உலர் கண் பிரச்னை: கண்கள் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உலர் கண்கள் பிரச்னை : கண்கள் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சொட்டு மருந்துகள் கண்களை மென்மையாக்க (lubricated) உதவுகின்றன.
    • எழுதியவர், டிராஃப்ட்
    • பதவி, பிபிசி

உங்கள் கண்கள் அடிக்கடி வீக்கமடைந்து, அரிப்பு, நீர் வடிதல் மற்றும் வெளிச்சத்தை பார்த்தால் அசௌகரியமாக உணர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறதா?

உங்களுக்கு உலர் கண்கள் (Dry eye) பாதிப்பு இருக்க வாய்ப்புகள் அதிகம்.

இது ஒப்பீட்டளவில் தீங்கற்ற நோயாகும். மக்கள் தொகையில் 5% முதல் 40% மக்களை பாதிக்கிறது. இது தீவிரமான உடல்நலப் பிரச்னை இல்லை என்றபோதிலும், உலர் கண்கள் நிலை ஏற்படும் போது மிகவும் அசௌகரியமாக உணர வைக்கும்.

உலர் கண் என்பது கண்களின் கண்ணீர் படலத்தை மாற்றியமைக்கும் தொடர்ச்சியான காரணங்களின் விளைவாகும்.

இந்தப் படலம் மூன்று அடுக்குகளால் ஆனது: ஒரு கொழுப்பு அடுக்கு, ஒரு நீர் அடுக்கு, மற்றும் ஒரு மியூகோசல் (சளி போன்ற ஒரு வஸ்து) அடுக்கு.

கண்களின் கண்ணீர் படலத்தின் (tear film) மூன்று அடுக்குகளில் பல காரணிகளால் மாற்றம் ஏற்படும். இது கண்கள் வறண்டு போக வழிவகுக்கும்.

கண்ணின் மேற்பரப்பை மென்மையாகவும் (lubricated), சுத்தமாகவும் பராமரிக்க மூன்று கூறுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்த மூன்று அடுக்குகளில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால், கண்கள் வறண்டு போகலாம்.

கண்ணீர் படலம் எப்படி பாதிக்கப் படுகிறது?

பிரிட்டனில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண் மருத்துவப் பேராசிரியரான பர்வேஸ் ஹொசைனின் கூற்றுப்படி, கண்ணீர் படலச் செயலிழப்புக்கு மிகவும் பொதுவான காரணமாக பார்க்கப்படுவது மீபோமியன் சுரப்பி (meibomian glands) செயலிழப்பு தான். இருப்பினும் ஆட்டோ இம்யூன் நோய்கள், சில மருந்துகளின் நுகர்வு போன்ற பிற காரணங்களும் உள்ளன. காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவது மற்றும் ஹார்மோன் மாற்றங்களால் கூட கண்ணீர் படல அடுக்குகள் பாதிக்கப்படலாம்.

மீபோமியன் சுரப்பிகள் கண் இமைகளில் அமைந்துள்ளன. கண்ணீர் படலத்தை உருவாக்கும் லிப்பிட்களை சுரக்கின்றன. அதை ஆவியாகாமல் தடுக்கின்றன.

"இந்தச் சுரப்பிகள் சரியாக வேலை செய்யாதபோது, ​​கண்ணீர் அடுக்கு நிலையற்றதாகி, எதிர்பார்த்ததை விட வேகமாக மறைந்துவிடும்," என்று ஹொசைன் விளக்குகிறார்.

கண்ணீர் அடுக்கு மொத்தமாக பாதிக்கப்படுவதும் நிகழலாம் அல்லது குறைவான/தரமற்ற கண்ணீரைச் சுரக்கும் சூழலும் ஏற்படலாம்.

உலர் கண்கள் பிரச்னை : கண்கள் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பல மணிநேரம் டிஜிட்டல் திரையைப் பார்ப்பது அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும்.

உலர் கண் பிரச்னை ஏன் ஏற்படுகிறது?

உலர் கண் பிரச்னை, ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில அறிகுறிகளுடன், கூடுதலான பாதிப்புகளையும்ஏற்படுத்தும். இவை பார்வை மங்கல், கண்கள் சிவத்தல், மற்றும் ஆகியவை.

