுகிறது. இதில் 20 ஆயிரம் ரூபாய் வரை எழுது பொருட்கள் வாங்கவும், தபால் அனுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 40 ஆயிரம் ரூபாய் வரை அலுவலக உதவியாளருக்குச் சம்பளமாக கொடுக்கும் உரிமை எம்.பிக்கு உள்ளது.

இதுதவிர தொலைபேசி மற்றும் இணைய செலவிற்காக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.

பயணச் செலவுகள் என்ன?

 டி.ஆர் பாலு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மூத்த எம்.பியாக டி.ஆர் பாலு உள்ளார்

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஒரு எம்.பி தனது வீட்டில் இருந்து (இந்தியாவிற்குள் மட்டும்) டெல்லிக்கு வந்து செல்ல வேண்டும். இதற்காக எம்.பிக்கள் ஒவ்வோர் ஆண்டும் இலவசமாக 34 விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாலை மார்க்கமாகப் பயணித்தால், எரிபொருள் நிரப்பிக் கொள்ள ஒரு கிலோமீட்டருக்கு 16 ரூபாய் படியாக வழங்கப்படும்.

இலவச ரயில் பாஸ்

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், ஒரு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும். இந்த ஏசி முதல் வகுப்பு ரயில் பாஸ் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவில் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமென்றாலும் பயணம் மேற்கொள்ளலாம். அரசு அல்லது தனிப்பட்ட பயணங்களுக்கும் இந்த பாஸை எம்.பிக்கள் பயன்படுத்தலாம்.

எம்.பியுடன் பயணம் செய்யும் ஒரு நபருக்கு, இலவசமாக இரண்டாம் வகுப்பு ஏசி ரயில் பாஸ் வழங்கப்படுகிறது.

டெல்லியில் வசிப்பிடம்

எம்.பிக்கள் அனைவருக்கும் டெல்லியில் எவ்வித வாடகையும் இன்றி அரசால் வீடு வழங்கப்படும். இந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு 50,000 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தினால் அதற்கான கட்டணத்தைக் கட்டத் தேவையில்லை. அதேபோல ஒவ்வோர் ஆண்டும் 4000 கிலோலிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்.

எம்.பி.க்களின் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு, தனி வீடு அல்லது பங்களாக்களை பெறலாம்.

எம்.பி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தொலைபேசி மற்றும் இணையச் செலவிற்காக ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய் அரசால் எம்.பி.க்களுக்கு வழங்கப்படுகிறது.

மருத்துவ வசதி

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் எம்.பி.க்களும் அவர்களது குடும்பத்தினரும் இலவச மருத்துவ சிகிச்சைகளைப் பெறலாம். இதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் தனியார் மருத்துவமனைகள் ஆகியவை அடங்கும்.

ஓய்வு பெற்ற எம்பிக்களுக்கு என்ன சலுகை?

ஒருவர் 5 ஆண்டுகள் எம்.பியாக இருந்தால் அவருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் எம்.பியாக இருந்தால், ஒவ்வோர் ஆண்டுக்கும் 2000 ரூபாய் கூடுதலாக மாதந்தோறும் வழங்கப்படும்.

மேலும் ஓய்வுபெற்ற எம்.பிக்கள், நாடாளுமன்ற செயலாளரின் அனுமதியைப் பெற்று, இலவசமாக முதல் வகுப்பு ஏசி ரயில் பயணம் செய்யலாம். தனது மனைவி அல்லது கணவருடன் பயணம் செய்தால் இரண்டாம் வகுப்பு ஏ.சியில் ரயிலில் பயணிக்க அனுமதியுண்டு.

நாடாளுமன்ற குழுக்களில் இடம்பெறும் எம்.பிகளுக்கு என்ன சலுகை?

நாடாளுமன்ற நிலைக்குழு, பொது கணக்குக் குழு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு, நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, நாடாளுமன்ற நிதிக் குழு, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எனப் பல குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவின் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக்குச் செல்லும் எம்.பி.க்களின், பயணச் செலவு அரசால் வழங்கப்படும். குழுவின் சார்பாக வெளிநாட்டுக்கு எம்.பிக்கள் பயணம் மேற்கொண்டாலும் அதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.

மேலும் இந்தப் பயணத்தின்போது, தங்குவதற்கான செலவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)