பாறு கழுகுகள் அழிந்ததால் 5 லட்சம் மக்கள் இறந்தனரா? ஆய்வு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன.
அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின.
சில சமயங்களில் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களின் ஜெட் என்ஜின்களில் சிக்கிக் கொண்டு, விமானிகளுக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பவும் செய்யும்.
ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்னர், நோய்வாய்ப்பட்ட பசுக்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்தின் காரணமாக இந்தியாவில் பாறு கழுகுகள் இறக்கத் துவங்கின, அவற்றின் எண்ணிக்கை குறையத் துவங்கியது.
பாறு கழுகுகளுக்கு எமனான கால்நடை வலி நிவாரணி மருந்து
1990-களின் நடுப்பகுதியில், கால்நடைகளுக்க்கான வலி நிவாரணியான டிக்ளோஃபெனாக் (diclofenac) பயன்படுத்தப்பட்டது. கால்நடை சடலங்களை உண்ணும் கழுகளுக்கு இந்த மருந்து ஆபத்தான விளைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 5 கோடியிலிருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது.
இந்த மருந்து செலுத்தப்பட்டக் கால்நடைகளின் சடலங்களை உண்ணும் பறவைகள் சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தன.
2006-ஆம் ஆண்டு 'டிக்ளோஃபெனாக்’ கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டது. சில பகுதிகளில் பாறு கழுகுகள் இறப்பது குறைந்துள்ளது. ஆனால் குறைந்தபட்சம் மூன்று பாறு கழுகு இனங்களின் எண்ணிக்கை 91% முதல் 98% வரை இழப்பைச் சந்தித்துள்ளன என்று இந்தியாவின் சமீபத்திய மாநில பறவைகள் அறிக்கை (State of India's Birds) கூறுகிறது.

பட மூலாதாரம், AFP
இது மனிதர்களை எப்படி பாதிக்கிறது?
பாறு கழுகு இனத்தின் வீழ்ச்சி இதோடு முடியவில்லை. இந்த வலிமையான, அழுகுண்ணி பறவைகளின் தற்செயலான அழிவு, கொடிய பாக்டீரியாக்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் பெருக வழிவகுத்தது. ஐந்து ஆண்டுகளில் சுமார் அரை மில்லியன் (5 லட்சம்) பேரின் இறப்புக்கு இது காரணமானதாக அமெரிக்கப் பொருளாதாரச் சங்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.
"பாறு கழுகுகள் விலங்குகளின் சடலங்களையும் அழுகிய பொருட்களையும் உட்கொண்டு இயற்கையின் துப்புரவு செய்யும் பறவைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், அவை நமது சுற்றுச்சூழலில் இருந்து பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் கொண்ட இறந்த விலங்குகளை அகற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது நிகழவில்லை எனில் நோய் பரவக்கூடும்," என்று ஆய்வின் இணை ஆசிரியர், சிகாகோவின் 'ஹாரிஸ் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி’ பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் இயல் பிராங்க் கூறுகிறார்.
"மனித ஆரோக்கியத்தில் பாறு கழுகுகள் வகிக்கும் பங்கைப் புரிந்துகொண்டால் போதும். வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வீர்கள். விலங்கினங்கள் அனைத்தும் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன. அவை நம் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.
அதிகரிக்கும் மனித இறப்பு விகிதம்
ஃபிராங்க், மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான அனந்த் சுதர்ஷன் இந்திய மாவட்டங்களில் ஒரு காலத்தில் பாறு கழுகு செழித்து வளர்ந்த போது இருந்த மனித இறப்பு விகிதங்களை, வரலாற்று ரீதியாக கழுகு எண்ணிக்கை குறைந்த பின்பு இருக்கும் மனித இறப்பு விகிதங்களுடன் ஒப்பிட்டனர்.
கூடவே, ரேபிஸ் தடுப்பூசி விற்பனை, காட்டு நாய்களின் எண்ணிக்கை, மற்றும் நீர் விநியோகத்தில் இருக்கும் நோய்க்கிருமிகளின் அளவு ஆகியவற்றையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
பாறு கழுகு இனம் முன்னர் செழித்து வளர்ந்த மாவட்டங்களில், கால்நடைகளுக்குக் கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளால் கழுகின் எண்ணிகையில் சரிவு ஏற்பட்ட பிறகு அங்கு மனித இறப்பு விகிதம் 4%-க்கும் மேல் அதிகரித்துள்ளதை அவர்கள் கண்டறிந்தனர்.
பெரிய கால்நடை விலங்குகள் அதிகம் இருக்கும் நகர்ப்புறங்களில் அவற்றின் சடலக் கழிவுகளும் அதிகம் காணப்படுகின்றன. அதன் விளைவாக மனிதர்கள் மத்தியில் நோய் தொற்றுகள் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
தண்ணீரில் மல பாக்டீரியாக்கள்
2000 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பாறு கழுகுகளின் இறப்பு, ஆண்டுதோறும் 1 லட்சம் கூடுதல் மனித இறப்புகளை ஏற்படுத்தியது என்று ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதன் விளைவாக வருடத்திற்கு இறப்பு சேதங்கள் அல்லது அகால மரணங்கள் தொடர்புடைய பொருளாதார செலவுகள் 5.8 லட்சம் கோடி ரூபாய் (69 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழலில் அகற்றப்படாத அழுகிய கழிவுகளால் ஏற்பட்ட நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் பரவல் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்தன.
உதாரணமாக, பாறு கழுகுகள் இல்லாமல், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, மனிதர்களுக்கு ரேபிஸைப் பரப்புகிறது. ரேபிஸ் தடுப்பூசி விற்பனை அதிகரித்த போதிலும், அது போதுமானதாக இல்லை.
