கார் திருட்டின் தலைநகரமாக மாறிய கனடா; நிமிடங்களில் தப்பிச் செல்லும் திருடர்கள் - ஏன் தடுக்க முடியவில்லை?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நாடின் யூசிஃப்
- பதவி, பிபிசி நியூஸ்,
கடந்த 2022, அக்டோபர் மாதத்தின் ஒரு காலை வேளையில் லோகன் லாஃபிரெனியெர் தன்னுடைய வாகன நிறுத்தும் இடம் காலியாக இருப்பதை பார்த்தார். அவருடைய புதிய ரேம் ரெபெல் டிரக் கார் காணாமல் போயிருந்தது.
ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மில்டன் நகரத்தில் அமைந்துள்ள அவருடைய வீட்டுக்குள் நடுநிசியில் முக்காடு அணிந்திருந்த இரு நபர்கள் உள்ளே நுழைந்து அவரின் காரை எளிதாக ஓட்டிச் செல்வது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
சில மாதங்கள் கழித்து, அதே டிரக், சுமார் 8,500 கி.மீ. தொலைவில் ஆப்பிரிக்காவின் கானாவில் விற்பனைக்கு உள்ள வாகனங்களின் இணையதளத்தில் இடம்பெற்றிருந்தது.
“காரின் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறத்தில் என் மகன் லேப்டாப் வைப்பதற்காக அமைக்கப்பட்ட தாங்கியில், அவன் வைத்திருந்த குப்பை அதில் தெளிவாக தெரிந்தது,” என லோகன் லாஃபிரெனியெர் பிபிசியிடம் கூறுகிறார்.
“அது என்னுடைய வாகனம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.”
அவருடைய இந்த கதை தனித்துவமானது அல்ல. கனடாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான கார்கள் திருடப்பட்டுள்ளன. அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு கார் திருடப்பட்டுள்ளது. கனடாவின் நீதித்துறை அமைச்சரும் பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவராவார். அரசு அவருக்கு வழங்கிய டொயோட்டோ ஹைலேண்டர் XLE இருமுறை கொள்ளையர்களால் திருடப்பட்டது.
137 நாடுகளில் கார் திருட்டு நடைபெறுவதில் மோசமாக உள்ள முதல் பத்து நாடுகளில் கனடா முதலிடத்தில் உள்ளதாக இண்டர்போல், சர்வதேச போலீஸ் இந்த கோடைக்காலத்தில் பட்டியலிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தான் கனடா தங்கள் தரவுகளை இண்டர்போல் உடன் ஒருங்கிணைக்கத் தொடங்கிய நிலையில், இது “குறிப்பிடத்தக்க ஒன்று” என அதன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
காவலரை நிறுத்தும் உரிமையாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
கார்கள் திருடப்பட்டவுடன் அவை மற்ற மோசமான குற்றங்களுக்கு பயன்படுத்துதல், உள்ளூரிலேயே சந்தேகமில்லாத நபர்களுக்கு விற்பனை செய்தல் அல்லது வெளிநாடுகளுக்கு மறுவிற்பனைக்காக அனுப்புதல் ஆகியவை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து கனடாவிலிருந்து திருடப்பட்ட 1,500-க்கும் மேற்பட்ட கார்களை உலகம் முழுவதிலுமிருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் ஒவ்வொரு வாரமும் சுமார் 200 கார்கள், குறிப்பாக மற்ற நாடுகளின் துறைமுகங்களில் கண்டுபிடிக்கப்படுவதாகவும் இண்டர்போல் தெரிவித்துள்ளது.
கார் திருட்டு வேகமாக பரவிவரும் நிலையில், அதனை “தேசிய நெருக்கடியாக” கனடா காப்பீடு செயலகம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு வாகன திருட்டு காரணமாக, காப்பீட்டுதாரர்கள் ஒரு பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,300 கோடி) அளவுக்கு அதிகமாக செலுத்த வேண்டியிருந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
திருட்டிலிருந்து எப்படி வாகனங்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து, பொதுமக்களுக்கு நாடு முழுவதும் அறிவுறுத்தல்களை வழங்கும் கட்டாயத்திற்கு காவல்துறையினர் ஆளாகியுள்ளனர்.
இதனிடையே, தங்கள் கார்களை பாதுகாக்க அவற்றில் டிராக்கர்களை நிறுவுதல் முதல் தனியார் செக்யூரிட்டியை பணிக்கு அமர்த்துதல் வரை, அனைத்து பாதுகாப்பு முயற்சிகளையும் கனடா மக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கிகள் மற்றும் தூதரகங்களில் காணப்படுவது போன்று, திருடர்களை தடுக்கும் விதமாக, தானாகவே இயங்கும் பெரிய கட்டைத் தூண்களுடன் கூடிய அமைப்பை ( retractable bollards) அதனை வாங்க முடிந்தவர்கள் நிறுவிக்கொள்கின்றனர்.
