சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை இணைக்குமாறு பழனிசாமிக்கு 6 அமைச்சர்கள் நெருக்கடி - அதிமுகவில் என்ன நடக்கிறது?

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவில் ஏற்பட்ட பின்னடைவிற்குப் பிறகு அக்கட்சியின் தலைமை, நிர்வாகிகளைச் சந்தித்து கருத்துகளைக் கேட்டு வருகிறது.

ஆனால், திங்கட்கிழமையன்று அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சித் தலைமையைச் சந்தித்து, அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்களைச் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லக்ஷ்மணன். அவர் இது தொடர்பாக பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அவருடைய பேட்டியிலிருந்து இனி...

அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

கேள்வி: அ.தி.மு.கவில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது?

பதில்: நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பெரிய வெற்றி கிடைக்கும் என அ.தி.மு.கவின் தொண்டர்களும் நினைக்கவில்லை, இரண்டாம் கட்டத் தலைவர்களும் நினைக்கவில்லை. சொல்லப்போனால், எடப்பாடி கே. பழனிச்சாமியும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நம்பிக்கை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டாலும் அவரிடமும் பெரிய எதிர்பார்ப்பு இருந்திருக்காது. ஆகவே, வெற்றி கிடைக்காததைப் பற்றி தொண்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சியோ, வருத்தமோ இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அ.தி.மு.க. அணி பெற்ற வாக்குகள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஜெயலலிதா இருந்தபோது கட்சி பெரிய தோல்விகளைச் சந்தித்தபோதும் வாக்கு சதவீதம் இவ்வளவு பெரிய சரிவைச் சந்தித்ததில்லை. ஜெயலலிதா போல நாங்கள் பெரிய ஆளுமை இல்லை, அந்த இடத்தை நோக்கி நகர்வோம் என்று சொன்னார்கள். ஆனால், அவர்களால் அங்கு வர முடியவில்லை.

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

இப்போது அ.தி.மு.கவின் வாக்கு சதவீதம் 21-22 சதவீதமாக குறைந்துவிட்டது என்றால், அது எங்கே போய் முடியுமென்ற கேள்வி தொண்டர்களிடம் இருக்கிறது. இந்தத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்குள் இருந்த சட்டமன்றத் தொகுதிகளில், பல இடங்களில் அ.தி.மு.க. பத்தாயிரத்திற்கும் குறைவாக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது ஒரு சுயேச்சை வேட்பாளர் வாங்குகிற வாக்கு. இப்படி வாக்குகள் குறைந்ததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், முக்கியக் காரணம் தொண்டர்கள் மத்தியில் உள்ள சோர்வுதான்.

இந்தக் கட்சியின் ரத்த நாளங்களாக இருப்பவர்கள் கிளைக் கழகச் செயலாளர்கள்தான். அவர்கள் மனதை விட்டுவிட்டார்கள். மிகப் பெரிய கூட்டணி அமைப்போம் என்றது கட்சித் தலைமை. அப்படி கூட்டணி அமைக்கவில்லை. கட்சியும் பிளவுபட்டிருக்கிறது. அதனால், களத்தில் தொண்டர்களிடம் சோர்வு இருக்கிறது.

பிரிந்து சென்றவர்கள் யாரிடம் எவ்வளவு சதவீத வாக்குகள் இருக்கின்றன என்பது குறித்து தொண்டர்களுக்குக் கவலையில்லை. ஓ. பன்னீர்செல்வம் ஒரு பக்கம் சென்று சுயேச்சையாக நிற்கிறார்; நம்முடைய கட்சியோ இப்படியிருக்கிறது என்றுதான் கவலைப்பட்டார்கள். அந்தச் சோர்வும் அயர்ச்சியும்தான் களத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படவிடாமல் தொண்டர்களைத் தடுத்தது. இதுவும் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம்.