பாறு கழுகுகளைப் போலல்லாமல், அழுகிய எச்சங்களை சுத்தம் செய்வதில் நாய்கள் பயனற்றவையாக இருக்கின்றன. இது பாக்டீரியா மற்றும் நோய்க்கிருமிகள் குடிநீரில் பரவுவதற்கு வழிவகுத்தது. அதே சமயம், இவற்றை அகற்றப் போதுமான செயல்முறைகள் ஏதும் இல்லை. தண்ணீரில் மல பாக்டீரியாக்கள் (Faecal bacteria) இரட்டிப்பாகி வருகின்றன.
"இந்தியாவில் பாறு கழுகு இனத்தின் சரிவு, மனிதர்களுக்குக் கடினமான, கணிக்க முடியாத இழப்பை கொண்டு வந்துள்ளது,” என்கிறார் வார்விக் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான சுதர்சன்.
"பாறு கழுகு இனத்தின் அழிவுக்கு, புதிய ரசாயனங்கள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட போதிலும், பிற மனித நடவடிக்கைகளும் முக்கியக் காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன. வாழ்விட இழப்பு, வனவிலங்கு வர்த்தகம், மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய காரணங்கள் விலங்குகள் மீதும், அதையொட்டி, நம் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன,” என்கிறார் அவர்.
அதிவேகமாக அழிந்த பறவையினம்
மேலும் பேசிய சுதர்சன், "குறிப்பாக இந்த அதி முக்கிய இனங்களைப் (keystone species) பாதுகாப்பதற்கான செலவுகள் மற்றும் இலக்கு ஆதாரங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொள்வது முக்கியம்," என்று விவரித்தார்.
இந்தியாவில் உள்ள பாறு கழுகு இனங்களில், வெள்ளைக் கழுகு, இந்தியக் கழுகு மற்றும் சிவப்பு தலை கழுகு ஆகியவை 2000-களின் முற்பகுதியில் இருந்து மிகவும் குறிப்பிடத்தக்க நீண்ட கால வீழ்ச்சியை சந்தித்துள்ளன, இவற்றின் எண்ணிக்கை முறையே 98%, 95%, மற்றும் 91% குறைந்துள்ளது.
எகிப்திய கழுகு மற்றும் புலம்பெயர்ந்த கிரிஃபோன் கழுகு ஆகியவற்றின் எண்ணிக்கைகளும் கணிசமாகக் குறைந்துள்ளன, ஆனால் பேரழிவு என்று சொல்லும் அளவுக்கு எண்ணிக்கை குறையவில்லை.
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டின் கால்நடை கணக்கெடுப்பில் 50 கோடிக்கும் அதிகமான விலங்குகள் இருப்பதாகப் பதிவாகியுள்ளன, இது உலகிலேயே அதிகம்.
பாறு கழுகுகள், மிகவும் திறமையான அழுகுண்ணிகள். கால்நடைகளின் சடலங்களை விரைவாக அகற்றுவதற்கு விவசாயிகள் வரலாற்று ரீதியாக நம்பியிருந்தது இந்தப் பறவை இனத்தை தான்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்தியாவில் பாறு கழுகு இனத்தின் வீழ்ச்சி, ஒரு பறவை இனத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத மிக வேகமான அழிவாகப் பதிவாகி உள்ளது. அமெரிக்காவில் பாசஞ்சர் புறா இனத்தின் அதிவேக வீழ்ச்சிக்குப் பிறகு மிகப்பெரிய அழிவைச் சந்தித்தது பாறு கழுகு இனம் தான்.
இந்தியப் பறவைகள் மாநில அறிக்கையின்படி, இந்தியாவின் மீதமுள்ள பாறு கழுகுகள் இப்போது பாதுகாக்கப்பட்டச் பகுதிகளைச் சுற்றி காணப்படுகின்றன. இங்கு மிகவும் அழுகிய நிலையில் இருக்கும் கால்நடைகளை விட இறந்த வனவிலங்குகளை அதிகம் சாப்பிடுகின்றன.
கால்நடைகளுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள் பாறு கழுகுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கால்நடைகள் புதைக்கப்படும் முறை அதிகரிப்பதாலும், காட்டு நாய்களின் போட்டி காரணமாகவும் எஞ்சி இருக்கும் கழுகுகள் உண்பதற்குச் சடலங்கள் கிடைப்பது குறைந்து வருவது பிரச்னையை அதிகப்படுத்துகிறது.

பட மூலாதாரம், Getty Images
தற்போதைய நிலைமை என்ன?
குவாரி மற்றும் சுரங்கம் சார்ந்த செயல்பாடுகள் சில கழுகு இனங்கள் கூடு கட்டும் வாழ்விடங்களைச் சீர்குலைக்கின்றன.
இந்தப் பிரச்னைகளில் இருந்து பாறு கழுகுகள் மீண்டு வருமா? சில நம்பிக்கைக்குரிய அறிகுறிகள் இருந்தாலும் உறுதியாகப் சொல்வது கடினம்.
கடந்த ஆண்டு மேற்கு வங்க புலிகள் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட இருபது பாறு கழுகுகள் பிடிக்கப்பட்டு, செயற்கைக்கோள் டேக்குகள் (satellite tags) பொருத்தப்பட்டு, அவற்றின் இயற்கையான வாழ்விடத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டன. தென்னிந்தியாவில் நடத்தப்பட்ட மிக சமீபத்திய ஆய்வில், கிட்டத்தட்ட 300 கழுகுகள் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது. இருப்பினும், இன்னும் கூடுதல் நடவடிக்கை தேவை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












