டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்தை பழிதீர்த்த இந்தியா - மீண்டும் ஏமாற்றிய கோலி பற்றி ரோகித் கூறியது என்ன?

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் கடந்த 11 ஆண்டுகளுக்குப்பின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

கடைசியாக 2014ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு தோனி தலைமையில் இந்திய அணி முன்னேறி இலங்கையிடம் கோப்பையை பறிகொடுத்தது. ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப்பின் தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கும் கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை இழந்தது இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

பர்படாஸ் நகரில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி கோப்பைக்காக மோதுகிறது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பழிதீர்த்த இந்திய அணி

பிராவிடன்ஸில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 68 ரன்களில் வென்றது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. 172 ரன்கள் எனும் கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து 16.4 ஓவர்களில் 103 ரன்களுக்கு சுருண்டு 68 ரன்களில் தோல்வி அடைந்தனர். 2022ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி அடிலெய்ட் நகரில் அடைந்த தோல்விக்கு, நேற்று இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி பழிதீர்த்துக்கொண்டது.

கடந்த 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 170 ரன்கள் சேர்த்து இந்திய அணியை துவம்சம் செய்திருந்தது. இந்த முறை 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியிடம் சின்னாபின்னமாகியது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஆட்டநாயகன் அக்ஸர்

இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் ரோஹித் சர்மாவின் துணிச்சலான அதிரடி ஆட்டமும் அவரின் அரைச் சதமும், சூர்யகுமார்(47), ஹர்திக் பாண்டியாவின்(23) பங்களிப்பும் முக்கியக் காரணம். பந்துவீச்சில் குல்தீப் யாதவ், பும்ராவோடு சேர்ந்து அக்ஸர் படேலின் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

அக்ஸர் படேல் தனது ஒவ்வொரு ஓவரின் முதல் பந்திலும் விக்கெட் வீழ்த்தியது திருப்புமுனை. குறிப்பாக பட்லர், பேர்ட்ஸ்டோ, மொயின் அலி விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான் இங்கிலாந்து அணியை நெருக்கடியில் தள்ளி பெரிய திருப்புமுனையை இந்திய அணிக்கு ஏற்படுத்தியது. சிறப்பாக பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கடினமான ஆடுகளம்

பிராவிடன்ஸ் ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் கடினமாக இருந்தது என்பது இந்திய பேட்டர்கள் ஒவ்வொரு பந்துக்கும் திணறியபோதே தெரிந்தது. வேகப்பந்து வீசினால்கூட தாழ்வாகவும், திடீரென பவுன்ஸ் ஆவதும், ஸ்விங் ஆவதும் என கணிக்க முடியாத வகையில் களிமண் விக்கெட்டாக இருந்தது. இந்த ஆடுகளத்திலும் துணிச்சலாக அதிரடி ஆட்டத்தைக் கையாண்டு, அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது ரோஹித் சர்மாவின் பேட்டிங் மட்டும்தான்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இன்னும் சற்று ஒழுங்குடன் பந்துவீசியிருந்தால், நிச்சயமாக இந்திய பேட்டர்களுக்கு இன்னும் நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளை விளாசியது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 133 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவர்களை வீணடிக்காத ரோகித் சர்மா, ஸ்கோரை உயர்த்த ரிஸ்க் எடுத்து சில ஷாட்களையும் நுணுக்கமாக ஆடினார். டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 141 ஆக இருக்கும்நிலையில் இதில் 131 ஆக இருந்தது. மோசமான பந்துகளை மட்டும் ரோகித் சர்மா பெரிய ஷாட்களாக மாற்றவில்லை, அணிக்கு ஸ்கோர் உயர்வு தேவைப்படும்போதெல்லாம் எந்த பந்தையும் பார்க்காமல் வெளுத்தார்.

ரோகித் சர்மா 4வது ஓவரிலிருந்தே கட்டுப்பாட்டுடன் பேட் செய்யத் தொடங்கி 26 பந்துகளில் 20ரன்களை சேர்த்தார். ரோகித் சர்மா 40 ரன்கள் சேர்த்திருந்தபோது அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களும் அடக்கம்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

மீண்டும் தடுமாறிய கோலி; ரோகித் கூறியது என்ன?

