டி20 உலகக்கோப்பை: நிறவெறித் தடை முதல் அவப்பெயர் வரை - தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இறுதி வரை போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இதன் மூலம் டி20 உலகக் கோப்பைக்கான கனவு தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் கனவாகவே நீடிக்கிறது.
கடந்த 1992 முதல் ஐந்து முறை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இதற்கு முன்பு அரையிறுதி வரை தென் ஆப்பிரிக்கா வந்துள்ளது. ஆனால், உலகக்கோப்பையில் அந்த அணி இறுதிப்போட்டிக்கு வந்தது இதுவே முதல் முறை.
“நாங்கள் சோக்கர்ஸ் (Chocker - பதற்றத்தில் தவறு செய்யக்கூடியவர்கள்) என்ற வார்த்தைக்குத் தகுதியானவர்கள்தான். நாங்கள் மீண்டும் சோக்கர்களாக மாறிவிட்டோம். இந்த வார்த்தை கொடுமையானது. இருப்பினும் துணிந்து எதிர்கொள்ள வேண்டும். தலைகுனிந்தால்தான் அதிலிருந்து வெளியே வர முடியும்.”
இந்த வார்த்தைகள் தென் ஆப்ரிக்க அணிக்கு பயிற்சியாளராக இருந்த அந்த அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் வேதனையுடன் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தவை.
இந்திய அணிக்கு 2011இல் உலகக்கோப்பையைப் பெற்றுக் கொடுத்தபின் கேரி கிறிஸ்டனை பயிற்சியாளராக அமர்த்தியது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் நிர்வாகம். ஏறக்குறைய 2 ஆண்டுகளாக பயிற்சியளித்த கிறிஸ்டன் அணியின் ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றினார்.
ஆனால், 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்திடம் வெல்ல வேண்டிய ஆட்டத்தில் பதற்றத்தில் விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்ரிக்கா தோற்றது. இந்தத் தோல்விக்குப் பின் அதிருப்தி அடைந்த கிறிஸ்டன் 'சோக்கர்ஸ்' என்ற அடையாளத்தை ஏற்றால்தான் அதிலிருந்து வெளியே வர முடியும் என்று காட்டமாக விமர்சித்து, பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார்.
இதுவரை 1992, 1999, 2007,2015, 2023 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதிவரை சென்றுள்ள தென் ஆப்ரிக்கா ஒருமுறைகூட இறுதிப்போட்டிக்குச் சென்றதில்லை.
பிறநாட்டு அணிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐசிசி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தாலும், தரமான பந்துவீச்சாளர்கள், மிரட்டலான பேட்டர்கள் இருக்கும் வலிமையான அணியாகத் திகழ்ந்தாலும், இதுவரை ஐசிசி நடத்தும் எந்தப் போட்டியிலும் அரையிறுதியை தென் ஆப்ரிக்கா கடந்தது இல்லை.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2007ஆம் ஆண்டிலிருந்து பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி, 2 முறைதான் அரையிறுதிவரை முன்னேறித் தோற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில்தான் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தென் ஆப்ரிக்காவில் எப்போது கிரிக்கெட் தொடங்கியது?
தென் ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலணி ஆதிக்கம் 1652இல் தொடங்கியது. முதன்முதலில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி தென் ஆப்ரிக்காவை ஆக்கிரமித்து தங்கள் கலாசாரம், அடையாளங்கள், பொழுதுபோக்கு, உணவுகள் போன்றவற்றை அறிமுகம் செய்தனர்.
கடந்த 1795ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் நிர்வாகம் தென் ஆப்ரிக்கா மீது ஆர்வம் காட்டவில்லை. 1800களில் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் தொடங்கியபோதுதான் தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டு, அந்த நிர்வாகத்தினரால் விளையாடப்பட்டது. 1808ஆம் ஆண்டில்தான் தென் ஆப்ரிக்காவில் முதன்முதலாக கிரிக்கெட் விளையாடப்பட்டது.