சுற்றுச்சூழலில் வறட்சி, காற்று அல்லது தூசி போன்ற வெளிப்புற காரணிகளால் இந்த அனைத்து அறிகுறிகளும் மோசமடையலாம். அதே போல் டிஜிட்டல் சாதன திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதாலும், மொபைல் பயன்படுத்துவதன் மூலமும் கண் வறட்சி நிலை மோசமாகும்.

நாம் கணினியை உற்றுப் பார்க்கும்போது நாம் கண் சிமிட்டும் எண்ணிக்கை குறைகிறது. கண் சிமிட்டுதல் என்பது கண்களைச் சுத்தப்படுத்தவும் கண்ணீரை சீராக விநியோகிக்கவும் தேவையான ஒரு செயலாகும்.

மேலும் கண் சிமிட்டுவது குறையும் போது கண்ணீர் அடுக்கின் ஆவியாதல் செயல்முறை வேகமடைகிறது.

நடுத்தர வயதினர் உலர் கண்கள் பிரச்னையால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஆண்களை விடப் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

"நாங்கள் செய்த ஆய்வுகளில், 50களின் நடுப்பகுதியில் உள்ள வயதினர் அதிகம் உலர் கண்கள் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தை நெருங்கும் பெண்களுக்கு கண்கள் எளிதல் வறண்டுப் போகிறது," என்று ஹொசைன் சுட்டிக்காட்டுகிறார்.

"ஏனென்றால் மீபோமியன் சுரப்பிகள் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன,” என்கிறார்.

இருப்பினும், டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால், பிரச்னை இளம் வயதிலேயே தோன்றத் தொடங்குகிறது என்று ஹொசைன் விளக்குகிறார்.

உலர் கண்கள் பிரச்னைக்கான முக்கிய காரணிகள் தற்போதைய வாழ்க்கை முறையுடன் தொடர்புடையது. எனவே, உலர் கண் பிரச்னையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலர் கண்கள் பிரச்னை : கண்கள் வறண்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விமானம் போன்ற வறண்ட சூழலில், உங்கள் கண்களைப் பாதுகாக்க சிறிது நேரம் கண்களை மூடிக்கொள்ள வேண்டும்

உலர் கண் பிரச்னை ஏற்படாமல் தடுப்பது எப்படி?

மருத்துவப் பயிற்சி, கற்பித்தல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமெரிக்காவில் உள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான மயோ கிளினிக், கண் வறட்சியைத் தடுக்க பின்வரும் செயல்களைப் பரிந்துரைக்கிறது:

  • கண்களில் காற்று படுவதை தவிர்க்கவும்
  • சுற்றியுள்ள காற்று மிகவும் வறண்டு இருக்கும்போது ஈரப்பதத்தைச் சேர்க்க ஈரப்பதமூட்டியைப் (Humidify) பயன்படுத்தவும்
  • காட்சி கவனம் தேவைப்படும் நீண்ட நேரப் பணிகளைச் செய்யும்போது உங்கள் கண்களுக்கு அடிக்கடி ஓய்வு கொடுக்க வேண்டும்
  • கண்ணீர் ஆவியாவதைக் குறைக்க வறண்ட சூழல்களில் (உதாரணமாக, விமானம் போன்ற இடங்களில்) உங்கள் கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். கண்களை மூட வேண்டும்
  • கண் இமைகளை உயர்த்தி பார்ப்பதை குறைக்க, கணினித் திரையை கண் மட்டத்திற்குக் கீழே இருக்குமாறு தாழ்த்தி வைக்கவும்
  • புகைபிடிப்பதை விட்டுவிடுங்கள், மற்றவர்கள் புகைபிடிக்கும் போது அருகில் செல்லாதீர்கள்

சிகிச்சையைப் பற்றி, ஹொசைன் கூறுகையில், கண்களை உயவூட்டுவதற்கு (lubricate) செயற்கைக் கண்ணீர் அல்லது கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

பிரிட்டனில் உள்ள தேசியச் சுகாதார சேவை , "வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டை வைத்து கண் இமைகளை சுத்தம் செய்து, கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் லேசாக அழுத்தம் தர வேண்டும்,” என்று அறிவுறுத்துகிறது.

இப்படிச் செய்வதால் கண்ணைச் சுற்றியுள்ள சுரப்பிகள் உற்பத்தி செய்யும் கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது.

சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளை வெளியே தள்ள உங்கள் விரல் அல்லது பருத்தியால் கண் இமைகளை மெதுவாக மசாஜ் செய்யவும் பரிந்துரைக்கின்றனர்.

இந்த எளிய நடவடிக்கைகள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)