தொடக்க வீரராகக் களம் இறங்கும் விராட் கோலி இந்தத் தொடர் முழுவதும் சரியாக ரன் எடுக்கவில்லை. ஒருவேளை விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கி இருந்தால், அவரால் அணிக்கு இன்னும் கூடுதலான ஸ்கோர் கூட கிடைத்திருக்கும் என்ற விவாதம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “மனநிறைவான வெற்றி. அனைவருமே கடுமையாக உழைத்தோம், அதற்கான பலன் கிடைத்துள்ளது. இந்த சூழலுக்கு ஏற்றபடிபோல் மாறியது சவாலானது. எங்களுக்கு வெற்றிப் பயணமாக இருந்து வருகிறது. பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு புரிந்து கொண்டதால்தான் சிறப்பாக விளையாட முடிந்தது. 150ரன்கள் சேர்த்தாலே இந்த ஆடுகளத்தில் போதுமானது என நினைத்தோம் ஆனால், 170 கிடைத்தது.” என்றார்.

“பேட்டர்களின் திறமையை, விருப்பத்தை திசைதிருப்ப விரும்பவில்லை, அவர்களுக்கு முழுசுதந்திரம் உண்டு. 171 ரன்கள் இந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர். பந்துவீச்சாளர்கள் பணியும் அற்புதமாக இருந்தது. அக்ஸர், குல்தீப் இருவரும் எதிரணிக்கு சிம்மசொப்னமாக இருந்தார்கள். இவர்களின் பந்துவீச்சில் பெரிய ஷாட்கள் அடிப்பது கடினமாக இருந்தது. அழுத்தமான நேரத்தில் அமைதியாகப் பந்துவீசினர். விராட் கோலி பேட்டிங் பற்றி எங்களுக்குத் தெரியும். ஃபார்ம் ஒரு பிரச்சினை இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக கோலி விளையாடி வருகிறார். இறுதிப்போட்டிக்கு இன்னும் தீவிரமாகத் தயாராகுவோம். நாங்கள் எந்த நேரத்திலும் பதற்றப்படாமல், நிதானமாகவே விளையாடினோம். அதுதான் முக்கியம். நல்ல அணியாக உருவெடுத்துள்ளநிலையில் சாம்பியன் பட்டத்துக்காக முயற்சிப்போம்” எனத் தெரிவித்தார்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு தலைவலியாக மாறிய ரஷித் பந்துவீச்சு

இந்திய அணிக்கு நேற்று பெரிய சவாலாக இருந்தது அதில் ரஷித் பந்துவீச்சும், லிவிங்ஸ்டோன் பந்துவீச்சும்தான். அதிலும் குறிப்பாக ரஷீத் பந்துவீச்சை ரோகித் சர்மாவும், சூர்யகுமார் பெரிய ஷாட்டுக்கு மாற்றவே தயங்கினர். இதனால் இந்தியஅணியின் ரன்ரேட்டை ரஷித் பந்துவீச்சால் இறுக்கிப் பிடித்தார்.

சரியான நீளத்தில், ஸ்டெம்பை நோக்கியே ரஷித் வீசியதால், பெரிய ஷாட்களாக மாற்றுவது ரோகித், சூர்யாவுக்கு கடினமாக இருந்தது. அதில் ரஷித் தனது முதல் ஸ்பெல்லில் 2 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்த நிலையில் மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், அடுத்த 2 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதில் ரஷித் சிறப்பாகப் பந்துவீசி, கேப்டன் ரோகித் சர்மா(57) விக்கெட்டை வீழ்த்தி, தனக்குரிய பணியை முடித்தார்.

அதேபோல நேற்று மொயின் அலி இருந்தும் அவருக்குப் பதிலாக பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர் லிவிங்ஸ்டனை பந்துவீசச் செய்தார். ஆடுகளம் ஏற்கெனவே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், லிவிங்ஸ்டன் பந்துவீச ஏதுவாக இருந்தது. அவரும் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, இந்திய ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தினார்.

ஆனால், இதே ஆடுகளத்தை இந்தியப் பந்துவீச்சாளர்கள் குல்தீப், அக்ஸர், ஜடேஜா ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பயன்படுத்தினர். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 11 ஓவர்கள் வீசி, 58 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர், ஓவருக்கு சராசரியாக 5.2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர். 28 டாட் பந்துகள் ஏறக்குறைய 5.4 ஓவர்களை டாட்பந்துகளாக வீசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

திருப்புமுனையை ஏற்படுத்திய அக்ஸர்

பவர்ப்ளே ஓவருக்குள் அக்ஸர் பந்துவீச அழைக்கப்பட்டார். அவரின் முதல் ஓவர் முதல் பந்திலேயே ஜாஸ் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார். அடுத்த ஓவரில் பேர்ஸ்டோ போல்டாகியது என திருப்புமுனையை அக்ஸர் ஏற்படுத்தினார். அதேபோல 7-வது ஓவரை அக்ஸர் வீசியபோது முதல் பந்தில் மொயின் அலி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அக்ஸர் படேல் வீசிய 3 ஓவர்களில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தார்.

