1977-ஆம் ஆண்டு வேல்ஸ் நாட்டின் சிறுவர்கள் பார்த்த பறக்கும் தட்டு உண்மையா? - ஒரு வரலாற்றுத் தேடல்

யுஎஃப்ஒக்கள்: அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் தோன்றுவதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள்

பட மூலாதாரம், BBC/Twenty Twenty Productions Ltd

படக்குறிப்பு, பரவலான ஊடக கவனத்தை ஈர்த்த யுஎஃப்ஓ நிகழ்வில் ஒரே மாதிரியான படங்களை குழந்தைகள் வரைந்ததாக கூறப்படுகிறது
    • எழுதியவர், ஷோலா லீ
    • பதவி, பிபிசி செய்தி

தற்போதைய தொழில்நுட்பம் முன்னெப்போதையும் விட மேம்பட்டதாக இருப்பதால், நமக்கு மேலே மிகவும் தொலைவில் உள்ள வானத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் என விண்வெளி நிபுணர்கள் நினைக்கின்றனர்.

1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேல்ஸ் நாட்டில் பெம்ப்ரோக்ஷயர் (Pembrokeshire) என்னும் பகுதியில், ஒரு மழை நாளில் பிராட் ஹேவன் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு அடையாளம் தெரியாத பறக்கும் தட்டை (UFO) வெளியே பார்த்ததாகக் கூறினர்.

அந்த சமயத்தில் 10 வயது சிறுவனாக இருந்த டேவிட் டேவிஸ், தற்போது அன்றைய தினத்தை நினைவு கூர்கிறார். அன்று, நாள் முழுவதும் சக மாணவர்கள் வகுப்பறைக்குள் வந்து ஆசிரியரிடம் ஏதோ வினோதமாக நடக்கிறது என்பதைச் சொல்லி எச்சரிக்க முயன்றதாகச் சொல்கிறார்.

அவர்கள் பார்த்த காட்சிக்கு அறிவியல் ரீதியான விளக்கம் இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். "எனது நோக்கம் அங்கு சென்று அவர்கள் தவறாக புரிந்து கொண்டனர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதே," என்கிறார் டேவிட்.

ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கச் சென்றபோது ஒரு வித்தியாசமான காட்சியை டேவிட் பார்த்ததாக சொல்கிறார்.

"நான் அங்கு ஒரு பேருந்து அள்வுக்குப் பெரிய ஒரு பொருளைப் பார்த்தேன். அது சுருட்டு வடிவில், வெள்ளி நிறத்தில், குவிமாடம் கொண்ட மேல் பகுதியைக் கொண்டிருந்தது. மேலும், அதன் மேல் புறத்தில் சிவப்பு நிறத்தில் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது,” என்று டேவிட் விளக்குகிறார்.

யுஎஃப்ஓக்கள்: அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் தோன்றுவதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள்

பட மூலாதாரம், BBC/Twenty Twenty Productions Ltd

படக்குறிப்பு, 1977 இல் யுஎஃப்ஓவைப் பார்ப்பதாகக் கூறிய பிராட் ஹேவன் ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களில் டேவிட் டேவிஸும் ஒருவர்.

பறக்கும் தட்டுகளைக் கண்டதாகக் கூறப்பட்ட நிகழ்வுகள்

சுமார் 10 வினாடிகள் நீடித்த அந்தக் காட்சியைப் பற்றி டேவிட் கூறுகையில், "அதை நோக்கி ஓடிப்போக வேண்டும் என்ற அதீத ஆசை எனக்கு இருந்தது,” என்கிறார்.

பெம்ப்ரோக்ஷயர், வேல்ஸ் நாட்டின் தென்மேற்கில் உள்ள ஒரு மாவட்டமாகும். இங்கு நடந்த இந்த நிகழ்வு பிபிசியின் பாராநார்மல் ஆவணப்படத்தின் சமீபத்திய தொடரில் ஆராயப்பட்டது. அத்தொடரின் நான்கு அத்தியாயங்களில், தொகுப்பாளர் சியான் எலெரி 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் பறக்கும் தட்டுகளைக் கண்டதாகக் கூறப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறார்.

