ரோஹித் சர்மா: பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத சிறுவன் டி20 உலகக் கோப்பையை வென்ற கதை

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.
"சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்காது. 2007இல் நான் இந்தியாவுக்காக விளையாடத் தொடங்கியபோது, டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. இப்போது மீண்டும் உலகக்கோப்பையை வென்ற பிறகு, நான் ஓய்வு பெறுகிறேன்" என்று கூறினார் ரோஹித் சர்மா.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித் சர்மா, பின்னர் 2023இல் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தினார். ஆனால் இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
தற்போது 2024இல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வென்றதன் மூலம், அந்தத் தோல்வியை ஈடுசெய்து தனது வாழ்வின் மிகப்பெரிய இலக்கை நிறைவேற்றியுள்ளார் ரோஹித்.
பள்ளிக்கட்டணம் செலுத்த கஷ்டப்பட்ட ஒரு சிறுவன் இந்திய அணியின் கேப்டனாக மாறியது எப்படி? அவருக்கு ஹிட்மேன் (Hit man) என்ற பெயர் கிடைத்தது எப்படி? ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பள்ளி கட்டணமே செலுத்த முடியாத சிறுவனாக ரோஹித்

பட மூலாதாரம், YOGESH PATEL
கடந்த 1999ஆம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உலகக் கோப்பைக்காக விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது மும்பையின் புறநகர் பகுதியான போரிவலியில், 12 வயதே நிரம்பிய ரோஹித் சர்மாவை அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் பணம் சேகரித்து கிரிக்கெட் விளையாட அங்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்துக் கழக கிடங்கில் பணிபுரிந்த அவரது தந்தைக்கு வருமானம் குறைவாக இருந்ததால், அந்த நாட்களில் ரோஹித் தனது தாத்தா மற்றும் மாமா ரவி சர்மாவின் வீட்டில் வசித்து வந்தார். மிகவும் வறுமையான ஒரு சூழ்நிலையில் அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் ஒரு போட்டியும் ஒரு பள்ளியும் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் திசையை மாற்றின. அதே ஆண்டில், ரோஹித் சர்மா சுவாமி விவேகானந்தா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் போரிவலிக்கு எதிராக ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பள்ளியின் பயிற்சியாளர் தினேஷ் லாட், அவரது விளையாட்டைப் பார்த்து அவருக்கு உதவித்தொகை வழங்க, பள்ளி உரிமையாளர் யோகேஷ் பட்டேலுக்கு பரிந்துரைத்தார்.
தற்போது 55 வயதாகும் யோகேஷ் பட்டேல் கூறுகையில், "இந்த பையனுக்கு கிரிக்கெட்டில் சிறந்த திறமை உள்ளது. ஆனால் நமது பள்ளியின் மாதக் கட்டணமான 275 ரூபாயை அவனது குடும்பத்தால் செலுத்த முடியாது, எனவே அவருக்கு உதவித்தொகை கொடுங்கள்’ என்று எங்கள் பயிற்சியாளர் கூறினார்,” என்றார்.
"அன்று அந்த முடிவை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று ரோஹித் இந்திய அணியின் கேப்டன். எங்கள் பயிற்சியாளரின் கருத்து சரியானதுதான்," என்கிறார் யோகேஷ் பட்டேல்.

பட மூலாதாரம், Getty Images
இந்த முடிவிற்குப் பல வருடங்கள் கழித்து, ரோஹித் சர்மாவே ஒரு கிரிக்கெட் செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், "நான் விவேகானந்தா பள்ளியில் சேர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் விரும்பினார். ஆனால் என்னிடம் பணம் இல்லை. பின்னர் அவர் எனக்கு உதவித்தொகை பெற்றுத் தந்தார். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் நான்கு வருடங்கள் இலவசமாகப் படித்ததுடன் எனது விளையாட்டுத் திறமையையும் வளர்த்துக்கொண்டேன்," என்றார்.
இந்தப் புதிய பள்ளியில் சேர்ந்த சில மாதங்களுக்குள், ரோஹித் சர்மா 140 ரன்களில் ஆட்டமிழக்காமல் விளையாடினார். இது மும்பையின் பள்ளிகள், மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் ஏறுமுகம்தான். இன்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சமாக, அவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி முதல் பிரவீன் ஆம்ரே வரை மும்பை சிவாஜி பூங்காவில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வளர்ந்தவர்கள்.
இந்த மைதானத்தில் இன்னும் டஜன் கணக்கான பயிற்சி வலைகள் இருக்கின்றன. அதில் ஒன்று அதே காலகட்டத்தில் இங்கு வீரராக விளையாடிய அசோக் ஷிவால்கருக்கு சொந்தமானது.
அசோக் ஷிவால்கர் கூறுகையில், "ரோஹித் சர்மா முன்பு தனது பள்ளிக்காக ஆஃப் ஸ்பின் வீசியது எனக்கு நினைவிருக்கிறது. பின்னர் அவரது பேட்டிங் திறமையை அவரது பயிற்சியாளர் அடையாளம் கண்டுகொண்டார்," என்றார்.
"இதற்குப் பிறகு மும்பையின் புகழ்பெற்ற கங்கா லீக் கிரிக்கெட் மற்றும் மும்பை கிரிக்கெட் சங்கப் போட்டிகளில் ரோஹித் தனது பெயரை நிலைநாட்டத் தொடங்கினார்" என்கிறார் அசோக் ஷிவால்கர்.
விவேகானந்தா பள்ளியின் உரிமையாளரான யோகேஷ் படேல், "கொரோனா காலத்தின்போது எனது உடல்நலம் குறித்து விசாரிக்க ரோஹித் என்னை அழைத்தார். மக்களுக்குத் தொடர்ந்து உதவுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன். அவரைப் பார்க்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று கூறுகிறார்.
சர்வதேச போட்டிகளில் அறிமுகம்

