இந்தியாவுக்கு 3 உலகக் கோப்பைகளை பெற்றுத் தந்த 3 தரமான கேட்சுகள்

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கேட்ச்கள் தான் போட்டிகளை வெல்கின்றன. “Catches Win Matches” என்ற சொற்பதம் 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பைக் போட்டியில் மேற்கியந்தியத்தீவுகள் அணி தோற்றபின், அந்த அணியின் கேப்டன் கிளைவ் லாய்டு கூறியபின் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகப்பிரபலமானது.

கிரிக்கெட்டில் வர்ணனையாளர்கள் பல நேரங்களில் பயன்படுத்தும் சொல் எவ்வளவு வலிமையானது, என்பது களத்தில் விளையாடும் வீரர்களுக்கும் தெரியும். ஒவ்வொரு கேட்சைப் பிடிக்கும் போதும், வெற்றிக்கான ஒவ்வொரு படியைக் கடக்கிறோம் என்று அர்த்தம்.

ஆனால், அதேநேரத்தில் “கேட்சஸ் லாஸ் மேட்சஸ் லூஸ்” என்பதைப் போல் முக்கியத் தருணங்களில் தவறவிடப்படும் கேட்ச் ஆட்டத்தின் முடிவையே புரட்டிப்போடுகின்றன.

குறிப்பாக 1999ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்டர், கேப்டன் ஸ்டீவ் வாஹ்கிற்கு தென் ஆப்ரிக்க வீரர் ஹெர்சலே கிப்ஸ் கோட்டைவிட்ட கேட்ச் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றி, ஸ்டீவ் வாஹின் ஆகச்சிறந்த ஆட்டத்தால் தென் ஆப்ரிக்கா வெளியேறியது, அந்தத் தொடரில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது.

கேட்சை கோட்டைவிட்ட தென் ஆப்ரிக்கா குறித்து ஸ்டீவ் வாஹ் அப்போது கூறுகையில் “ தென் ஆப்ரிக்கா கேட்சை கோட்டைவிடவில்லை, உலகக் கோப்பையை கோட்டைவிட்டுவீட்டீர்கள்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கோட்டைவிடப்பட்ட கேட்சுகளால் தவறவிடப்பட்ட ஆட்டங்கள்

2015 உலகக் கோப்பை காலிறுதியில் நியூசிலாந்து வீரர் கப்திலுக்கு மே.இ.தீவுகள் வீரர் சாமுவேல்ஸ் கோட்டைவிட்ட கேட்ச், 2011 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுக்கு கேட்சை கோட்டைவிட்ட பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல்ஹக், 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்வெலுக்கு கேட்சை கோட்டைவிட்ட ஆப்கன் வீரர் முஜிபுர் ரஹ்மான், 1992 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானுக்கு இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் கோட்டைவிட்ட கேட்சுகள் ஆட்டத்தையே திருப்பிபோட்டன.

ஆதலால் முக்கியமான போட்டிகள், அதிலும் உலகக் கோப்பை போன்ற ஐசிசி சார்பில் நடத்தப்படும் முக்கிய ஆட்டங்கள், இறுதிப் போட்டிகளில் கேட்சுகள்தான் ஆட்டத்தின் முடிவையே தீர்மானிப்பவையாக இருக்கின்றன.

2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில்கூட ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்க பேட்டர் டேவிட் மில்லர் அடித்த ஷாட்டில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி எல்லையைக் கடந்து சென்ற பந்தை ஸ்மார்ட்டாக கேட்ச் பிடிக்காமல் இருந்திருந்தால் முடிவு தலைகீழாக இருந்திருக்கும். ஆனால், சூர்யகுமாரின் கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி டி20 கோப்பையை வெல்ல காரணமாகியது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கேட்ச் பிடிக்கும் திறனை வளர்ப்பதற்காக தனிப்பட்ட முறையில் பயிற்சி

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை கிரிக்கெட்டில் பீல்டிங், கேட்ச் பிடிப்பது என்பது பெரிதாக முன்னேற்றம் அடைந்திருக்கவில்லை. பீல்டிங், கேட்ச் என்றாலே அது தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா என்ற வர்ணிக்கப்பட்ட காலம் இருந்தது. ஆசிய அணிகளைப் பொருத்தவரை ஒரு சிலரை மட்டும் கேட்ச் பிடிப்பது, பீல்டிங்கில் சிறந்தவர்களாகப் பட்டியலிடலாம். அதிலும் பாகிஸ்தான் அணி இன்றுவரை பீல்டிங்,கேட்ச் பிடிப்பதில் மந்தமாகவே இருந்து வருகிறது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு அணியிலும் வீரர்களுக்கு பீல்டிங் செய்யவும, கேட்ச் பிடிப்பதற்கும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதற்காக நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். வீரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்ய உடற்தகுதி அவசியம் என்பதால் அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இளம் வீரர்களே பெரும்பாலும் அணிக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

