பிரதமர் மோதி ரஷ்யா சென்றிருப்பது சீனாவுக்குப் பதிலடி கொடுக்கவா?

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், Reuters

பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.

மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோதியின் முதல் இருதரப்பு வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். எனவே, பிரதமர் மோதியின் இந்த ரஷ்யப் பயணம் பல வழிகளில் முக்கியமானது.

ஒருபுறம் சீனாவுடனான ரஷ்யாவின் நெருக்கம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் ரஷ்யாவிற்கு எதிரானதாகக் கருதப்படும் குழுவான நேட்டோ உச்சி மாநாடு நடக்கும் நேரத்தில் பிரதமர் மோதி ரஷ்யா சென்றுள்ளார்.

பொதுவாக ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இந்த வருடாந்திர சந்திப்பு ஆண்டின் இறுதியில் நடைபெறும். இந்நிலையில் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான நிபுணர்கள் பலரும் இந்தப் பயணத்தின் நேரம் குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எதிர்வினை ஆற்றியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நேட்டோ உச்சி மாநாடும் மோதியின் ரஷ்யப் பயணமும்

பிரதமர் மோதி ரஷ்யா செல்லும் அதே நாளில் அமெரிக்காவில் நேட்டோவின் 75-வது ஆண்டு விழா சிறப்பு உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கியும் பங்கேற்கிறார்.

இந்த உச்சி மாநாடு ரஷ்யா- யுக்ரேன் போர் குறித்து முக்கியமாக கவனம் செலுத்தக்கூடும்.

வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு அதாவது நேட்டோ, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1949-இல் உருவாக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் இணைந்து அதனை உருவாக்கின. அவர்கள் அதை சோவியத் யூனியனுக்கு எதிராக அமைத்தனர். அப்போது உலகம் இரு துருவங்களாக இருந்தது. ஒரு வல்லரசு அமெரிக்கா, மற்றொன்று சோவியத் யூனியன். இப்போது சோவியத் யூனியன் பிளவுபட்டு ரஷ்யா உருவாகியுள்ளது. எனவே நேட்டோ ரஷ்யாவிற்கு எதிரானதாக கருதப்படுகிறது.

ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் போர் நடந்து வருகிறது. இந்தப் போர் காரணமாக உலகின் பல நாடுகள் இரு குழுக்களாகப் பிரிந்துள்ளன.

ரஷ்யாவுக்கு எதிரான நாடுகள் ஒருபுறம். மறுபுறம் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ள நாடுகள்.

அத்தகைய ஒரு வலுவான குழு நேட்டோ ஆகும். எனவே இந்த நேட்டோ உச்சி மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இத்தகையச் சூழ்நிலையில் பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணம் நேட்டோ உச்சி மாநாட்டிற்கான பதிலடியாக பார்க்கப்பட வேண்டுமா?

இது முற்றிலுமாக ஒரு இருதரப்பு பயணம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதினும் மோதியும் சந்திக்கும் போது யுக்ரேன் பிரச்சனை குறித்தும் விவாதிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் ஆட்சேர்ப்பு செய்ய்யப்பட்டது குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

ரஷ்ய ராணுவத்தில் சுமார் 30-45 இந்தியக் குடிமக்கள் சட்டவிரோதமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களை விடுவிக்கப் பிரதமர் மோதி வேண்டுகோள் விடுக்க்கூடும் என்றும் குவாத்ரா கூறினார்.

2021-ஆம் ஆண்டு உச்சிமாநாட்டிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பல விவகாரங்கள் நிலுவையில் உள்ளன. வர்த்தகம், இணைப்பு, விண்வெளி, எண்ணெய், எல்.என்.ஜி, பாதுகாப்புத் தளவாடங்கள், பணப் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்கள் குறித்து இரு தலைவர்களுக்கும் விவாதிக்கக்கூடும்.

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரதமர் மோதியை புதின் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்

புதின், மோதி, மற்றும் இந்தியா-ரஷ்யா உறவுகள்

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கடைசி வருடாந்திர உச்சிமாநாடு புதுடெல்லியில் 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அப்போது இந்தியாவிற்கு வந்திருந்தார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக இந்த வருடாந்திர கூட்டத்தை 2020 இல் நடத்த முடியவில்லை.

யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து பிரதமர் மோதி இதுவரை ரஷ்யா செல்லவில்லை. அவர் கடைசியாக 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் ரஷ்யா சென்றிருந்தார்.

