சிறுமி மாயமான வழக்கில் ஆறாம் வகுப்பு மாணவர் உள்பட 3 சிறுவர்கள் மீது சந்தேகம் - பாலியல் வன்புணர்வு செய்து கொலையா?

ஆந்திரா சிறுமி என்ன ஆனாள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி நங்கா
    • பதவி, பிபிசிக்காக

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் உள்ள முச்சுமரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் காணாமல் போன சிறுமி பற்றி எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

அதே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள், அந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொன்றதாகவும், அதன் பிறகு முச்சுமரி கால்வாயில் சிறுமியின் உடலை வீசியதாகவும் ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகின.

சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்களும் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின்படி சிறுமியின் சடலத்தை தேடும் நடவடிக்கைகள் முச்சுமரி லிப்ட் பாசன கால்வாயில் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பிறகு, சிறுமியின் உடலை கால்வாயில் வீசவில்லை என்று சிறுவர்கள் கூறியதால் ஆற்றில் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பின் டிஐஜி விஜயராவ் மீண்டும் விசாரணையை வேறு கோணத்தில் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, பாழடைந்த கிணற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

"அந்த மூன்று சிறார்களும் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். எனவே இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். கிராம மக்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை" என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசிய டிஐஜி விஜய ராவ் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்படும் சிறுவர்களில் ஒருவர் ஆறாம் வகுப்பும், இரண்டு பேர் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். அவர்கள் தொடர்பான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். "தவறு நடந்திருப்பது உறுதியானால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று நந்தியாலா மாவட்ட ஆட்சியர் ராஜகுமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்ன நடந்தது?

உண்மையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் செய்தித்தாள்களில் "8 வயது சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் வன்புணர்வு செய்து கொன்றனர்" என்று செய்திகள் வெளிவந்தன.

"கிராமத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​சிறுமியை மூன்று சிறுவர்கள் தூக்கிச் சென்றனர்" என்று அந்தக் கட்டுரைகளில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பைரெட்டி ராஜசேகர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``அந்த சிறுமியை மூன்று சிறுவர்கள் அழைத்துச் சென்று வன்புணர்வு செய்து முச்சுமரி மேம்பால கால்வாயில் வீசியுள்ளனர்.” என்றார்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய காவல்துறையை பிபிசி தொடர்பு கொண்டது.

"சம்பந்தப்பட்ட மூன்று சிறுவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்த காவல்துறையினர், கூடுதல் விவரங்களைத் தர மறுத்துவிட்டனர்.

என்ன நடந்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை என்று நந்தியாலா மாவட்ட ஆட்சியர் கூறினார். சிறுமி இருக்கும் இடம் தெரிந்தால்தான் விசாரணையில் ஒரு முடிவுக்கு வரமுடியும் என காவல்துறை தெரிவித்தனர்.

இந்த வழக்கில் உண்மையில் என்ன நடந்தது? அந்த சிறுமிக்கு என்ன ஆனது? அதில் மூன்று சிறுவர்களின் பங்கு என்ன? காவல்துறை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிடும் வரை இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காது.

நந்தியாலா: காணாமல் போன சிறுமிக்கு நிகழ்ந்தது என்ன? : மைனர் சிறுவர்களுக்கு வன்புணர்வு எண்ணம் வருவதன் பின்னணி

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, நந்தியாலாவில் உள்ள முச்சுமரி கால்வாய் பாசனத்தில் சிறுமியை தேடும் பணி நடந்தது

எங்கள் மகளுக்கு என்னதான் ஆனது?

காணாமல் போன சிறுமியின் பெற்றோரிடம் பிபிசி பேசியது.

