கௌதம் கம்பீர்: தோனியின் 'நிழலில்' 2 உலகக் கோப்பைகளை வெல்ல பங்களித்தவர் பயிற்சியாளராக சாதிக்க முடியுமா?

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

“ கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. தனிப்பட்ட முறையில் நீங்கள் புகழ்பெற விரும்பினால், தனியாக ஆடும் விளையாட்டில்தான் விளையாட வேண்டும்”

கிரிக்கெட் விளையாட்டுக்கு கெளதம் கம்பீர் அளித்த விளக்கம் இது.

சச்சின், டிராவிட், கங்குலி, சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் என ஏராளமான ஜாம்பவான்களுடன் சேர்ந்து தனது முத்திரையை பதித்து, தாக்கத்தை ஏற்படுத்தியவர் கம்பீர்.

2008 முதல் 2011ம் ஆண்டுவரை கிரிக்கெட்டின் 3 விதமான ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமை பெற்ற கிரிக்கெட் வீரராக் இருந்தார். டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 விதமான ஃபார்மெட்டிலும் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

இந்திய அணியில் தொடக்க வீரராக சேவாக் ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர் என்று சொல்லப்பட்டாலும், தேவைப்படும் நேரத்தில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லட்சுமண் போல சுவர்போன்று பேட் செய்து வலுவான இன்னிங்ஸை விளையாட முடியும் என டெஸ்ட் போட்டிகளில் நிரூபித்தவர் கம்பீர்தான்.

சர்வதேச கிரிக்கெட்டில் 3 விதமான ஃபார்மெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த கம்பீரின் கிரிக்கெட் வாழ்க்கையில் இரு இன்னிங்ஸ்கள் என்றென்றும் போற்றப்படும்.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 75 ரன்களை கம்பீர் சேர்த்ததும், 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக கம்பீர் 97 ரன்கள் சேர்த்ததும் இந்திய அணி இரு கோப்பைகளை வெல்ல முக்கியமானதாக இருந்தது.

ஆனால், கம்பீர் சொல்வதைப் போல் “பெரிய பங்களிப்பை கொண்டாடிவிட்டு பல சமயங்களில் அணிக்கு உபயோகமான சிறிய பங்களிப்பை கொண்டாட மறந்துவிடுவோம்” என தெரிவித்திருந்தார். இருமுறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல கம்பீரின் பங்களிப்பு இருந்தபோதிலும் புகழப்படாத ஹீரோவாகவே கம்பீர் கடைசிவரை இருந்தார்.

குறிப்பாக 2011 உலகக் கோப்பைத் தொடரில் கம்பீர் 3 ரன்னில் சதத்தை தவறவிட்டு 97 ரன்களில் ஆட்டமிழந்து மிக முக்கிய இன்னிங்ஸை ஆடி வெற்றிக்கு காரணமாக இருந்தார். ஆனால், அதிகமாகக் கொண்டாடப்பட்டது என்னமோ மகேந்திர சிங் தோனிதான். இதை கம்பீரே பலமுறை ஆதங்கத்துடன் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் இட்ட பதிவில், “சிறந்த கேப்டனாக வர வேண்டிய கெளதம் கம்பீருக்கு அந்த வாய்ப்பை பிசிசிஐ வழங்கவில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்குப்பின் கெளதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளது பிசிசிஐ.” எனத் தெரிவித்துள்ளனர்.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

கம்பீர் இளமைப் பருவம்

கடந்த 1981ம் ஆண்டு பஞ்சாபி இந்து காத்ரி குடும்பத்தில் டெல்லியில் பிறந்தவர் கெளதம் கம்பீர். கம்பீர் தந்தை தீபக் கம்பீர் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம் செய்தார். தாய் சீமா கம்பீர். கம்பீருக்கு ஒரு இளைய சகோதரி உண்டு. தாய்வழி பாட்டனார் கடந்த 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முல்தான் நகரிலிருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்தார். கம்பீர் பிறந்து 18 நாட்கள் ஆனவுடனே அவரை தாய்வழிப் தாத்தா, பாட்டி தத்தெடுத்து வளர்த்தனர். அது முதல் இப்போதுவரை கம்பீர் தனது தாத்தா, பாட்டியுடனே டெல்லியில் வசித்து வருகிறார்.

டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்த கம்பீர் பட்டப்படிப்பு கூட முடிக்கவில்லை. 10 வயதிலிருந்தே கம்பீர் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். டெல்லியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி கிரிக்கெட் அகாடெமியைச் சேர்ந்த சஞ்சய் பரத்வாஜ்ஜிடம் கிரிக்கெட் பயிற்சியையும், குலாத்தி என்பவரிடமும் கிரிக்கெட் பயிற்சியை கம்பீர் எடுத்தார்.

முதல் தரப்போட்டிகளிலும், லிஸ்ட் ஏ தரப்போட்டிகளிலும் கெளதம் கம்பீர் நீண்டகாலம் ஆடியபின்புதான் அவருக்கு இந்திய் அணியில் இடம் கிடைத்தது. முதல் தரப்போட்டிகளில் 198 ஆட்டங்களில் 15,153 ரன்களும், 43 சதங்கள், 68 அரைசதங்களையும் கம்பீர் விளாசியுள்ளார். அதேபோல லிஸ்ட் ஏ தரப்போட்டிகளில் கம்பீர் 299 போட்டிகளில் 10077 ரன்களும், 21சதங்களும, 60 அரைசதங்களையும் விளாசினார்.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

இதன்பின்புதான் 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கம்பீர் அறிமும் செய்யப்பட்டார். 2005 முதல் 2007ம் ஆண்டுவரை ஏராளமான ஒருநாள் போட்டிகளில் கம்பீர் விளையாடி, சதங்கள், அரைசதங்கள் அடித்த போதும் 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு கம்பீர் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இது கம்பீரை கடுமையாகப் பாதித்தது, வேதனையுடன் பேட்டிகளையும் அளித்திருந்தார்.

