இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது குறித்து தோனி கூறியது என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு குவியும் வாழ்த்துகள்

பட மூலாதாரம், Getty Images

மேற்கிந்தியத் தீவுகளின், பிரிட்ஜ்டவுனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியா. தென் ஆப்ரிக்க அணியின் வெற்றிக்கு 177 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 169 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

டி20 உலகக்கோப்பை அரங்கில் இந்தியா வெல்லும் இரண்டாவது சாம்பியன் பட்டம் இது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ள இந்திய அணிக்குப் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மோதி மற்றும் ராகுல் காந்தியின் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணிக்கு குவியும் வாழ்த்துகள்

பட மூலாதாரம், Getty Images

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள காணொளியில், "இந்த மகத்தான வெற்றிக்காக இந்திய அணிக்கு அனைத்து நாட்டு மக்கள் சார்பாகவும் வாழ்த்துகள். இன்று 140 கோடி நாட்டு மக்களும் உங்களின் சிறப்பான ஆட்டத்தால் பெருமிதம் கொள்கிறார்கள். நீங்கள் உலகக்கோப்பையை மட்டும் வெல்லவில்லை, இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றுள்ளீர்கள்."

“இந்தப் போட்டி ஒரு சிறப்பு காரணத்திற்காக நினைவுகூரப்படும். பல நாடுகளில் இருந்து பல அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் நீங்கள் ஒரு போட்டியில்கூட தோற்கவில்லை, இது சிறிய சாதனை அல்ல. கிரிக்கெட் உலகின் அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளீர்கள். இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது" என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி "உலகக்கோப்பையில் அற்புதமான வெற்றியையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துகள். சூர்ய குமார் யாதவ், என்ன ஒரு புத்திசாலித்தனமான கேட்ச்!

ரோஹித், இந்த வெற்றி உங்கள் தலைமைக்கு ஒரு சான்று. ராகுல் டிராவிட், உங்கள் வழிகாட்டுதலை இந்திய அணி தவறவிடும் என்று எனக்குத் தெரியும். இந்திய அணி வீரர்கள் நம் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளனர்" எனப் பதிவிட்டுள்ளார்.

தோனி கூறியது என்ன?

தோனி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அணி கோப்பையைப் பெறும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "உலகக்கோப்பை சாம்பியன்கள் 2024. ஆட்டத்தைப் பார்த்து எனக்கு இதயத் துடிப்பு அதிகரித்தது. ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து, தன்னம்பிக்கையுடன் ஆடி, சிறப்பாக முடித்தீர்கள்," என்று பாராட்டியுள்ளார்.

"உலகக்கோப்பையை வீட்டிற்குக் கொண்டு வந்ததற்கு, நாட்டின் அனைத்து மக்கள் மற்றும் உலகிலுள்ள எல்லா இந்தியர்கள் சார்பாகவும் மிகப் பெரிய நன்றி. வாழ்த்துகள்! எனக்கு விலைமதிப்பற்ற பிறந்த நாள் பரிசு அளித்ததற்கும் நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "மேற்கிந்திய தீவுகளில், 2007 ஒருநாள் உலகக்கோப்பையின் மோசமான தோல்வியில் இருந்து 2024 டி20 உலகக்கோப்பையை வென்றது வரை, இந்திய கிரிக்கெட்டின் பயணம் இப்போது முழுமை பெற்றுள்ளது.

எனது நண்பர் ராகுல் டிராவிட்டுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 2011 உலகக்கோப்பை வெற்றியைத் தவறவிட்டிருந்தாலும், இப்போது இந்த டி20 உலகக்கோப்பை வெற்றியில் அவரது பங்களிப்பு மகத்தானது," என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், "ரோகித்தின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. தொடர் நாயகன் விருதுக்கு பும்ராவும், ஆட்டநாயகன் விருதுக்கு கோலியும் முழு தகுதியானவர்கள். வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை ஊழியர்கள், பிசிசிஐ என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்," என்றும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் பக்கத்தில், "காத்திருப்பு முடிந்தது. இந்திய அணியின் அபாரமான மீட்சி. 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையையும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையையும் நாம் வென்றுள்ளோம். ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நாம் வெல்லும் முதல் டி20 உலகக்கோப்பை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கூறியது என்ன?

ஷாகித் அப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் ஷாகித் அஃப்ரிடி மற்றும் ஷோயப் அக்தர் (கோப்பு படம்)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காணொளியில், "ரோகித் சர்மா சாதித்துவிட்டார். இந்தியா இந்தக் கோப்பையை வெல்லத் தகுதியானவர்கள் என நான் மீண்டும் மீண்டும் கூறி வந்தேன். இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள்," என்று தெரிவித்துள்ளார்.

"இந்திய அணியினர் தொடர் முழுவதும் தோல்வியைச் சந்திக்காமல் சிறப்பாக ஆடியுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் தனது முந்தைய தவறுகளைச் சரிசெய்துள்ளார் ரோஹித் சர்மா" எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடியும், "இந்தியா மறக்க முடியாத வெற்றியைப் பெற்றதற்கு வாழ்த்துகள். ரோஹித் சர்மா இதற்கு முற்றிலும் தகுதியானவர், அவர் ஒரு தனித்துவமான கேப்டனாக இருந்துள்ளார். விராட் கோலி, எப்போதும் முக்கிய ஆட்டங்களுக்கான ஒரு வீரர், பும்ரா சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த பந்துவீச்சாளர். தென் ஆப்ரிக்க அணியும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர் முழுவதும் வெளிப்படுத்தியுள்ளனர்," என்று பதிவிட்டுள்ளார்.

சுந்தர் பிச்சை மற்றும் சத்ய நாதெல்லாவின் வாழ்த்து

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம், Getty Images

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தனது, "என்ன மாதிரியான ஒரு ஆட்டம், அரிதாகவே மூச்சு விடக்கூடிய அளவுக்குப் பரபரப்பான, விளையாட்டை நம்ப முடியாத ஒன்றாக மாற்றும் ஆட்டம். வாழ்த்துகள் இந்தியா, இதற்கு நீங்கள் முழு தகுதியானவர்கள். தென் ஆப்ரிக்காவின் ஆட்டமும் நம்ப முடியாததாக இருந்தது. அற்புதம்!" என்று தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்திப் பதிவிட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா, "அற்புதமான இறுதி ஆட்டம், இந்தியாவுக்கு வாழ்த்துகள். தென் ஆப்ரிக்கா நன்றாக ஆடினார்கள். சிறப்பான உலகக்கோப்பை, மேற்கிந்தியத் தீவுகளிலும் அமெரிக்காவிலும் இன்னும் அதிக கிரிக்கெட் போட்டிகளை நடத்துவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)