அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கார்ட்டணி சுப்பிரமணியன்
    • பதவி, நியூ ஆர்லியன்ஸ் மற்றும் வாஷிங்க்டன் டி.சி.யில் வழங்கிய செய்தி

சனிக்கிழமை மதியம் நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற கறுப்பினக் கலாசார நிகழ்வு மேடையில் கலந்துகொண்ட அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவரது வாழ்க்கை மற்றும் வெள்ளை மாளிகையில் சாதித்தவை குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

முதல் பெண், கறுப்பின மற்றும் தெற்கு ஆசிய துணை அதிபரான கமலா ஹாரிஸ் தனது பொறுப்புக் காலமான கடந்த மூன்றரை ஆண்டுகளில் இத்தகைய நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்து வருகிறார்.

பொது நிகழ்வுகள் மற்றும் டிரம்புக்கு எதிரான விவாதம் என 81 வயது அதிபர் ஜோ பைடன் தொடர்ந்து தடுமாறி வரும் சூழலில் ஜனநாயகக் கட்சியினர் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸை மாற்று வேட்பாளராக அறிவிக்க ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

சறுக்கும் பைடன் - கமலா ஹாரிஸுக்கு பெருகும் ஆதரவு?

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

ப்கறுப்பின கலாசார நிகழ்வு மேடை மற்றும் கடந்த ஒரு வார காலமா பயணம் மேற்கொண்டு வரும் துணை அதிபர், அதிபர் பைடனின் உடல்நலம் மற்றும் தேர்தலில் இருந்து அவர் பின்வாங்கி, கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனப் பொதுவாக எழுந்து வரும் கேள்விகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஆனால், மாறாக நியூ ஆர்லியன்ஸ் பார்வையாளர்கள் இடையே லட்சியம் மற்றும் வெற்றிக்கான பாதையை உருவாக்குவது எப்படி என்பது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், எதிர்ப்பாளர்களின் விமர்சனங்களுக்குச் செவிசாய்த்து அவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் கூட்டத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

'இது உன் நேரம் அல்ல, இது உன் முறை அல்ல, இதற்கு முன் உன்னைப் போல் யாரும் செய்ததில்லை என உங்கள் வாழ்வில் சிலர் கூறுவார்கள். ஆனால், அவர்கள் சொல்வதை எல்லாம் நீங்கள் கேட்காதீர்ட்கள்' என ஹாரிஸ் மக்கள் முன்பாகப் பேசினார்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்த மோசமான சி.என்.என் விவாதத்தில் இருந்து பைடனை தொடர்ந்து பாதுகாக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறார் இவர். மேலும், அதிபரின் சாதனைகளை வெறும் 90 நிமிட விவாத மேடை நிகழ்வை வைத்து எடை போட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

அதிபர் பைடனும் தாம் இந்தத் தேர்தலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

ஹாரிஸ் பெயரை முன்மொழியும் ஜனநாயகக் கட்சியினர்

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் பைடன் இந்தத் தேர்தலில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிபர் பைடன் விலக வேண்டும் என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் இந்நேரத்தில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பு வகிக்கும் சில உறுப்பினர்களும் 59 வயது கமலா ஹாரிஸை மாற்று வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என அணிதிரண்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிறு அன்று என்.பி.சி நிகழ்ச்சியில் பங்கெடுத்த கலிஃபோர்னியாவை சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் ஆடம் சிஃப், ஒன்று அதிபர் பைடன் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும் அல்லது வேறொரு நபருக்கு வழிவிட வேண்டும்.

கமலா ஹாரிஸ் டிரம்புக்கு எதிராக மிகச் சிறப்பாகப் பேராதரவுடன் வெற்றி பெறுவார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2020ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியின் தேர்தல் நியமனத்தில் தோல்வி அடைந்தது, வெள்ளை மாளிகையில் தனது பதவிக் காலத்தில் குறைவான ஆதரவு என கமலா ஹாரிஸ் மீது பல விமர்சனங்கள் இருந்த போதிலும் பைடன் ஆதரவாளர்கள் உட்பட இந்தக் கருத்து ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளது.

ஜனநாயகக் கட்சியின் வழக்கறிஞரான சிஃப் மற்றும் தெற்கு கரோலினா காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் கிளைபர்ன் போன்றவர்கள் மாற்று வேட்பாளராக ஹாரிஸை அறிவிக்க வேண்டும் எனக் கூறி வருவது, பைடனுக்கு கட்சி சார்ந்த அழுத்தமாக உருவாகியுள்ளது.

