ஜாம்பவான் பயிற்சியாளர்களின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் நிகழ்ந்த 7 முக்கிய தருணங்கள்

விராட் கோலி, கபில் தேவ், அணில் கும்ப்ளே

பட மூலாதாரம், Getty Images

இந்தியக் கிரிக்கெட் வாரியம் ஜூலை 9 ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் புதியப் பயிற்சியாளராக இருபது ஓவர் மற்றும் ஒருநாள் சர்வதேச உலகக்கோப்பை வென்ற முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீரை நியமனம் செய்துள்ளது.

வரும் ஜூலை 27ஆம் தேதி இலங்கையில் நடக்கவிருக்கும் ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கான தனது பயிற்சியாளர் பயணத்தை அதிகாரப்பூர்வமாக துவங்கவிருக்கிறார் கௌதம் கம்பீர்.

இதற்கு முன் பயிற்சியாளராக முன் அனுபவம் இல்லாத போதிலும், கௌதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் வாரியம் தலைமைப் பயிற்சியாளராக நியமித்திருப்பது வியப்பை அளிக்கிறது.

கௌதம் கம்பீரை போலவே இதற்கு முன் கபில் தேவ் முதல் ராகுல் டிராவிட் வரை ஒரு சில முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அணிக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளனர்.

இவர்களது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சந்தித்த தவிர்க்க முடியாத முக்கியத் தருணங்கள்

36 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விராட் கோலி தலைமையில் மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே இது மோசமான தோல்வியாக அமைந்தது.

ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராக பதவி வகித்த காலகட்டத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியே பெரும் துயரமாக அமைந்தது. முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் எட்டிய இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை அதன் முதல் இன்னிங்ஸில் 191 ரங்களுக்கு சுருட்டியது.

போட்டி இந்தியா வசம் உள்ளது என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ். வெறும் 36 ரன்களுக்கு சுருண்டு, வரலாற்றில் மிக மோசமான சாதனையைப் பதிவு செய்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்களில் ஒருவர்கூட இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை என்பது சோகம். அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்திருந்தார். புஜாரா, ரஹானே மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் ஏதும் சேர்க்காமல் டக் அவுட் ஆயினர்.

சிறப்பாகப் பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த இன்னிங்ஸில் ஒரு ரன்கூட உதிரியாக அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கோட்டை ‘காபா’வை தகர்த்த இந்திய அணி

முகமது சிராஜ், ரிசப் பந்த்

பட மூலாதாரம், Getty Images

ரவி சாஸ்திரியின் தலைமைப் பயிற்சியின் கீழ் நடந்த மோசமான சாதனையை துடைத்தெறியும் வகையில், இந்தியக் கிரிக்கெட் அணி நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டமாக அமைந்தது காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி.

இந்தச் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மோசமான தோல்வியைப் பதிவு செய்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு பதிலடிக் கொடுக்கத் துவங்கியது இந்திய அணி.

இதன் விளைவாக மெல்போர்னில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி, சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை சமன் செய்து தொடரையும் சமன் செய்திருந்தது.

தொடரின் வெற்றியாளாரைத் தீர்மானிக்கும் போட்டி ஆஸ்திரேலிய அணியின் கோட்டை என்று அழைக்கப்படும் ‘தி காபா’ பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களும் சம பலத்தை வெளிப்படுத்தினாலும், டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டி இந்தியாவின் கைவசம் திரும்ப சுப்மன் கில் (91), புஜாரா (56), ரிஷப் பந்த் (89*) போன்றவர்களின் அசத்தலான பேட்டிங் உதவியது.

கூடுதலாக ரஹானே அதிரடி ஆட்டம் மூலம் விரைவாகச் சேர்த்த 24 (22) ரன்கள், மற்றும் கடைசிக் கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் 22 (29) ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றின.

இதன் மூலம் இந்த மைதானத்தில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி வரலாற்றுத் தோல்வியைத் தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 89* ரன்கள் குவித்த ரிஷப் பந்த் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதற்கு முன் 2018-19ஆம் ஆண்டு இதே தொடரை வென்று, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாக் கிரிக்கெட் அணியை வீழ்த்திய முதல் ஆசியக் கிரிக்கெட் அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தொடர்ந்து 2 முறை பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்று சாதனைப் படைத்தது இந்தியக் கிரிக்கெட் அணி.

அனைத்திலும் நம்பர் 1

ராகுல் திராவிட்

பட மூலாதாரம், Getty Images

ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராகப் பதவி வகித்தபோது, வரலாற்றில் இரண்டாவது முறையாக (தென் ஆப்பிரிக்கா அணிக்கு அடுத்ததாக) இந்திய கிரிக்கெட் அணி, கிரிக்கெட்டின் மூன்று வகையான போட்டிகளின் (டெஸ்ட், ஒருநாள் சர்வதேச, மற்றும் இருபது ஓவர் சர்வதேச) தரவரிசையிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தது.

பஞ்சாப் சங்க கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச போட்டியில் வென்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியனர் இந்தச் சாதனையைப் படைத்தனர்.

2024 டி20 சர்வதேச உலகக்கோப்பை சாம்பியன்

விராட் கோலி, ராகுல் திராவிட், ரோஹித் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு இருபது ஓவர் சர்வதேச உலகக்கோப்பை துவங்கிய முதல் பதிப்பில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்த இந்திய அணி, அதன் பிறகு தொடர்ந்து கோப்பை வெல்ல முடியாமல் தவித்து வந்தது.

