இந்தியா தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பையை முத்தமிட உதவிய ரோஹித் சர்மாவின் வியூகங்கள்

காணொளிக் குறிப்பு, 2024 ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது எப்படி?
    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும்போது அங்கு மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், விடைபெறுதல், முடிவுகள் எனப் பலவும் இருக்கும். இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்ற தருணத்திலும் இவை நடந்தன.

கிரிக்கெட்டில் சில கேட்சுகள் காலத்தால் நினைவு கொள்ளப்படும், சில விக்கெட்டுகள் என்றென்றும் மறக்கப்படாது, சில ஓவர்கள் எப்போதும் பேசப்படும்.

சூர்யகுமார் பிடித்த கேட்ச், பாண்டியாவின் 2 ஓவர்கள், பும்ராவின் 2 விக்கெட்டுகள் ஆகியவை இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பெற்றது பற்றி பேசப்படும் போதெல்லாம் நிச்சயம் பேசப்படும்.

இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை 17 ஆண்டுகளுக்குப் பின் பெறுவதற்கும் வரலாறு படைப்பதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் என்பதை மறுக்க முடியாது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதிலும் இந்திய அணியின் பிரம்மாஸ்திரமாக கருதப்படும் பும்ரா தேவைப்பட்ட நேரத்தில் வீசிய 2 திருப்புமுனை ஓவர்கள், ஹர்திக் பாண்டியாவின் ஆகச் சிறந்த பந்துவீச்சில் கிடைத்த 2 விக்கெட்டுகள் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி ஆட்டத்தை இந்திய அணியின் கைகளில் சேர்த்தன.

இந்தத் தருணத்தைத்தான் இந்திய அணியும் கடந்த 11 ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்தது. 11 ஆண்டுகளாக ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட பல போட்டிகளைச் சந்தித்தும் அதில் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை சென்றும் ஒன்றில்கூட சாம்பியன் பட்டத்தை இந்திய அணியால் வெல்ல முடியாத சூழல் இருந்தது. அந்த ஏக்கத்துக்கும் நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அதோடு, இரு மிகப்பெரிய ஜாம்பவான்களின் டி20 வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம், ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா, ‘கிங்’ கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, ரசிகர்களிடம் இருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றனர்.

பர்படாஸில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சேர்த்து 7 ரன்களில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பரிசுத் தொகை எவ்வளவு?

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக்கோப்பைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.93.80 கோடியை பரிசுத் தொகையாக ஐசிசி அறிவித்திருந்தது. சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் இந்திய மதிப்பில் ரூ.20.42 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2வது இடம் பெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு ரூ.10.67 கோடி வழங்கப்பட்டது.

அரையிறுதி வரை வந்த இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ரூ.6.56 கோடி கிடைக்கும். 2வது சுற்றைக் கடக்காத அணிகளுக்கு தலா ரூ.3.18 கோடியும், 9 முதல் 12வது இடம் வரை பெற்ற அணிகளுக்கு ரூ.2.06 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

மேலும், 13 முதல் 20வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.1.87 கோடி வழங்கப்படும். ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு வெற்றிக்கும் கூடுதலாக ரூ.26 லட்சம் பெறும். இந்தக் கணக்கில் அரையிறுதி, இறுதிப்போட்டி வெற்றிகள் சேராது.

ஓய்வு பெறச் சிறந்த தருணம் இல்லை

சாம்பியன் பட்டம் வென்றபின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கடினமாக உழைத்தது, கடந்து வந்ததை நான் தொகுத்துக் கூறுவது கடினம். ஏராளமானோரின் உழைப்பு, பணிகள், திட்டங்கள் இந்த வெற்றிக்குப் பின்னால் அடங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்த சாம்பியன்ஷிப்.

