செயலி மூலம் டிஜிட்டல் கடன் பெறுவோர் ஏமாறாமல் இருக்க அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நந்தகுமார்
- பதவி, பிபிசி தமிழ்
கடந்த 2023-24 நிதியாண்டில், இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட டிஜிட்டல் கடன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
டிஜிட்டல் கடன் தற்போது எவ்வளவு பிரபலமாகியுள்ளது என்பதற்கு இந்தியாவில் ஃபின்டெக் கடன் வழங்கும் நிறுவனங்களின் சுய-ஒழுங்குமுறை அமைப்பான 'நுகர்வோர் மேம்பாட்டுக்கான ஃபின்டெக் சங்கம் (Fintech Association for Consumer Empowerment)' சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையே சாட்சி.
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன?
ஃபின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் ரூ.1,46,517 கோடி மதிப்பிலான டிஜிட்டல் கடன்களை வழங்கியுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் விநியோகம் செய்யப்பட்ட கடன்களின் எண்ணிக்கையைவிட இது 35% அதிகம். அதேபோல வழங்கப்பட்ட கடன்களின் மதிப்பைக் கணக்கிட்டால் கடந்த நிதியாண்டில் 49% உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் விநியோகம் செய்யப்பட்ட டிஜிட்டல் கடன்களில் 70% கடன்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட 28 நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டிஜிட்டல் கடன் என்றால் என்ன?
அவரசமாக ஒரு பொருளை வாங்க வேண்டிய சூழ்நிலை, மருத்துவ அவசரம், சுற்றுலா செல்ல, வீட்டு வாடகை கட்ட, மளிகைப் பொருட்கள் வாங்க, திருமண செலவு என அனைத்து அவசர மற்றும் அவசரமில்லாத தேவைகளுக்கும் டிஜிட்டல் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
வங்கிக்குச் செல்லாமல், பல கையெழுத்துளைப் போடவேண்டிய தேவையில்லாமல் சுலபமாக ஸ்மார்ட்ஃபோன் மூலம் சில மணிநேரத்தில் இந்தக் கடனைப் பெறலாம் என்பதே இதன் பிரபலத்திற்கு முக்கியக் காரணம்.
வங்கிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் இந்த டிஜிட்டல் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு அதிகரித்திருப்பது ஒரு பக்கம், மறுபக்கம் கொரோனா பொது முடக்கம் என இந்தக் காலகட்டத்தில் மக்களுக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது டிஜிட்டல் கடன் மூலம் மக்களுக்கு உடனே கடன் கிடைத்தது. இதுவே டிஜிட்டல் கடன் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, 2017ஆம் ஆண்டு மொத்த கடனில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்கு 6.3% ஆக இருந்த நிலையில், 2020ஆம் ஆண்டில் அது 30 சதவீதமாக உயர்ந்தது.
அதிக டிஜிட்டல் கடன்களை வாங்குவது யார்?

பட மூலாதாரம், Getty Images
இளைஞர்கள், குறிப்பாக டிஜிட்டல் உலகில் அதிகம் மூழ்கி இருப்பவர்கள், அதிக பொருட்களை வாங்க வேண்டும் என ஆர்வம் கொண்டவர்கள், முதல் முறை கடன் பெறுபவர்கள் போன்றவர்களே டிஜிட்டல் கடன்களைப் பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
டிஜிட்டல் கடன்களைப் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார், பான், வங்கி ஸ்டேட்மெண்ட், முகவரி அதாரத்திற்காக அடையாள அட்டை ஆகியவற்றுடன் சிபில் ஸ்கோர் 650க்கு மேல் இருத்தல் வேண்டும். பின்னர் ekyc செயல்முறையை முடித்தால் உடனே கடன் கிடைக்கும்.
மேலும் ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி கடன் வாங்குபவர்களின் நேரடி வங்கிக் கணக்கிற்கு மட்டுமே கடன் தொகை அனுப்பப்பட வேண்டும். முன்றாம் நபர் வங்கி கணக்கிற்குத் தொகை செலுத்துவதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்துகிறது.