“காணாமல் போன எங்கள் குழந்தையை பற்றி இப்போது வரை எந்த தகவலும் வரவில்லை. எங்களுக்கு எங்கள் குழந்தை வேண்டும். அவள் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். அப்படியானால் எங்கள் குழந்தையின் சடலத்தையாவது எங்களிடம் கொடுங்கள், நாங்கள் உரிய மரியாதையுடன் தகனம் செய்வோம்” என்று அவர்கள் கூறினர்.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) மாலை விளையாடச் சென்ற சிறுமி காணாமல் போனது தங்களுக்குத் தெரிய வந்ததாக குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

காலை உணவு சாப்பிட்டுவிட்டு விளையாடச் சென்ற மகள் மீண்டும் வரவே இல்லை என குழந்தையின் தாய் கூறுகிறார்.

"என் மகளை பூங்காவில் வைத்து கொன்றதாகச் சொல்கிறார்கள். ஆனால் எங்களுக்கு என்ன நடந்தது என்றே இன்னும் தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

சிறுமியைப் பற்றி எந்த தகவலும் தெரியாததால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பலர் நந்திகோட்கூரில் உள்ள காவல்நிலையத்தில் கடந்த 11ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்தினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு நந்தியாலா எம்பி பைரெட்டி சபரி சென்றார். முச்சுமரி பகுதி பைரெட்டி சபரியின் சொந்த ஊர் என்பதால், இந்த வழக்குக்கு அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முச்சுமரிக்கு சென்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் பைரெட்டி சித்தார்த்த ரெட்டியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

நந்தியாலா: காணாமல் போன சிறுமிக்கு நிகழ்ந்தது என்ன? : மைனர் சிறுவர்களுக்கு வன்புணர்வு எண்ணம் வருவதன் பின்னணி

பட மூலாதாரம், UGC

சிறுவர்களுக்கு பாலியல் வன்புணர்வு எண்ணம் வருமா?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மூன்று சிறுவர்கள் குற்றம் செய்தார்களா இல்லையா? என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் கடந்த காலங்களில் பல சிறார்கள் பாலியல் வன்புணர்வு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து உளவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரவந்தி ஐதராஜு கூறுகையில், ’’சிறார்களுக்கு இதுபோன்ற எண்ணங்கள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன’’ என்றார்.

"வீட்டிலும் சமூகத்திலும் உள்ள பல்வேறு காரணிகள் சிறார்களை பாதிக்கின்றன. வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ நிகழும் பாலியல் சார்ந்த துஷ்பிரயோக நடத்தைகளிலிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன் நெருக்கமாக இருக்கிறார்கள். சிறிய அறைகளில் வாழும் குடும்பங்களில், பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்களை குழந்தைகள் பார்க்கக் கூடும். அது அவர்களைப் பாதிக்கும்’’ என்கிறார் டாக்டர் ஸ்ரவந்தி.

சில குழந்தைகளின் மனநலப் பிரச்னைகளும் குற்றச் செயல்களில் ஈடுபட வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

"பை போலார் டிசார்டர் (Bipolar disorder) மற்றும் நடத்தைக் கோளாறு போன்ற பிரச்னைகள் சில குழந்தைகளின் குற்றச் செயல்களை அதிகரிக்கின்றன. இது வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அப்படிப்பட்ட குழந்தைகள் தாங்கள் பார்ப்பதை மற்றவர்களிடம் செயல்படுத்த முயற்சி செய்கிறார்கள். பாலுறவுக்கு சிறார்களின் உடல் அமைப்பு முழுமையாகத் தயாராகாவிட்டாலும், ஒருவித இன்பத்திற்காக அதைச் செய்ய வாய்ப்பு உள்ளது” என்று டாக்டர் ஸ்ரவந்தி விளக்கினார்.

"நம் சமூகத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலியல் விஷயங்களைப் பற்றி விவாதிக்க விரும்புவதில்லை. எனவே அவர்களுக்கு விளக்கிச் சொல்ல யாரும் இல்லை. அவர்களுக்கு வரும் சந்தேகங்களை வெளியில் சொல்ல முடியாது. அத்தகைய குழந்தைகள் அனைவரும் ஒன்றாக போன்களில் ஆபாச படங்களைப் பார்க்கிறார்கள்.”

"திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும், வயதுக்கு வந்தோருக்கான காட்சிகளை (Adult content) பார்க்க நேரிடுவதும் குழந்தைகளை பாதிக்கிறது," என்று அவர் கூறினார்.

சிறுவர்களிடம் ஏற்படும் இத்தகைய அறிகுறிகளை கண்டறிவது எப்படி?

நந்தியாலா: காணாமல் போன சிறுமிக்கு நிகழ்ந்தது என்ன? : மைனர் சிறுவர்களுக்கு வன்புணர்வு எண்ணம் வருவதன் பின்னணி
படக்குறிப்பு, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளிடம் சில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும் என்கிறார் டாக்டர் ஸ்ரவந்தி.

13 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு புதிய உணர்வுகள் வந்துவிடும் என்றும், உடலில் ஏற்படும் மாற்றங்களை முற்றிலும் அறியாத வயதில் அவர்கள் இருப்பதால், பெற்றோர்கள் இதனை கவனமாக கையாள வேண்டும் என்றும் டாக்டர் ஸ்ரவந்தி கூறினார்.

’’விடலைப் பருவம் (Adolescence) என்பது பாலியல் முதிர்ச்சிக்கு முந்தைய வயது. 14-18 வயதுக்கு இடைப்பட்ட வயதைக் குறிக்கிறது. உடல் உறுப்புகளில் ஏற்படும் புதிய மாற்றங்களும், அவற்றில் சுரக்கும் புதிய ஹார்மோன்களும் குழந்தைகளிடம் ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.’’

’’எல்லோரிடமிருந்தும் வித்தியாசமான ஒரு புதிய உலகில் நுழைவது போன்ற உணர்வை கொடுக்கும். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி அந்த மாற்றங்களை புரிந்து கொள்ள உதவ வேண்டும்," என்று அவர் விளக்கினார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் குழந்தைகளிடம் சில அறிகுறிகளை ஆரம்பத்திலேயே காண முடியும் என்று டாக்டர் ஸ்ரவந்தி கூறினார்.

"வீட்டில் அவர்கள் பொம்மைகள் மற்றும் செல்லப்பிராணிகளுடன் உடலுறவு கொள்ள முயற்சிப்பார்கள். குழந்தைகள் தனியாக மொபைலை பார்க்க விரும்புகிறார்கள் என்றால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் யாருடன் நட்பு பாராட்டுகிறார்கள்? அவர்களின் நண்பர்கள் யார்? எந்த வகையான இடங்களுக்குச் செல்கிறார்கள்? போதை பழக்கம் இருக்கிறதா? இவற்றை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும், ”என்று மருத்துவர் பரிந்துரைத்தார்.

அத்தகைய அறிகுறிகள் தோன்றினால் என்ன செய்வது?

‘‘சிறுவர்களிடம் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும். நடத்தை சார்ந்த சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கலாம். நிலைமை மோசமாக இருந்தால், சிறார் இல்லங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குற்றங்கள் நிகழும் முன் குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளிகளிலும் போதிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்" என்று டாக்டர் ஸ்ரவந்தி விளக்கினார்.

நந்தியாலா: காணாமல் போன சிறுமிக்கு நிகழ்ந்தது என்ன? : மைனர் சிறுவர்களுக்கு வன்புணர்வு எண்ணம் வருவதன் பின்னணி
படக்குறிப்பு, குறியீட்டு படம்

சட்டம் சொல்வது என்ன?

வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து சிறார்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் சரஸ்வதி பிபிசியிடம் தெரிவித்தார்.

’’போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். சிறுவர்கள் சிறார் இல்லத்தில் தங்க வைக்கப்படுவார்கள். இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும். பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், வழக்கின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்படும். ஆனால், தண்டனை விதிக்கப்பட்டாலும், மேஜர் ஆகும் வரை அந்த இல்லத்திலேயே இருப்பார்கள்'' என்றார் சரஸ்வதி.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)