ஏராளமான அழுத்தங்கள், நெருக்கடிகள் நிறைந்த ஆட்டம். இந்த அழுத்தத்தில் என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை அணியினர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பது சிறந்த உதாரணம். இதற்கு முன் அதிக அழுத்தம் கொண்ட ஆட்டங்களில் தவறும் செய்துள்ளோம். ஆனால் இந்த ஆட்டத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை வீரர்கள் நன்கு தெரிந்திருந்தனர். இந்த அணியை வழிநடத்திச் சென்றதை பெருமையாகக் கருதுகிறேன்," என்று தெரிவித்தார்.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

அணியை சுதந்திரமாக வழிநடத்தி, விளையாடி, திட்டங்களை செயல்படுத்த அனுமதியளித்த நிர்வாகம், பயிற்சியாளர் டிராவிட், மேலாண்மை என அனைவருக்கும் நன்றி தெரிவித்த ரோஹித், வீரர்கள் தனிப்பட்ட ரீதியிலும், குழுவாகவும் சிறப்பாகச் செயல்பட்டதாகப் பாராட்டினார்.

"விராட்டின் ஃபார்ம் குறித்து கடந்த 15 ஆண்டுகளாக யாரும் சந்தேகத்தித்து இல்லை. இதுபோன்ற தருணத்தில்தான் பெரிய வீரர்கள் விஸ்வரூமெடுப்பார்கள். கடைசி வரை கோலி இருந்து ஆட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். பேட்டிங் செய்வதற்கு எளிதான விக்கெட் இல்லை, இருப்பினும் கோலி அருமையாக பேட் செய்தார். அக்ஸர் படேல் ஆட்டம் முக்கியமானதாக இருந்தது. பும்ராவை பற்றிக் கூற வேண்டுமானால், அவரின் பந்துவீச்சு மாஸ்டர் கிளாஸ். ஹர்திக் கடைசி ஓவரை அற்புதமாக வீசினார்.

இதுதான் இந்திய அணிக்காக நான் விளையாடிய கடைசி சர்வதேச டி20. டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்காது. ஒவ்வொரு தருணத்தையும் நேசிக்கிறேன். டி20 மூலம் இந்திய அணிக்குள் வந்து, அதிலிருந்தே விடை பெறுகிறேன். சாம்பியன்ஷிப் என்ற வார்த்தையைத்தான் விரும்பினேன், இதுதான் தேவையாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித், கோலி என்ற இரு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் யாரும் எதிர்பாராதது. ரோஹித் சர்மா 159 டி20 போட்டிகளில் 4,231 ரன்களையும், 5 சதங்களையும் விளாசியுள்ளார். 2 உலகக்கோப்பைகளை வென்றபோதும் ரோஹித் இருந்துள்ளார். 2007ம் ஆண்டில் இந்திய அணியில் வீரராகவும், 2024இல் கேப்டனாகவும் ரோஹித் இருந்தார்.

இரு ஜாம்பவான்களும் கடந்த 2022 டி20 உலகக்கோப்பைக்குப் பின் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. டி20 உலகக்கோப்பைக்காகவே ஜனவரியிலிருந்து ரோஹித் விளையாடத் தொடங்கினார். இந்த உலகக் கோப்பையிலும் 257 ரன்களை ரோஹித் குவித்து அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தைப் பெற்றார்.

வியூகம் அமைத்த இந்திய அணி

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீரா வெறி இந்திய வீரர்களிடம் இருந்தது. இதனால் தென் ஆப்ரிக்கா பேட்டர்களின் ஒவ்வொரு விக்கெட்டையும் சரியான வியூகம் அமைத்து வீழ்த்தினர்.

விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கிலேயே பும்ரா முதல் ஓவரை வீசினார். அவரின் எண்ணப்படியே அவரது முதல் ஓவரில் வீசப்பட்ட இன்கட்டரில் ஹென்ட்ரிக் கிளீன் போல்டாகி(9) ஆட்டமிழந்தார். அடுத்ததாக அர்ஷ்தீப் தனது பங்குக்கு கேப்டன் மார்க்ரம்(4) விக்கெட்டை சாய்த்தார்.