1990களில் கிரிக்கெட் ஆடிய வீரர்களில் பலருக்கும் தொப்பையும், உடற்தகுதியும், பீல்டிங் செய்யும் திறனும் குறைந்திருந்தது. ஆனால், இன்று அனைத்தும் மாறி, வீரர்களின் உடற்தகுதி, பீல்டிங், கேட்ச் திறமை மெருகேற்றப்பட்டுள்ளது, கேட்ச் பிடிப்பதிலும் பல்வேறு பரிசோதனைகள், எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கேட்சுகளை எவ்வாறு பிடிப்பது என்று பயிற்சி அளிக்கப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் கேட்ச் பிடிக்கும் தரம்

அதனால்தான் பவுண்டரி எல்லைக்குள் செல்லும் பந்தைக்கூட தட்டிவிட்டு பீல்டர்களால் ஸ்மார்டாக கேட்ச் பிடிக்க முடிகிறது. தாங்கள் கேட்ச்பிடித்து பவுண்டரி எல்லைக்குள் செல்ல நேர்ந்தாலும் விக்கெட்டை காப்பாற்ற எவ்வாறு சமயோசிதமாக செயல்பட வேண்டும் என்பதற்கும் ஸ்மார்ட் பயிற்சி அளி்க்கப்படுகிறது.இதுபோன்ற பயிற்சிகள் இல்லாவிட்டால், சூர்யகுமார் எடுத்த கேட்சு போன்று எடுப்பது கடினம்.

கடந்த 2023 ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலிருந்து இந்திய அணியின் பீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் வளர்ந்துள்ளது, மேம்பட்டுள்ளது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்ற 20 அணிகளின் கேட்ச், பீல்டிங் திறன் குறித்து ஐசிசி பட்டியலிட்டது. அதில் இந்திய அணி 105 கேட்சுகளில் 30 கேட்சுகளை கோட்டைவிட்டாலும், 77.90% திறமையாக செயல்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

இந்திய அணி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோதும், 2007ம் ஆண்டு முதல்முறையாக டி20உலகக் கோப்பையை கைப்பற்றியபோதும், 2024ம் ஆண்டு டி20 கோப்பையை 2வது முறையாக வசமாக்கியபோதும் கேட்ச் என்பது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

சில கேட்சுகள் தலைமுறை கடந்தும் பேசப்படும், பேசப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட 3 கேட்சுகளைப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

1. தலைமுறை கடந்து நிற்கும் கபில்தேவ் பிடித்த கேட்ச்

1983ம் ஆண்டு உலகக் கோப்பையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. “அன்டர்டாக்ஸ்” என்று இந்திய அணியை ஏளனம் செய்த அணிகளை மண்ணைக் கவ்வவைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கபில் தேவ் தலைமையிலான அணி வென்றது. ஏற்கெனவே மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்று உலகக் கிரிக்கெட்டை ஆட்சி செய்தது. மேற்கிந்தியத்தீவுகளின் கிளைவ் லாய்டு, மால்கம் மார்ஷல், ரிச்சார்ட்ஸ், லேரி கோம்ஸ், ஹெயின்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபட்ஸ் என ஜாம்வான்கள் சிம்ம சொப்பனமாக உலக அணிகளுக்குத் திகழ்ந்தனர்.

அந்த போட்டியில் யாரும் எதிர்பாரா வகையில் இந்திய அணி இறுதிப்போட்டிவரை முன்னேறி, மேற்கிந்தியத்தீவுகளைச் சந்தித்தது. பேட்டிங் ஜாம்வான்கள், விடாகொண்டர்கள் இருக்கும் அணியை எப்படி வெல்லப் போகிறோம் என்று இந்திய அணி நினைத்தது. முதலில் பேட் செய்த 183 ரன்கள் சேர்த்தது. 183 ரன்களுக்குள் எப்படி மேற்கிந்தியத் தீவுகள் அணியை முடக்கப் போகிறோம் என்று உறுதியற்ற நிலையில் பந்துவீசினர். ஆனால், ஆட்டத்தில் நேரம் செல்லச்செல்ல இந்திய அணியின் பக்கம் காற்றுவீசவே ஆட்டம் கைமாறியது.