இந்தச் சுற்றுப்பயணங்கள் இல்லாதபோதும்கூட இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் எந்த சரிவும் ஏற்படவில்லை.

பிரதமர் மோதியை புதின் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து பேசியுள்ளார்.

இருப்பினும் 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற்றபோது ​​அதில் புதின் கலந்து கொள்ளவில்லை. சமீபத்தில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ - SCO) உச்சி மாநாட்டிற்கு புதின் சென்றார் ஆனால் மோதி செல்லவில்லை.

ஜி-20 மாநாட்டின் முடிவில் வெளியிடப்படும் கூட்டறிக்கையை ரஷ்யாவும் சீனாவும் ஏற்றுக்கொண்டன. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்பட்டது. கூட்டறிக்கையின் வாசகங்களுக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

முன்னதாக, யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தபோது ​​விமர்சனங்களையும் மீறி இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் கொள்முதல் செய்து வந்தது.

நிபுணர்கள் சொல்வது என்ன?

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகள் இந்தியாவைச் சிறிது கவலைகொள்ள வைக்கின்றன, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

முன்னாள் வெளியுறவுச் செயலரும், 2004 முதல் 2007 வரை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராக இருந்தவருமான கன்வல் சிபல், ஆர்டி இணையதளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

”பிரதமர் மோதி தனது மூன்றாவது பதவிக்காலத்தைத் தொடங்கியவுடன் மேற்கொண்டுள்ள இந்தப்பயணம் ரஷ்யாவுடனான உறவுகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்த விஷயத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளில் இருந்து தனித்து நிற்கிறது. கூடவே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமும் அதிகரித்துள்ளது,” என்று இக்கட்டுரையில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமயத்தில் ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடாக இந்தியா இருந்தது.

“ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோதி சில நாட்களுக்கு முன்பு இத்தாலி சென்றார். உள்நாட்டு அரசியலில் முக்கிய விஷயங்கள் நடக்கும் இந்த நேரத்தில் ​​அவர் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். மோதி சமநிலையைப் பராமரிக்க விரும்புகிறார் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. பலவீனமான அரசு மற்றும் வலுவான எதிர்கட்சிகள் காரணமாக வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வரும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த விரும்பாததால் மோதி இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தியா தனது நலன்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும்,” என்று அவர் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, கஜகஸ்தானில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்.சி.ஓ) உச்சிமாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டிற்கு மோதி செல்லவில்லை. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அனுப்பப்பட்டார்.

”எஸ்.சி.ஓ-வில் ரஷ்யா முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாததைப் பிரதமர் மோதி ரஷ்யா செல்வதன் மூலம் ஈடு செய்கிறார். மோதியின் ரஷ்யப் பயணம் இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது,” என்று சிபல் கூறுகிறார்.

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தியாவின் ரஷ்யாவுடனான செயல் உத்தி உறவுகள், சீன-ரஷ்ய உறவு மீது தாக்கத்தை ஏற்படுத்தாது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

சீனாவின் தொடர்பு

சீனாவும் ரஷ்யாவும் எஸ்.சி.ஓ-வின் முக்கியமான நாடுகள்.

அதிபராக மீண்டும் பதவியேற்ற பிறகு புதின் முதல் வெளிநாட்டு பயணமாகச் சீனா சென்றார். இந்தப்பயணம் சீனா மீதான ரஷ்யாவின் சார்பை வெளிப்படுத்தியது. அதை இந்தியாவும் கவனித்தது.

"ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகள் இந்தியாவைச் சிறிது கவலைகொள்ள வைக்கின்றன," என்று ‘மனோகர் பாரிக்கர் இன்ஸ்டிடியூட் ஆப் டிஃபென்ஸ் ஸ்டடீஸ் அண்ட் அனாலிசஸின்’ துணை உறுப்பினர் ஸ்வஸ்தி ராவ் ப்ளூம்பெர்க்கிடம் கூறினார். "உங்களுடைய சிறந்த நண்பர் உங்கள் எதிரியுடன் ரொமான்ஸ் செய்வது போன்றது இது. இந்தக்கவலைகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது பிரதமர் மோதி ரஷ்யா சென்று புதினை சந்திப்பதை புரிந்துகொள்ள முடிகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பிரதமர் மோதி ஆட்சிக்கு வந்தவுடன் அண்டை நாடுகளான பூடான், மாலத்தீவு, இலங்கை, மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்த முறை மோதி அவ்வாறு செய்யவில்லை.