டீ காக், ஸ்டெப்ஸ் இருவரும் சேர்ந்து ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்று பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், இந்த பார்ட்னர்ஷிப்பையும் இந்திய அணியினர் உடைத்தனர். ஸ்டெப்ஸை அதிரடியாக சில ஷாட்களை ஆட வைத்து, அடுத்த பந்தை ஃபுல் டாஸாக வீசி போல்டாக்கினார் அக்ஸர் படேல்.

ரோஹித் வலையில் சிக்கிய டீ காக்

இருப்பினும் டீ காக் தொடர்ந்து டீப் பேக்வார்ட் திசையில் சிக்ஸர், பவுண்டரி அடித்ததைக் கண்டறிந்த கேப்டன் ரோஹித் சர்மா அடுத்த வியூகத்தை அமைத்தார். டீ காக் மீண்டும் டீப் பேக்வார்டு திசையில் ஷாட் அடிக்கும் வகையில் அர்ஷ்தீப்பை பந்துவீசச் செய்து அங்கு குல்தீப் யாதவை ஃபீல்டிங் செய்ய வைத்தார்.

ஃபீல்டர் இருப்பதைக் கவனிக்காமல் மீண்டும் பெரிய ஷாட்டுக்கு முயன்றபோது, இந்திய கேப்டன் ரோஹித் விரித்த வலையில் டீ காக் சிக்கி(39) விக்கெட்டை இழந்தார். இதுவரை இந்திய அணியின் திட்டப்படி நகர்ந்தது.

மிரட்டிய கிளாசன்

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

ஆனால், கிளாசன் களத்திற்கு வந்தது முதல் ஆட்டத்தின் போக்கு அப்படியே திசை மாறி தென் ஆப்ரிக்கா பக்கம் சென்றது.

ரன்ரேட்டை குறையவிடாமல் சிக்ஸர், பவுண்டரி என இந்திய பந்துவீச்சைத் துவைத்த கிளாசன் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிசப்தமாக்கினார். களத்தில் இருந்த இந்திய அணியினருக்கு கிளாசனின் முரட்டுத்தனமான ஷாட்கள், அசுரத்தனமான பேட்டிங்கை பார்த்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கீரிஸில் நின்று கொண்டே ஃபேக்புட்டில் சிக்ஸர், லாங்ஆனில் சிக்ஸர் என இந்திய பந்துவீச்சைக் காலி செய்தார் கிளாசன். ஒரு கட்டத்தில் பந்துகள் குறைவாகவும், தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்கள் அதிகமாகவும் இருந்தது, ஏறக்குறைய 20 பந்துகள் வித்தியாசத்தில் இருந்தது.

ஆட்டம் திரும்பியது

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

அக்ஸர் படேல் ஓவரை குறிவைத்து கிளாசன் சிக்ஸர், பவுண்டரி என விளாசி, 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் தனது காட்டடியால் தேவைப்படும் ரன்கள், பந்துகளை சமன் செய்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆட்டம் மெல்ல இந்திய அணியின் கரங்களில் இருந்து நழுவுவதை கேப்டன் ரோஹித் அறிந்தார். கடைசி 30 பந்துகளில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 30 ரன்கள்தான் தேவைப்பட்டது. ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற நிலை இருந்தது.

திருப்புமுனை தந்த பாண்டியா

அப்போதுதான் ஹர்திக் பாண்டியாவை 2வது ஓவர் வீச ரோஹித் அழைத்தார். ஹர்திக் பாண்டியா முதல் பந்தை ஆஃப் சைடில் விலக்கி வீசவே அதைத் தேவையின்றி தொட்ட கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

கிளாசன் விக்கெட் வீழ்ந்ததுமே இந்திய அணியினர் மகிழ்ச்சியில் குதித்தனர். கிளாசன் ஆட்டமிழந்தது முதல் தென் ஆப்ரிக்கா நெருக்கடியிலும், அழுத்தத்திலும் சிக்கி பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதை மறந்தது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

பும்ரா மாஸ்டர்கிளாஸ்

பும்ரா 18வது ஓவரை வீசினார். வர்ணனையாளர்கள் கூறியபடி, பும்ராவின் ஓவரில் யான்சென் கிளீன் போல்டாகி வெளியேற 4 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுக்கவே வெற்றி இந்தியாவின் அருகே வந்தது.