டொரண்டோ புறநகரான மிசிசௌகாவை சேர்ந்த நௌமன் கானும் அவருடைய சகோதரரும் கார் திருட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், இத்தகைய ரீடிராக்டபிள் பொல்லார்டுகளை நிறுவும் தொழிலை தொடங்கினர்.
ஒருசமயம் திருட்டு முயற்சியின்போது தன் மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தபோது, திருடர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக கான் கூறுகிறார். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மெர்சிடெஸ் ஜி.எல்.இ-யின் சாவியை அவர்கள் தேடியதாக கூறும் அவர், தன்னிடம் சிக்கிக்கொண்டதையடுத்து அவர்கள் ஓடிவிட்டதாக கூறுகிறார்.
இந்த “அதிர்ச்சிகரமான” சம்பவத்திற்கு பிறகு, அவர்கள் குடும்பத்திற்காக இரண்டு “எளிய” வாகனங்களை தவிர்த்து தங்களுடைய மற்ற வாகனங்களை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
தன்னுடைய இந்த தொழில் மூலமாக, டொரண்டோ முழுவதும் பரவலாக இத்தகைய கதைகளை பலரிடமிருந்து தான் கேட்பதாக கான் கூறுகிறார்.
“இப்போது இந்த தொழிலில் நாங்கள் பிஸியாக இருக்கிறோம்” என்கிறார் அவர். “வாடிக்கையாளர் ஒருவரின் தெருவில் இப்படி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளதால், பாதுகாப்பின்மை காரணமாக, ஒவ்வொரு இரவும் வீட்டுக்கு வெளியே காவலரை நிறுத்துவதாக தெரிவித்தார்” என்கிறார் அவர்.
கேள்விக்குள்ளாகும் துறைமுக அமைப்புகள்

பட மூலாதாரம், Getty Images
இத்தகைய குற்ற சம்பவங்கள் அதிகளவில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் ஒப்பிடுகையில் குறைந்த மக்கள்தொகை கொண்ட கனடாவில் இவ்வளவு பரவலாக கார் திருட்டு சம்பவங்கள் நடப்பது ஆச்சர்யத்தைத் தருகிறது என, அமெரிக்க நீதி புள்ளியியல் செயலகத்தின் இயக்குநர் அலெக்சிஸ் பிகுவெரோ தெரிவித்தார்.
“மேலும் கனடாவில் அமெரிக்காவில் உள்ளது போன்று அதிக துறைமுக நகரங்களும் இல்லை,” என அவர் கூறுகிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து அமெரிக்கா, கனடா , பிரிட்டன் போன்ற நாடுகள் அதிகமான கார் திருட்டு சம்பவங்களை எதிர்கொண்டுள்ளன. கனடாவில் (ஒரு லட்சம் பேருக்கு 262.5) இந்த விகிதம், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்-ஐ விட (ஒரு லட்சம் பேருக்கு 220) அதிகமாக உள்ளது என அந்த நாடுகளின் சமீபத்திய தரவுகள் கூறுகின்றன.
2022ம் ஆண்டு தரவுகளின் படி ஒரு லட்சம் பேருக்கு 300 வாகனங்கள் என்ற அமெரிக்காவின் எண்ணிக்கையுடன் இது நெருக்கமாக உள்ளது.
பெருந்தொற்று காரணமாக உலகளவில் கார்களுக்கு எழுந்த பற்றாக்குறை காரணமாக, புதிய மற்றும் ஏற்கெனவே பயன்படுத்திய வாகனங்களுக்கான தேவை அதிகரித்ததும் இந்த உயர்வுக்குக் காரணமாக உள்ளது.
சில கார்களுக்கு சர்வதேச அளவில் பெரிய சந்தை இருப்பதாகவும் ஒருங்கமைந்த குற்ற குழுக்களுக்கு வாகன திருட்டு முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும் கனடா ஆட்டோமொபைல் சங்கத்தின் அரசாங்க உறவுகள் இயக்குநர் எலியட் சில்வர்ஸ்டெயின் கூறுகிறார்.
கனடா துறைமுகங்கள் இயங்கும் விதத்தினாலும் மற்ற நாடுகளை விட கனடா இத்தகைய திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்படுவதாக அவர் கூறுகிறார்.
“துறைமுக அமைப்புகளில் நாட்டைவிட்டு என்ன வெளியே செல்கின்றது என்பதைவிட நாட்டுக்குள் என்ன வருகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,” எனக்கூறும் அவர், துறைமுகங்களில் கண்டெயினர்களில் வாகனங்கள் ஏற்றப்பட்ட பின்னர் அதை அடைவது கடினமாகிவிடுகிறது.
பிரச்னை என்ன?

பட மூலாதாரம், AFP via Getty Images
திருடப்பட்ட சில கார்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் டொரண்டோ காவல்துறை அறிவித்த 11 மாத விசாரணையில், சுமார் 60 மில்லியன் கனடா டாலர்கள் (சுமார் ரூ.367 கோடி) மதிப்பிலான, 1,080 வாகனங்கள் மீட்கப்பட்டன. 550க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
டிசம்பர் மத்தியிலிருந்து மார்ச் இறுதிவரை எல்லை போலீசார் மற்றும் காவல்துறை அதிகாரிகள், மாண்ட்ரியல் துறைமுகத்தில் 400 கண்டெயினர்களை சோதித்த நிலையில் அங்கிருந்து திருடப்பட்ட சுமார் 600 வாகனங்களை மீட்டனர்.
துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவை வைத்துப் பார்க்கும்போது இத்தகைய நடவடிக்கைகள் கடினமானவை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2023-ஆம் ஆண்டில் மட்டும் மாண்ட்ரியல் துறைமுகத்தில் 17 லட்சம் கண்டெயினர்கள் இடம்பெயர்ந்துள்ளன.
பல சம்பவங்களில் கண்டெயினர்களை சோதனையிட துறைமுக பணியாளர்களுக்கும் அதிகாரம் இல்லை. மேலும், சுங்கத்துறையால் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் மட்டுமே எல்லை அதிகாரிகள் வாரண்ட் இல்லாமல் கண்டெயினரை திறக்க முடியும்.
அதேசமயம், கனடா எல்லை சேவை முகமை (CBSA) நீண்டகாலமாக ஆள்பற்றாக்குறையால் போராடிவருவதாக, அந்த அமைப்பின் சங்கம் அரசாங்கத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் அளித்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும் பிரச்னையாக உள்ளது.
பலனளிக்காத பாதுகாப்பு முயற்சிகள்

பட மூலாதாரம், Getty Images
கார் திருட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு ஒண்டாரியோ நகரமான பிராம்ப்டன் நகரத்தின் மேயர் பேட்ரிக் பிரௌன், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையில் துறைமுக சோதனை உத்திகளை ஒப்பிடுவதற்காக, நியூஜெர்சியில் உள்ள நீவார்க் துறைமுகத்தின் கண்டெயினர் முனையத்தைப் பார்வையிட்டார்.
“அமெரிக்க அதிகாரிகளிடம் ஸ்கேனர்கள் உள்ளன. அவர்களால் சரக்குகளை அளவிட முடிகிறது. உள்ளூர் சட்ட அமைப்புகளுடன் நெருக்கமாக அவர்கள் பணியாற்றுகின்றனர்” என, அவர் நேஷனல் போஸ்ட் செய்தித்தாளிடம் கூறினார்.
“இவற்றை நாங்கள் கனடாவில் செய்வதில்லை,” என்றார் அவர்.
கண்டெயினர்களை சோதிப்பதற்காக சிபிஎஸ்ஏ-வை வலுவூட்ட நாங்கள் பல லட்சங்கள் முதலீடு செய்ய உள்ளதாக கனடா அரசாங்கம் தெரிவித்தது. வாகனங்கள் திருட்டை தடுக்க காவல்துறையினருக்கும் கூடுதல் பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் தான் இவ்விவகாரத்தில் புரியாத புதிராக உள்ளதாக, சில்வர்ஸ்டெயின் நம்புகிறார்.
“வாகனங்களை மீட்பது குறித்து எல்லோரும் பேசுகின்றனர். ஆனால், வாகனங்களை திருட முடியாத அளவுக்கு தயாரிப்பது குறித்து நாம் ஏன் முதலில் பேசவில்லை”, என்கிறார் அவர்.
இதனிடையே, லோகன் லாஃபிரெனியெர் போன்ற கார் உரிமையாளர்கள், தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக போராடிவருகின்றனர்.
அவருடைய ரேம் ரெபெல் டிரக் திருடப்பட்ட பின்னர், டொயோட்டோ டுண்ட்ரா அந்த இடத்தை நிரப்பியது. இதனை தன்னுடைய “கனவு டிரக்” என அவர் கூறுகிறார்.
காரை திருடர்கள் எளிதாக இயக்க முடியாத வகையில் பாதுகாப்பு கருவியை (எஞ்சின் இம்மொபைலைசர்) பொருத்தியுள்ளார். மேலும், கார் திருடப்பட்டால் அதனை கண்டறிய காரில் டிராக்கரையும் பொருத்தியுள்ளார். மேலும், ஸ்டியரிங்கில் லாக் ஒன்றையும் இணைத்துள்ளார்.
திருடர்கள் ஊக்கம் இழக்காதவர்கள். அவருடைய டுண்ட்ரா காரையும் திருட இருவர் வந்துள்ளனர். அவர்களுக்கு இம்முறை கடினமாக இருந்தது, எனினும் பின் கண்ணாடி வழியாக உள்ளே சென்றனர்.
இதனால் நடந்த சலசலப்பில் எழுந்த லாஃபிரெனியெர் 911-க்கு (உதவி எண்) அழைத்தார். ஆனால் போலீசார் வருவதற்கு நான்கு நிமிடங்களில் அவர்களால் தப்பிக்க முடிந்தது.
அவருடைய புதிய டிரக்கை பழுதுநீக்கம் செய்து பின்னர் விற்றுவிட்டார்.
இந்த சம்பவத்தால், தான் “மனமுடைந்துவிட்டதாக” அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