ஆனால், சில போலி செயலிகள் போதிய ஆவணங்கள் இல்லாமலே கடன் வழங்குகின்றன. அத்துடன் வாடிக்கையாளர்களின் அவசரத்தை சாதகமாக்கிக்கொண்டு, மூன்றாம் நபரின் வங்கிக் கணக்கிற்கு கடன் தொகையைச் செலுத்துகின்றன.
போலி செயலிகளால் ஏற்படும் பாதிப்புகள்

பட மூலாதாரம், Getty Images
ரிசர்வ் வங்கியால் அமர்த்தப்பட்ட வொர்க்கிங் குரூப் (Working group) என்ற ஒரு குழு மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் உள்ள 1100 கடன் செயலிகளில் 600 செயலிகள் போலியானவை என்பது தெரிய வந்துள்ளது. கடன் செயலிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், போலி செயலிகளைக் கண்டுபிடிப்பது வாடிக்கையாளர்களுக்குக் கடினமானதாக உள்ளது.
அதேபோல ஒரு செயலியின் பிரதிபலிப்பும் (Copycat) அதிகரித்துள்ளது. பார்ப்பதற்கு அசல் செயலியைப் போலவே இருக்கும் இந்தப் போலி செயலிகளை வாடிக்கையாளர்கள் கவனத்துடன் கையாள வேண்டும்.
ஆண்டிராய்ட் ப்ளே ஸ்டோரில் 81 டிஜிட்டல் கடன் செயலிகள் உள்ளன. ஆனால், கூகுள் தேடலில் ஆயிரக்கணக்கான செயலிகள் கிடைக்கின்றன. ஆப் ஸ்டோரில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் இருப்பதால், அதில் போலி செயலிகள் இருப்பது சற்று குறைவு.
எனவே முன்பின் தெரியாத கூகுள் தேடல் பக்கத்தில், வாட்ஸ் ஆப், மெசெஜ், டெலிகிராம் செயலி, சமூக ஊடகம் ஆகியவற்றில் கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதைவிட, நேரடியாக ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வது பாதுகாப்பானது.
சில போலி செயலிகள் கடன் வழங்குவதாகக் கூறி, அதிக பிராசசிங் தொகையைப் பெற்றுக் கொள்கின்றன. ஆனால், கடன் வழங்குவதில்லை. அதிக வட்டி விதிப்பதுடன், பயனாளர்களிளின் புகைப்படம் மற்றும் அவர்களது தொடர்பு எண்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், கடனை திரும்பப் பெற அவமரியாதையான செயல்களில் ஈடுபடுகின்றன.
’’கடன் வாங்குவதற்கென சில நடைமுறைகள் உள்ளன. வங்கியில் நீங்கள் கடன் வாங்கினால், சொத்தையோ அல்லது நகையையோ அடகு வைப்பீர்கள். ஆனால், சில செயலிகள், சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன் தருகிறோம் எனக் கூறி ஆசை காட்டுகிறார்கள்.
வங்கியிலோ அல்லது கிரேடிட் கார்டிலோ கடன் கிடைக்காதவர்கள் செயலியில் டிஜிட்டல் கடன்களைப் பெறுகிறார்கள். அப்படி எவ்வித அடமானமும் இல்லாமல் கடன் வாங்குவது, உங்களையே அடகு வைத்து கடன் வாங்குவதற்குச் சமம். உங்களது புகைப்படம், குடும்ப விவரம், தொடர்பு எண்கள், அந்தரங்கம் என அனைத்தும் பாதிக்கும் ஆபத்து உள்ளது,’’ என்கிறார் கடன் எனும் புத்தகத்தை எழுதியுள்ள பொருளாதார ஆலோசகர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
மேலும் அவர், “எளிமையாக செயலி மூலம் கிடைக்கும் கடன்கள் ஆபத்தானவையே. சில நிறுவனங்கள், அதிக வட்டி வாங்குவது மட்டுமல்லாமல், கடன் முடிந்த பிறகும் வாடிக்கையாளர்களை விடுவதில்லை. முடிந்த அளவு, கிரெடிட் கார்டுடன் நிறுத்திக்கொள்வது மக்களுக்கு நல்லது,’’ என்கிறார்.
போலி செயலிகளில் இருந்து தப்பிக்க, முதலில் டிஜிட்டல் கடன் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன்பு, அந்தச் செயலியின் பின்னணியை ஆராய வேண்டும்.