வேற்றுக் கிரக வாழ்க்கை பற்றிய கூற்றுகள் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் அதுபற்றிய விவரிப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, அமெரிக்காவின் நாடாளுன்றம் இந்தத் தலைப்பில் ஒரு முக்கிய குழுவைக் கூட்டியது, மர்மமான மோனோலித்ஸ் (monoliths) பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் பல இடங்களில் தோன்றுவதை பற்றி ஆராயக் குழு அமைக்கப்பட்டது. மேலும் சமூக ஊடகங்கள் 'அன்னியப் பொருட்கள்' பற்றிய வைரல் டிரெண்ட்களின் தாயகமாக உள்ளது. உதாரணமாக, டிக்டாக்கில் (TikTok) இல், 'UFO' என்ற ஹேஷ்டேக்குடன் 10 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் உள்ளன.

யுஎஃப்ஓக்கள்: அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் தோன்றுவதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள்

பட மூலாதாரம், BBC/Twenty Twenty Productions Ltd

படக்குறிப்பு, பிராட் ஹேவன் ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் தாங்கள் பார்த்ததை வரைந்தார்கள்

ஒரு விண்வெளி நிபுணர் பிபிசி-யிடம் கூறுகையில், 2024-ஆம் ஆண்டில் "தெரிந்தவை மற்றும் தெரியாதவைகளைக் கண்காணிப்பதில் நாம் மிகவும் வலுவான தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறோம்," என்று கூறுகிறார். ஏனெனில் கிட்டத்தட்ட அனைவரின் பாக்கெட்டிலும் மொபைல் ஃபோன்கள் உள்ளன. பலர் விமானப் போக்குவரத்தை டிராக் செய்யச் செயலிகளை பயன்படுத்துகின்றனர்.

நாம் ஏன் யு.எஃப்.ஓ-க்களைப் பார்க்கிறோம் என்பதற்கு எளிய விளக்கம் ஏதேனும் உள்ளதா? மேலும் அவற்றை பற்றி விசாரிக்க வேண்டுமா?

ஏராளமான யு.எஃப்.ஓ நிகழ்வுகள்

1947-இல் அமெரிக்காவின் நியூ மெக்சிகோவின் ரோஸ்வெல்லில் வேற்றுகிரக குப்பைகள் இருப்பதாகக் கூறப்பட்டது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தி ஃப்ளையிங் சாசர் என்னும் திரைப்படம் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதே சமயம் 1950-களில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் இடையே தீவிரமடைந்த விண்வெளி பந்தயம் பல ஆண்டுகளுக்கு மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

வேற்று கிரக வாழ்க்கை பற்றிய கற்பனை கதைகளும் வரும் ஆண்டுகளில் பிரபலமான கலாச்சாரத்தை வடிவமைக்கக் கூடும். 1993-இல் அறிமுகமான 'X’ கோப்புகள், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் 1982 ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படம் 'E.T.’ மற்றும் ஜோர்டான் பீலேயின் 2022 திரைப்படமான 'நோப்’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் இந்த சமூக ஆர்வத்திற்குப் பங்களித்தன.

பக்கிங்ஹாம்ஷயர் நியூ யுனிவர்சிட்டியின் மனித மற்றும் சமூக அறிவியல் பிரிவின் தலைவரான டாக்டர் சியாரன் ஓ'கீஃப் கருத்துப்படி,1980-களில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு (யு.எஃப்.ஓ) பற்றிய 'மிகப் பெரிய ஆர்வம்' இருந்தது, இது 'பெருமளவிலான யு.எஃப்.ஓ தேடலுக்கு' வழிவகுத்தது என்கிறார்.

உலகம் முழுவதிலும் ஆங்காங்கே காணப்பட்டதாகக் கூறப்பட்ட பறக்கும் தட்டுகள் தொடர்பான காட்சிகளைப் பற்றி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பிராட் ஹேவன் ஆரம்பப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் பறக்கும் தட்டு சம்பவம் பற்றி நியூசிலாந்து வரை செய்திகள் பதிவாகின.

யுஎஃப்ஒக்கள்: அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுக்கள் தோன்றுவதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள்

பட மூலாதாரம், BBC/Twenty Twenty Productions Ltd

படக்குறிப்பு, டாக்டர் மார்க்ஸ்

நேரில் கனண்ட சாட்சியங்கள் சொல்வது உண்மையா?

