கூச்ச சுபாவமும், மன உறுதியும் கொண்ட ராகுல் டிராவிட்டின் மௌனம் நமக்குச் சொல்வது என்ன?

ராகுல் டிராவிட்டின் மௌனத்தில் மறைந்திருக்கும் பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்றது
    • எழுதியவர், ஆனந்த் வாசு
    • பதவி, மூத்த விளையாட்டுப் பத்திரிகையாளர், பிபிசி ஹிந்தி

கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகளை மீண்டும் அசைப்போட்டுப் பார்க்கும்போது, ​​​​சில நேரங்களில் பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பரில் ரோஹித் சர்மா ராகுல் டிராவிட்டை அழைக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை டி20 உலகக் கோப்பை கதையின் முடிவு வேறு விதமாக இருந்திருக்கும். கடந்த ஆண்டு, ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்தது, ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளருக்கான பதவிக்காலமும் முடிந்தது.

டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருந்தார். தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட பெங்களூரு திரும்பினார். ஆனால், ரோஹித்தின் அழைப்பு எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. அதன் பிறகு நடந்த சம்பவங்களுக்கு உலகமே சாட்சி!

ராகுல் டிராவிட் 1996 முதல் 2012 வரை இந்தியாவுக்காகக் களத்தில் விளையாடினார். தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், டிராவிட் மொத்தம் மூன்று உலகக் கோப்பைகளில் விளையாடி உள்ளார். ஆனால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

அந்த நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகள் எதுவும் இல்லை. 2007-ஆம் ஆண்டு, டி 20 உலகக் கோப்பையில் மூத்த வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்று நம்பிய வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர்.

இந்தியக் கிரிக்கெட்டுக்காகப் பல சாதனைகளைக் கொடுத்த ஒரு சிறந்த வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை கோப்பையின்றி முடிவடைந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், பயிற்சியாளராக வெற்றியின் ஒரு பகுதியாக இருப்பது டிராவிட்டிற்கு பெரும் நிம்மதியைத் தந்திருக்கும்.

ராகுல் டிராவிட்டின் மௌனத்தில் மறைந்திருக்கும் பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு மனிதராக, டிராவிட் தனக்கு முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவர்

டாக்டர் பட்டம் பெற மறுத்த டிராவிட்

டிராவிட் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் என்பது முக்கியமான விஷயம். அவர் பெருமித உணர்வுக்காகவோ பாராட்டுக்களுக்காகவோ விளையாடவில்லை.

இந்த உலகக் கோப்பையின் போது, ​​சமூக வலைதளங்களில் #DoItForDravid (Do It For Dravid) என்று ஒரு டிரெண்ட் இருப்பது அவரிடம் கூறப்பட்டது. ஆனால் இந்த ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து மேற்கொள்ளும் பிரசாரத்தை டிராவிட் விரும்பவில்லை.

இது போன்று ஒருவருக்காக வெற்றிப்பெறச் சொல்வது சரியில்லை என்று டிராவிட் கூறினார்.

"எவரெஸ்ட் சிகரத்தை ஏன் ஏற வேண்டும் என்று மலையேறுபவரிடம் கேட்டால், மலையேறுபவர் பதிலுக்கு, 'எவரெஸ்ட் அங்கே இருப்பதால் ஏற வேண்டும்' என்று பதில் கூறுவது போல் உள்ளது," என்றார்.

டிராவிட் மேலும் கூறுகையில், உலகக் கோப்பையை தேசத்துக்காக விளையாட வேண்டும். ஒருவருக்காக மட்டும் அல்ல,” என்றார்.

டிராவிட்டின் எளிமையான பண்புக்கு இது ஒரு உதாரணம். ஆனால் இதுமட்டுமே உதாரணம் இல்லை. இன்னும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

2017-ஆம் ஆண்டு பெங்களூரு பல்கலைக்கழகம் டிராவிட் கிரிக்கெட் விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.

டிராவிட் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

கௌரவப் டாக்டர் பட்டத்தை ஏற்பதற்குப் பதிலாக, விளையாட்டுத் துறையில் சில கல்வியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற டிராவிட் முயற்சிப்பார் என்று பெங்களூரு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த விஷயத்தை டிராவிட் தன் நண்பர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருந்தார்.

அவர், “என் அம்மா பிஎச்.டி, என் மனைவி டாக்டர். இதற்காக அவர்கள் எவ்வளவு உழைத்தார்கள் என்பது எனக்குத் தெரியும். கிரிக்கெட் விளையாடியதால் மட்டும் எப்படி டாக்டர் பட்டத்தை ஏற்க முடியும்?,” என்றார்.

இது பலருக்குச் சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இது அவ்வளவு சிறிய விஷயம் இல்லை.

ஒரு வீரராக, ஒரு மனிதராக, மற்றும் பயிற்சியாளராக, டிராவிட்டின் கவனம் முழுவதும் ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைப்பதை விட, செயல்பாட்டில் தான் உள்ளன.