அர்ஷ்தீப்பும் 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசி 4 ரன்கள் கொடுக்கவே ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.

வரலாற்று கேட்ச்

ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரை வீசினார். முதல் பந்திலேயே லாங்ஆன் திசையில் மில்லர் பெரிய ஷாட் அடிக்க, சிக்ஸருக்கு சென்ற பந்தை சூர்யகுமார் கேட்ச் பிடித்தார். ஆனால் நிலை தடுமாறி பவுண்டரிக்கு வெளியே செல்லும்போது பந்தை மைதானத்துக்குள் தூக்கி வீசிவிட்டு, மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து கேட்ச் பிடித்து ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதன்பின் வந்த ரபாடா ஒரு பவுண்டரி அடித்த நிலையில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி நேர அழுத்தத்தைத் தாங்காமல் தென் ஆப்ரிக்க அணியினர் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

ஹர்திக் பாண்டியா வீசிய 17வது ஓவரில் இருந்துதான் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது. இந்த ஓவரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா வியூகம் அமைத்துச் செயல்பட்ட அனைத்தும் வெற்றியாக அமைந்தது.

உலகத் தரமான பந்துவீச்சாளர் பும்ரா

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எப்படி ஒரு மால்கம் மார்ஷல் கிடைத்தாரோ அதுபோல் இந்திய அணிக்கு கிடைத்தவர் ஜஸ்பிரித் பும்ரா. தட்டையான பார்படாஸ் ஆடுகளத்தில் பந்தை ஸ்விங் செய்வது கடினமானது.

இந்த விக்கெட்டில் பேட்டர்கள் ‘விளையாட முடியாத’ இரு பந்துகள் வீசி இரு விக்கெட்டுகளை பும்ரா எடுத்தது ஆட்டத்தின் திருப்புமுனை. பும்ராவின் ஒவ்வொரு பந்தும் மிகத் துல்லியமாக லைன் லென்த்தில் கச்சிதமாக ஈட்டிபோல் இறங்கின.

அதிலும் 18வது ஓவரில் தேய்ந்த பந்தில் யான்சென் விக்கெட்டை இன்கட் மூலம் போல்டாக்கியது பந்துவீச்சில் பும்ரா அறிவுஜீவி, உலகின் முதல்தரமான பந்துவீச்சாளர் என்பதை வெளிக்காட்டியது.

1983இல் கபில்தேவ், 2024இல் ஸ்கை

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் உலகக்கோப்பையை வென்றது. அப்போது விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஷாட்டில் கேப்டன் கபில் தேவ் ஓடிச் சென்று பிடித்த கேட்ச் இன்றுவரை மறக்க முடியாதது, இன்னும் பேசப்படுகிறது. அதுபோன்ற ஒரு கேட்சைத்தான் சூர்யகுமார் நேற்று எடுத்தார்.

இந்திய அணி 16 ரன்களை டிபெண்ட் செய்தாக வேண்டிய நிலையில் இருந்தது. மில்லர் சிக்ஸருக்கு அடித்துவிட்டோம் என்று பெருமூச்சு அடைந்த நேரத்தில் அந்த பந்தை கேட்ச் பிடித்த சூர்யகுமார், தான் பவுண்டரி கோட்டுக்கு வெளியே நிலைதடுமாறிச் செல்கிறோம் என்றுணர்ந்த தருணத்தில் பந்தை மேலே தூக்கிப் போட்டுவிட்டு வெளியே சென்றார்.