தேர்தல் முடிவுகள் வந்த பிறகு எடப்பாடி கே. பழனிச்சாமி ஓர் அறிக்கை வெளியிட்டார். "பல சிரமங்களுக்கு நடுவில் தேர்தலைச் சந்தித்திருக்கிறோம், ஆனாலும் இவ்வளவு வாக்குகளைப் பெற்றிருக்கிறோம், இந்தத் தேர்தல் சில பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுக்கொடுத்திருக்கிறது" என்று சொன்னார்.

ஆகவே, தேர்தல் தோல்வியிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளர் எதையோ புரிந்துகொண்டிருக்கிறார் என தொண்டர்கள் நினைத்தார்கள்.

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே. பழனிச்சாமி 'ஓ. பன்னீர்செல்வம் ஒரு துரோகி' என்றார். ஒற்றுமையை நோக்கிச் செல்லலாம், பிரிந்தவர்கள் இணையலாம் என எடப்பாடி நினைக்க ஆரம்பித்திருப்பார் எனத் தொண்டர்கள் கருதிய நிலையில், மறுபடியும் 'ஓ. பன்னீர்செல்வம் ஒரு துரோகி' என்கிறார். கட்சியைவிட்டு நீக்கிவிட்டால், வேறு சின்னத்தில் நிற்பதைத் தவிர ஓ. பன்னீர்செல்வத்திற்கு வேறு என்ன வழியிருக்கிறது?

தேர்தலில் நிற்க வேண்டும் என்பதற்காக ஒரு சுயேச்சை சின்னத்தில் நின்றார். வேண்டுமென்றால் எடப்பாடி கே. பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தை அவருக்கு அளித்து, நிற்கச் சொல்லியிருக்கலாமே!

அடுத்ததாக, சசிகலாவைப் பற்றிப் பேசினார். "ஜெ. - ஜா. அணிகள் இணைப்பின்போது எப்படி ஜானகி பெருந்தன்மையாக வெளியேறினாரோ, அதுபோல சசிகலாவும் வெளியேற வேண்டும்" என்று சொன்னார். ஆகவே, எடப்பாடி இந்த விஷயத்தில் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெரிந்துவிட்டது. பிளவு என்பது பிளவாகத்தான் இருக்கும் என்பதும் புரிந்துவிட்டது. அ.தி.மு.கவில் இருக்கும் பிளவு செங்குத்தானதல்ல. ஆனால், தொண்டர்கள் மத்தியில் கட்சியில் பிளவு இருப்பது மனதில் பதிந்துவிட்டது.

எடப்பாடி தனது மனநிலையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்பது புரிந்துவிட்ட நிலையில், இப்படியே விட்டால் இந்த இயக்கத்தைக் காப்பாற்றுவது கஷ்டம் என்ற நிலைப்பாட்டிற்குப் பலர் வந்துவிட்டார்கள். இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று ஆறு முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியைச் சந்தித்து எல்லோரையும் ஒருங்கிணைப்பது பற்றிப் பேசினார்கள்.

இந்த ஆறு முன்னாள் அமைச்சர்களில் சசிகலாவால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனாலும் கட்சி முக்கியம், ஆகவே அவரையும் சேர்த்து ஏதாவது பதவியைக் கொடுக்கலாம், எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம், கட்சியை வலுப்படுத்துவோம் என்பதைச் சொன்னார்கள்.

ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் சேர்க்கச் சொல்லும் 6 முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: முன்னாள் அமைச்சர்களின் சந்திப்பு என்கிறீர்கள்... அது எப்போது நடந்தது, யார் யார் அதில் கலந்துகொண்டார்கள்?