ரஷ்யாவைத் தொடர்ந்து மோதி வியன்னாவுக்குச் செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் முதல்முறையாக ஆஸ்திரியா செல்ல இருக்கிறார்.

இந்தியா-ரஷ்யா உறவுகளில் எண்ணெய் கொள்முதல் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. கடந்த 23 மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதன் மூலம் இந்தியா சுமார் 1 லட்சம் கோடி கிந்திய ரூபாயை (13 பில்லியன் அமெரிக்க டாலர்களை) மிச்சப்படுத்தியுள்ளது என்று ஏப்ரலில் ICRAC வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

​​சர்வதேச அளவில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை மோதியின் ரஷ்யப் பயணத்தின் மூலம் புதின் காட்ட விரும்புகிறார். இது அவருக்கு மிகவும் முக்கியமானது என்று சர்வதேச விவகாரங்கள் நிபுணர் ஒருவர் ப்ளூம்பெர்க்கிடம் கூறினார்.

சீனாவுக்குப் பதில் அளிக்கும் விதமாகவும், இந்தியா ரஷ்யாவுடனான தனது உறவை வலியுறுத்திக்காட்ட விரும்புகிறது, என்று வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் வெளியான ஒரு செய்தியறிக்கை குறிப்பிடுகிறது.

பனிப்போர் காலத்தில் இருந்தே சோவியத் யூனியன் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் எழுச்சி, இந்தியாவையும் அமெரிக்காவையும் நெருக்கமாகக் கொண்டு வந்துள்ளது.

ரஷ்யாவிற்கு மாற்று வழிகள் இருப்பதாகவும், அது தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், சீனாவையே முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இந்தியா காட்ட விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மோதியின் ரஷ்யப் பயணத்தை மேற்கத்திய நாடுகள் ஆச்சரியமான நடவடிக்கையாகப் பார்க்கக்கூடாது. அமெரிக்காவின் கைப்பாவையாக மாறுவதற்குப் பதிலாக, இந்தியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையை வகுக்கிறது. அது இந்தியாவுக்கு நல்லது என்று குளோபல் டைம்ஸின் சமூக ஊடக பதிவு குறிப்பிடுகிறது.

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், MEDIA

படக்குறிப்பு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் தனித்தனி இடம் உண்டு

அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கேள்வி

"தொடர்ந்து சர்வதேசத் தடைகளை விதிப்பது அமெரிக்காவின் அணுகுமுறையாக உள்ளது. சில நிரந்தரமானவை, சில தற்காலிகமானவை. ரஷ்யா, இரான் மற்றும் சீனா – இவைதவிர மற்ற நாடுகள் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. ஒருவர் சொல்வது மட்டுமே நடக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது அந்த நாட்டிற்குப் புரியவில்லை,” என்று RAW அமைப்பில் பணியாற்றியுள்ள விக்ரம் சூட் சமூக ஊடக பதிவில் எழுதியுள்ளார்.

"இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் தனித்தனி இடம் உண்டு. இந்தியாவும், உலக்லின் தெற்கில் இருக்கும் நாடுகளும் புதினை நிராகரிக்கவில்லை,” என்று கன்வல் சிபல் கூறினார்.

“இந்தியா ரஷ்யாவின் பழைய நண்பன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மேம்படும் என்று நம்புகிறோம்,” என்று சில நாட்களுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யத் தூதர் வசிலி நெபென்சியா கூறியிருந்தார்.

”யுக்ரேன் விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த மோதி புதினைச் சந்திக்கிறார். இது மேற்குலகத்தை அவமதிக்கும் செயலாகும்,” என்று சர்வதேச விவகார நிபுணர் டெரெக் ஜே கிராஸ்மேன் கூறினார்.

"ரஷ்யாவுடனான செயல் உத்தி உறவுகள், சீன-ரஷ்ய உறவு மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை இந்தியா எப்போது புரிந்து கொள்ளும்? ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு முக்கியமான, வரம்பற்றக் கூட்டாண்மை உருவாகியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ரஷ்யாவின் கூட்டாளியாக தாலிபன்கள் இருப்பதாகக் கூறிய புதினைச் சந்திக்க மோதி சென்றுள்ளார்,” என்று கிராஸ்மேன் எழுதியுள்ளார்.

