மேற்கு வங்க வைரல் வீடியோ: இளம் பெண் காதலருடன் ஏன் தாக்கப்பட்டார்? கள நிலவரம்

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
- எழுதியவர், பிராபகர் மணி திவாரி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் வன்முறை தொடர்பான சில விவரிப்புகள் உள்ளன)
மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம்பூர் துணைக் கோட்டத்தின் சோப்ரா பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு வீடியோ வைரலாக பரவியது.
அந்த வைரல் வீடியோவில், 'ஜேசிபி' என அழைக்கப்படும் தாஜிமுல் என்ற நபர் ஒரு பெண்ணையும், ஆணையும் கழியால் கொடூரமாக அடிப்பதைக் காணலாம்.
இருவரும் தொடர்ந்து கத்திக் கொண்டிருந்தாலும், சுற்றி நின்றவர்கள் இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தனர், யாரும் அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.
உண்மையில், இது மேற்கு வங்கத்தில் இயங்கும் ஒரு கங்காரு நீதிமன்றத்தால் (பஞ்சாயத்து) எடுக்கப்பட்ட முடிவாகும். மேற்கு வங்கத்தில் இதனை ’சலிஷி சபா’ என குறிப்பிடுகின்றனர்.
மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில், இத்தகைய சலிஷி சபாக்கள் உள்ளன. இவற்றின் முடிவுகளை யாரும் கேள்வியெழுப்புவதில்லை.
இந்த சலிஷி சபாக்கள் தங்களுடைய சொந்த முடிவுகளை எடுப்பதோடு, அந்த இடத்திலேயே தண்டனையையும் அறிவிக்கின்றன.
இந்த வைரலான வீடியோ அத்தகைய சலிஷி சபாக்களின் அதிகாரத்தை காட்டுகிறது.
இந்த வீடியோவில் ஒரு பெண்ணையும், ஆணையும் தாக்கி, தண்டனை அளித்த உள்ளூர் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரான தாஜிமுல் இஸ்லாம், வீடியோ வைரலானதையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
'ஜேசிபி' என அழைக்கப்படும் தாஜிமுல்
தாஜிமுல் இஸ்லாம் உள்ளூரில் 'ஜேசிபி' என அழைக்கப்படுகிறார்.
அவருக்கு அப்பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. அவர் ஆளும் கட்சியுடன் நெருக்கமாக இருந்தபோதிலும், அவர் மீது சோப்ரா காவல் நிலையத்தில் டஜன்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் போலீசார் அவரை இஸ்லாம்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியபோது, இந்த வழக்குகள் பற்றி தொடர்புடைய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
’’தாஜிமுல் மீது கொலை வழக்கு உட்பட உட்பட 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சஞ்சய் பவால் கூறுகிறார்.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சோப்ரா காவல் நிலைய ஆய்வாளருக்குத் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மறுபுறம், இந்த முழு சம்பவத்திற்கும் அரசியல் நிறம் கொடுக்க சிலர் முயற்சிப்பதாக மாநில காவல்துறை ஒரு ட்வீட் செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்ட இரண்டு இளைஞர்களுக்கும் ’சலிஷி சபா’ தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த இரண்டு இளைஞர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
என்ன பிரச்சனை?
காவல்துறை மற்றும் உள்ளூர் மக்களுடன் உரையாடியபோது வீடியோவில் உள்ள சம்பவம் ஜூன் 28 அன்று நடந்தது என்பது தெரிகிறது.
இஸ்லாம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜோபி தாமஸ் இதை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தாஜிமுல்லால் அடிக்கப்பட்ட பெண் திருமணமானவர் என்று இஸ்லாம்பூர் மக்கள் பலர் கூறியுள்ளனர். ஆனால் அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி வேறு திருமணமான ஆணுடன் சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையே காதல் இருந்து வந்ததால், ஏற்கெனவே நடந்த திருமணத்தை இருவரும் விவாகரத்து செய்துவிட்டு ஒன்றாக வாழ விரும்பினர்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு இருவரும் கிராமத்திற்குத் திரும்பியபோது, ஜூன் 28 அன்று ’சலிஷி சபா’ எனப்படும் பஞ்சாயத்து ஏற்பாடு செய்யப்பட்டது.