தோனி தலைமையில் முதல் பதிப்பில் இருபது ஓவர் சர்வதேச உலகக்கோப்பையை வென்ற பிறகு, தொடர்ந்து 2009, 2010, 2012 ஆகிய ஆண்டுகளில் சூப்பர் 8 சுற்றுகளில் வெளியேறியது.

கடந்த 2014ஆம் ஆண்டு தோனி தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் இலங்கை அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் கனவைக் கோட்டைவிட்டது.

அடுத்ததாக 2016, 2022 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதி வரையிலும், 2021ஆம் ஆண்டு பதிப்பில் சூப்பர் 12 சுற்று வரையிலும் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியால் செல்ல முடிந்தது.

கடந்த 2011ஆம் ஆண்டுக்கு பின் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் தடுமாறி வந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பதிப்பில் 2019, 2021 என இருமுறை இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது.

கடந்த 2023ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாள் சர்வதேச உலகக்கோப்பையிலும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

தீராத உலகக்கோப்பை வெற்றித் தாகத்திற்கு ஒருவழியாக 2024இல் ராகுல் டிராவிட் பயிற்சியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அணில் கும்ப்ளே - விராட் கோலி சர்ச்சை

அணில் கும்ப்ளே, விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியளராகப் பொறுப்பேற்ற அணில் கும்ப்ளே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்திச் சென்றார்.

அந்தச் சமயத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பில் இருந்த விராட் கோலிக்கும், அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அணில் கும்ப்ளேவுக்கும் இடையே சர்ச்சை வெடிக்கத் தொடங்கியது.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சிறப்பான வெளிப்பாட்டைக் கொண்டு வந்த போதிலும், 2017ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு அணில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பதவி விலகினார்.

அனில் கும்ப்ளே பயிற்சியின் கீழ், இந்திய அணி 17 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் வெற்றிநடை போட்டு சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் நிர்வாகிகள் குழுத் தலைவரான வினோத் ராய் தனது ‘நாட் ஜஸ்ட் ஏ நைட் வாட்ச்மேன்: மை இன்னிங்ஸ் வித் பிசிசிஐ’ புத்தகத்தில், இந்நிகழ்வு குறித்துப் பதிவு செய்துள்ளார்.

அணில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பதவி விலக நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார் என்றும்; அணில் கும்ப்ளே இளம் வீரர்கள் மத்தியில் ஒழுக்க விதிகளை அமல்படுத்திய விதம் மிரட்டும் தொனியில் இருந்தது என விராட் கோலி கருதியதாகவும் தனது கருத்தை அவர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த சர்ச்சை பெரும் பேசுபொருளாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சோகத்தில் முடிந்த கபில் தேவின் பதவிக் காலம்

கபில் தேவ், முகமது அசாருதீன்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 1983ஆம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்தவர் கேப்டன் கபில் தேவ்.

இவரை 1999ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கபில் தேவ் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி சோபிக்கத் தவறியது. டெஸ்ட் போட்டிகளில் கபில் தேவ் பதவிக் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

கடந்த 1999 - 2000ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது அனைத்திற்கும் மேலான கரும்புள்ளியாக அமைந்தது. 2000ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேசத் தொடரில் விளையாடியது.

இதில், டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தன. இந்த ஒருநாள் தொடரில் 28 என்ற சராசரியில் 112 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாருதீன் சூதாட்ட சர்ச்சையில் சிக்கினார்.

மறைந்த மற்றும் முன்னாள் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹான்ஸி குரோனியே திடுக்கிடும் வகையில் தனக்கு புக்கீஸ்களை அறிமுகம் செய்து வைத்தவரே முகமது அசாருதீன்தான் எனக் குற்றம் சாட்டினார்.

விசாரணையின் முடிவில் தீர்ப்பு அசாருதீனுக்கு எதிராக வரவே, ஐசிசி மற்றும் பிசிசிஐ அவர் மீது வாழ்நாள் தடை விதித்தன.

தொடரும் வெற்றிநடை

ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின்,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய மண்ணில் தொடர்ந்து 17 டெஸ்ட் தொடர்களில் வெற்றி பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

கடந்த 2012-13ஆம் ஆண்டுக்கான பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் தொடங்கி, 2023-24 இங்கிலாந்து அணிக்கு எதிரான அந்தோணி டே மெலோக் கோப்பைத் தொடர் வரையிலும் இந்திய அணி அதன் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 17 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர்களாக சஞ்சய் பங்கர், ரவி சாஸ்திரி, அணில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் எனப் பலர் இருந்துள்ளனர்.

கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி புதிய சகாப்தம் படைக்குமா?

இவர்களைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஜாம்பவான் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவி வகிக்க உள்ளார்.

‘ஏன் சிரிப்பதில்லை?’ என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, மைதானத்தில் நான் வெற்றி பெறுவதற்காக விளையாடுகிறேன், கேளிக்கைக்காக அல்ல என்று கூறும் கௌதம் கம்பீர், கிரிக்கெட்டை எப்போதும் தீவிரமான முறையால் எதிர்கொள்பவர்.

இவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி எத்தகைய சாதனைகளைப் படைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)