பதில்: திங்கட்கிழமையன்று இந்தச் சந்திப்பு நடந்தது. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகிய ஆறு முன்னாள் அமைச்சர்கள் முதலில் தங்களுக்குள் பேசிவிட்டு, எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவதற்காகச் சென்றார்கள். ஆனால், எடப்பாடி இறங்கி வரவில்லை. இவர்களும் விடுவதாக இல்லை. இரு தரப்பும் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

ஆறு பேர் என்பது சென்று சந்தித்தவர்களின் எண்ணிக்கைதான். இந்தச் சந்திப்பு நடந்த தினத்தன்று இரவும் அடுத்த நாள் காலையும் பல முன்னாள் அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் இவர்களில் சிலரை அழைத்து எங்களிடம் சொன்னால் நாங்களும் வந்திருப்போமே என்று சொன்னார்கள். கட்சிக்கு உள்ளிருப்பவர்களிடம் ஓடும் இத்தகைய எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள எடப்பாடி தவறுகிறார்.

நான்கு நாட்களுக்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்திக்கும்போது தொண்டர்களின் விருப்பப்படி ஓ. பன்னீர்செல்வம் கட்சியைவிட்டு நீக்கப்பட்டதாகச் சொன்னார். தொண்டர்களின் விருப்பமெல்லாம் அல்ல. பொதுக் குழுவில் ஒரு முடிவெடுக்கப்படுகிறது, ஒட்டுமொத்த பொதுக் குழுவும் அதை ஆதரித்தது. அந்தப் பொதுக்குழுவின்போது மேடையில் இருந்த ஆறு பேர்தான் இப்போது எடப்பாடியைச் சந்தித்து ஓ. பன்னீர்செல்வத்தைச் சேர்க்கலாம் என்றார்கள்.

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: பொதுக் குழு உறுப்பினர்களுக்கு ஓ. பன்னீர்செல்வத்தை நீக்குவதில் விருப்பம் இல்லாவிட்டால் அதை ஆதரிக்காமல் இருந்திருப்பார்களே...?

பதில்: பொதுக் குழுவில் தலைவர் ஒரு முடிவெடுத்தால், தலைமைக் கழகம் ஒரு தீர்மானத்தை எழுதி வந்து வாசித்தால் அதை அத்தனை பேரும் ஆதரிப்பார்கள். இது எல்லாக் கட்சிகளிலும் சகஜம். குறிப்பாக திராவிட இயக்கங்களில் இது மிகவும் சகஜம். அதை அ.தி.மு.கவில் அடிக்கடி பார்த்துவிட்டோம்.

"அம்மாவின் மறைவிற்குப் பிறகு அனாதரவாக இருக்கிற இந்த இயக்கத்தைக் காப்பாற்ற சசிகலாதான் ஒரே வழி. ஆகவே சசிகலாவை பொதுச் செயலாளர் ஆக்குவோம்" என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். இதே 2,500 பேர்தான் கைதட்டினார்கள். ஒருவர்கூட எதிர்த்துப் பேசவில்லை.

"இந்த இயக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டார், சசிகலா தவறு செய்துவிட்டார் என்பதால் அவரைப் பொறுப்பிலிருந்து நீக்குகிறோம்" என்று சொன்னபோதும் இதே 2,500 பேர்தான் கைதட்டினார்கள்.

"இரட்டைத் தலைமைதான் கட்சிக்குச் சரியாக வரும், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி" என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் அதே 2,500 பேர்தான் எழுந்து நின்று கைதட்டினார்கள்.

"இரட்டைத் தலைமை சரியாக வரவில்லை, ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியைவிட்டு நீக்குகிறோம்" என்றார்கள். அதே 2,500 பேரும் கைதட்டினார்கள்.

இதெல்லாம் தொண்டர்களின் உணர்வா? தலைமை ஒரு முடிவெடுத்தால் அதில் கட்சியின் நலன் இருக்கும் என நம்புகிற தொண்டர்கள் எண்ணிக்கை அ.தி.மு.கவில் மிக அதிகம். இந்த முடிவுகளையெல்லாம் எடுக்க வைத்தவர்களில் இந்த ஆறு பேரும் அடக்கம். இவர்கள்தான் இப்போது யார் பெயரையும் சொல்லாமல் பிரிந்து இருப்பவர்களை எல்லாம் சேர்க்கலாம் என்கிறார்கள். அதில் சசிகலா, தினகரன் மட்டுமல்ல, கே.சி. பழனிச்சாமியும் அடக்கம். இதைத்தான் எடப்பாடி கே. பழனிச்சாமி ஏற்க மறுக்கிறார்.