மிரட்டலான ஃபார்மில் இருந்த ரிச்சர்ட்ஸ் களத்தில் இருக்கும் வரை உலகக் கோப்பை உறுதியில்லை என்ற நிலை இருந்தது. மதன்லால் வீசிய பந்தில் ரிச்சார்ட்ஸ் அடித்த ஷாட்டில் கபில்தேவ் மிட்விக்கெட் பின்னால் நீண்டதொலைவு ஓடிச்சென்று பிடித்த கேட்ச் ஆட்டத்தின் திருப்புமுனையாகி இந்திய அணி முதல்முறையாக கோப்பையை வென்றது, 140 ரன்களில் மேற்கிந்தியத்தீவுகள் எனும் யானையை சாய்த்து இந்திய அணி. இன்றளவும் 1983ம் ஆண்டு உலகக் கோப்பை வெற்றி என்றாலே முன்னாள் கேப்டன் கபில்தேவ், ரிச்சார்ட்ஸுக்கு பிடித்த கேட்சை நினைவு கூறாமல் இருக்க முடியாது. காலத்தால் அழியா நினைவுகளை அந்தகேட்சோடு கபில்தேவ் கொண்டுவந்துவிட்டார். ஏறக்குறைய 41 ஆண்டுகளாகியும் இன்னும் தலைமுறை கடந்து கபில்தேவ் கேட்ச் பசுமையாக நிற்கிறது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

2. தோனி டி20 உலகக் கோப்பை வெல்லக் காரணமான கேட்ச்

டி20 கிரிக்கெட் போட்டியை ஐசிசி கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி, முதல் உலகக் கோப்பையை 2007-ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடத்தியது. இறுதி ஆட்டத்தில் கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி கம்பீரின்(75) அதிரடியாக 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக இன்று களமிறங்கிய கேப்டன் ரோஹித் அன்று, கீழ்வரிசையில் களமிறங்கி 30 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி 6 ரன்னில் போல்டாகினார்.

158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. இந்திய அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, போராட்டத்தால், 141 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 6 பந்துகளில் 13 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்குத் தேவைப்பட்டது, கைவசம் ஒருவிக்கெட் மட்டும் இருந்தது.

ஜோகிந்தர் சர்மா வீசிய கடைசி ஓவரை ஸ்ட்ரைக்கில் இருந்த ஆபத்தான பேட்டர் மிஸ்பா உல் ஹக் எதிர்கொண்டார். 2-ஆவது பந்தை மிஸ்பா சிக்ஸருக்குப் பறக்கவிட்டு ரத்தக் கொதிப்பை எகிறவைத்தார். 3-ஆவது பந்தை சர்மா புல்டாசாக வீச, ஸ்கூப்ஷாட் அடிக்க முற்பட்டு, ஷார்ட் பைன் லெக் திசையில் நின்றிருந்த ஸ்ரீசாந்திடம் கேட்சானது.

இந்திய அணி முதல்முறையாக 2007 அறிமுக டி20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டத்தில் ஸ்ரீசாந்த் கேட்ச் பிடிக்காமல் தவறவிட்டிருந்தால், ஆட்டமே தலைகீழாக மாறி பாகிஸ்தான் கோப்பையை வென்றிருக்கும். ஆனால் தேவைப்படும் நேரத்தில் ஸ்ரீசாந்த் எடுத்த கேட்ச் திருப்புமுனையாகி இன்றளவும் பேசப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம், Getty Images

3. ஆட்டத்தை மாற்றிய சூர்யகுமாரின் பிரமாண்ட கேட்ச்

2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியில் கிளாசன் களத்தில் இருந்தவரை உலகக் கோப்பை வெற்றி உறுதியில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால் கிளாசன் ஆட்டமிழந்தபின் அடுத்தடுத்த விக்கெட் சரிவால் தென் ஆப்ரிக்கா தோல்வியின் எல்லைக்கு தள்ளப்பட்டது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தென் ஆப்ரிக்கா வெற்றிக்குத் தேவை. ஸ்ட்ரைக்கில் டேவிட்மில்லர் இருந்தநிலையில் ஹர்திக் பந்துவீசினார். முதல் பந்து ஃபுல்டாசாக வீசப்பட்டதை மில்லர் சிக்ஸருக்கு பறக்கவிட்டார், ஆனால், எல்லையில் நின்றிருந்த சூர்யகுமார் பிடிக்கமுடியாத கடினமான கேட்சை பிடித்தார்.

ஆனால், நடுநிலை தவறி, எல்லைக் கோட்டைக் கடக்கிறோம் என்று சூர்யகுமார் உணர்ந்தவுடன் பந்தை மைதானத்தின் மேலே தூக்கிவீசிவிட்டு,பவுண்டரி எல்லைக்குள் சென்றார். பின்னர் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வானிலிருந்து விழுந்த பந்தை கேட்ச் பிடித்து மில்லரை ஆட்டமிழக்கச் செய்தார்.

சூர்யகுமாரின் இந்த கேட்ச்தான் ஆட்டத்தின் திருப்புமுனை, வெற்றிவாசலின் திறவுகோலாக இருந்தது. ஒருவேளை இந்த கேட்சை கோட்டைவிட்டிருந்தால், சிக்ஸர் சென்று, ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம்.

ஆனால், சூர்யகுமார் எடுத்த ஸ்மார்ட்டான, புத்திசாலித்தனமான கேட்ச் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற தருணத்தைப் பற்றி பேசும்போதெல்லாம் நினைவுகூறப்படும், தலைமுறைகள் பலகடந்து இந்த கேட்ச் சிலாகிக்கப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)