பிராட் ஹேவன் சம்பவம் 1977-இல் இப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தப் பகுதியை மர்மமான 'டைஃபெட் முக்கோணம்’ (Dyfed Triangle) என்று அழைத்தனர். யு.எஃப்.ஓ தோன்றியதைப் பற்றிப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. சிலர் இதனை உள்ளூர் குறும்புக்காரரின் வேலை என்றெல்லாம் கூடச் சொன்னார்கள். அறிஞர்களும் அந்தச் சம்பவத்தை விளக்குவதற்குப் பல கோட்பாடுகளை முன்வைத்தனர்.

பிராட் ஹேவனில் பறக்கும் தட்டுகள் காணப்பட்டதாகக் கூறப்பட்ட செய்தி அந்தச் சமயத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தது. இதுகுறித்து டாக்டர் ஓ'கீஃப், 'யு.எஃப்.ஓ' தோன்றியதாக கூறப்படும் சம்பவத்துக்கு பின்னணியில் நம்பத்தகுந்த விளக்கங்கள் இருக்கலாம்," என்று கூறுகிறார்.

பிபிசி-யின் 'Uncanny' நிகழ்ச்சிக்கு ஆலோசனை சேவைகளை வழங்கும் டாக்டர் ஓ'கீஃப், "என்ன நடந்தது என்பதற்கான முக்கிய அடிப்படை உளவியல் விளக்கம், நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியத்தைச் சுற்றியே உள்ளது," என்று கூறுகிறார். நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியம் துல்லியமானது அல்ல என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், "யு.எஃப்.ஓ-வை நேரில் கண்ட சாட்சியை நேர்காணல் செய்யும் போது, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளின் தன்மை மோசமாக இருந்தால், அந்த நபரின் நிகழ்வை பற்றி சேமித்து வைத்திருக்கும் நினைவகத்தை சிதைக்கக்கூடும். மேலும் முதன்மை கேள்விகள் மற்றும் அதிகபடியான மீடியா கவரேஜுக்கு வெளிப்பாடு ஆகியவை சாட்சியின் மனநிலையை சிதைக்கும்," என்கிறார்.

உளவியல் விளக்கங்கள்

இருப்பினும், பிராட் ஹேவன் தொடக்கப்பள்ளியில் யு.எஃப்.ஓ தோன்றியதை நேரில் கண்டது ஒரு சாட்சி மட்டுமல்ல, ஒரு மாணவர்களின் குழுவே பறக்கும் தட்டை பார்த்ததாக கூறியது. இது குறித்து விளக்கும் டாக்டர் ஓ'கீஃப், இதற்கு பின்னால் 'தொற்று' (contagion) மற்றும் குழு இணக்கம் ஆகிய காரணங்கள் இருக்கலாம் என்கிறார்.

"எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் ஆகியவை ஒரு குழுவிற்குள் தொற்றாக பரவக்கூடும்," என்று டாக்டர் ஓ'கீஃப் விளக்கினார்.

இருப்பினும், அந்த மாணவர்கள் தாங்கள் பார்த்த பறக்கும் தட்டின் ஒரே மாதிரியான படங்களை வரைந்ததாகக் கூறப்படுகிறது. எனவே 1977-ஆம் ஆண்டு இந்த நிகழ்வுக்குப் பின்னணியில் உளவியல் விளக்கங்களை இருக்கலாம் என்னும் கூற்றை தள்ளி வைத்துவிடலாம் என்று டேவிட் கருதுகிறார்.

டேவிட் தொடர்ந்து பேசுகையில், அந்த நிகழ்வுக்கு முன்புவரை தனக்கு "அறிவியல் புனைகதையில் பெரிய ஆர்வம் இல்லை" என்று கூறினார். இருப்பினும், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அடுத்த சில ஆண்டுகளில் புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களுக்காக அவர் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவிட வேண்டியிருந்தது என்கிறார்.

பாராநார்மல் படத்தில் தோன்றும் ஒரு விண்வெளிப் பொறியாளர் டாக்டர் ரியான் மார்க்ஸ், வானத்தில் உள்ள விமானப் போக்குவரத்தும் அடையாளம் காணப்படாத பொருள்கள் வானத்தில் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பாக விமானத்தளங்கள் உள்ள பகுதிகளுக்கு அருகில் யு.எஃப்.ஓ போன்றவை தோன்றலாம்.