பொறுமையிழந்த முன்னாள் அமைச்சர்கள்

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: முன்பெல்லாம் கட்சித் தலைமை சொன்னதை ஏற்றுக்கொண்டவர்கள் எடப்பாடி கே. பழனிச்சாமி இப்போது சொல்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா?

பதில்: கட்சித் தலைமை ஒரு முடிவெடுத்தபோது, அதில் தொண்டர்களின் நலன் இருக்கும் என பொதுக் குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல, இந்த ஆறு பேரும் நம்பினார்கள். பா.ஜ.கவை விட்டு விலகுவதாகத் தீர்மானம் போடுவதற்கு முன்பாக, இது குறித்து பா.ஜ.கவின் தேசியத் தலைவர் நட்டாவை பார்த்துச் சொல்லிவிட்டு வரும்படி சிலரை டெல்லிக்கு அனுப்பினார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

அந்த அணியில் வேலுமணியும் இருந்தார். நட்டாவை சந்திக்கும்போது, "மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள், தோழமை தொடர்கிறது என்று சொல்லிவிட்டு இதுபோலப் பேசுவது நல்லதல்ல" என்று சொல்லிவிட்டு வந்தார்கள். ஆனால், எந்தப் பலனுமில்லை.

அப்படிச் சொல்லிவிட்டு வந்த நான்கு நாட்களில் தலைமைக் கழகத்தில் தீர்மானம் போட்டு, பா.ஜ.க. கூட்டணியைவிட்டு அ.தி.மு.க. வெளியேறியது. இதில் வேலுமணிக்கு உடன்பாடில்லை. ஆகவேதான், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு முதல் ஆளாக "பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்" எனப் பேட்டி கொடுத்தார்.

ஆகவே, முன்பே பா.ஜ.க. கூட்டணி இருக்க வேண்டுமென அவர் நினைத்திருப்பார். ஆனாலும் பொதுச் செயலாளர் ஒரு முடிவெடுத்துவிட்டால் அவர் வழியில் விட்டுவிடலாம் எனப் பேசாமல் இருந்திருப்பார். இப்படியாக, தலைமை ஒரு கணக்கைப் போட்டு, அது தவறாக முடிந்தால், இதுபோன்ற எதிர்ப்புக் குரல்கள் வரத்தான் செய்யும்.

"இன்னும் சில நாட்களுக்கு கூட்டணி தொடரட்டும். நாம் ஒரு பத்து தொகுதியில் வெல்லலாம். இரண்டு மந்திரி பதவிகளைப் பெறலாம் என்று நான் அப்போதே சொன்னேன். இப்போது இப்படியாகிவிட்டது" என வேலுமணி பேசுவாரா, மாட்டாரா?

அ.தி.மு.க. நான்கு இடங்களில் வெற்றி பெற்று, 26 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தால் இந்த ஆறு பேரும் போய் சந்தித்திருக்க மாட்டார்கள். தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்தால் எவ்வளவு நாளுக்குத்தான் பொறுமையாக இருப்பார்கள்?

கட்சிப் பிளவுக்கும் படுதோல்விக்கும் என்ன தொடர்பு?

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: 2019ஆம் ஆண்டு தேர்தலையும் 2024ஆம் ஆண்டு தேர்தலையும் ஒப்பிட்டால், கூடுதலாகப் பிரிந்து சென்றிருப்பது ஓ. பன்னீர்செல்வம் மட்டும்தான். ஆகவே, அவருடைய பிளவு இவ்வளவு பெரிய தோல்வியை ஏற்படுத்திவிட்டதா?