துணை அதிபருக்கு அதிகரிக்கும் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

ஆதரவாளர்கள், டொனால்ட் டிரம்புக்கு எதிராக அதிபர் பைடனை காட்டிலும் ஹாரிஸ் சிறந்த போட்டியாக அமைவார் என வெளியான சில கருத்துக்கணிப்பு முடிவுகளைச் சுட்டிக்காட்டி வருகின்றனர். அதோடு கமலா ஹாரிஸின் தேசிய அளவிலான நற்பெயர், பிரசார உள்கட்டமைப்பு மற்றும் இளம் வாக்காளர் மத்தியில் கவன ஈர்ப்பு கொண்டிருப்பதால், தேர்தல் நடக்கவிருக்கும் நான்கு மாதத்திற்கு முன் இந்த மாற்றம் தங்கு தடையற்றதாக அமையும் எனவும் வாதிட்டு வருகின்றனர்.

அனைத்திற்கும் மேலாக பெண் ஒருவருக்கு இந்த வாய்ப்பை அளிப்பது சிறந்த திருப்புமுனையாக அமையும் என பைடனின் வெள்ளை மாளிகையில் கருத்து நிலவுகிறது.

அதிபர் பைடனும்கூட ஹாரிஸுடன் சேர்ந்து பணியாற்றத் துவங்கிய ஆரம்பக் காலத்தில், தலைவர் ஆவதற்கான பண்புகளைத் துணை அதிபர் வளர்த்து வருவதாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

குறைத்து மதிப்பிடப்படும் கமலா ஹாரிஸ்?

நீண்டகால ஜனநாயகக் கட்சி வியூக வகுப்பாளர் மற்றும் ஹாரிஸின் செய்தித் தொடர்பு இயக்குநரான ஜமால் சைமன்ஸ், கமலா ஹாரிஸ் நீண்ட காலமாகக் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் கூறியுள்ளார்.

பிபிசியிடம் பேசிய சைமன்ஸ், 'அதிபருடன் சேர்ந்து பணியாற்றும் போதும், தனியாகத் தலைமை வகிக்கும்போதும், குடியரசுக் கட்சியினர் மற்றும் டிரம்ப் பிரசாரக் குழுவினர் கமலா ஹாரிஸை எளிதாக மதிப்பிட்டுவிடக் கூடாது' எனக் கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

பைடன் விசுவாசி கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ், சி.என்.என் விவாதம் மற்றும் அதன் விளைவுகளுக்குப் பிறகு, அவரது அட்டவணையை மாற்றியமைத்து அதிபருடன் நெருக்கமாகப் பயணித்து வருகிறார்.

கடந்த புதன் அன்று அதிபர் பதவிக்குப் போட்டியிடத் தனது ஆரோக்கியத்தை உறுதி செய்ய பைடன் ஜனநாயகக் கட்சியின் முக்கிய ஆளுநர்கள் முன்னிலையில் சந்திப்பு நடத்தியபோது அதிபரோடு ஹாரிஸும் உடன் இருந்தார்.

அதன் பிறகு ஒரு நாள் கழித்து, ஜூலை நான்காம் நாள் - அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று - எப்போதும் தனது லாஸ் ஏஞ்சல்ஸ் இல்லத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ரகசிய சேவை முகவர்களுக்காக ஹாட்-டாக்ஸ் சமைப்பதைப் பாரம்பரியமாகக் கொண்டிருந்த கமலா ஹாரிஸ், அதை இந்த ஆண்டு தவிர்த்து அதிபர் பைடனுடன் வெள்ளை மாளிகைக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

டிரம்ப்பை கடுமையாக விமர்சிக்கும் ஹாரிஸ்

விவாவதத்திற்குப் பிறகு முன்னாள் வழக்கறிஞரான ஹாரிஸ் தனது பொதுப் பிரசாரங்களில் டிரம்பை கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளார். முக்கியமாக டிரம்ப் ஜனநாயகம் மற்றும் பெண் உரிமைக்கான அச்சுறுத்தல் என்பது குறித்து வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அழுத்தமாகப் பதிவு செய்து வரும் இவர், அதே நேரம் அதிபர் பைடனுக்கு உறுதியான ஆதரவையும் அளித்து வருகிறார் இவர்.

