இந்தியாவின் டி20 வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

29 ஜூன்2024. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நாட்குறிப்பில் முக்கியமான நாள்.

இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மேற்கிந்தியத் தீவுகளின், பிரிட்ஜ்டவுனில் நேற்று (ஜூன் 29) நடந்த இறுதிப் போட்டியில், 7 ரன்கள் வித்யாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா.

கொஞ்சம் சாத்தியமற்றதாகத் தோன்றிய இந்த வெற்றிக்கு இந்தியா மட்டுமின்றி அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்தும் எதிர்வினைகள் வருகின்றன.

உலகக் கோப்பையை வெல்வதற்கு இதைவிடச் சிறந்த ஆட்டம் இருந்திருக்க முடியாது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

சோயிப் அக்தர், "உலகக் கோப்பையைச் சிறப்பாக விளையாடி வென்றிருக்கிறார்கள். ரோகித் சர்மா அழுது மண்டியிட்டது அவருக்கு உலகக் கோப்பை எவ்வளவு முக்கியம் என்பதைப் பிரதிபலித்தது," என்றார்.

"ஆமதாபாத்தில் அவர்கள் செய்த தவறை அவர்கள் திருத்திக்கொண்டனர். ஹர்திக் பாண்டியா வியக்கத்தக்க வகையில் செயல்பட்டார். பும்ரா எவ்வளவு அற்புதமான பந்துவீச்சாளர். பும்ரா விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார். இது பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக இருந்தது,” என்றார்.

"மில்லர் விளையாடும் வரை, போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவிக்கொண்டிருந்தது, ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் அத்தகைய தருணங்களை எப்படிச் செயல்பட்டு போட்டியை வெல்வது என்பதைக் காட்டியது," என்று அவர் கூறினார்.

கம்ரான் அக்மல் என்ன சொன்னார்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கம்ரான் அக்மல் கருத்துப்படி, "விராட் கோலி தான் ஏன் உலகின் சிறந்த வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்,” என்றார்.

கம்ரான் அக்மல் கூறுகையில், "விராட் கோலி டி20-யில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் அவரது ஆட்டத்தின் மூலம் போட்டியை இந்திய அணிக்குச் சாதகமாக மாற்றிவிட்டார். விராட் கோலியின் பெயர் உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பிட்னஸ் அல்லது பேட்டிங் எதுவாக இருந்தாலும் சரி, விராட் கோலி களத்தில் தன் முழு திறனை வெளிப்படுத்துவார்,” என்றார்.

"விராட் கோலி உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டவர்," என்று கூறிய அவர், விராட் கோலி தனது ஆட்டத்தால் உலகையே கிறங்கடித்துள்ளார் என்று பாராட்டினார்.

"குழந்தைகள் கிரிக்கெட் விளையாட விரும்பினால் விராட் கோலியை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். விராட் கோலி விளையாடிய இன்னிங்ஸால் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. விராட் கோலி தான் ஒரு திறமையான வீரர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்,” என்றார்.

டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா

ரமீஸ் ராஜா கருத்து

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் இயக்குநருமான ரமீஸ் ராஜாவும் இந்திய அணியைப் பாராட்டியுள்ளார்.

ரமீஸ் ராஜா கூறுகையில், "இந்தியாவுக்கு வாழ்த்துகள். அவர்கள் மீண்டும் சாம்பியன் ஆகிவிட்டனர். அவர்களுக்கு இரண்டு போட்டிகள் கடினமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று சாம்பியனாகி உள்ளனர். அவர்கள் தங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் கேப்டனின் நிலைத்தன்மை மற்றும் அழுத்தத்தை சமாளிக்கும் திறன் விளையாட்டில் பிரதிபலித்தது,” என்றார்.

"அவர் சாத்தியமற்றதை சாத்தியமாக்கி உள்ளார். ஒரு அணிக்கு வீரர்கள் மிகவும் முக்கியம். வீரர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை. அதில் ராகுல் டிராவிட் கைத்தேர்ந்தவர். சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இந்த போட்டி இந்தியாவுக்கானது,” என்றார்.

டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், @WAQYOUNIS99

படக்குறிப்பு, வக்கார் யூனிஸ்

வக்கார் யூனிஸ் சொன்னது என்ன?

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ், இந்தியாவுக்கும், ரோகித் சர்மாவுக்கும் வாழ்த்துகள் கூறி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் பின்வருமாறு கூறியிருக்கிறார்: பொதுவாக டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். கடந்த முறை பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெற்றி பெற்ற நிலையில், இம்முறை பாகிஸ்தான் அணி பெரும் ஏமாற்றம் கொடுத்தது.

இந்தியாவுடன் குரூப் ஒன்றில் பாகிஸ்தான் இருந்தது. ஆனால் முதல் போட்டியிலேயே அமெரிக்கா பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது.

ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் செயல்திறனால் இந்தியா 119 ரன்களுக்கு அவுட் ஆனது. பாகிஸ்தான் இன்னிங்ஸின் 12 ஓவர்கள் வரை இந்தப் போட்டியில் அவர்கள் எளிதாக வெற்றி பெறுவார்கள் என்று தோன்றியது. இருப்பினும், வெற்றிகரமான போட்டியை பாகிஸ்தானிடம் இருந்து பும்ரா பறித்தார்.

குறைந்த ஸ்கோர் எடுத்த போதிலும் அந்த ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அதன் பின்னர் கனடா மற்றும் அயர்லாந்து அணிகளை பாகிஸ்தான் வீழ்த்தியது. ஆனாலும் சூப்பர் 8 நிலையை எட்ட அது போதுமானதாக இல்லை.

டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் கருத்து என்ன?

டி20 உலகக் கோப்பை : இந்தியாவின் வெற்றி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜஸ்பிரித் பும்ரா

பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாத் சாதிக் தன் எக்ஸ் தளத்தில், "இந்தப் போட்டி முழுவதும் இந்தியா வெல்ல முடியாத நிலையிலேயே இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

"சிறந்த கேப்டன்சி, வேகமான பேட்டிங் வரிசை, விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்களை இந்தியா கொண்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு வீரர்களை மட்டுமே சார்ந்து இருக்கும் அணி அல்ல என்பதை நிரூபித்துள்ளது," என்று அவர் பதிவிட்டார்.

இந்தியாவின் இந்த வெற்றியிலிருந்து பாகிஸ்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதன் முன்னுரிமைகளை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் சாதிக் குறிப்பிட்டார்.

மற்றொரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் மசார் அர்ஷாத், "ஜஸ்பிரித் பும்ரா இரண்டு ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே கொடுத்திருக்கிறார். உலகக் கோப்பையை இந்தியாவுக்குச் சாதகமாக மாற்றினார்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் மதிப்புமிக்க சொத்து என்று, அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து

பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேர் கான் தன் எக்ஸ் தளத்தில் "விராட் கோலி பாகிஸ்தானில் இதுவரை அதிகம் விரும்பப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவரால் இங்குள்ள பலர் இந்தியாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள்," என்று பதிவிட்டார்.

ஹம்சா சவுத்ரி என்ற பயனர், "இந்தியா சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், லாகூரில் அவர்களின் அனைத்து போட்டிகளும் ஹவுஸ்ஃபுல் ஆக இருக்கும், மேலும் ஒட்டுமொத்த கூட்டமும் 'கிங்’ கோலிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்யும்," என்று பதிவிட்டார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)