பூரி ஜெகந்நாதர் கோவில் தங்கம், வைர பொக்கிஷ அறை திறப்பு - நகைகளை மதிப்பிடும் பணி எத்தனை நாள் நீடிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சந்தீப் சாஹு
- பதவி, பிபிசி ஹிந்திக்காக புவனேஸ்வரில் இருந்து
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள `ஸ்ரீ ஜெகந்நாதர்’ கோவிலில் உள்ள பொக்கிஷ அறையில் (Ratna Bhandar) வைக்கப்பட்டுள்ள ரத்தினங்கள் மற்றும் நகைகளை மதிப்பிடும் பணி 46 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 14-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பணி கடைசியாக 1978 ஆம் ஆண்டு செய்யப்பட்டது.
1978-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்த பொக்கிஷ அறை டிசம்பர் 1982 மற்றும் ஜூலை 1985-இல் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபரணங்களை எண்ணுவதற்காக அல்ல. ஸ்ரீ ஜகந்நாதருக்கு தேவையான சில நகைகளை எடுக்கவும், பழுது பார்ப்பதற்காகவும் அது திறக்கப்பட்டது.
திங்கள்கிழமை (ஜூலை 14), திட்டமிட்ட சுப நேரப்படி, மதியம் சரியாக 1:28 மணிக்கு, 11 பேர் கொண்ட குழுவினர், தேவையான அனைத்து உபகரணங்களுடன் பொக்கிஷ அறைக்குள் சென்றனர்.
பொக்கிஷ அறைக்குள் சென்ற குழுவை ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விஸ்வநாத் ராத் தலைமைத் தாங்கினார். மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சேவதர்களின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
திட்டமிடப்பட்ட சில பணிகள் முடிந்து, மாலை 5 மணியளவில் குழுவினர் கிளம்பிய பிறகு, ஸ்ரீ ஜெகந்நாதர் கோவிலின் தலைமை நிர்வாகி டாக்டர் அரவிந்த் பதி செய்தியாளர்களை சந்தித்தார்: ``இன்று பொக்கிஷ அறையின் வெளி அறையில் ( Outer Ratna Bhandar) வைக்கப்பட்டிருந்த நகைகள் மட்டும் கோவிலுக்குள் உள்ள தற்காலிக வன்காப்பறைக்கு (Strong room) மாற்றப்பட்டன. வன்காப்பறை என்பது அதிபாதுகாப்பு கொண்ட அறை ஆகும். பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு அதன் சாவி மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கோவில் தலைமை நிர்வாகி கூறுவது என்ன?

பட மூலாதாரம், BISWARANJAN MISHRA
புகழ் பெற்ற ஜெகந்நாதர் கோவிலில் உள்ள கடவுள்களுக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளாக பல மன்னர்கள் நகைகளையும் விலை உயர்ந்த கற்களையும் தானமாகக் கொடுத்துள்ளனர். பக்தர்களும் பல்வேறு நகைகளை தானமாக வழங்கியுள்ளனர். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்தும் கோவிலுக்குள்ளேயே அமைந்துள்ள `ரத்ன பண்டார்’ என்ற பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்படுகின்றன.
பொக்கிஷ அறையான ரத்ன பண்டார், பிடார் பண்டார் (உள் அறை), பஹார பண்டார் (வெளி அறை) என இரண்டு அறைகளைக் கொண்டது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் ஒரு பகுதியாக, மாவட்ட நிர்வாக கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த சாவியைக் கொண்டு பொக்கிஷ அறையின் உள் அறையில் உள்ள மூன்று பூட்டுகளை திறக்க முயன்றதாகவும், ஆனால் அவற்றை திறக்க முடியவில்லை என்றும் டாக்டர் அரவிந்த் பதி கூறினார்.
இதையடுத்து மாநில அரசு விதிகளின்படி, கோவில் நிர்வாகம் பூட்டை உடைத்தது.
பொக்கிஷ அறையின் உள்ளே பல பெட்டிகள் மற்றும் அலமாரிகள் இருந்ததை கோவில் நிர்வாகம் கண்டுபிடித்தது. ஆனால் பூட்டை திறக்கவே நேரம் எடுத்ததால், தாமதமாகிவிட்டது. எனவே ஞாயிற்றுக்கிழமையே அனைத்து நகைகளையும் எடுத்து மாற்ற முடியாது என்பதால் பெட்டிகளை திறக்கவில்லை.
இதுகுறித்து டாக்டர் பதி விளக்கமளிக்கையில், "திங்கட்கிழமை மகாபிரபுவின் "பஹுதா யாத்திரை" நடக்கவுள்ளது. இந்த நிகழ்வில் மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகங்கள் முக்கிய பங்கு வகிப்பதால் ஏராளமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது. எனவே, மாநில அரசுடன் கலந்துரையாடிய பிறகு, பொக்கிஷ அறையை இந்த நிகழ்வுக்கு பிறகு திறக்க திட்டமிட்டுள்ளோம். அந்த அறையைத் திறந்து, அதிலிருந்து அனைத்து நகைகளையும் தற்காலிக வன்காப்பறைக்கு கொண்டு வருவோம்.” என்றார்.