பஞ்சாயத்தில் அப்பெண்ணுக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகையைச் செலுத்தாவிட்டால், அந்த கிராமத்தில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டோம் என்று ’சலிஷி சபா’ தீர்ப்பளித்தது.
அப்பெண் அபராத தொகையைச் செலுத்தாததால் தாக்கப்பட்டுள்ளார்.
சண்டை நடந்து இரண்டு நாட்கள் வரை இந்த சம்பவம் குறித்து யாருக்கும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, போலீஸார் தானாக முன்வந்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக தாஜிமுல்லை கைது செய்தனர். இதில் இரண்டு பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாதவை.
திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி அவரை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
சோப்ராவின் திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுலுடன் தாஜிமுல்லுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், வீடியோ வைரலானவுடன், கட்சிக்கும் இந்த சம்பவத்துக்கும் இடையிலான தொடர்பை எம்எல்ஏ ஹமீதுல் மறுத்துள்ளார். இது ஒரு கிராம பிரச்சனை என்று கூறினார்.
ஆனால், எம்எல்ஏ ஹமீதுல் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு 7 நாட்களுக்குள் நேரில் விளக்கம் அளிக்குமாறு, கட்சியின் தலைமையின் அறிவுறுத்தலின் பேரில், இஸ்லாம்பூர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கன்ஹையா லால் அகர்வால் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
எனினும், தனக்கு இந்த நோட்டீஸ் வரவில்லை, அது கிடைத்ததும் அதற்கு பதிலளிப்பதாக ஹமீதுல் கூறுகிறார்.
உள்ளூரில் பதற்றம்
சோப்ரா பிரதான சாலையில் நுழைத்தவுடன், திடீரென சில இளைஞர்கள் சாலையை மறித்து. எங்கிருந்து வருகிறீர்கள், எங்கு செல்கிறார்கள், யாரை சந்திக்க வேண்டும், அவர்களின் வேலை என்ன? என பல கேள்விகள் கேட்டனர்.
இறுதியில் லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை மட்டுமே பிபிசியால் அடைய முடிந்தது.
அந்த கிராமத்திற்குச் செல்ல வேண்டாம். அது மிக ஆபத்தானது என அங்கிருந்த மக்கள் அறிவுரை வழங்கினர். நீங்கள் சென்றாலும் பலன் இருக்காது. கிராமத்தில் இருந்து யாரும் வாய் திறக்க மாட்டார்கள் என அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
ஒரு காவல்துறை அதிகாரியும் அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். இது அப்பகுதியில் தாஜிமுல்லுக்கு இருக்கும் ஆதிக்கத்தை காட்டுவதாகத் தோன்றியது.
இந்த அச்சம் காரணமாக, உள்ளூர் சிபிஎம் தலைவர்களும் தொலைபேசியிலோ அல்லது கேமராவிலோ பேச விரும்பவில்லை.
"அவரை இரண்டு மூன்று முறை கைது செய்தாலும், சில நாட்களுக்குப் பிறகு போலீஸார் அவரை விடுவித்தனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் தாஜிமுல்லின் அதிகாரம் அதிகரிக்கத் தொடங்கியது. அவர் பல சலிஷி சபாக்களில் தீர்ப்பு வழங்கி உடனே தண்டனையும் வழங்கி வந்தார். இந்த வீடியோ வைரலாகியிருக்காவிட்டால், அவரது செயல்பாடுகள் முன்பு போல் தொடர்ந்திருக்கும்.’’ என பெயரைக் கூற விரும்பாத ஒரு சிபிஎம் தலைவர் கூறினார்.
எனினும் இஸ்லாம்பூர் காவல் கண்காணிப்பாளர் ஜோபி தாமஸ் "சட்ட விதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
ஆனால், ஜூன் 28-ஆம் தேதி நடந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தது ஏன், அவர்களுக்கு ஏன் முன்பு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படும் தாஜிமுல், சலிஷி சபாக்கள் மூலம் கிராமத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதை முக்கிய வேலையாக செய்து வந்ததாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில், இடதுசாரி கட்சிக்கு நெருக்கமாக இருந்தார். ஆனால், 2011ல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் அணி மாறினார். 2017 முதல், அவரது அரசியல் செல்வாக்கு மற்றும் ஆதிக்கம் வேகமாக அதிகரித்தது.