துணை-அதிபர்கள் எப்போதும் தங்கள் லட்சியம் மற்றும் விசுவாசத்தில் ஒரு நுட்பமான சமநிலையைக் கொண்டிருப்பார்கள். ஆனால், கமலா ஹாரிஸ் இது தனக்கான நேரம் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளார். அதோடு, தனக்கும் அதிபருக்கும் நடுவே இடைவெளி ஏற்படாமலும் பார்த்துக் கொள்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் கமலா ஹாரிஸை 'பரிதாபகரமானவர்' எனக் கூறி வருகிறார்.

மாற்று வேட்பாளராக முன்வைக்கப்படும் பிற நபர்கள் யார்?

இருப்பினும், பைடனுக்கு மாற்றாக கலந்தாலோசிக்கப்படும் நபர்களின் பட்டியலில் கமலா ஹாரிஸ் மட்டுமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம். இவருடன் பல பிரபல ஆளுநர்களான மிச்சிகனின் கிரெட்சன் விட்மர், கலிஃபோர்னியாவின் கவின் நியூசம், பென்சில்வேனியாவின் ஜோஷ் ஷாபிரோ, இல்லினாயின் ஜே.பி.பிரிட்ஸ்கார், கலிஃபோர்னியாவின் காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா, போக்குவரத்துச் செயலாளர் பீட் புட்டிகீக் போன்றவர்களும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

ஹாரிஸ் மற்றும் அவரது ஊழியர்கள் பொது இடங்களில் இந்த விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தாலும், இவரது அணியினர் திரைக்குப் பின்னணியில் இது சார்ந்த கலந்துரையாடல்கள் குறித்து முனைப்புடன் கவனித்து வருகின்றனர்.

கமலா ஹாரிஸை சுற்றி ஒலிக்கும் குரல்கள்

கமலா ஹாரிஸை தவிர்த்து வேறு யாரைத் தேர்ந்தெடுத்தாலும், அது இந்தப் பிரசாரத்தை ஒழுங்கற்ற நிலைக்குத் தள்ளும் மற்றும் இது ஊடகங்களில் சில மாதங்களுக்கு 'ஜனநாயக சச்சரவை' ஏற்படுத்தும் என வாதிடப்படுகிறது.

ஒருவேளை அதிபர் பைடன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றால், ஜனநாயகக் கட்சியினர் ஹாரிஸை கடந்து வேறொரு வேட்பாளரைத் தேர்வு செய்ய முற்பட்டால், அது கட்சிக்குள் திகைப்பை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், 'இந்தக் கட்சி எந்த வகையிலும் கமலா ஹாரிஸை சுற்றி எந்த வேலையும் செய்யக்கூடாது' என கறுப்பின முக்கிய வழக்கறிஞரான க்ளைபர்ன் கடந்த வாரம் எம்.எஸ்.என்.பி.சி-யிடம் தெரிவித்திருந்தார்.

குடியரசுக் கட்சியினர், பைடனுக்கு பதிலாக அதிபர் தேர்தலில் போட்டியிட ஹாரிஸ் முன்னோடியான தேர்வாக இருப்பார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

‘ஹாரிஸ் வீரியம் மிக்க வேட்பாளர்’ - தென் கரோலினா செனட்டர் கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஞாயிறு அன்று தென் கரோலினாவின் செனட்டர் லிண்ட்ஸே கிரகாம், 'கமலா ஹாரிஸ் போட்டியிடும் பட்சத்தில் இந்தத் தேர்தல் வியத்தகு வகையில் அமையும்', எனவும் 'ஹாரிஸ் ஒரு வீரியம் மிக்க வேட்பாளராக இருப்பார்' எனவும் குடியரசுக் கட்சியினருக்கு ஓர் எச்சரிக்கையாகக் கூறியிருந்தார்.

இடதுசாரி கொள்கைகள் கொண்ட பெர்னி சாண்டர்ஸ் உடன் ஒத்துப் போவதில் ஜோ பைடனைவிட கமலா ஹாரிஸ் மிக நெருக்கமாக இருப்பார். இதனால் குடியரசுக் கட்சியினர், இவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் இக்காரணத்தை முன்வைத்துப் பிரசாரத்தில் நேரடியாகத் தாக்க வாய்ப்புகள் உண்டு என கிரகாம் கூறுகிறார்.

டொனால்ட் டிரம்ப் தனது விவாதத்திற்குப் பின்னர், கமலா ஹாரிஸை 'பரிதாபகரமானவர்' எனக் கூறி வருகிறார்.