கடன் செயலியைப் பொறுத்தவரை சைபர் நிபுணர்கள் கீழ்காணும் விவரங்களை கட்டாயம் சரிபார்க்குமாறு வலியுறுத்துகின்றனர்.
- அந்த நிறுவனத்திற்கு இணையதளம் உள்ளதா?
- செயலிக்குப் பின்னணியில் ஏதேனும் சட்ட நிறுவனம் உள்ளதா?
- ப்ளேஸ்டோரில் அந்த செயலியின் பதிவிறக்க எண்ணிக்கை மற்றும் ரிவியூஸ் எப்படி உள்ளது?
வங்கி கடன் vs டிஜிட்டல் கடன் ஒப்பீடு

பட மூலாதாரம், Getty Images
வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் விநியோகிக்கும் கடன்களில் பர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனே முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ’பிற’ கடன்கள் இரண்டாம் இடத்தில் உள்ளன. ’பிற’ கடன்கள் பெரும்பாலும் பொருட்களை வாங்கவே பயன்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கியில் பெறப்பட்ட கடன்களில் 87% கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கான அவகாசம் ஓர் ஆண்டுக்கு மேலாக உள்ளது. ஆனால், டிஜிட்டல் கடனில், 23% கடனுக்கு மட்டுமே அவகாசம் ஒரு ஆண்டுக்கு மேலாக உள்ளது. பெரும்பாலான டிஜிட்டல் கடன்கள் 30 நாட்களுக்கு உட்பட்ட குறுகிய கால கடனாகவே உள்ளது.
ரிசர்வ் வங்கி அறிக்கையில் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, டிஜிட்டலில் கடன்கள், பொருட்கள் நுகர்வை ஊக்குவிப்பதும், அதன் வட்டி விதிகம் அதிகமாக இருப்பதும் தெரிய வருகிறது.
தரவுத் திருட்டு குறித்து விழிப்புடன் இருப்பது எப்படி?
டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் பொதுவாக வாடிக்கையாளர்களிடம் இருந்து முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதிச் செலவு உட்படப் பல தரவுகளைச் சேகரிக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
வாடிக்கையாளர்கள் செலவு செய்யும் முறைகள் மற்றும் சமூக ஊடக பயன்பாடு போன்ற தகவல்களையும் நிறுவனங்கள் கண்காணிக்கும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது.
இந்தத் தளங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கும்போது, வாடிக்கையாளர்கள் தங்கள் தனியுரிமை கொள்கைகள் பற்றிப் பொதுவாக அறிந்திருக்க மாட்டார்கள்.
செயலிகளில் டிஜிட்டல் கடன்களை வழங்கும்போது 30% நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் லொகேஷனுக்கான அனுமதியையும், 30% நிறுவனங்கள், கேமராவுக்கான அனுமதியையும், 21% நிறுவனங்கள் தொடர்பு எண்களைப் பார்ப்பதற்கான அனுமதியையும், 11% நிறுவனங்கள் போன் கால்களை மேற்கொள்வதற்கான அனுமதியையும், 11% நிறுவனங்கள் போன் கால்களை ரெக்கார்ட் செய்வதற்கான அனுமதியையும் கேட்கின்றன என்று வொர்க்கிங் குரூப்பின் ஆய்வு கூறுகிறது
டிஜிட்டல் கடன் பெரும்பாலும் காகிதமற்ற செயல்முறையைக் கொண்டது என்பதால் eKYC செயல்முறையைச் சரிபார்க்க கேமரா அனுமதியும், கடன் வாங்குபவரின் இடத்தை உறுதி செய்ய லொகேஷன் அனுமதியும் மட்டுமே அளித்தால் போதும். அதைத் தவிர பிறவற்றுக்கு வாடிக்கையாளர்கள் அனுமதி அளிக்க வேண்டியதில்லை என ரிசர்வ் வங்கி கூறுகிறது.
இதன்மூலம் எதிர்காலத்தில் கடன் வாங்குபவர்கள் அவமதிப்புக்கு உள்ளாவதையும், அவர்களது தரவுகள் சேகரிக்கப்படுவதையும் தவிர்க்க முடியும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