'ஜேசிபி' இயந்திரம் சட்டவிரோத கட்டுமானங்களை இடிப்பது போல, அந்த பகுதியில் எதிரிகளின் வாயை அடைத்து, அந்த இடத்திலேயே தீர்ப்பு வழங்கி தஜிமுல் பிரபலமானார். அதனால்தான் அவர் ஜேசிபி என்று அழைக்கப்படுகிறார்.
சலிஷி சபாக்கள் மூலம் திருமணத்தை தாண்டிய உறவுகள் முதல் சொத்து தகராறு வரை அனைத்து வகையான பிரச்சனைகளையும் இவர் தீர்த்து வைத்தாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு அபராதமும் விதித்து வந்துள்ளார். இதுவே அவரது முக்கிய தொழிலாக இருந்தது. எங்கு தகராறு நடந்தாலும் அங்கு சென்று அந்த இடத்திலேயே 'நீதி' வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
"ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு வழக்குகளை ஜேசிபி கவனிப்பது வழக்கம். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலான பிறகுதான் இப்போது சலசலப்பு ஏற்படுகிறது. அதுவரை அவருக்கு எதிராகப் பேச யாருக்கும் தைரியம் இல்லை" என சிபிஎம் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
லட்சுமிபூர் பகுதி மக்களிடையே இன்னும் பீதி நிலவுகிறது. ஒவ்வொரு தெரு முனையிலும் மக்கள் இந்த பிரச்சினையை விவாதிப்பதைக் காணலாம். ஆனால் வெளியாரைப் பார்த்தவுடன் அமைதியாகி விடுகிறார்கள். ஜாமீனில் வெளிவந்த பிறகு அவர் என்ன செய்வாரோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
"லட்சுமிபூர் பகுதி முழுவதும் தாஜிமுல் மற்றும் அவரது குழுவினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரசியல் ஆதரவின் காரணமாக, அரசுக்கு இணை நிர்வாகத்தை அவர்கள் உள்ளூரில் நடத்தி வந்துள்ளனர்’’ என சிபிஎம் மாவட்டச் செயலர் அன்வருல் ஹக் கூறுகிறார்.

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
சோப்ராவைச் சேர்ந்த ருஸ்தம் அலி, நவம்பர் 4, 2018 அன்று சோப்ரா காவல் நிலையத்தில் தாஜிமுல்லுக்கு எதிராக முதல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், குலாம் முஸ்தபா மற்றும் அப்துல் என்ற இருவரை தாஜிமுல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
அதன்பிறகு, மார்ச் 11, 2019 அன்று, அஜினா காதுன் என்ற பெண் சோப்ரா காவல் நிலையத்தில் தாஜிமுல் மற்றும் அவரது உதவியாளர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து இஸ்லாம்பூர் காவல் கண்காணிப்பாளர் தாமஸ் கூறுகையில், "தாஜிமுல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. ஆனால் அவர் ஒரு குற்றவாளி, அவர் மீது கொலை உள்ளிட்ட பல கடுமையான வழக்குகள் உள்ளன.’’ என்கிறார்.
" தாஜிமுல் எப்போதும் எம்எல்ஏ ஹமீதுலுடன் இருப்பார். அதனால்தான் அவரைத் தொடும் தைரியம் காவல்துறைக்கு இல்லை. பலமுறை கைது செய்யப்பட்டாலும், அவர் உடனே விடுவிக்கப்படுவார்’’ என பெயர் கூற விரும்பாத உள்ளூர் சிபிஎம் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
சோப்ராவில் காங்கிரஸ் தலைவரான மசீருதீனும் இதையே கூறுகிறார்.
எம்.எல்.ஏ கூறிய சர்ச்சைக்குரிய கருத்து
சோப்ரா எம்எல்ஏ ஹமீதுல் தனது முந்தைய கருத்துக்கு மாறாக, நடந்த சம்பவம் குறித்து திங்களன்று வருத்தம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணை 'அவமானம்' என்று அழைத்த அவர், அப்பெண்ணும் தவறு செய்தார் என கூறியிருந்தார்.
"கிராமப்புறங்களில் சமாதானக் கூட்டம் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழக்கம் உள்ளது. ஆனால், இந்த பிரச்சனையில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளது’’ என அவர் கூறியிருந்தார்.