கேப் டவுன் நகரில் இரு அணிகளுக்கு இடையே 1000 ரிக்ஸ் டாலர்கள் பந்தயமாக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதன்பின் மக்களிடையே கிரிக்கெட் மீதான மோகம் தீயாகப் பரவியது.
முதல் வெற்றி
கடந்த 1888ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது.
தொடக்கத்தில் தங்களுக்கு உள்ளாகவே விளையாடிக்கொண்ட தென் ஆப்ரிக்கா, 1900களில்தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியது.
கடந்த 1904ஆம் ஆண்டில்தான் தென் ஆப்ரிக்க அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது. கிரிக்கெட் விளையாடத் தொடங்கி 17 ஆண்டுகளுக்குப் பின்பு 1906ஆம் ஆண்டில்தான் இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் வெற்றியை தென் ஆப்ரிக்கா பெற்றது.
நிறவெறித் தடை

பட மூலாதாரம், Getty Images
அதன்பின் தென் ஆப்ரிக்காவில் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து ஏராளமான வீரர்கள் தேசிய அணிக்கு வரத் தொடங்கினர். போனர் மிடல்டன், சின்க்ளேர், கார்டன் ஒயிட் எனப் பல புகழ்பெற்ற வீரர்கள் அணியில் இடம் பெற்றனர். முதல் உலகக் போர், இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில்கூட தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் தொடர்ந்து விளையாடப்பட்டது, இங்கிலாந்து வீரர்கள் பயணம் செய்தனர், தென் ஆப்ரிக்க அணியும் அங்கு சென்று விளையாடியது.
ஐசிசி அமைப்பில் முறைப்படி இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் சேர்ந்த நிலையில், தென் ஆப்ரிக்க அணி மட்டும் சேர இயலவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அந்நாட்டில் கொண்டு வரப்பட்ட நிறவெறிச் சட்டம். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வெள்ளையர்களைத் தவிர கருப்பினத்தவர்கள், வேறு நிறத்தவர்கள் அல்லது இந்தியர்களுக்கு அனுமதியில்லை என்று அந்தச் சட்டம் கூறியது.
இதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஐசிசி 1970 முதல் 1991 வரை தென் ஆப்ரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்கத் தடை விதித்தது. இதனால் ஆலன் லாம்ப், ராபின் ஸ்மித் ஆகியோர் தென் ஆப்ரிக்காவில் இருந்து விலகி, இங்கிலாந்து அணிக்காக ஆடினர். கெப்லர் வெசல்ஸ் முதலில் ஆஸ்திரேலிய அணியிலும் பின்னர் தடை நீக்கத்துக்குப் பின் தென் ஆப்ரிக்க அணியிலும் இடம் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் அறிமுகம்
கடந்த 1991ஆம் ஆண்டு நிறவெறிக்கு எதிராக தென் ஆப்ரிக்கா மீது போடப்பட்ட தடையை நீக்கி, சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி அனுமதியளித்தது. இதையடுத்து முதன்முதலாக இந்தியாவுக்கு பயணித்த தென் ஆப்ரிக்க அணி 1991இல் கொல்கத்தாவில் நடந்த ஒருநாள் போட்டியில் பங்கேற்றது. இதில் இந்திய அணியிடம் 3 விக்கெட்டில் தென் ஆப்ரிக்கா தோற்றது. 1992ஆம் ஆண்டில் பர்படாஸில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை தென் ஆப்ரிக்கா விளையாடியது.
நிறவெறித் தடை நீக்கத்துக்குப் பிறகான தென் ஆப்ரிக்க அணியில் ஷான் போலக், ஜேக்ஸ் காலிஸ், ஜான்டி ரோட்ஸ், ஹேன்சி குரேனியோ, ஹட்சன், ஆலன் டொனால்ட் போன்ற ஜாம்பவான்கள் விளையாடினர்.
