விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கள்ளச்சாராய மரணங்கள் முதல் படுகொலைகள் வரை - பலன் தராத எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன்பாக கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் போன்றவை பிரசாரக் களத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான விவாதத்தை உருவாக்கின. ஆனால், தேர்தல் முடிவு ஆளும்கட்சிக்கு ஆதரவாக அமைந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் எடுபடாதது ஏன்? என்ன நடந்தது?
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இந்தத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் அந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அ.தி.மு.க. அறிவித்ததும், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கு இடையேதான் போட்டி என்பது உறுதியானது. பிரதான எதிர்க்கட்சி களத்தில் இல்லை என்பதால், தேர்தல் களத்தில் ஆளும் கட்சிக்குச் சாதகமான சூழல் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது.
ஆனால், வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த பிஎஸ்பி மாநிலத் தலைவரின் கொலை ஆகியவை மாநிலம் தழுவிய அளவில் ஆளும்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை ஏற்படுத்தின.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் 10ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி துவங்கியது. இந்த நிலையில், ஜூன் 18ஆம் தேதி விக்கிரவாண்டிக்கு அருகில் உள்ள மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பட மூலாதாரம், BSP - TAMIL NADU UNIT/FB
இந்த மரணங்கள் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் கள்ளக்குறிச்சிக்குச் சென்றது போன்றவையெல்லாம் சேர்ந்து ஆளும்கட்சிக்கு எதிரான உணர்வை உருவாக்கியது.
ஆகவே, விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் இந்த விவகாரம் வலுவாக எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் மேடைகளில் கள்ளச்சாராய மரணங்களை முன்வைத்துக் கடுமையாக விமர்சித்தார்கள்.
அடுத்ததாக, தேர்தலுக்கு ஐந்து நாட்களே இருந்த நிலையில் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் ஜூன் 5ஆம் தேதி மாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் ஆளும் கட்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் பட்டியலினத்தோர் நலனில் தி.மு.கவுக்கு அக்கறையில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.
இந்த இரண்டு விவகாரங்களும் மாநிலம் தழுவிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இடைத்தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
திமுக பிரசாரம் செய்தது எப்படி?

இதுதவிர, "10.5 சதவீத இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த ஏதுவாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாநில அளவில் நடத்தாமல் தி.மு.க. தவிர்க்கிறது, இதன் மூலம் வன்னியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டைத் தடுக்கிறது" என்ற பிரசாரத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்தது.
தி.மு.கவை பொறுத்தவரை இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லி பிரசாரத்தை முன்னெடுப்பதற்குப் பதிலாக, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை, இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்து பிரசாரம் செய்தது.
மறைந்த வேட்பாளரான புகழேந்தி தொகுதிக்குள் செய்திருந்த சில பணிகளையும் சுட்டிக்காட்டி திமுக பிரசாரத்தை முன்வைத்தது.
இதுபோக, கள்ளச்சாராய மரணங்கள் போன்ற விவகாரங்கள் எந்த இடைத் தேர்தலிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
'இடைத்தேர்தலில் எதிரொலிக்காது'

"கள்ளச்சாராய மரணங்களைப் போன்ற சம்பவங்கள் எந்த இடைத் தேர்தலிலும் எதிரொலிக்காது. அதில் ஒரு அதிசயமும் இல்லை. அதேபோல, ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட விவகாரத்தைப் பொறுத்தவரை, அது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்ல, எந்தவொரு இடைத்தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், வேறு சில விஷயங்கள் இந்த இடைத்தேர்தலில் எப்படிப் பங்களிக்கும் என்ற கேள்வி இருந்ததாகவும் குபேந்திரன் குறிப்பிடுகிறார்.
உதாரணமாக, "அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது. ஆகவே அ.தி.மு.கவுக்கு வழக்கமாக விழுந்த வாக்குகள் யாருக்குச் சென்று சேரும் என்ற கேள்வி இருந்தது. அதேபோல, வன்னியர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், அவர்கள் பெரும்பான்மையாக யாருக்கு வாக்களிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தக் கேள்விகளுக்குப் பதில் தி.மு.கவுக்கு சாதகமாக வந்திருக்கிறது," என்றார்.
ஆளுங்கட்சி வெற்றி பெறுவது ஏன்?