ஆர்.ஏ.எஃப் (RAF) அருங்காட்சியகத்தின் கூற்றுபடி, 1970 மற்றும் 1990-க்கு இடையில் தெற்கு வேல்ஸ் பகுதியில் ஐந்து விமானநிலையங்கள் இருந்தன, ஒன்று ஏவுகணை சோதனை வரம்பாக பயன்படுத்தப்பட்டது.

டாக்டர் மார்க்ஸ் கூறுகையில், "எல்லா நேரங்களிலும் இங்கு பெரிய அளவிலான விமான போக்குவரத்து உள்ளது, அது கடந்த 40 ஆண்டுகளில் வெளிப்படையாக அதிகரித்துள்ளது."

மேலும், "இந்தப் பகுதியில் சில சமயம் வானத்தில் ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அது பற்றிய தகவல்கள் எப்போதும் வெளிப்படையாக கூறப்படுவதில்லை,” என்று கூறுகிறார்.

உதாரணமாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்க அரசாங்க அறிக்கையானது , 1950-கள் மற்றும் 1960-கள் காலக்கட்டத்தில் அமெரிக்காவில் அடையாளம் காணப்படாத பொருள்களைப் பார்த்ததாக மக்கள் சொன்ன சம்பவங்களில் பின்னணியில் அப்படி ஒன்று இல்லை என்றும் மேம்பட்ட உளவு விமானங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் சோதனைகளால் ஏற்பட்ட காட்சிகளின் விளைவு என்றும் உறுதி செய்தது.

டாக்டர் மார்க்ஸின் கூற்றுப்படி, ஹாட் ஏர் பலூன்கள் மற்றும் ஏர்ஷிப்கள் பற்றிய ஆராய்ச்சி 1970-களின் நடுப்பகுதியிலிருந்து 1980-களின் தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்து கொண்டிருந்தது, மேலும் இவற்றில் சில "பாரம்பரிய யுஎஃப்ஓக்கள் தோன்றும் காட்சிகளுக்கு ஒத்திருக்கும்," என்கிறார்.

இருப்பினும், இவை விமானங்கள் நிறுத்துமிடத்தில் (air hangar) நடத்தப்பட்ட 'சிறிய அளவிலான' சோதனைகள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

டாக்டர் மார்க்ஸ் கூறுகையில், "இன்றைய காலகட்டத்தில் நிறைய விமான போக்குவரத்து இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய செயலிகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு விமானம் எங்கிருந்து வந்தது, அதன் இலக்கு எங்கே என்பதை அடையாளம் காண முடியும்,” என்கிறார்.

இந்த டிஜிட்டல் முன்னேற்றம் வானத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதை மிகவும் எளிதாக்குகிறது என்று அவர் விளக்குகிறார்.

ஆனால் மாணவர் பருவத்தில் தான் பார்த்த பறக்கும் தட்டு காட்சி பற்றிய கருத்தில் டேவிட் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

"எங்கள் பள்ளிக்கு அருகில் அந்த நேரத்தில் எந்த வகையான விமானம் பறந்தது? அது 45 அடி நீளம், சுருட்டு வடிவத்தில் வெள்ளி நிறத்தில் இருந்தது என யாரேனும் எனக்குத் தெளிவாக விளக்கவில்லை என்றால், அதை என்னால் நம்ப முடியாது. வேற்றுக் கிரகத்தை பற்றி நம்புவதை, உங்கள் தலையை ஒரு செங்கல் சுவரில், சமுதாயத்திற்கு எதிராக முட்டிக்கொள்வதை போல பார்க்கிறார்கள்,” என்றார்.

"இது முட்டாள்தனமாக கருதப்பட்டு நிராகரிக்கப்படுகிறது," என்றும் அவர் கூறுகிறார்.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் (MOD) 2009-இல் அவர்களின் யு.எஃப்.ஓ குழுவைக் கலைத்தது. பறக்கும் தட்டுக்களை பற்றி ஆராய்வது நாட்டின் பாதுகாப்பு நோக்கத்திற்காகச் சேவை செய்வதற்குச் சமம் இல்லை. எனவே இக்குழுவில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களை யு.எஃப்.ஓ விட அதிக மதிப்புமிக்க பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்தது.

ஒரு அறிக்கையில், பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: "50 ஆண்டுகளுக்கும் மேலாக, வேற்றுக் கிரக நுண்ணறிவு, அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் எதுவும் பிரிட்டனுக்கு ராணுவ அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டவில்லை," என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)