விஜய் மாணவர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள்

விஜய்

பட மூலாதாரம், PTI

“நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை,” என்றும், “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்,” என்றும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

மேலும், போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருந்தாலும், சில விஷயங்களிலிருந்து நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

விஜய்யின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் களத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

விஜய் சொன்ன கருத்துகள் பொதுவான வாதமாக இருப்பதாகவும் நேரடியான குற்றச்சாட்டு இல்லை என்றும் தி.மு.க-வினர் கூறி வருகின்றனர். விஜய்யின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீமான், இதைக் கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வு

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூன் 28, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்தாண்டு இந்நிகழ்வு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்றது. இந்தாண்டு, இந்நிகழ்ச்சி இருகட்டங்களாக நடைபெறுகிறது. இதன் இரண்டாம் கட்டம் வரும் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் நாங்குநேரி சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, 12-ஆம் வகுப்பில் 469 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் சின்னதுரையின் அருகில் அமர்ந்திருந்தார்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

விஜய் உரையின் சிறப்பம்சங்கள்

விஜய்

பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM

  • வாழ்க்கையில் நாம் என்னவாகப் போகிறோம் என்பது குறித்த தெளிவு பலருக்கும் இருக்கலாம். ஆனால், சில மாணவர்களுக்கு எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்பதில் தொய்வு இருக்கலாம். எல்லா துறையும் நல்ல துறைதான், அதில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் 100% உழைப்பைச் செலுத்தினால் யாராக இருந்தாலும் வெற்றி நிச்சயம். எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் ஆலோசியுங்கள்.
  • பொறியியல், மருத்துவம் மட்டுமே நல்ல படிப்பு இல்லை. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், நல்ல தலைவர்கள்தான் தமிழ்நாட்டில் இல்லை. இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகின்றனர். அரசியலும் ஏன் ஒரு துறையாக வரக்கூடாது? அப்படி வரவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
  • “நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா, வேண்டாமா?” என விஜய் கேள்வி எழுப்பினார். அப்போது, அரங்கிலிருந்தவர்கள் ஆரவாரம் செய்ததையடுத்து, “உங்களின் ஆர்வம் புரிகிறது, இப்போதைக்குப் படியுங்கள், மற்றதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” எனத் தெரிவித்தார்.
  • மறைமுகமாகவே நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் எனக் கூறிய விஜய், ஒரு செய்தியை பல செய்தித்தாள்கள் எப்படி வெவ்வேறு விதமாக கையாள்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
  • சமூக ஊடகங்கள் நல்லவர்களைக் கெட்டவர்களாகவும், கெட்டவர்களை நல்லவர்களாகவும் காண்பிக்கின்றனர். அதையெல்லாம் படியுங்கள், ஆனால் எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போதுதான் நாட்டில் என்ன பிரச்னைகள் உள்ளன, சமூகத் தீமைகள் குறித்து உங்களுக்குத் தெரியும். சில கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை கிடைக்கும். அதுதான் சிறந்த அரசியல், என்றார்.
  • நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்கள் தவறான பழக்கங்களில் ஈடுபட்டால் முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த பாருங்கள். தவறான பழக்கங்களில் ஈடுபடக் கூடாது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதை கட்டுப்படுத்துவது அரசின் கடமை, இளைஞர்களை காப்பாற்றுவது அரசின் கடமை, இப்போது ஆளும் அரசு அதைத் தவற விட்டுவிட்டார்கள் என்பதை நான் பேச வரவில்லை, அதற்கான மேடையும் இதுவல்ல. சில சமயங்களில் அரசாங்கத்தைவிட நம் பாதுகாப்பை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். போதைப் பழக்கத்தை தவிர்க்கும் பொருட்டு, ‘Say No to Temporary pleasure, Say No to drugs’ என மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் சொன்னார் விஜய்.
  • தேர்வில் தோல்வியடைந்தவர்கள், நினைத்த மதிப்பெண்களை பெற முடியாதவர்கள் விரக்தி அடைய வேண்டாம். வெற்றி, தோல்வியை சமமாக பாவிக்கக் கற்றுக்கொண்டால், தோல்வி நம்மிடம் வருவதற்கு பயப்படும். வெற்றி என்பது முடிவல்ல, தோல்வி என்பது தொடர்கதை அல்ல, என்றார்.

சீமான் கூறியது என்ன?

சீமான்

பட மூலாதாரம், X/ நாம் தமிழர் கட்சி

படக்குறிப்பு, சீமான்

‘தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும்’ என்றும், ‘போதைப் பழக்கம்’ குறித்தும் விஜய் பேசியது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, “விஜய் யாரைச் சொல்கிறார் எனத் தெரிந்தால்தான் பதில் சொல்ல முடியும். போதைப்பொருள் புழக்கம் அதிகமாகியுள்ளது என விஜய் கூறியிருப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? இது பொதுவான குற்றச்சாட்டு. தமிழ்நாடு கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தேசியச் சராசரியைவிட அதிகமாக உள்ளது,” என தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சி நடத்துவதற்காக விஜய்க்கு வரவேற்பு அளித்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை-பணக்காரர் என்ற எவ்விதப் பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும் விஜய்க்கு வாழ்த்துகள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் பேச்சு குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய சீமான், விஜய்யை பலரும் எதிர்த்தபோது தான் தொடர்ந்து பல நேரங்களில் அவருக்கு ஆதரவாக நின்றதாகக் கூறினார். அப்போது, இதனை கூட்டணிக்கான அஸ்திவாரமாக எடுத்துக்கொள்ளலாமா என செய்தியாளர் கேட்டபோது, “எடுத்துக்கொள்ளலாம்,” என சீமான் கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)