ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் பத்தே நாளில் என்கவுன்ட்டர் - கேள்விகளும் சந்தேகங்களும்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம், police

படக்குறிப்பு, திருவேங்கடம்
    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களில் ஒருவரான திருவேங்கடம், காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். கொலையில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவரை அழைத்துச் சென்ற போது, தப்ப முயன்ற அவர் தாக்கியதாகவும், தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையான பத்தே நாட்களில் அந்த வழக்கில் கைதான திருவேங்கடம் போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

அதிகாலையில் அழைத்துச் சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன, அவரை போலீசார் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனரா என்பது உள்ளிட்ட கேள்விகளை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. அதேசமயம், “குற்றமே செய்திருந்தாலும் மனித உயிரை பறிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இல்லை” என மனித உரிமை ஆர்வலர்கள் கண்டன குரல்களை எழுப்புகின்றனர். என்ன நடந்தது?

சுடப்பட்டது எப்படி?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB

படக்குறிப்பு, ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி தலைநகர் சென்னையில் பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இக்கொலைக்குக் கண்டனத்தை பதிவு செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆற்காடு சுரேஷ் என்பவர் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அக்கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு உள்ளது என ஆற்காடு சுரேஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தேகித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், சந்தோஷ், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து செம்பியம் போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து தனித்தனியே தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்ய, மணலியில் திருவேங்கடம் தங்கியிருந்த வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) அதிகாலையில் அவரை அழைத்துச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். அப்போது திருவேங்கடம் தான் மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் திருவேங்கடம் போலீசாரை சுட முயன்றதாகவும் தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். இதுகுறித்து, சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

காவல்துறை கூறுவது என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்

பட மூலாதாரம், Police

இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் வெளியான செய்தி குறிப்பில், “திருவேங்கடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற அவர் தங்கியிருந்த மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அவ்வாறு அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீஸ் வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடிவிட்டார். பாதுகாவலராக சென்ற காவலர்கள் உடனடியாக அவரை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க முடியவில்லை.”

புழல் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்த போது தான் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உடனடியாக காவல் ஆய்வாளர் திருவேங்கடத்தை தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில், காயமடைந்த அவர் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு, திருவேங்கடம் தப்பியோட முயற்சித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “சரணடைந்த திருவேங்கடத்தை வேகவேகமாக அதிகாலையில் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக அவரை அழைத்து சென்றபோது கைவிலங்கிட்டு அழைத்து சென்றிருக்க வேண்டும். இதில் ஏதோ சந்தேகம் இருப்பதாக தெரிகிறது" என தெரிவித்தார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் வலைதளத்தில், “கொலை செய்ததாகச் சரணடைந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தார் என்பது பெருத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலையில், திமுகவினர் மூன்று பேர் சம்பந்தப்பட்டிருப்பதனால், ஏதோ ஒரு உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பது போலத் தெரிகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது” என தெரிவித்துள்ளார்.

அதிருப்தியை மட்டுப்படுத்தும் முயற்சியா?

“இதுபோல் ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து செல்லும்போது போதிய காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் தான் அதனை பறிமுதல் செய்வார்கள். தற்காப்புக்காக முதலில் அவருடைய முட்டிக்குக் கீழ் சுடப்பட்டதா என்பதும் தெரியவில்லை” என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

சட்டம் - ஒழுங்கு குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தியை மட்டுப்படுத்த இந்த என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் கூறுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு, அதிகாலையில் திருவேங்கடம் அழைத்துச் செல்லப்பட்டது ஏன் என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அதிகாலையில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

திருவேங்கடத்தை ஆயுதங்களை பறிமுதல் செய்ய அதிகாலையில் அழைத்து சென்றதாக போலீசார் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது.

“குற்றம்சாட்டப்பட்டவர்களை போதிய வெளிச்சம் உள்ள நேரத்தில் அழைத்து செல்லவேண்டும். இதற்கான நேர வரையறை இல்லை என்றாலும் அதிகாலையில் செல்ல வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுகிறது” என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

போலீஸ் காவலில் உள்ளவர்களின் உயிருக்கும் உடமைக்கும் முழுமையான பொறுப்பு காவல்துறை தான் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

போலீஸ் காவலில் உள்ளவரை சுட்டது ஏன்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு, "சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும்?"