குல்தீப், பும்ரா மிரட்டல்

ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கவில்லை, மிகவும் தாழ்வாக வருகிறது, பவுன்ஸரும் இல்லை என்பதால் இங்கிலாந்து அணியிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால், பும்ரா தனது ஸ்லோவர் பால், கட்டர்கள், ஸ்விங் பந்துவீச்சு மூலம் தொடர்ந்து இங்கிலாந்து பேட்டர்களை மிரட்டனர். ஒரு கட்டத்தில் பில் சால்ட்டுக்கு அருமையான ஸ்விங் பந்தைவீசி கிளீன் போல்டாக்கினார் பும்ரா. கடைசி நேரத்தில் ஜோப்ரா ஆர்ச்சரை கால்காப்பில் வாங்க வைத்து 2வது விக்கெட்டையும் பும்ரா வீழ்த்தினார். 2.3 ஓவர்களை வீசிய பும்ரா 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்துஅணி 4 விக்கெட்டுகளை இழந்து 49ரன்கள் சேர்த்திருந்தபோது குல்தீப் பந்துவீச வந்தார். கடந்த ஓர் ஆண்டில் கவனிக்கத்தக்க பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் குல்தீப் பந்துவீச்சில் ரன்களைச் சேர்க்க இங்கிலாந்து பேட்டர்கள் திணறினர். ஓரளவுக்கு செட்டில் ஆகி விளையாடிவந்த பேட்டர் ஹேரி ப்ரூக்(25), சாம் கரன்(2) இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி அளித்தார். ஆல்ரவுண்டர் என்ற பெயருடன் அணிக்குள் களமிறங்கிய ஜோர்டானையும் குல்தீப் தனது மந்திரப் பந்துவீச்சால் சாய்த்தார்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்தியப் பந்துவீச்சில் சுருண்ட நடப்புச் சாம்பியன்

அரையிறுதி ஆட்டம் என்பதால், இங்கிலாந்து வீரர்கள் பொறுப்புடன் ஆடுவார்கள், யாராவது ஒரு பேட்டராவது பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்த்திருந்தது ஏமாற்றத்தை அளித்தது. அந்த அணியில் சேர்க்கப்பட்டஅதிகபட்ச ஸ்கோர் ஹேரி ப்ரூக் சேர்த்த 25 ரன்கள்தான். கேப்டன் பட்லர்(23), ஐபிஎல் தொடரில் கலக்கிய பில் சால்ட்(5), பேர்ஸ்டோ(0), லிவிங்ஸ்டன்(11), சாம் கரன்(2) என ஒருவர்கூட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, போராட்டக் குணத்தை வெளிப்படுத்தவில்லை. கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியிடம் இருந்த துணிச்சல், விடாமுயற்சி, போராட்டக் குணம் அனைத்தும் இந்த முறை இல்லை.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கோலி இதுவரை செய்தது என்ன?

ரோகித் சர்மாவின் துணிச்சலான ஆட்டத்துக்கு கிடைத்த பரிசுதான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்த வெற்றியாகும். இந்தத் தொடரில் 248 ரன்கள் சேர்த்து ரோகித் 3-ஆவது இடத்தில் 155 ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கிறார், 41.33 சராசரி வைத்துள்ளார். ஆனால், தனது பாணியிலிருந்து மாறி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடும் கோலி இந்தத் தொடரில் இதுவரை 75 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார், 100 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 10 ரன்கள் சராசரியும் வைத்துள்ளார்.

இருவருக்கும் ஏறக்குறைய இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர்தான் கடைசியாக இருக்கலாம். ஆனால், கோலியின் பேட்டிங் பாணியும், ரோஹித்தின் பேட்டிங் பாணியும் வெவ்வேறு. அப்படி இருக்கையில் இருவரையும் ஒருசேர களமிறக்குவது அணியின் ஸ்கோரையே கடுமையாக இந்த தொடரில் பாதித்தது.

கோலியிடம் இருந்து முழுமையாக கிடைக்க வேண்டிய ஸ்கோர் இந்தத் தொடரில் இந்திய அணி தவறவிட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)