அழுத்தங்களை தாங்கும் இதயம் : ராகுல் டிராவிட்டின் மௌனத்தில் மறைந்திருக்கும் பதில்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெயர், வெற்றி, மற்றும் பணத்தின் மோகத்தில் சிக்கிக் கொள்ள டிராவிட் தன்னை ஒருபோதும் அனுமதிக்கவில்லை

டிராவிட்டின் முந்தைய வெற்றிகள்

ஒரு வீரராக, டிராவிட் தனக்குத் தேவையானதை நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்பட்டார். கிரிக்கெட் பயிற்சியுடன், தனது உணவையும் கவனித்துக் கொண்டார்.

வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக, போட்டி நடைபெறும் நாட்களிலும், போட்டி இல்லாத நாட்களிலும் தனது அன்றாட வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார். இவ்வளவு செய்தும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை எனில், அவர் அதை எளிதாக ஏற்றுக் கொள்வார்.

ஒரு மனிதராக, டிராவிட் தனக்கு முக்கியமான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துவர். அது அவரின் பயிற்சியாளராக இருக்கலாம், அவரது அணியினராக இருக்கலாம், அல்லது அவரின் நண்பர்களாகவும் இருக்கலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக அவரது குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.

பெயர், வெற்றி, மற்றும் பணத்தின் மோகத்தில் சிக்கிக் கொள்ள டிராவிட் தன்னை ஒருபோதும் அனுமதிக்கவில்லை.

டி.வி-யிலும், மைதானத்திலும் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிராவிட் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் வீட்டில் தான் ஒரு மகன், அண்ணன், கணவன், அப்பா என்பதில் தெளிவாக இருக்கிறார்.

தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ), இந்தியா 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணி ஆகியவற்றில் டிராவிட் பயிற்சியாளராக இருந்தது மிகவும் பயனுள்ள காலகட்டங்கள். ஒரு பயிற்சியாளராக, டிராவிட் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றார்.

நிச்சயமாக, டி20 உலகக் கோப்பை வெற்றி எப்போதுமே நினைவில் இருக்கும், அதற்காக அவருக்குப் பெரிய வெகுமதியும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் திரைக்குப் பின்னால் அவர் தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

இவற்றில் உள்ள பொதுவான விஷயம் என்னவென்றால், முடிவை விட செயல்முறை முக்கியமானது. வீரர்களைத் தயார்படுத்துவது முக்கியம்.

நீங்கள் சரியான வீரர்களை அடையாளம் கண்டு, வீரர்கள் மேம்படக்கூடிய சூழலை உருவாக்கி, அவர்கள் இந்திய அணிக்கு பங்களிக்கக்கூடிய வகையில் உருவாக்க வேண்டும்.

ராகுல் டிராவிட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிராவிட் இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர்

அழுத்தங்களை தாங்கும் இதயம்

இந்தியா 'ஏ’ அணி எத்தனை சுற்றுப்பயணப் போட்டிகளை வென்றுள்ளது மற்றும் உலகக் கோப்பைக்கு வெளியே 19 வயதுக்குட்பட்ட போட்டிகளின் முடிவுகள் என்ன என்பது யாருக்குத் தெரியும்?

இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, ​​​​அவர் ஒட்டுமொத்த செயல்முறையையும் சவால் செய்தார்.

அந்தச் செயல்முறையைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. ஆனால், வெற்றிபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அணியின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது.

அணி வெற்றி பெற்றால் அவர் ஒரு நல்ல பயிற்சியாளராக இருந்ததாகச் சொல்வார்கள், இல்லையென்றால் அவர் நீக்கப்படுவார்.

இந்தியா சொந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் ஆடியபோது இந்த விஷயம் வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தியா பெரும்பாலும் விக்கெட்டுகளை மாற்றி விளையாடுவதாகத் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

டிராவிட் சொல்வதைக் கேட்க விரும்பும் விமர்சகர்களுக்கு, இது ஏன் நடக்கிறது என்பது விளங்கியது.

அவர் அடிக்கடி சொல்வது என்னவெனில், “சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகள் என்று வரும்போது, ​​வீரர்கள் எந்த மாதிரியான அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது."

வெளியில் விளையாடும் போது சவால்களைச் சந்திக்க நேரிடும். அதாவது, சொந்த மைதானத்தில் நடக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். மற்ற நாடுகள் சிறப்பாக செயல்பட்டாலும் பரவாயில்லை, இந்தியா சிறப்பாகச் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் நினைப்பார்கள். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இறுதிப் போட்டிக்கு வரவில்லை என்றால் அது தோல்வியாகவே கருதப்படுகிறது.

டிராவிட் இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர் என்பதாலும், இந்தியாவில் அடிக்கடி குரல் கொடுப்பது பொருத்தமாக இருக்காது என்பதாலும் இதையெல்லாம் பகிரங்கமாக அவரால் விளக்க முடியவில்லை.

ஆனால் அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு அமைதியாகத் தன் வேலையைச் செய்வதே அவருடைய பலமாக இருந்தது.

அந்த வகையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்காகப் பெருமளவு பங்களிப்பை வழங்கியவர் பயிற்சியாளராக இருந்து உலகக் கோப்பையை வெல்வது மிகவும் சிறப்பான சம்பவம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)