பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம்: அமெரிக்க விமர்சனம், சீன ஆதிக்கம் இரண்டையும் சமாளிக்குமா?

பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
    • பதவி, பிபிசி நியூஸ், டெல்லி

கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பின் நரேந்திர மோதி முதன்முறையாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்ததை, இந்தியாவின் நட்பு நாடுகள் உன்னிப்பாக கவனித்துவருகின்றன.

யுக்ரேன் தலைநகர் கீயவ்வில் குழந்தைகள் மருத்துவமனை உட்பட ரஷ்யா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் குறைந்தது 41 பேர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் மோதி ரஷ்யாவுக்குச் சென்றது உலகளவில் எதிர்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபரை அரவணைத்து மோதி புன்னகைப்பதை மாஸ்கோவிலிருந்து வரும் புகைப்படங்கள் காட்டுகின்றன. ரஷ்ய அதிபர் புதின் புன்னகையுடன் மோதியை 'எனது அன்புக்குரிய நண்பர்' எனவும் 'அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்வதாகவும்' கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரண்டு நாட்கள் பயணத்தில் முதலாவதாக, 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு மோதி கிரெம்ளின் செல்கிறார். வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த பயணம் அமைந்துள்ளது. 2022-இல் யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு இந்த மாநாட்டில் முக்கிய கருப்பொருளாக விவாதிக்கப்பட உள்ளது.

வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி

அமெரிக்கா, யுக்ரேன் சொன்னது என்ன?

உலகின் முக்கியப் பொருளாதாரச் சக்தியான இந்தியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா, அதன் நட்பு நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது. மோதி பயணம் மேற்கொண்டிருக்கும் சமயம் குறித்த கேள்விகளுக்கு டெல்லியில் உள்ள அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு, நீடித்த மூலோபாயக் கூட்டுறவின் ஒருபகுதி என்றும், நேட்டோ மாநாடு நடைபெறும் நேரத்துடன் இதற்கு தொடர்பில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இந்தப் பயணம் குறித்து அமெரிக்கா கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் மேத்யூ மில்லர், மாஸ்கோவில் தன்னுடைய பேச்சுவார்த்தையின் போது யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை மோதி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ரஷ்யாவுடனான உறவு குறித்து இந்தியாவிடம் அமெரிக்கா தன் கவலையைத் தெரிவித்துள்ளதாகவும் மில்லர் தெரிவித்தார்.

“ரஷ்யா-யுக்ரேன் போர் தொடர்பான எந்தத் தீர்மானமும் யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அதன் இறையாண்மையை மதிக்கும் ஐ.நா சாசனத்திற்கு மதிப்பளிக்கும் விதமாகவே இருக்க வேண்டும், என ரஷ்யாவுடன் ஈடுபட்டுள்ள எந்த நாட்டுக்கும் வலியுறுத்துவது போல இந்தியாவையும் வலியுறுத்தியுள்ளோம்,” என திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் பிரதமர் மோதி, ரஷ்ய அதிபரைச் சந்தித்தது குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் மோசமான குற்றைவாளி ஒருவரை அரவணைப்பது மிகவும் அதிருப்திகரமானது. இது அமைதி முயற்சிகள் மீதான பெரும் அடி,” என ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் திங்கட்கிழமை (ஜூலை 8) பதிவிட்டுள்ளார்.

இந்தியாவால் ரஷ்யா பலன் பெறுமா?

செவ்வாய்கிழமை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் தொடங்கிய நேட்டோ மாநாடு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் அப்போதைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட மேற்குநாடுகள் பாதுகாப்பு குழுவின் 75-வது ஆண்டு தினத்தை அனுசரிக்கும் விதமாக நடைபெறுகிறது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நேட்டோ நாடுகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், இந்தியா, சண்டையை முடிவுக்குக் கொண்டுவரப் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கையைக் கோரியதைத் தவிர, அதிபர் புதினை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்த்தது. மேற்கு நாடுகள் டஷ்யா மீது தடைகளை விதித்து, அந்நாட்டைத் தனிமைப்படுத்த முயற்சி செய்த நிலையில், அதிபர் புதின், சீனா, இந்தியா, துருக்கி உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாடு அளவிலான கூட்டங்களை நடத்தினார்.

மாஸ்கோவில் மோதி இருப்பது புதினுக்கு பலன் அளிக்குமா என சிலர் கேட்கின்றனர். இந்தியா அனுப்பும் இந்த செய்தி ரஷ்யாவுக்கு ஆதாயத்தை ஏற்படுத்துமா?

நரேந்திர மோதியுடன் தனிப்பட்ட முறையிலான சந்திப்பில் புதின்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, நரேந்திர மோதியுடன் தனிப்பட்ட சந்திப்பில் ஈடுபட்டிருக்கும் புதின்

இந்தியாவுக்கு ரஷ்யா ஏன் முக்கியம்?

“இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று,” என பிபிசி-யிடம் கூறிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் வினய் குவாத்ரா, இரு நிகழ்வுகளுக்கும் இடையிலான தொடர்பை மறுக்கிறார்.

பனிப்போர் காலத்திலிருந்தே இந்தியாவும் ரஷ்யாவும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய உறவுகளைப் பகிர்ந்து வருகின்றன. இந்தியாவுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் முக்கிய நாடாக ரஷ்யா உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளுள் ஒன்றான இந்தியா, தன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னைகளை கொண்டுள்ளது.

மோதி ரஷ்யாவுக்கு முக்கியத்துவம் அளிப்பது ஆச்சர்யமானது அல்ல எனக்கூறும் நிபுணர்கள், பாதுகாப்பு தொடர்பான கொள்முதலை தாண்டியும் இருநாட்டு உறவு உள்ளதாகக் கூறுகின்றனர்.