பதில்: அப்படித் தனிப்பட்ட முறையில் எந்தப் பிளவையும் குறிப்பிட வேண்டியதில்லை. அ.தி.மு.கவுக்கு வாக்களிக்கும் தொண்டர்கள், கீழ்மட்ட நிர்வாகிகள் சோர்வடையாமல் இருப்பதுதான் முக்கியம்.

தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும்போது ஜெயலலிதா பொதுக்குழுவைக் கூட்டுவார். "நீங்கள் சென்று வேலையைப் பாருங்கள், கூட்டணியைப் பற்றி, வேட்பாளரைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்" என்பார். தான் சொன்னபடியே செய்வார். எடப்பாடி கே. பழனிச்சாமியும் சொன்னார். ஆனால், சொன்னபடி எதுவும் நடக்கவில்லை.

கட்சி பிளவுபட்டிருக்கிறது. கூட்டணிக்கும் யாரும் வரவில்லை. இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்துவிட்டோமே என்று தொண்டர்களும் சோர்ந்துவிட்டார்கள். தொண்டர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என இரண்டாம் மட்டத் தலைவர்கள் இப்போது களத்தில் இறங்குகிறார்கள்.

"இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. நாற்பது தொகுதிகளிலும் தோற்றாலும் பரவாயில்லை, ஆனால், வாக்கு சதவீதம் குறைந்தால் எடப்பாடிக்கு எதிராகக் கலகக் குரல் எழும்பும்" என தேர்தலுக்கு முன்பே குறிப்பிட்டேன். அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் இவ்வளவு பெரிய தோல்வியைத் தாங்க மாட்டார்கள் என்று சொன்னேன்.

இந்த ஆறு பேருக்கும் அடிப்படைத் தொண்டர்களின் உணர்வு இருக்கவும்தான் சென்று பேசியிருக்கிறார்கள். "சசிகலாவால் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், ஆனாலும் சொல்கிறோம் எல்லோரும் ஒன்றாக இருங்கள்" என்றிருக்கிறார்கள். "நீங்கள் விலகிக் கொள்ளுங்கள், பதவியை சசிகலாவுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. அதற்கான கட்டம் இன்னும் வரவில்லை. இப்போதைக்கு ஒற்றுமையாக இருப்போம்" என்கிறார்கள்.

சோர்வடைந்த தொண்டர்களின் நிலைமை

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், FACEBOOK

கேள்வி: பிரிந்திருப்பவர்களில் டிடிவி தினகரனும் ஓ. பன்னீர்செல்வமும் தேர்தலைச் சந்தித்தார்கள். ஆனால், தொண்டர்களின் வாக்குகளை அவர்களும் பெறவில்லையே...

பதில்: அந்த வாக்குகள் எங்கெங்கோ சென்றுவிட்டன. நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் உயர்ந்திருக்கின்றன. பா.ஜ.கவின் வாக்குகள் உயர்ந்திருக்கின்றன. இதைத் தடுத்து அ.தி.மு.கவின் வாக்குகளை உயர்த்தியிருக்க வேண்டும். தொண்டர்கள் வாக்களிப்பது மட்டுமல்ல, அவர்கள் மற்ற வாக்காளர்களையும் திரட்டி வர வேண்டும். அந்தத் தொண்டனைச் சோர்வடையச் செய்துவிட்டால் வாக்கு எப்படி வரும்? இந்த நிலையிலிருந்து மீளத்தான் இந்த முயற்சி. எடப்பாடி புரிந்துகொள்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

கேள்வி: பிரிந்திருக்கக்கூடிய மூன்று பேரில் ஓ. பன்னீர்செல்வம் மட்டும்தான் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்கிறார். மற்ற இருவரும் எடப்பாடி கே. பழனிச்சாமியைக் கடுமையாகத்தான் விமர்சிக்கிறார்கள். பிறகு எப்படி எல்லோரும் இணைய முடியும்?

