விராட் கோலியை பாகிஸ்தானில் விளையாடுமாறு அழைத்த ஷாஹித் அஃப்ரிடி - முழு பின்னணி

விராட் கோலி, ஷாஹித் அஃப்ரிடி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ஷாஹித் அஃப்ரிடி இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி பாகிஸ்தானில் விளையாட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலைப் புறந்தள்ளி இரு நாடுகளும் இணைந்து விளையாட வேண்டும், இது நல்ல உறவை உருவாக்கும் என்றும் நியூஸ் 24 ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

முக்கியமாக, 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால், இதுவரை பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இதுகுறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கு முந்தைய தருணங்களில் பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, பிசிசிஐ விளையாட மறுத்து, வெளிநாடுகளில் போட்டியை நடத்த ஐசிசியிடம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுப்பு தெரிவித்திருந்த பிசிசிஐ, அதிருப்தியை வெளிப்படுத்திய பிற வாரியங்கள்

கடந்த ஆண்டு(2023) ஆசிய கோப்பைத் தொடரை பாகிஸ்தான் நடத்தியபோது பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து, இந்திய கிரிக்கெட் வாரியம் அங்கு விளையாட மறுப்பு தெரிவித்திருந்தது.

அந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்து, இந்திய அணிக்கான போட்டிகளை நடத்தியிருந்தது. பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருப்பதால் பாரபட்சம் காட்டப்படுவதாக அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் நஜாம் சேத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையில் வங்கதேச அணியும் சிக்கக்கொண்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் ஜலால் யூனுஸ் கூறியிருந்தார். இதனால், தங்கள் வீரர்கள் பாகிஸ்தான், இலங்கை இடையே பயணிக்க வேண்டியிருந்ததாக அதிருப்தியுயும் தெரிவித்திருந்தார்.

'விராட் கோலி இந்தியாவை மறந்துவிடுவார்'

விராட் கோலி, ஷாஹித் அஃப்ரிடி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'பாகிஸ்தானில் விராட் கோலியை கொண்டாடும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்' என ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி திறந்த மனதுடன் இந்தியாவை பாகிஸ்தான் மண்ணில் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை விளையாட அழைத்துள்ளார்.

“விராட் கோலிக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து பெறும் அன்பு, விராட் கோலியை இந்திய ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பை மறக்கடிக்கச் செய்துவிடும் அளவுக்கு இருக்கும்.

அவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் கோலிக்கு இங்கே இருக்கிறது. விராட் எனக்கும் மிகப் பிடித்தமான வீரர், அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கக் கூடாது,” என்று நியூஸ் 24 ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்வுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது தங்களுக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் இனிமையான உபசரிப்பு பற்றிப் பேசிய ஷாஹித் அஃப்ரிடி, "அரசியலைப் புறந்தள்ளிவிட்டு இரு நாடுகளும் ஒன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். இதுவோர் இனிமையான பந்தத்தை உருவாக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தலைமுறையின் சிறந்த வீரர்கள்

விராட் கோலி, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

மேலும் இந்தத் தலைமுறையின் சிறந்த வீரர்கள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஷாஹித் அஃப்ரிடி, பேட்டிங்கில் நிச்சயம் விராட் கோலியைத்தான் குறிப்பிட்டாக வேண்டும். அவர் சிறந்த வீரர். அதேபோல தொடர்ச்சியாகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாபரும் பேட்டிங்கில் சிறந்து விளங்கி வருகிறார்."

சுழற்பந்துவீச்சில் ரஷீத் கான் மற்றும் குலதீப் யாதவை குறிப்பிட்ட அஃப்ரிடி, குலதீப் முன்பைவிட இப்போது மிகச் சிறப்பாகத் தன்னை மேம்படுத்தி இருப்பதாகவும் கூறியுள்ளார். அதேபோல வேகப்பந்துவீச்சில் பும்ரா, நசீம் ஷா மற்றும் ஷாஹீன் போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா - பாகிஸ்தான்: நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்னை

இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிரச்னைகளின் காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடரானது நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கிறது.

கடைசியாக 2012-13ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டி20 சர்வதேச போட்டிகள், மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகள் அடங்கிய இருதரப்பு கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் டி20 தொடரில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, தொடர் சமனில் முடிவடைந்தது.

ஆனால், ஒரு நாள் சர்வதேச தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், இரண்டாவது போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கடைசியாக இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டது எப்போது?

இருதரப்பு கிரிக்கெட் தொடர் ரீதியில் பார்த்தால், கடந்த 2005 - 06இல் நடைபெற்ற தொடரில்தான் இந்தியா கடைசியாக பாகிஸ்தான் சென்று விளையாடியது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.

டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றிருந்த போதிலும், ஒருநாள் சர்வதேச தொடரில் அட்டகாசமான திறனை வெளிப்படுத்தி இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

இந்தியா கடைசியாக மேற்கொண்ட பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் சிறந்து விளையாடிய வீரர்கள்

வீரேந்திர சேவாக், சோயப் அக்தர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது வீரேந்திர சேவாக் மற்றும் சோயப் அக்தர்.

டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:

  • யூனிஸ் கான் - 553 ரன்கள்
  • முகமது யூசப் - 461 ரன்கள்
  • ஷாஹித் அஃப்ரிடி - 330 ரன்கள்

டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள்:

  • ஜாகீர் கான் - 10
  • அப்துல் ரசாக் - 9
  • ஆர்.பி. சிங் - 9

ஒருநாள் சர்வதேச தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:

  • யுவராஜ் சிங் - 344 ரன்கள்
  • சோயப் மாலிக் - 314 ரன்கள்
  • சச்சின் டெண்டுல்கர் - 237 ரன்கள்

ஒருநாள் சர்வதேச தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள்:

  • இர்பான் பதான் - 9
  • ஆர்.பி சிங் - 8
  • அஜித் அகார்கர் - 6

2008 ஆசியக் கோப்பை

இருதரப்பு கிரிக்கெட் தொடர் என்றில்லாமல், கடைசியாக இந்திய அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய போட்டி என்ற ரீதியில் பார்த்தால், அது 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டி ஆகும்.

இந்தத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 போட்டிகளில் விளையாடியிருந்தது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதின.

கராச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை.

வெடிகுண்டு தாக்குதலால் நின்ற இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள்

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் எந்த விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாது எனத் தெரிவித்தது.

இதன் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிராக ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.

மேலும், 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணித்த வாகனம் மீது லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலால், சர்வதேச அணிகள் பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் விளைவாக ஏறத்தாழ 10 ஆண்டுக் காலம் எந்த கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. மேலும், 2011ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இணைந்து நடத்தவிருந்த வாய்ப்பையும் பாகிஸ்தான் இழந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)