எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்திக்கு இருக்கும் சவால்கள், பொறுப்புகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்பார் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அன்று (25.06.2024) அறிவித்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் அரசியலுக்கு வந்த ராகுல், அதன்பிறகு எந்தப் பதவியையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார். கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார். ஆனால் இப்போது தயக்கத்துடன் செயல்படக்கூடிய ஒரு தலைவர் என்ற பிம்பத்தில் இருந்து ராகுல் காந்தி வெளியே வருவது போல் தெரிகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட ராகுல், புதன்கிழமை அன்று மக்களவையிலும் தனது கருத்துகளை முன்வைத்தார்.
செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இல்லத்தில் நடந்த இந்தியா கூட்டணியின் அனைத்துத் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டது.
இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி ராகுலுக்கு கிடைத்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘எதிர்க்கட்சியின் குரல் ஒலிப்பது அவசியம்’
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி முதல்முறையாக புதன்கிழமை அன்று உரையாற்றினார்.
மீண்டும் மக்களவை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், "அரசுக்கு முழு அரசியல் அதிகாரம் உள்ளதுதான், ஆனால் எதிர்க்கட்சிகளும் இந்திய மக்களின் எண்ணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. குறிப்பாக இந்த முறை எதிர்க்கட்சிகள் இந்திய மக்களின் குரலை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்றத்தை நடத்த எதிர்க்கட்சி உங்களுக்கு உதவும். இந்த ஒத்துழைப்பில் நம்பிக்கை என்பது மிகவும் அவசியம். எதிர்க்கட்சியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது மிகவும் அவசியம். இந்த அவையில் எதிர்க்கட்சியின் குரல் ஒடுக்கப்படாது என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது."
"அப்படியென்றால், நாடாளுமன்றம் அமைதியாக இயங்குமா என்பது கேள்வி அல்ல, இந்திய மக்களுக்காக குரல் எழுப்ப எதிர்கட்சிகளுக்கு முழு உரிமை கொடுப்பீர்களா என்பதுதான் கேள்வி. எதிர்கட்சிகளின் குரலை நசுக்குவதன் மூலம், உங்களால் நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த முடியும்தான், ஆனால் அது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பு’’ என்றார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவி

பட மூலாதாரம், ANI
கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரசுக்கு மக்களவையில் 10 சதவீத இடங்கள்கூட (54 இடங்கள்) கிடைக்கவில்லை.
அத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற முடியவில்லை. 2014இல் காங்கிரஸ் 44 இடங்களையும், 2019இல் 52 இடங்களையும் அக்கட்சி பெற்றிருந்தது. இம்முறை காங்கிரசுக்கு 99 இடங்கள் கிடைத்துள்ளன.
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தபோது, அதே நேரத்தில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில், 'இந்த முறை நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குரலாக ராகுல் காந்தி இருப்பார்' என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் கூற ஆரம்பித்தனர்.
முதன்முறையாக நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனப் பதவியை ராகுல் காந்தி ஏற்றுள்ளார். மக்களவையில் அவரது தாய் சோனியா காந்தி அவருடன் இல்லாததும் இதுவே முதல் முறை. சோனியா காந்தி மாநிலங்களவை எம்.பி. ஆனார். ராகுல் காந்தி, சோனியாவின் தொகுதியான ரேபரேலியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த முறை, கேரளாவின் வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவதால், மக்களவையில் ராகுலுடன் அவர் இருக்க வாய்ப்புள்ளது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியிலும் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் ரேபரேலி எம்.பி.யாக மக்களவைக்குச் செல்ல அவர் முடிவெடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தபோது, அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதற்குப் பிறகு, சோனியா காந்தி சில ஆண்டுகள் இடைக்காலத் தலைவராக இருந்தார். இந்தக் காலகட்டத்தில், தலைவர் பதவியை மீண்டும் ஏற்குமாறு ராகுல் காந்தியிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. ஆனால் அவர் கட்சியில் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்குப் பிறகு, 2022ஆம் ஆண்டில், கட்சிக்குள் ஏற்பட்ட அழுத்தங்களால், மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். ஐந்து ஆண்டுகளாக இந்த விஷயத்தில் பிடிவாதமாக இருந்த ராகுல் காந்தி, இப்போது முதல்முறையாக ஒரு முக்கியமான பதவியை ஏற்கத் தயாராகிவிட்டார்.
சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் அரசியலைத் தொடர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரஷித் கித்வாய் பிபிசியிடம், எதிர்க்கட்சித் தலைவர் பதவி ராகுல் காந்தியின் பிம்பத்தை உயர்த்தும் என்று கூறியிருந்தார்.
“எதிர்க்கட்சித் தலைவர் என்பது நிழல் பிரதமர். அவர் முழு எதிர்க்கட்சித் தரப்புக்கும் தலைவர் என்பதோடு மட்டுமல்லாது, பல முக்கிய நியமனங்களிலும் பிரதமருடன் இணைந்து செயல்படுவார். பிரதமர் மோதியும் ராகுல் காந்தியும் தேர்தல் பிரசாரத்தில், ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள் என்பதில் சந்தேகமில்லை."
"இத்தகைய சூழ்நிலையில், பிரதமருடன் அமர்ந்து முடிவுகளை எடுப்பது ராகுல் காந்திக்கு சவாலாக இருக்கும். ஆனால் அவர் ஒரு முதிர்ந்த தலைவராகத் தன்னை மேலும் வலுப்படுத்த விரும்பினால், அவர் இதைச் செய்தாக வேண்டும்," என்கிறார் ரஷித் கித்வாய்.
எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியின் பொறுப்புகள் என்ன?