“வரலாற்று ரீதியான போக்கைக் கவனித்தால், இந்திய வெளியுறவுக் கொள்கையில் ரஷ்யா நிலையாக உள்ளதைக் கவனிக்கலாம்,” என மாஸ்கோவுக்கான இந்திய முன்னாள் தூதர் பங்கஜ் சரண் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

“ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, மற்றும் அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவை இருநாட்டு உறவுகளில் முதன்மை தூண்களாக உள்ளன,” என்கிறார்.

இந்தியாவில் சில அணுமின் நிலையங்களை நிறுவுவதற்கு ரஷ்யா கடந்த பல ஆண்டுகளாகத் தொழில்நுட்ப உதவியை வழங்கிவருகிறது.

யுக்ரேன் போர் தொடங்கியபின், ரஷ்ய எண்ணெய் விற்பனை அல்லது அதன் விலையின் மீது மேற்கு நாடுகள் தடைகளை விதித்த பின்னர், பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தள்ளுபடி விலை எண்ணெய்யை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிவருகிறது.

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் எண்ணெய் விற்பனையில் எழுச்சி காரணமாக, இருநாடுகளுக்கு இடையில் 65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வணிகம் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.

இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு, ரஷ்ய முதலீடு மற்றும் சில பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியை இந்தியாவுக்கு நகர்த்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மோதியின் முன்னுரிமையாக இருக்கும் என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

நரேந்திர மோதி - புதின்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, குதிரை தொழுவத்தை பார்வையிட்ட இருநாட்டு தலைவர்கள்

ரஷ்ய-சீனா நட்பு குறித்து இந்தியாவின் பதற்றம்

கடந்த 20 ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்து வருகின்றன. இதனை சீனாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான அரணாகப் பலர் கருதுகின்றனர்.

ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட குழுவாகக் கருதப்படும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பானுடனான மூலோபாய மன்றமான ‘குவாடி’ அமைப்பில் இந்தியாவும் உறுப்பினரானது.

ஆனால் மேற்கத்திய நாடுகளின் விரோதத்தை எதிர்கொள்ளும் ரஷ்ய அதிபர் புதின், சீனாவுடன் நெருக்கமான மூலோபாய மற்றும் பொருளாதார உறவுகளை வளர்த்துக் கொண்டார். சீனாவின் நீண்டகாலப் போட்டியாளரான இந்தியா இதனை கவனிக்காமல் இல்லை.

2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக் பிராந்தியத்தில் சர்ச்சைக்குரிய எல்லையில் நடந்த ஒரு சண்டையில் 20 இந்திய வீரர்கள், மற்றும் குறைந்தது நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். இது இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்தது.

ரஷ்யா-சீனா உறவால், இந்த சமன்பாட்டிலிருந்து தான் விடுபடக்கூடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.

"தற்போது இந்தியா பயன்படுத்தப்படும் ஒரு உத்தி, ரஷ்யாவின் நட்பைத் தக்கவைப்பது. இது அமெரிக்கா மற்றும் மேற்கத்தியக் கொள்கைகளால் ரஷ்யா சீனாவுடன் மேலும் நெருக்கமாவதைத் தடுப்பதற்காக ஆகும்," என்று திரு சரண் கூறுகிறார்.

சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்க, பிரஞ்சு மற்றும் இஸ்ரேலிய ஆயுத அமைப்புகளை வாங்குவதன் மூலம் இந்தியா தனது ஆயுதக் களஞ்சியத்தை பன்முகப்படுத்தியிருந்தாலும், அது இன்னும் மாஸ்கோவை பெரிதும் நம்பியுள்ளது. யுக்ரைன் போர் அதன் பாதுகாப்பு ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கவலைகளும் உள்ளன.

“சில உதிரி பாகங்களின் விநியோகம் மற்றும் மீதமுள்ள S-400 ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்தப் பயணத்தின் போது கண்டிப்பாக இது குறித்துச் சில விவாதங்கள் நடைபெறும்,” என்கிறார் முன்னாள் தூதரும், தற்போது டெல்லியில் உள்ள விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளையின் புகழ்பெற்ற உறுப்பினருமான அனில் திரிகுணாயத்.

லாபகரமான வேலைகளை தருவதாக பொய்யான வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியர்கள் பலர், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாபகரமான வேலைகளை தருவதாக பொய்யான வாக்குறுதிகளால் கவரப்பட்ட இந்தியர்கள் பலர், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியா-ரஷ்யா இயையே வேறுபாடுகள் இல்லாமல் இல்லை. இந்தியப் பிரஜைகள், லாபகரமான வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டு, யுக்ரேனில் போரிடும் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கபப்டும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இதில் இதுவரை 4 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின் போது, ​​இன்னும் போரில் போராடி வரும் இந்தியர்களை -- இவர்கள் டஜன் கணக்கில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது -- விரைவில் வெளியேற்றுவதற்கு மோதி புதினிடம் வலியுறுத்துவார் என்று இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

தனது எதிரியான சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவும் ரஷ்யாவும் தேவை என்பதை இந்தியா அறிந்திருக்கிறது. எனவே, இரண்டில் யாரையும் புண்படுத்தாமல் இருக்கச் சமநிலையை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை அது உணர்ந்திருக்கிறது.

“இந்தியா மூலோபாயச் சுயாட்சி மற்றும் பல்முனை நட்பு கொள்கையைப் பின்பற்றுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் எங்களுக்கு மூலோபாய உறவுகள் உள்ளன. இவை பரஸ்பரம் பிரத்தியேகமான கூட்டாண்மைகள்,” என்கிறார் திரு த்ரிகுனாயத்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)