பின்னர் மீண்டும் எல்லைக் கோட்டுக்குள் வந்து பந்தை கேட்ச் பிடித்த அவரின் ஸ்மார்ட் கேட்ச் காலத்துக்கும் மறக்கப்படாது. 1983இல் கபில்தேவ், 2024இல் சூர்யகுமார். “கேட்சஸ் வின் மேட்சஸ்” என்று சொல்வார்கள், இந்த கேட்ச்தான் உலகக் கோப்பையை வென்று கொடுத்தது.

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

கிங் என நிரூபித்த கோலி

டி20 உலகக்கோப்பை தொடங்கியது முதல் மோசமான ஃபார்ம், அரையிறுதிலும் சொதப்பலான ஆட்டம் என்று கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன. கோலிக்கு சாதாரண சூழலில் மலரக்கூடியவர் அல்ல, அசாதாரண சூழல்,நெருக்கடியில்தான் கோலி என்ற பேட்டர் விஸ்வரூமெடுப்பார் என்பதை நேற்றும் வெளிப்படுத்தினார்.

முதல் 5 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை விளாசிய கோலி, அடுத்தடுத்து இந்திய அணிக்கு 3 விக்கெட்டுகள் சென்றவுடன் ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து ஆங்கர் ரோலுக்கு மாறினார். அடுத்த 48 பந்துகளில் ஒரு பவுண்டரி மட்டுமே கோலி விளாசினார்.

கோலியின் ஆங்கர் ரோல் குறித்து பல விமர்சனங்கள் வந்தநிலையில் அதைக் கண்டு கொள்ளாமல் நேற்று தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப்போட்டி, இந்த வாய்ப்பைத் தவறவிட்டால் வேறு இல்லை என்பதை உணர்ந்த கோலி ஆங்கர் ரோலிலிருந்து அதிரடிக்கு மாறவே இல்லை.

ரபாடாவின் 18வது ஓவர், யான்சென் ஓவரில்தான் கோலி தனது கியரை மாற்றி சிக்ஸர் விளாசினார். இரு ஓவர்களில் இருந்தும் 33 ரன்கள் கிடைத்தது. கோலி தனது கடைசி 11 பந்துகளில் 26 ரன்களை சேர்த்து 76 ரன்களில் ஆட்டமிழந்தார். என்னால் ஆங்கர் ரோலும் செய்ய முடியும், இதுபோல் தேவைக்கு ஏற்றார்போல் பேட்டை சுழற்றவும் முடியும் என்பதை நிரூபித்துவிட்டு கிங் கோலி விடைபெற்றார்.

அர்ஷ்தீப் கட்டுக்கோப்பு

2024 டி20 உலகக்கோப்பை இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானவர். நான்கு ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள் அதாவது 2 ஓவர்கள் மெய்டன் எடுத்ததும் அடக்கம்.

பவர்ப்ளேவில் அர்ஷ்தீப் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதிலும் கேப்டன் மார்க்ரம் விக்கெட், டீக் காக்கிற்கு வலை விரித்து அவரைச் சிக்க வைத்த பந்துவீச்சு ஆகியவை மாஸ்டர் கிளாஸ்.

மேலும், 19வது ஓவரை கட்டுக்கோப்பாக வீசிய 4 ரன்கள் மட்டுமே கொடுத்து மில்லரை ரன் அடிக்கவிடாமல் அடக்கியது அர்ஷ்தீப்பின் சிறப்பான பந்தவீச்சை வெளிக்காட்டியது.

தோல்வி அடைந்த சுழற்பந்துவீச்சு

சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானம் என நம்பி குல்தீப், ஜடேஜா, அக்ஸர் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்தநிலையில் 9 ஓவர்களை வீசி இவர்கள்தான் 109 ரன்களை வாரி வழங்கினர்.

வேகப்பந்துவீச்சாளர்கள் 3 பேரும் 58 ரன்களையே வழங்கியிருந்தனர், 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதில் ஒன்றில்தான் ரோஹித்தின் கணிப்பு தவறியது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)