இந்தக் கருத்தையே எதிரொலிக்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
"கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் கொலை போன்றவை ஆட்சி குறித்த ஒரு பொதுவான பார்வையை ஏற்படுத்தும். பொதுத் தேர்தல்களில் ஒரு சிறிய தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால், இடைத் தேர்தல்களில் இதுபோன்ற விவகாரங்கள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது," என்கிறார் அவர்.
தமிழ்நாட்டில் நடக்கும் இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியினர் வாக்காளர்களை மிக நுணுக்கமாக அணுகுவதாகவும் இடைத்தேர்தலைச் சந்திக்கும் தொகுதியில் இருப்பவர்கள், தற்போதைய ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதே நமக்கு உகந்ததாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும் எனவும் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார்.
ஆகவே, "பெரும்பாலும் ஆளுங்கட்சியினரே இடைத்தேர்தல்களில் வெற்றி பெறுவார்கள். கள்ளச்சாராய மரணம் போன்ற விஷயங்கள் தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு ஒரு விஷயமாக அமையும், அவ்வளவுதான்" என்கிறார் அவர்.
'வழக்கமான இடைத்தேர்தல்'
இப்போது மட்டுமல்ல, எப்போதுமே கள்ளச்சாராய மரணங்கள் போன்றவை தேர்தல்களில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
அதுதவிர, "அந்த விவகாரத்தில் ஆளும் அரசு பல நடவடிக்கைளை எடுத்ததையும் மக்கள் பார்த்தார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலையைப் பொறுத்தவரை, இந்தத் தொகுதியில் துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.
ஆனால், இந்த இடைத்தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையுமா என்ற விவாதம் இருக்கும். அப்படியிருக்காது என்பதுதான் இதற்குப் பதில். காரணம் பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறன. மற்றபடி, இதுவொரு வழக்கமான இடைத்தேர்தல்" என்கிறார் ஷ்யாம்.
களத்தில் என்ன நடந்தது?

இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நடந்துகொண்டிருந்தபோது, அங்கு பெரும்பாலும் உள்ளூர் விவகாரங்களே ஆதிக்கம் செலுத்தியதை பிபிசியால் காண முடிந்தது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளும் விக்கிரவாண்டிக்குள் வராதது, உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பது, நியாய விலைக் கடைகள், பள்ளிக்கூட கட்டங்கள் போன்ற குறைகளையே அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இந்தப் பகுதியில் வன்னியர் சமூகத்தினர் அதிகம் என்பதால், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரத்தைத் தீவிரமாகப் பேசியது பா.ம.க.
அந்த விவகாரம் வாக்காளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான காரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார் கார்த்திகேயன்.
"இந்தத் தேர்தல் பிரசாரத்தில், பாட்டாளி மக்கள் கட்சி 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தைப் பெரிதாக முன்னெடுத்து, தி.மு.க. மீது குற்றம் சாட்டியது. ஆனால், இட ஒதுக்கீட்டை சித்தாந்த ரீதியில் எதிர்க்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, இந்த வாதத்தை முன்வைத்ததை யாரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்."
அதேபோல, இந்த விவகாரத்தில் வாதாட தமிழ்நாடு அரசு சிறப்பான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தது என்று 2021ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த பா.ம.கவின் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்படியிருக்கும்போது, அந்தக் குற்றச்சாட்டு வலுவிழந்துவிட்டதாகக் கூறுகிறார் கார்த்திகேயன்.
குபேந்திரனும் 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்தத் தேர்தல் அமையாது என்பதையே சுட்டிக்காட்டுகிறார். "2026 நெருங்கும்போது, அ.தி.மு.க. எப்படி கூட்டணியை உருவாக்குகிறது என்பது மிக முக்கியமானது. அதை வைத்துத்தான் அந்தத் தேர்தலைக் கணிக்க முடியும். இந்த இடைத்தேர்தலுக்கும் 2026 தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