2007-இல் மேற்கிந்திய்தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் முதல் சுற்றோடு இந்திய அணி மோசமான தோல்விகளோடு வெளியேறியது. இதன் பிறகு 2007 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கம்பீர் இடம்பிடித்தார். இந்தத் தொடரில் கலக்கிய கம்பீர், 3 அரைசதங்கள் உள்பட 227 ரன்களை குவித்தார். இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 54 பந்துகளி்ல் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

2008 முதல் 2013ம் ஆண்டுவரையிலான காலம் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் பொற்காலம் எனலாம். 2008ம்ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த சிபி சீரிஸ் முத்தரப்பு தொடரில் கம்பீர் சிறப்பாக ஆடி, 440 ரன்கள் குவித்தார். சிட்னி நகரில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் கம்பீர் 113 ரன்கள் குவித்தார்.

2008ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சேவாக்குடன் கம்பீர் சேர்ந்து தொடக்க வீரராகக் களமிறங்கினார். இந்தத் தொடரில் கம்பீர் இரட்டை சதம் உள்பட 463 ரன்களைக் குவித்தார். 2008 டிசம்பரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் ரன்குவிப்பில் முன்னணி வீரராக கம்பீர் இருந்தார், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கம்பீரின் அற்புதமான பேட்டிங் தொடர்ந்தது.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு வெளியே நியூசிலாந்தில் 2009ம் ஆண்டு முதல்முறையாக கம்பீர் டெஸ்ட் தொடர் விளையாடினார். இதில் 2-ஆவது டெஸ்ட்டில் கம்பீர் அடித்த 137 ரன்கள் இந்திய அணியைத் தோல்வியிலிருந்து காப்பாற்றியது. 11 மணிநேரம் கம்பீரின் பேட்டிங்கைப் பார்த்த கேப்டனாக இருந்த சேவாக், “டிராவிட்டுக்கு அடுத்தாற்போல் இந்திய அணியின் 2-ஆவது சுவர் கம்பீர்” என்று புகழாரம் சூட்டினார். ஏறக்குறைய 41 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வெல்ல கம்பீரின் பேட்டிங் முக்கியக் காரணமாக அமைந்தது.

5 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 5 சதங்களை விளாசிய இந்தியாவின் முதல் பேட்டரும், உலகளவில் பிராட்மேனுக்கு அடுத்ததாகபோல் 2-ஆவது பேட்டராக கம்பீர் பெயரெடுத்தார். 2009ம் ஆண்டு ஐசிசி சார்பில் சிறந்த டெஸ்ட் வீரராக கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய அணிக்கு கேப்டனாக சில போட்டிகளில் மட்டுமே பிசிசிஐ கம்பீருக்கு வாய்ப்பு வழங்கியது. 2010ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடருக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டு 5-0 என ஒருநாள் தொடரையும் வென்று நிரூபித்து தொடர் நாயகன் விருதையும் கம்பீர் வென்றார்.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

2 உலகக் கோப்பைகளில் முக்கியப் பங்களிப்பு

2011-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இந்திய அணியில் கம்பீர் தேர்வாகினார். இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் சேவாக், சச்சின் ஆட்டமிழந்தபின் ஆங்கர் ரோல் செய்த கம்பீர், விராட் கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தும், தோனியுடன் 109ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் பேட் செய்தார்.

ஆனால், உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபின் தோனியின் பங்களிப்புதான், கடைசியில் அவர் அடித்த சிக்ஸர்தான் அதிகமாகப் பேசப்பட்டது.

2013ம் ஆண்டுக்குப்பின் கம்பீர் கிரிக்கெட் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டு, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். 2018ம் ஆண்டு டிசம்பரில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வந்தநிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கம்பீர் அறிவித்தார்.

58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 9 சதங்கள் உள்பட 4,154ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 சதங்கள் உள்பட 5,238 ரன்களையும் கம்பீர் குவித்துள்ளார். 37 டி20 போட்டிகளில் 932 ரன்களையும் கம்பீர் சேர்த்துள்ளார்.

கம்பீர் எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். அதிரடிக் கருத்துக்களை தெரிவிப்பவர். 2007, 2011 உலகக் கோப்பைத் தொடரில் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதையும், தோனியை விமர்சித்தும் கம்பீர் பேசியிருந்தார்.

கம்பீர்

பட மூலாதாரம், Getty Images

கம்பீருக்கு காத்திருக்கும் சவால்கள்

இந்திய அணிக்கு கேப்டன் பதவியை வழங்காத நிலையில், தற்போது தலைமைப் பயிற்சியாளர் பதவியை பிசிசிஐ வழங்கியுள்ளது. கம்பீர் பயிற்சியாளராகப் பதவி ஏற்கும் காலத்தில் இந்திய அணி 2025ம் ஆண்டில் சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2026ல் டி20 உலகக் கோப்பை, 2027ல் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர்களில் விளையாட உள்ளது.

கம்பீர் பதவிக்காலத்தில்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், டி20 அணிக்கு புதிய கேப்டனும் பணியாற்றப் போகிறார்கள். இவர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பு கம்பீருக்கு இருக்கிறது.

அணிக்குள் சாதகமான சூழலை ஏற்படுத்துவதும், வீரர்களின் திறமையை மேம்படுத்துவதும் கம்பீருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையாக இருக்கக்கூடும்.

மூத்த வீரர்களான ரோகித், விராட் கோலி போன்றவர்களை சமாளித்து, அணியை சமநிலைப்படுத்துவதும் கம்பீருக்கு பெரிய பணியாக இருக்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)