தொடக்கத்தில் வெற்றி, தோல்வி என மாறி, மாறி சந்தித்த தென் ஆப்ரிக்க அணி அதன்பின் சீராக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கி அனைத்து அணிகளுக்கும் கிலியை ஏற்படுத்தியது.
ஆனால், ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் அரையிறுதி, காலிறுதியோடு வெளியேறுவதை தென் ஆப்ரிக்கா வழக்கமாக வைத்து சோக்கர்ஸ் என்ற பெயரைப் பெற்றது.
கறுப்பினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2007ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் கொண்டு வரப்பட்ட நிற அடிப்படையிலான இட ஒதுக்கீடு கொள்கை தென் ஆப்ரிக்க அணியில் பலதரப்பட்ட வீரர்களும் வருவதற்கு வழிகாட்டியது.
இந்த கொள்கை கடந்த 2016ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தபின், தென் ஆப்ரிக்க அணியில் சராசரியாக 6 கறுப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் இருவர் கண்டிப்பாக கறுப்பின ஆப்பிரிக்கராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை தென் ஆப்ரிக்கா அணி என்ற பெயர் இருந்தாலும் பெயரளவுக்குக்கூட மாற்று நிறத்தவர் அணியில் இல்லை. ஆனால், 2016ஆம் ஆண்டுக்குப் பின் ரபாடா, நிடினி, இங்கிடி, அன்டில் பெகுல்குவாயே, டெம்பா பவுமா போன்ற இளம் வீரர்கள் அணிக்குள் வர முடிந்தது.
இப்போதைய 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்ரிக்க அணியில் 6 கறுப்பினத்தவர்கள் இருக்க வேண்டும். ஆனால், ரபாடா மட்டுமே சேர்க்கப்பட்டது பெரிய விமர்சனத்தை கிளப்பியது. லுங்கி இங்கிடி ரிசர்வ் வீரராக உள்ளார். டெம்பா பவுமா உலகக் கோப்பைக்கே தேர்ந்தெடுக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
'அலர்ஜி'யான ஐசிசி கோப்பை
ஐசிசி நடத்தும் போட்டித் தொடர் என்றாலே தென் ஆப்ரிக்க அணிக்கு அலர்ஜியாகிவிடுகிறது என்ற கிண்டல் ரசிகர்களிடம் பரவியது. 1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா முதன்முதலாகப் பங்கேற்று, மழை காரணமாக, ஒரு பந்தில் 22 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதால் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியது. அப்போது டிஎல்எஸ் விதி கிடையாது.
கடந்த 1996 உலகக்கோப்பைத் தொடரில் காலிறுதியோடு தென் ஆப்ரிக்கா வெளியேறியது. 1999ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 பந்துகளில் ஒரு ரன்னை எடுக்க முடியாமல் டொனால்ட் ஆட்டமிழக்க போட்டி டையானது. இதையடுத்து, குரூப் பிரிவில் முதலிடம் பெற்றமைக்காக ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குத் தகுதியானது, தென் ஆப்ரிக்கா வெளியேறியது.
கடந்த 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையை தென் ஆப்ரிக்கா நடத்தினாலும், குரூப் சுற்றைவிட்டே நகர முடியாமல் வெளியேறியது. இதையடுத்துதான் தென் ஆப்ரிக்க அணியில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டு ஷான் போலக் கேப்டன் பதவியிலிருந்து விலகவே, கிரேம் ஸ்மித் கேப்டனாக பொறுப்பேற்றார். இருப்பினும் அணியில் போலக் தொடர்ந்தார். அதன்பின் சீனியர் வீரர்கள் டொனால்ட், போலக், ரோட்ஸ், ஹட்சன், சிம்காக்ஸ் போன்றோர் ஓய்வுபெற்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு சிறிய சறுக்கல் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக ஆடி அரையிறுதி வரை சென்று, ஆஸ்திரேலிய அணியிடம் பரிதாபமாக தென் ஆப்ரிக்கா தோற்றது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்திடம் காலிறுதியில் தென் ஆப்ரிக்கா 64 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமாகத் தோல்வி அடைந்தது.