மிகவும் விலை உயர்ந்த நகைகள் பொக்கிஷ அறையின் உள் அறையில் வைக்கப்படுகின்றன. ரத யாத்திரை மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் நகைகள் மட்டுமே பொக்கிஷ அறையின் வெளி அறையில் வைக்கப்படுவது வழக்கம்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் ஒரு பகுதியாக பொக்கிஷ அறையின் உள் அறையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் தற்காலிக அறைக்கு மாற்றப்பட்ட பிறகு பழுது பார்க்கப்படும்.
பொக்கிஷ அறையின் கட்டமைப்பின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை டாக்டர் பதி தெளிவுபடுத்தினார். இந்திய தொல்லியல் துறையினர், பொக்கிஷ அறையின் உள் அறையை சரி செய்த பிறகே, தற்காலிக அறையில் வைக்கப்பட்டுள்ள நகைகள், மீண்டும் உள்ளே கொண்டு வரப்பட்டு, அதன்பின் கணக்கிடப்படும், என்று விவரித்தார்.
நகைகளை எண்ணும் பணி எவ்வளவு காலம் தொடரும் என்று அவரிடம் கேட்ட போது, அதற்கான தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றார்.
46 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது?
அந்த காலகட்டத்தில் பொக்கிஷ அறையின் நகைகள் கணக்கிட்டு மதிப்பிடும் பணி, மே 13, 1978 முதல் ஜூலை 23, 1978 வரை அதாவது 70 நாட்களுக்கு நடந்தது.
ஆனால், திருப்பதி கோவில் உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட நகை வல்லுநர்களால் கூட பொக்கிஷ அறையில் வைக்கப்பட்டிருந்த பல நகைகளை சரியாக மதிப்பிட முடியாததால் அந்த பணியை அந்த சமயத்தில் முழுமையாக முடிக்க முடியவில்லை.
அதே சமயம் அவர்களால் கணக்கிட்டு மதிப்பிடப்பட்ட நகைகளின் தரம் மற்றும் மதிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.
பொக்கிஷ அறையில் மொத்தம் 747 வகையான நகைகள் வகைப்படுத்தப்பட்டன. அதில் 12,838 தோலா (தோலா என்பது தங்கம் மற்றும் வெள்ளியை அளவிடும் அலகு) (12,838 தோலா = 1,49,740 கிராம்) தங்க ஆபரணங்கள் மற்றும் 22,153 தோலா (2,58,388 கிராம்) வெள்ளி ஆபரணங்கள், மேலும் வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற ஆபரணங்கள் இருந்தன.
இந்த ஆபரணங்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக ஜகந்நாதரின் பக்தர்களாக இருந்த மன்னர்கள் மற்றும் பேரரசர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டவை. மேலும் மற்ற மாநிலங்களுடனான போர்களில் வெற்றி பெற்ற பின்னர் ஒடிசாவின் அரச குடும்பங்களால் கையகப்படுத்தப்பட்டவை.
இந்த விலைமதிப்பற்ற ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக 15 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கோவிலின் மீது குறைந்தது 15 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடைசியாக 1731 ஆம் ஆண்டில் வங்காளத்தின் ஜெனரலாக இருந்த முகமது தாகி கான் ஒரு தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதல்களின் போது பல விலையுயர்ந்த ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனாலும் பொக்கிஷ அறையின் வலுவான மற்றும் சிக்கலான பாதுகாப்பு அமைப்பு காரணமாக, பெரும்பாலான வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் பாதுகாப்பாக இருந்தன.
பொக்கிஷ அறையில் வைரங்கள், முத்துகள், தங்கம் மற்றும் பல விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட எண்ணற்ற நகைகள் இருப்பதாக நம்பப்படுகிறது, அதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக இந்த முறை நகைகளை மதிப்பிடும் பணி அதிக நேரம் எடுக்காது. ஆனால் இந்த செயல்முறையை முடிக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை சொல்வது கடினம்.
பொக்கிஷ அறை நகைகளை மதிப்பிடும் பணிக்காக அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர் நீதிபதி விஸ்வநாத் ராத், அனைத்து நகைகளையும் கணக்கிட்டு மதிப்பீடு செய்து அவற்றின் தரநிலை முடிவு செய்யப்படும் என்றும், அதன்பின் டிஜிட்டல் முறையில் பட்டியல் உருவாக்கப்பட்டு 1978ஆம் ஆண்டு பதிவான நகைகளின் பட்டியலுடன் ஒப்பிடப்படும் என்றும் கூறியுள்ளார். எல்லா நகைகளும் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கப்படும் என்றார்.
46 ஆண்டுகளாக பொக்கிஷ அறையை திறக்க எந்த அரசும் முயற்சி எடுக்காதது ஏன்?