பதில்: பிரிந்திருக்கும்போது அப்படித்தான் பேசுவார்கள். இதைவிடக் கடுமையாகக்கூட பேசுவார்கள். இணையப் போகிறோம் என்று சொன்னால், இதையெல்லாம் மறந்துதான் ஆக வேண்டும். எனக்குப் பிறகும் இந்தக் கட்சி 100 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அதில் முதல் படியையாவது எடுத்து வைக்க வேண்டுமென்றால், பெருந்தன்மையோடு இந்த விஷயத்தை அணுக வேண்டும். எந்தக் கூட்டணியில் இதுபோன்ற பிரச்னையில்லை?

மு. கருணாநிதி காங்கிரசை ஒரு கட்டத்தில் “கூடா நட்பு” என்றார். ஆனால், இப்போது அதே அறிவாலயத்தில் கூட்டம் போட்டு, ராகுல் காந்தியை பிரதமர் என்கிறார் மு.க. ஸ்டாலின். “கூடா நட்பு” என்ற வாசகத்தை நினைவில் வைத்திருந்தால், அந்த நட்பு தொடர்ந்திருக்குமா? எல்லா கட்சியிலும் இதெல்லாம் உண்டு. அ.தி.மு.கவில் மட்டும் அப்படியிருக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

அ.தி.மு.கவில் அடித்துக்கொண்டார்கள் என்பது உண்மைதான். அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு ஒன்றாக இருக்க வேண்டும் எனத் தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: முன்பு பேசியது சரி, இணைப்பிற்கான முயற்சிகள் நடப்பதாகச் சொல்லும்போதும் எதிர்த் தரப்பு இப்படிப் பேசுகிறதே...

பதில்: திங்கட்கிழமை சந்திப்பு நடந்த பிறகு அப்படி ஏதும் பேசியிருக்கிறார்களா? ஒரு மயான அமைதி நிலவுகிறது.

கேள்வி: சி.வி. சண்முகம் சசிகலாவை மிகக் கடுமையாகப் பேசியவர். சசிகலா மீண்டும் கட்சிக்குள் வரும்போது தன்னுடைய நிலையைப் பற்றி அவர் யோசிக்க மாட்டாரா?

பதில்: சி.வி. சண்முகத்தின் சமீபத்திய கடந்த காலத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு முன்பாக, சசிகலாவின் வீட்டு வாசலில் நின்று “அம்மா, சின்னம்மா” என்று சொன்னது யார், இதே சி.வி. சண்முகம்தானே... “நான் பழசை நினைத்துப் பார்த்திருந்தால், காளிமுத்துவை கட்சியில் சேர்த்திருப்பேனா?” என்றார் ஜெயலலிதா.

“நான் பழைய மனப்பான்மையில் இருந்தால் பரிதியை கட்சியில் சேர்த்திருப்பேனா?” என்றார் ஜெயலலிதா. மக்கள் செல்வாக்கு மிக்க ஜெயலலிதாவே இறங்கி வந்து இவர்களையெல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டார். எடப்பாடி கே. பழனிச்சாமி ஜெயலலிதாவைவிட பெரிய ஆளா என்ற கேள்வி இனி ஒலிக்காதா?

கேள்வி: இந்த ஆறு முன்னாள் அமைச்சர்களின் சந்திப்பு ஒரு பக்கமிருக்க, கே.சி. பழனிச்சாமி, ஜே.சி.டி. பிரபாகர், புகழேந்தி ஆகியோர் சில இணைப்பு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அது என்ன ஆனது? எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு இந்த இணைப்பு முயற்சியில் விருப்பம் இல்லை என்றே வைத்துக்கொண்டாலும், மற்றவர்களும் இதில் ஆர்வம் காட்டியதைப் போலத் தெரியவில்லையே...

பதில்: அவர்கள் என்ன முயற்சி செய்தார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய நல்ல எண்ணத்தைப் பாராட்டலாம். அவர்களது முயற்சியைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர்களால் மட்டுமே இது நடக்குமென நான் நம்பவில்லை. கட்சியைத் தன் வசம் வைத்திருக்கும் எடப்பாடியிடம் மனமாற்றம் வரவேண்டும்.

சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு என்ன நினைக்கிறார்கள்?

அதிமுகவை ஒன்றுசேர்க்க முயலும் 6 முன்னாள் அமைச்சர்கள் - எடப்பாடி பழனிச்சாமியிடம் நடத்திய பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

கேள்வி: சசிகலா, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தவர்கள் அல்லது தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள். ஆகவே அவர்கள் மீண்டும் கட்சிக்குள் வரும்போது தனது நிலைமை என்ன ஆகும் என்பது குறித்து எடப்பாடி கே. பழனிச்சாமி தயங்குவதில் ஆச்சரியமில்லையே...

பதில்: உண்மைதான். தயக்கம் இருக்கும். 2026இல் முதல்வர் வேட்பாளர் தாம்தான் என்று நினைத்திருந்திருப்பார். அந்த நிலை மாறிவிடுமோ என்று தயங்குவார். அதனால்தான் எடப்பாடி கே. பழனிச்சாமி மௌனமாக இருக்கிறார்.

இந்தத் தயக்கத்தைப் போக்குவது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. முதல்வர் வேட்பாளராக இருப்பதை விட்டுக்கொடுங்கள் எனச் சொல்லலாம், அல்லது முதல்வர் வேட்பாளராக இருந்துகொண்டு கட்சிப் பதவியை விட்டுக்கொடுங்கள் என்று சொல்லலாம். இதற்கான தீர்வைச் சொல்லும் நிலையில் நாம் இல்லை. அவர்கள்தான் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஆனால், எடப்பாடி வெகு நாட்கள் இதே உறுதியோடு இருக்க முடியாது. ஏனென்றால், இதுபோல நினைப்பவர்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே போகும். அதைப் படிக்க எடப்பாடி தவறுகிறார்.

கேள்வி: ஆறு முன்னாள் அமைச்சர்கள் சந்தித்த பிறகு, சசிகலா, டிடிவி தினகரன் தரப்பு என்ன நினைக்கிறார்கள்?

பதில்: அவர்கள் இப்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எடப்பாடி கே. பழனிச்சாமியின் மனதில் ஒரு மாற்றம் வரவேண்டும். அதுதான் முதல் படி. அது நடக்காத வரை யாரும் பேச மாட்டார்கள். இவர்கள் எல்லோருமே ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள்தான். ஒருவருக்கு இருக்கும் தகுதி மற்றவர்களுக்கும் இருக்கிறது. யாரும் யாரையும் குறைத்து மதிப்பிட முடியாது.

கேள்வி: எடப்பாடி கே. பழனிச்சாமி வெற்றி பெற்றாரோ, தோல்வியடைந்தாரோ அதெல்லாம் ஒருபுறமிருக்க அவர் தலைமையில் கட்சி தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது...

பதில்: இந்த இடத்தை யார் கொடுத்தது? 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ. பன்னீர்செல்வம்தானே கட்சியின் ஒருங்கிணைப்பாளர்? தேர்தல் நெருங்கியபோது, அமைச்சர்கள் அவருடைய வீட்டிற்குச் சென்று, எடப்பாடி கே. பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என இரண்டு நாட்கள் போராடினார்கள். எல்லோருமே தவறு செய்தவர்கள்தான். அந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கேள்வி: எல்லோரும் ஒன்றாக இணையும்பட்சத்தில் உள்ளே வருபவர்களின் இடம் என்னவாக இருக்கும்?

பதில்: ஒவ்வொருவரும் தங்களுக்கு உரிய இடத்தைப் போராடிதான் பெற வேண்டும். எடப்பாடி போராடினார், வெற்றி பெறவில்லை. இன்னொரு தோல்வியை அண்ணா தி.மு.க. தொண்டர்கள் எதிர்கொள்ளத் தயாராக இல்லை. எடப்பாடி கே. பழனிச்சாமி இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)