ரோஹித், கோலியின் விடுதலை உணர்வு - டி20 உலகக்கோப்பை வெற்றி இந்திய அணிக்கு ஏன் உணர்ச்சிப்பூர்வமானது?

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா எனப் பலருக்கும் ஒரு விடுதலை உணர்வை அளித்திருக்கிறது இந்த உலகக்கோப்பை வெற்றி.
    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியா உலகக்கோப்பையை வென்ற அந்த நொடி, கிரிக்கெட் என்பது மிகப்பெரிய மதம் போலக் கருதப்படும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் சார்பாக விளையாடும் அணிக்கு கேப்டனாக தலைமையேற்று விளையாடும் ரோஹித் சர்மாவிடம் பெரிதாக எந்தக் கொண்டாட்ட உணர்வும் இல்லை.

மைதானத்தில் படுத்தேவிட்டார். பின் ஆனந்தக் கண்ணீரில் தேம்பிய ஹர்திக் பாண்டியாவை ஆற்றுப்படுத்தினார், அதன் பின் சில நொடிகள் தனித்துச் சென்றுவிட்டார். அது ஒரு விடுதலை உணர்வு.

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா எனப் பலருக்கும் ஒரு விடுதலை உணர்வு.

மகேந்திர சிங் தோனிக்கு பிறகு எந்த கேப்டனாலும் கோப்பையை வெல்ல முடியவில்லை, சுமார் 11 ஆண்டுகளாகப் பல அரையிறுதிகள், பல இறுதிப்போட்டிகள். ஆனால் கோப்பை மட்டும் கைகூடவே இல்லை.

இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட்டர்களாக கருதப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, டி20 கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஹர்திக் பாண்டியா, பேட்ஸ்மேன் தரவரிசையில் இரண்டாவது இடத்தில இருக்கும் சூரியகுமார் யாதவ் எனப் பலருக்கும் இந்தக் கோப்பை மிக மிக முக்கியமானது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தன்னை சாம்பியன் என நிரூபித்தது எப்படி?

ஒரே ஒரு முக்கியமான கேள்வி. ஏன் இந்தியா சாம்பியன் அணி?

அதற்கான சூசகமான பதிலை இந்தியா தனது தொடக்க போட்டியிலேயே சொல்லிவிட்டது.

இந்த உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டபோது, சேஸிங்கில் பாகிஸ்தானின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 37 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. பாண்டியாவையும் பும்ராவையும் வைத்து பாகிஸ்தான் கதையை முடித்தது இந்தியா. ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

இதோ இறுதிப்போட்டி. தடைக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து சுமார் 32 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு இறுதிப்போட்டி எனும் இடத்திற்கு வந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.

இதற்கு முன் சமயங்களில் நம்பமுடியாத வகையில் தோல்வி அடைந்து நாக்-அவுட் போட்டிகளில் வெளியேறிய வரலாறு தென்னாப்ரிக்காவுக்கு உண்டு. இப்போது அந்தக் கோப்பையை ஏந்துவதற்கு பொன்னான தருணம்.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

கடைசி ஓவரில் மாயாஜாலம் நிகழ்த்திய இந்தியா

உலகின் தலைசிறந்த அணிக்கு எதிராக வெற்றிக்கு 26 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு விக்கெட் விழுந்தால்கூட பந்துவீச்சாளர்கள்தான் பேட்டிங் செய்ய வேண்டும் எனும் நிலைமை.

இந்திய வீரர்களின் முகத்தில் ஏமாற்றமும் விரக்தியும் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது. ரசிகர்கள் மீண்டும் ஒரு துயரத்துக்குத் தயாராகத் தொடங்கிய தருணம் அது. அந்த நேரத்தில் இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவுக்கு ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்தது.

கேப்டன் ரோஹித் சர்மா ஹர்திக் பாண்டியாவை அழைத்தார். 17வது ஓவரின் முதல் பந்திலேயே அதுவரை அபாயகரமாக விளையாடிக் கொண்டிருந்த ஹென்ரிக் கிளாசனை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா. அந்தப் பந்திலேயே ஆட்டம் இந்தியாவிடம் வந்துவிட்டது. அதன் பின்னர் ஒரு கணம்கூட தென் ஆப்பிரிக்கா பக்கம் ஆட்டம் செல்லவே இல்லை.

காணொளிக் குறிப்பு,

ஹர்திக் தென்னாபிரிக்காவின் வேகத்துக்கு அணை போட்டவுடன் பும்ரா அடுத்த ஓவரிலேயே யான்சனை வீழ்த்தி தென்னாப்ரிக்காவை நெருக்கினார். ஹர்ஷ்தீப் 19வது ஓவரை கச்சிதமாக முடித்துக் கொடுக்க ஹர்திக் பாண்டியா இறுதி ஓவரில் அபாயகரமான பேட்ஸ்மேன் மில்லரை முதல் பந்தில் வெளியேற்றினார். இறுதி ஓவரில் எட்டு ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மீண்டும் ஒரு முறை சோக்கர் (Choker) ஆனது தென் ஆப்பிரிக்கா. தான் ஏன் ஒரு சாம்பியன் அணி என்பதை நிரூபித்தது இந்தியா.