பட மூலாதாரம், BISWARANJAN MISHRA
`ஸ்ரீ மந்திர் சட்டம், (Sri Mandir Act) 1960’ மூலம், மாநில அரசு ஜெகந்நாதர் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டது, இது முன்பு பூரியின் கஜபதி மகாராஜாவின் பொறுப்பில் இருந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொக்கிஷ அறையைத் திறந்து அதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நகைகளை கணக்கெடுக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கடந்த 46 ஆண்டுகளாக பொக்கிஷ அறையை திறக்க எந்த அரசும் முயற்சி எடுக்கவில்லை. அது ஏன் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை.
பொக்கிஷ அறைத் தொடர்பான பல புராணக் கதைகளும் மூட நம்பிக்கைகளும் நிலவியது இதற்குக் காரணமாக இருக்கலாம்.
அறைக்குள் நகைகளை பாதுகாக்க விஷப்பாம்புகள் இருப்பதாக பக்தர்கள் பலர் கூறுகின்றனர்.
1978 ஆம் ஆண்டு கடைசியாக பொக்கிஷ அறையைத் திறந்து சில மாதங்களுக்குப் பிறகு அப்போதைய ஜனதா கட்சி அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது. பல தலைவர்கள் பொக்கிஷ அறைத் திறக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என்று இணைத்து பேசத் தொடங்கினர். இதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அனைவருமே, பொக்கிஷ அறையைத் திறக்க தயக்கம் காட்டியே வந்துள்ளனர்.
2018-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வி

பட மூலாதாரம், ANI
இருப்பினும், 2018 ஆம் ஆண்டில், பொக்கிஷ அறையைத் திறக்க அப்போதைய நவீன் பட்நாயக் அரசாங்கம் முயற்சி எடுத்தது. ஆனால் அந்த முயற்சியின் போது, அறையின் கட்டமைப்பை ஆய்வு செய்யப்பட்டதே தவிர, நகைகள் மதிப்பிடப்பட்டு பட்டியலிடப்படவில்லை.
2018 ஆம் ஆண்டில் பொக்கிஷ அறையின் நிலை மிகவும் ஆபத்தில் இருப்பதாக இந்திய தொல்லியல் துறை (ASI) எச்சரித்தது. பொக்கிஷ அறை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அது எச்சரித்தது.
ஒடிசா உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 2018 ஆம் ஆண்டில், பொக்கிஷ அறையின் கையிருப்புகளைக் கணக்கிட மாநில அரசு ஒரு குழுவை அமைத்தது. ஆனால் அந்த குழுவினர் பொக்கிஷ அறையின் உள்ளே சென்று, உள் அறையை திறக்க முயற்சித்த போது, பூட்டை திறக்க முடியாமல் திணறினர். எனவே டார்ச் லைட் உதவியுடன் வெளி அறையை மட்டும் பார்த்துவிட்டு, கமிட்டி திரும்பி வந்தது.
இந்த வழக்கு அன்றைய தினம் முதல் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. கடந்த மார்ச் மாதம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, பொக்கிஷ அறையை சரிசெய்து, அதில் வைக்கப்பட்டிருந்த நகைகளை மதிப்பிடும் குழுவை அப்போதைய நவீன் பட்நாயக் அரசு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில் அமைத்தது. ஆனால் தேர்தலுக்குப் பிறகு மோகன் மாஜி தலைமையில் மாநிலத்தில் அமைந்த அரசு பழைய கமிட்டியைக் கலைத்துவிட்டு நீதிபதி ராத் தலைமையில் புதிய குழுவை அமைத்தது.
அரசியல் பிரச்னை

பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பொக்கிஷ அறையின் தொலைந்து போன சாவி விவகாரம் முக்கிய பிரச்னையாக முன்வைக்கப்பட்டது.
பிரசாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி உட்பட அனைத்து பாஜக தலைவர்களும் கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் இந்த பிரச்னையில் நவீன் பட்நாயக் அரசாங்கத்தை விமர்சித்தனர்.
பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறைகளின் தொலைந்துபோன சாவி, தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியில் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்த, முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வி. கார்த்திகேயன் பாண்டியனை குறிப்பிடும் வகையிலேயே பிரதமர் இப்படி பேசியதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது.
"நவீன் பட்நாயக் ஆட்சியின் போது, பொக்கிஷ அறையில் இருந்து பல நகைகள் காணாமல் போயுள்ளன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் திருப்திகரமான எந்தப் பதிலையும் தர முடியாமல் நவீன் பட்நாயக் அரசு திணறிக் கொண்டிருக்கிறது.’’ என்று மோதி கூறினார்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின்படி பாஜக அரசு தற்போது பொக்கிஷ அறையை திறந்து வைத்தது. ஆனால், 1978-ம் ஆண்டு மதிப்பிடப்பட்ட நகைகள் அனைத்தும் அப்படியே பாதுகாப்பாக உள்ளதா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