கடந்த 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் ஆகச் சிறந்த ஆட்டங்களை தென் ஆப்பிரிக்க அணி ஆடி பல அணிகளைப் புரட்டி எடுத்தது. அப்போது அணியில் டேல் ஸ்டெயின், ஸ்மித், ஏபிடி, டூப்ளெஸ்ஸி, மில்லர் எனப் பல வீரர்கள் இருந்தனர்.
ஆனாலும், அந்தத் தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது. 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை மோசமான கசப்பான தோல்விகளை தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கவே குரூப் சுற்றோடு வெளியேறியது. 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை வந்து, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2007 முதல் பங்கேற்கும் தென் ஆப்ரிக்க அணி 2009ஆம் ஆண்டு அரையிறுதிவரை முன்னேறி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. 2014ஆம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்து தென் ஆப்ரிக்கா வெளியேறியது. டி20 உலகக்கோப்பையிலும் அரையிறுதியை தென் ஆப்ரிக்கா கடந்தது இல்லை என்ற அவப்பெயருடன் இருந்தது.
முதல்முறையாக, 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைத் தொடரில் தான் தென் ஆப்ரிக்க அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஒரே சாதனை இதுதான்!

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்கா செய்த ஒரே சாதனை, ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட 1998 சாம்பியன்ஸ் கோப்பையை ஹன்சி குரோனி தலைமையில் வென்றதுதான்.
இதுதான் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி நடத்தும் தொடரில் பெற்ற ஒரே கோப்பை. அதேபோல 1998ஆம் ஆண்டு காமென்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஷான் போலக் தலைமையில் சென்று தென் ஆப்ரிக்கா தங்கப் பதக்கம் வென்றது.

பட மூலாதாரம், Getty Images
ஷான் போலக், வெசல்ஸ், பிரிங்கில், ஆலன் டொனால்ட், ஹட்சன், சிம்காக்ஸ், ராபின்சன், கிர்ஸ்டன், ஜேக்ஸ் காலிஸ், மெக்மிலன், குரோனியே, கிப்ஸ், நிக்கி போயே, பால் ஆடம்ஸ், போன்ற ஜாம்வான்கள் இருந்தபோதுகூட தென் ஆப்ரிக்க அணி ஐசிசி நடத்தும் எந்தத் தொடரிலும் அரையிறுதியைத் தாண்டியது இல்லை.
தென் ஆப்பிரிக்கா அணி காலிறுதிச் சுற்றுக்குள் வந்துவிட்டாலே தோற்றுவிடும், அரையிறுதியைக் கடப்பது கடினம், அழுத்தத்தைத் தாங்க மாட்டார்கள் என ரசிகர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளானது. இந்த அனைத்து பரிகாசங்களையும் விலக்கி வைத்து, தங்களாலும் இறுதிப் போட்டி வரை வர முடியும், கோப்பைக்காகப் போராட முடியும் என்பதை தென் ஆப்ரிக்கா 2024 டி20 உலகக் கோப்பையில் நிரூபித்துள்ளது.
இன்றுவரை ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் வலிமையான அணி என்று தென் ஆப்ரிக்கா பெயரெடுத்தாலும், ஐசிசி நடத்தும் போட்டிகளில் பட்டம் பெறும் களத்தில் தோற்பது அந்த அணிக்கு தீராத பழியாகிவிட்டது. உண்மையில் தென் ஆப்ரிக்க அணி தாங்கள் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 61 சதவீதம் வெற்றி சதவீதத்தை வைத்திருந்தும் இன்னும் ஒரு ஐசிசி உலகக்கோப்பை சாம்பியன்ஷிப் பட்டத்தைக்கூட வெல்ல முடியவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