பவர்பிளேவில் சரிந்த விக்கெட்டுகள், சமயோசிதமாக அக்சர் படேலை களமிறக்கி தென் ஆப்பிரிக்காவிவின் திட்டத்தைக் குலைத்தது. அதிசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பொறுப்பான இன்னிங்ஸ், மைதானத்தின் தன்மையை உணர்ந்து பொறுப்பாக விளையாடிய நடுத்தர வீரர்கள் என இந்தியா சிறப்பாகவே விளையாடியது. பந்துவீச்சிலும் பொறுப்பாகவே செயல்பட்டது. ஆரம்பத்திலேயே ஹென்றிக், மார்க்ரம் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது போல தென் ஆப்ரிக்காவின் ஆட்டம் இருந்தது. இந்தியா பேட்டிங் செய்தபோது முதல் ஓவரிலேயே ரன்கள் எகிறிய நிலையில் அதன் பின்னர் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்யும்போதும் விக்கெட்டுகளை இழந்தபோதும் இந்திய பந்துவீச்சாளர்களைத் திறம்பட எதிர்கொண்டு விளையாடியது. குறிப்பாக ஹென்ரிக் கிளாசன் ஒரு மாஸ்டர் கிளாஸ் ஆட்டம் விளையாடினார்.

டாம் அண்ட் ஜெரி போல இந்த ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கமும் இந்தியா பக்கமும் மாறி மாறிச் சென்றது. ஆனால் அனுபவமும், அழுத்தத்தைக் கையாளும் திறமையும் இந்தியாவை ஒரு சாம்பியன் அணியாக உயர்த்தியுள்ளது.

கடைசி சில நிமிடங்களில் கோப்பையை நழுவவிட்டதைத் தவிர்த்து, தென் ஆப்பிரிக்காவும் ஒரு மிகச்சிறந்த ஆட்டத்தையே விளையாடியது.

முதல் டி20 உலகக்கோப்பையை இந்தியாதான் வென்றது. அதன் பின்னர் ஐபிஎல் அறிமுகமான பிறகு டி20 கோப்பை கிடைக்காமல் தவித்தது கேள்விகளை எழுப்பியது. இதோ 17 ஆண்டுகள் கழித்து இந்தியா கையில் கோப்பை தவழ்கிறது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்த டி20 உலகக்கோப்பையின் தொடக்க வீரராகக் களமிறங்கி சொதப்பி வந்த விராட் கோலி, முக்கியமான போட்டியில் அணியை தூண் போலத் தாங்கி கோப்பையை வெல்லக் காரணமாகிவிட்டார். ஆட்ட நாயகன் விருதையும் கோலியே வென்றார். கோப்பையோடு டி20 ஃபார்மேட்டில் இருந்தே ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார் கோலி.

விராட் கோலி ஆட்டம் பற்றி அரை இறுதி முடிந்ததும் கேள்வி எழுப்பியபோது கேப்டன் ரோஹித் சர்மா, விராட் தனது சிறந்த ஆட்டத்தை இறுதிப் போட்டிக்காக சேமித்து வைத்திருக்கிறார் என்றார்.

அவரது வார்த்தை நிரூபணமாகிவிட்டது. பல்வேறு டி20 உலகக்கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலிக்கு டி20 ஃபார்மேட்டில் உலகக் கோப்பையோ ஐபிஎல் கோப்பையோ கைகூடாமல் இருந்தது.

இப்போது விராட் கோலியும் சரித்திரம் படைத்துவிட்டார். 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பையைத் தொடர்ந்து 2023 உழைக்ககோப்பையையும் ஏந்திப் பார்த்துவிட்டார்.

சில வாரங்களுக்கு முன்பு வரை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த ஹர்திக் பாண்டியா, இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு நாயகனாகி விட்டார்.

ஒரு கேப்டனாக, ஒரு வீரனாக எந்த ஒரு ஃபார்மேட்டிலும் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றவர் ராகுல் டிராவிட். தான் விளையாடிய கடைசி போட்டிகளில்கூட தோல்வியையே சந்தித்தார். ஐபிஎல் போன்ற உள்ளூர் லீக்கும் கைகூடவில்லை. ஆனால் இதோ பயிற்சியாளராகத் தனது கடைசி ஆட்டத்தில் வென்று கோப்பையுடன் செல்கிறார்.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

கணிப்பை மெய்ப்பித்த இந்திய அணி

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையானாலும் சரி, இந்த டி20 உலகக்கோப்பையில் சர்வதேச அளவில் சிறந்த பேட்டர்களே தடுமாறிய கடினமான பிட்ச் ஆனாலும் சரி, பேட்டிங்கில் முன்னின்று அணியை வழிநடத்த ரோஹித் சர்மா தவறவில்லை.

இந்தியாவின் புதிய உலகக்கோப்பை வின்னிங் கேப்டன் ரோஹித் சர்மா நிம்மதியாக உறங்கச் சென்றிருப்பார். அவர் மட்டுமல்ல இந்திய அணி கிரிக்கெட் ரசிகர்களும்தான்.

அதே நேரம் தென் ஆப்ரிக்காவுக்கு மிக மிகக் கடினமான இரவாகிவிட்டது. ஐசிசி தொடர்களில் முதல் முறையாகத்தான் கேப்டனாக வழிநடத்திய போட்டியில் தோல்வியைச் சந்தித்திருக்கிறார் மார்க்ரம்.

இங்கிலாந்தில் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் இந்த டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு முன்பாக இரண்டு ட்வீட் செய்தார்.

ஒரு ட்வீட்டில் விராட் கோலி அரை சதமடிப்பார், இந்தியா பார்படாசில் வெல்லும் எனக் கணிப்பதாக எழுதினார். அது நடந்துவிட்டது.

இந்தியா தனது வேலையை வெற்றிகரமாக முடித்து கோப்பையைக் கைப்பற்றிவிட்டால், இனி அடுத்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பைகளைக் கைப்பற்றக்கூடும் என இன்னொரு ட்வீட்டில் எழுதினார்.

அது நடக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)