"யுக்ரேன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் நிற்பது சரியான கொள்கை அல்ல என்று பெரும்பாலான இந்தியர்கள் கருதுகின்றனர். யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா மேற்கு நாடுகளுடன் நிற்கவேண்டும் என்றும் ரஷ்யாவுக்கு எதிராகச்செல்ல வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. இதில் இந்தியாவுக்கு உடன்பாடு இல்லை,” என்று இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்து சர்வதேச உறவுகள் ஆய்வாளர் பேராசிரியர் ஜான் மியர்ஷெய்மர் கூறினார்.

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, இந்திய விமானப்படை ரஷ்ய சுகோய் எஸ்யு-30 (படத்தில் இருப்பது), எம்கேஐ, மிக்-29 மற்றும் மிக்-21 போர் விமானங்களை நம்பியே உள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் ஒருவரையொருவர் எவ்வளவு சார்ந்து இருக்கின்றன?

2023-2024-ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 5,4 லட்சம் கோடி இந்திய ரூபாய் (65 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிலான வர்த்தகம் நடந்தது. இந்த வணிகத்திற்கான முக்கிய காரணம் எரியாற்றல்.

இந்தியா ரஷ்யாவிற்கு 33,400 கோடி இந்திய ரூபாய் (நான்கு பில்லியன் டாலர்கள்) மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது. ரஷ்யாவிலிருந்து சுமார்ட் 5 லட்சம் கோடி (60 பில்லியன் டாலர்கள்) மதிப்பிற்கு இறக்குமதி செய்தது. அதாவது ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் அளவிற்கு இந்தியா அதற்கு விற்பதில்லை.

எரியாற்றல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இந்தியாவின் முக்கியக் கூட்டாளியாக ரஷ்யா உள்ளது.

ரஷ்யா, இந்தியாவிற்கு ஆயுதங்கள் வழங்கும் முக்கிய நாடாக இருந்து வருகிறது.

2017-2022-க்கு இடையில் இந்திய பாதுகாப்புத்துறை இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 62% லிருந்து 45% ஆக குறைந்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட் தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், யுக்ரேன் மீதான தாக்குதல் காரணமாக ஆயுத ஏற்றுமதியில் ஏற்பட்டத் தடைகளாலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவது குறைந்துள்ளதாக அது குறிப்பிட்டது.

இந்திய ராணுவத்தில் ரஷ்யத் தயாரிப்பு பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட சுகோய் போர் விமானங்கள் மற்றும் எம்-17 ஹெலிகாப்டர்களை விமானப்படை பயன்படுத்துகிறது.

யுக்ரேன் போர் துவங்கிய பிறகு ரஷ்யா ஆயுதப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு ஆயுத சப்ளையை அது நிறுத்தியுள்ளது என்றும் 2023-ஆம் ஆண்டு நவம்பரில் ‘தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில்’ வெளியான அறிக்கை தெரிவிக்கிறது.

நரேந்திர மோதியின் ரஷ்யப் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதைக் குறைக்க இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது

இந்திய ராணுவமும் ரஷ்யாவும்

இந்திய விமானப்படை ரஷ்ய சுகோய் எஸ்யு-30, எம்கேஐ, மிக்-29 மற்றும் மிக்-21 போர் விமானங்களை நம்பியே உள்ளது.

இது தவிர, IL-76 மற்றும் Antonov AN-32 போக்குவரத்து விமானங்கள், MI-35 மற்றும் MI-17V5 ஹெலிகாப்டர்கள் உள்ளன. சில காலத்திற்கு முன்பு வாங்கப்பட்ட S-400 வான் பாதுகாப்பு அமைப்பும் ரஷ்யாவிலிருந்து வந்தவை.

இந்திய ராணுவம் ரஷ்ய T72 மற்றும் T90 போர் பீரங்கிகளை பயன்படுத்துகிறது. கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா முன்பு அட்மிரல் கோர்ஷ்கோவாக இருந்தது.

இந்திய கடற்படை IL-38 கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் Kamov K-31 ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துகிறது.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலைக் குத்தகைக்கு எடுத்துள்ளது. மேலும் இந்தியா தனது சொந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கவும் ரஷ்யா உதவுகிறது.

ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்குவதைக் குறைக்க இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு மட்டுமே சரியான கொள்கை என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்திய-ரஷ்ய கூட்டு நிறுவனமான இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்திய ராணுவத்திற்கு 35,000 ஏகே-203 ரக துப்பாக்கிகளைப் பிரதமர் மோதியின் ரஷ்யப் பயணத்திற்கு முன்பாக சப்ளை செய்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)