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மா 2007 ஜூன் மாதத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் சர்வதேச அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது டி20 கிரிக்கெட்டில்.
கடந்த 2007இல், தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான இந்திய அணி விளையாடியது. அந்த அணியில் ரோஹித் சேர்க்கப்பட்டார்.
அந்தத் தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோஹித் 40 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்குப் பங்களித்தார்.
இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றபோது, அந்தப் போட்டியிலும் ரோஹித் 16 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்த ஆண்டு 2008, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடங்கியபோது, ரோஹித் 'டெக்கான் சார்ஜர்ஸ்' அணியில் இடம் பெற்றிருந்தார். 2009 ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய அணியின் புகழ்பெற்ற முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் அந்த அணி பட்டத்தை வென்றபோது, ரோஹித் அந்த அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் 18 போட்டிகளில் 411 ரன்கள் குவித்ததோடு, 11 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். 2011 முதல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார்.
பின்னர் ஸ்ரீகாந்த் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ரோஹித்தை நீக்கியது. இது அவருக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. ரோஹித்தின் கிரிக்கெட் பயணத்தில் இது கடினமான காலகட்டமாக இருந்திருக்க வேண்டும். அப்போதுதான் தோனியின் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கருக்கு அந்த வெற்றியைப் பரிசாக அளித்தது.
ரோஹித்தை 'ஹிட்மேன்' என்று அழைப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
நவம்பர் 2, 2013 அன்று பெங்களூரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ரோஹித் 209 ரன்கள் எடுத்தார்.
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ரோஹித் பெற்றார். இந்த இன்னிங்ஸின் போது ரோஹித் 12 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களை விளாசினார்.
அப்போது ஒரு வர்ணனையாளர் நீங்கள் 'ஹிட்மேன்' போல் விளையாடினீர்கள் என்று கருத்து தெரிவித்தார். மேலும் ரவி சாஸ்திரியும் பேசும்போது அந்தப் பெயரைப் பயன்படுத்தினார். அப்போதிருந்து ரோஹித்துக்கு 'ஹிட்மேன்' என்ற புதிய பெயர் கிடைத்தது.
பின்னர் 2014இல் இலங்கைக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் ஒரே நாளில் 264 ரன்கள் எடுத்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது சிறந்த ஆட்டமாகும். 2017இல், ரோஹித் மீண்டும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் ரோஹித்.
ஒருமுறை கிரிக்கெட் வீரர் அஷ்வின், "ரோஹித் களமிறங்கியதும், பந்து வீச்சாளர்களுக்கு அவரை எப்படி வெளியேற்றுவது, எப்படி தடுப்பது என்று புரியவில்லை" என்று கூறினார்.
இந்திய அணியின் கேப்டன்

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் 2009இல், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடியபோது, அந்த அணியை ஆடம் கில்கிறிஸ்ட் வழிநடத்தி வந்தார். ரோஹித்திடம் தலைமைப் பண்பு இருப்பதை அவர் கண்டுகொண்டார்.
“ரோஹித் துணை கேப்டன் பொறுப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார். அவர் அணியை வழிநடத்த விரும்புகிறார், அவரிடம் ஒரு உற்சாகம் தெரிகிறது. தலைமைக்கான பண்பு அவரிடம் இருக்கிறது" என்று அப்போது நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பில் கில்கிறிஸ்ட் கூறினார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது.
கடந்த 2017இல் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியும், அதன்பின் 2022இல் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியும் ரோஹித்திடம் சென்றது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையானாலும் சரி, இந்த டி20 உலகக்கோப்பையில் சர்வதேச அளவில் சிறந்த பேட்டர்களே தடுமாறிய கடினமான பிட்ச் ஆனாலும் சரி, பேட்டிங்கில் முன்னின்று அணியை வழிநடத்த ரோஹித் சர்மா தவறவில்லை. பல கோடி இந்தியர்களின் டி20 உலகக்கோப்பைக் கனவை நிறைவேற்றிய பிறகே, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோஹித் சர்மா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