பட மூலாதாரம், ANI
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலாக மாறுவது மட்டுமல்லாமல், அவருக்கென சொந்த அதிகாரமும் சலுகைகளும் உள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், பொதுக் கணக்குகள், பொது நிறுவனங்கள் மற்றும் மதிப்பீடுகள் போன்ற பல முக்கியக் குழுக்களின் ஓர் அங்கமாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் மற்றும் தேர்வுக் குழுக்களில் எதிர்க்கட்சித் தலைவருக்கு மிக முக்கியப் பங்கு உள்ளது.
இந்தத் தேர்வுக் குழுக்கள், அமலாக்க இயக்குநரகம் (ED), மத்திய புலனாய்வு செயலகம் (சிபிஐ), மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய தகவல் ஆணையம், லோக்பால் மற்றும் தேர்தல் ஆணையர்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) தலைவர் போன்ற முக்கியமான பதவிகளுக்கான நியமனங்களைச் செய்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினட் அந்தஸ்துள்ள பதவி, அதற்கென சிறப்பு சலுகைகள் உள்ளன. இந்தப் பதவியை வகிப்பவருக்கு 1954ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டத்தின் பிரிவு 3இல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் மற்றும் தினசரி கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
பதவியை ஏற்க தொடர்ந்து மறுத்து வந்த ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images
ராகுல் காந்தி 2004ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் அரசியலுக்கு வந்தார். ராகுல் காந்தி கடந்த 2004ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ராகுலின் தந்தை ராஜீவ் காந்தியும் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்குப் போட்டியிட்டுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்றம் சென்றதும், அடல் பிஹாரி வாஜ்பேய், அப்போது எம்.பி.யாக இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக, அவரால் அவைக்கு வர முடியவில்லை.
எனவே அத்வானி எதிர்க்கட்சித் தலைவரானார். அப்போது மன்மோகன் சிங் பிரதமரானார். எம்.பி.யாக இருந்தபோது, வாஜ்பேயின் நாடாளுமன்ற செயல்பாடுகளை ராகுல் பார்த்ததில்லை.
ராகுல் காந்தி காங்கிரஸ் அரசில் 10 ஆண்டுகள் மக்களவை எம்.பி.யாகவும், கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ராகுல் அமைச்சராகவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதபோது, அந்தக் கட்சியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற முடியவில்லை. ராகுல் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அமைச்சராகவில்லை, அதேபோல எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கும் போதுமான எம்.பி.க்கள் இருக்கவில்லை.
இதற்கு முன்னர் மக்களவையில் வாஜ்பேயை நேரடியாக சோனியா காந்தி எதிர்கொண்டார். தற்போது ராகுல் காந்தி நரேந்திர மோதியை நேரடியாக எதிர்கொள்கிறார்.
காங்கிரஸ் தனது வரலாற்றில் மிகவும் கடினமான ஒரு கட்டத்தைக் கடந்து வருவதாகவும், இந்த சிக்கலைச் சமாளிக்கத்தான், செப்டம்பர் 7, 2022 முதல், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் 'பாரத் ஜோடோ யாத்திரை' தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது.
அதற்குப் பிறகு மணிப்பூரில் இருந்து மும்பைக்கு ராகுல் பயணம் செய்தார். 2024 தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
ராகுல் காந்தி அரசியலுக்கு வந்ததும், அவர் ஒருவித தயக்கத்துடன் செயல்படக்கூடிய தலைவர் என்ற பிம்பம் மீடியாக்களில் உருவானது. ஆனால் இப்போது அவர் நேரடியாக ஆளும் கட்சியுடன் மோதுவது போலத் தெரிகிறது.
ராகுலுக்கான அதிகாரம்

பட மூலாதாரம், Getty Images
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான ‘ஒன் லைஃப் இஸ் நாட் இன்ஃப்’ (One Life is Not Enough) என்ற புத்தகத்தில், 2004இல் சோனியா காந்தியை பிரதமராக்க விடாமல் தடுத்தது ராகுல் காந்திதான் என்று கூறியிருந்தார்.
நட்வர் சிங்கின் கூற்றுப்படி, பிரதமர் பதவியை ஏற்றால் தனது தாயும் கொலை செய்யப்படுவார் என்று ராகுல் காந்தி பயந்தார். 2013 ஜனவரியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் உதய்பூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
துணைத் தலைவராகp பதவியேற்ற பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “நேற்றிரவு நீங்கள் அனைவரும் என்னை வாழ்த்தினீர்கள். ஆனால் என் அம்மா என் அறைக்கு வந்து என் அருகில் அமர்ந்து அழ ஆரம்பித்தார். பலரும் அடைய ஆசைப்படும் அதிகாரம் என்பது உண்மையில் விஷம் என்று அவர் நம்புகிறார்."
“எனது பாட்டியை அவரது சொந்த பாதுகாப்புப் பணியாளர்களே கொன்றனர். அவருடன் நான் பேட்மிமின்டன் விளையாடுவேன். அவரை என தோழியாகக் கருதினேன். மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்த என் தந்தைக்கும் அதுதான் நடந்தது. நாம் அதிகாரத்தின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை, ஆனால் அந்த அதிகாரத்தை மக்களிடம் அளிக்க வேண்டும்," என்று கூறினார்.
ராகுல் காந்திக்கு 55 வயதாகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைமை அவர் கைகளில் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு, காந்தி-நேரு குடும்பத்தின் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கு கட்சியின் தலைமை கொடுக்கப்பட்டுள்ளது.
‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் இப்போது அந்தப் பழைய ராகுல் காந்தி இல்லை" என்று கூறியிருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