"நடந்த சம்பவம் மிகவும் தவறாது. நானோ, எனது கட்சியோ இதற்கு ஆதரவளிக்கவில்லை. நான் முன்பு கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது’’ என ஹமீதுல் விளக்கம் அளித்தார்.

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
இதற்கிடையில், இதேபோன்ற ஒரு சம்பவத்தின் வீடியோ திங்கள்கிழமையும் வெளிவந்துள்ளது. இந்த இரண்டாவது வீடியோ எப்பொழுது எடுக்கப்பட்டது என்பதை பிபிசி ஹிந்தியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இருப்பினும், இந்த சம்பவம் லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தின் மற்றொரு கிராமமான மோகன்கஞ்சில் இருந்து பதிவாகியுள்ளது.
ஒரு உள்ளூர் சிபிஎம் தலைவர், இரண்டாவது சம்பவம் ஜூன் 16 அன்று நடந்ததாகக் கூறுகிறார். அதிலும், தாஜிமுல் ஒரு காதல் ஜோடியை இதேபோல் அடிப்பதைக் காணலாம்.
இருப்பினும், சோப்ரா போலீசார் கூடுதல் தகவல்களை வழங்க மறுத்துவிட்டனர், இரண்டாவது வழக்கு விசாரணையில் உள்ளது என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸின் உள்ளூர் தலைவர்களும் மவுனம் காத்து வருகின்றனர்.
தாக்கப்பட்ட காதலர்களுக்கு அழுத்தம்
இதற்கிடையில், வைரலான வீடியோவில் படுமோசமாக தாக்கப்பட்ட காதலர்கள் திடீரென தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர். வீடியோவை வைரலாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
"எனது அனுமதியின்றி வீடியோவை வைரலாக்கியதன் மூலம் எனது நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வீடியோ குறித்து நான் சொல்ல வேண்டியதைச் சொல்லியிருக்கிறேன். இதை விட வேறு எதுவும் இல்லை." என பிபிசியிடம் அப்பெண் கூறினார்
பலமுறை கோரிக்கை விடுத்தும், இந்த விவகாரம் குறித்தும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
மறுபுறம், அந்த இளைஞர், "நான் தப்பு செய்துவிட்டேன். ஆனால் கிராம மக்கள் சேர்ந்து பிரச்சினையை தீர்த்துவிட்டனர். நான் அதிகம் அடிக்கப்படவில்லை. அந்த பெண் என் வீட்டிற்கு வந்திருந்தார். அது தவறு. பஞ்சாயத்து மூலம் இதற்கு தீர்வு கண்டுவிட்டோம். எனக்கு யார் மீதும் எந்த புகாரும் இல்லை, இப்போது நான் என் வீட்டில் வசிக்கிறேன்.’’ என்றார்.
முதல் நாளிலிருந்தே இவர்கள் இருவரும் தாஜிமுல் பெயரை குறிப்பிடவில்லை என்பதும், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது அதற்கு நேர்மாறாக, வீடியோவை வைரலாக்கியவர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..

பட மூலாதாரம், PRABHAKAR MANI TEWARI
" தாஜிமுல் கைது செய்யப்பட்ட பிறகு, அவரது சகோதரர் ஆலம்கீர் வீடு வீடாகச் சென்று, யாரும் வாயை திறக்கக்கூடாது என மிரட்டிக்கொண்டிருக்கிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஆணும், பெண்ணும் மிரட்டப்பட்டுள்ளனர். இந்த அச்சுறுத்தல்களின் விளைவுதான் அவை." என உள்ளூர் காங்கிரஸ் தலைவர் மசீருதீன் கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளன.
"மமதா பானர்ஜியின் ஆட்சியில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் உடனடி நீதி வழங்கும் மரபுக்கு இந்த சம்பவம் சான்றாகும்.’’ என சிபிஎம் தலைவர் முகமது சலீம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சோப்ரா சம்பவத்தை ஆதரிக்க முடியாது. போலீசார் அதை அறிந்து வழக்கு பதிவு செய்து சில மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்தனர். மீதமுள்ள குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இடது முன்னணியின் நீண்ட கால ஆட்சியில் இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை’’ என திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