இந்த கொலை வழக்கில் தானாக சரணடைந்தவர் ஏன் தப்பியோட முயற்சிக்க வேண்டும் என்ற கேள்வி எழுவதாக, ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம் கூறுகிறார். போலீஸ் காவலில் உள்ளவரை சுடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என அவர் குறிப்பிடுகிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அருண் சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட போது, ‘ரவுடிகளுக்கு புரியும் மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். தமிழகத்தில் எஸ்ஐ-க்கள் முதல் டிஎஸ்பி-க்கள் வரையிலான காவல்துறையினர் கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும் என சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் கூறியிருந்தார். காவல்துறை உயரதிகாரிகளின் இத்தகைய பேச்சுகளை சுட்டிக்காட்டுகிறார் மனித உரிமை ஆர்வலர் ஆசீர்வாதம்.

போதிய தகவல்களை வழங்காதது ஏன்?

“என்கவுன்ட்டர்” நடந்ததிலிருந்து திருவேங்கடத்தின் குடும்பத்தினரை தொடர்புகொள்ள தான் முயற்சிப்பதாக ஆசீர்வாதம் கூறுகிறார். “இதுவரை அவர்களை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை, இப்போதுவரை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவில்லை” என்கிறார் அவர்.

திருவேங்கடத்திடம் ஆயுதம் வந்தது எப்படி, போலீசார் சரியாக பரிசோதிக்கவில்லையா என்பது போன்ற கேள்விகள் எழுவதாக, ஆசீர்வாதம் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகங்களை முன்வைக்கின்றனர்.

திருவேங்கடம் சுட்டதாக கூறப்படும் காவலர் யார், திருவேங்கடத்தை சுட்ட காவல் ஆய்வாளர் யார் என்பதில் வெளிப்படையான தகவல்கள் செய்திக்குறிப்பில் இல்லை என்றும் ஆசீர்வாதம் கூறுகிறார்.

இனி என்ன செய்ய வேண்டும்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் 'என்கவுன்ட்டர்' - எழும் கேள்விகளும் சந்தேகங்களும்
படக்குறிப்பு, "கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்"

இத்தகைய சம்பவங்களை தொடர்ந்து அரசு சில முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்பாக,

  • குடும்பத்தார் திருவேங்கடத்தின் உடலை அடையாளம் காண்பதற்கு அனுமதிக்க வேண்டும்.
  • இரு மருத்துவர்களின் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  • உடலை புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதுகுறித்த புகைப்படம், வீடியோக்களை குடும்பத்திடம் வழங்க வேண்டும்.

“நடுநிலையான குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ்.

“முழு விஷயமும் தெரியாத வரையில் இது கொலையா அல்லது தற்காப்புக்காக செய்யப்பட்டதா என்பதை சொல்ல முடியாது. குற்றம் செய்திருந்தால் கைது செய்வதற்கும் அவர்களுக்கு கூடுதல் தண்டனைகள் பெற்று தருவதற்கும் சட்டத்தில் வாய்ப்புண்டு. ஆனால், இப்படி என்கவுன்ட்டர் செய்வது கண்டிக்கத்தக்கது” என்கிறார் அவர்.

இந்த வழக்கை சந்தேக மரணம் என்று பதிவு செய்யாமல், பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது போன்று கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் வெற்றிசெல்வன்.

காவல்துறை மீது எழும் கேள்விகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி, “காவலர்கள் குற்றம்சாட்டப்பட்ட நபர்களை அழைத்து செல்லும்போது, இயற்கை உபாதையை கழிக்க செல்கிறோம் என்று கூறினால், கைவிலங்கை அகற்ற வேண்டிய நிலைதான் ஏற்படும். என்கவுன்ட்டர் தவறு என இப்போது சொல்ல முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையில் இதற்கான காரணத்தை சொல்லும்போதுதான் அதை ஏற்பதா, இல்லையா என்பது தெரியவரும்” என்கிறார்.

தற்காப்புக்காக முதலில் முட்டிக்குக் கீழ் சுடுவதற்கான வாய்ப்பு இருக்காது, தப்பி செல்வதற்காக ஒருவர் ஓடும்போது, குறி தப்புவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)