பைடனை முந்தும் கமலா ஹாரிஸ்

அனைத்திற்கும் மேலாக, ஜோ பைடனை காட்டிலும் டிரம்பை வீழ்த்தும் வாய்ப்பு ஹாரிஸுக்கு அதிகம் உள்ளதா என்பதே ஜனநாயகக் கட்சியினரிடம் இருக்கும் பெரிய கேள்வி.

ஹாரிஸின் ஆதரவாளர்கள் சி.என்.என் கருத்துக்கணிப்பைச் சுட்டிக்காட்டி, வரும் நவம்பரில் அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட இவர் சிறந்த தேர்வு எனப் பரிந்துரை செய்து வருகின்றனர்.

நேருக்கு நேர் போட்டியிடும் விதத்தில் வைத்துப் பார்க்கும்போது, குடியரசுக் கட்சி வேட்பாளரைவிட வெறும் இரண்டு புள்ளிகள் மட்டுமே ஹாரிஸ் பின்தங்கியுள்ளார். ஆனால், பைடன் ஆறு புள்ளிகள் பின்தங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

மேலும், இந்தக் கருத்துக்கணிப்பு நடுநிலை மற்றும் பெண் வாக்காளர்களிடையே பைடனை காட்டிலும் ஹாரிஸ் சிறந்து செயற்பட வாய்ப்பு உள்ளதாகப் பரிந்துரைக்கிறது.

ஆனால், பல கருத்துக்கணிப்பு வல்லுநர்கள் இதற்கு எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவர்கள் கூறுவது என்னவெனில், ஜனநாயகக் கட்சி வேறு வேட்பாளரை நோக்கிச் செல்லும்போது, அது வாக்காளர்களின் உணர்வுகளில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனநாயகக் கட்சி கருத்துக் கணிப்பாளர் கூறுவது என்ன?

பைடனுக்கு நெருக்கமான ஜனநாயகக் கட்சி கருத்துக்கணிப்பாளர் ஒருவர், பைடனை காட்டிலும் ஹாரிஸ் வேட்பாளராக நின்றால் கட்சி அதிக வாக்கு பெறச் சாத்தியம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த வித்தியாசம் எந்தளவு இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதாகக் கூறும் இவர் இதுகுறித்து ஊடகங்களிடம் பேச அங்கீகாரம் அளிக்கப்படாத காரணத்தால் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் இடையே கமலா ஹாரிஸின் வெற்றி வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு குறைவாக இருக்கிறது.

இந்திய தாய் மற்றும் ஜமைக்கன் தந்தைக்குப் பிறந்தவரான கமலா ஹாரிஸ் பைடனை காட்டிலும் கறுப்பின, லத்தீன் மற்றும் இளம் வாக்காளர்கள் இடையே சிறந்து செயலாற்றுவார் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இவர் வேட்பாளராக அமையும் பட்சத்தில் முக்கியத் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மேலும், இளம் வெள்ளை வாக்காளர் இடையே எந்தளவு இவர் தாக்கம் ஏற்படுத்துவார் என்பது மற்றொரு முக்கியக் கேள்வியாக எழுகிறது. ஆகவே, காத்திருந்து பார்க்க வேண்டிய சூழ்நிலையாகத்தான் இது அமைகிறது என கருத்துக்கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கட்சியைச் சேர்ந்த சிலரும், ஒருவேளை ஹாரிஸ் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டால், கடும் போட்டி நிலவும் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர்கள் வாக்குகளை இழக்கக்கூடும் எனக் கருதுகின்றனர்.

இங்கே பைடன் 2020இல் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வென்றார் மற்றும் இவ்விடங்களில் வெல்வது வரும் நவம்பர் தேர்தலில் வெற்றி பெற முக்கியம்.

கமலா ஹாரிஸை காட்டிலும் மத்திய மேற்கு மாநிலங்களில் மையவாத வாக்குகளைப் பெற பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷபிரோ அல்லது வட கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் போன்றவர்களை வேட்பாளராகத் தேர்வு செய்யலாம் என்றும் சில ஜனநாயகக் கட்சியினர் பரிந்துரை செய்கின்றனர்.

டிரம்ப் - பைடன், இருவரையும் நிராகரிக்கும் அமெரிக்கர்கள்

ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவரின் வயதையும் அடிப்படையாகக் கொண்டு, ஒரு தரப்பு வாக்காளர்கள் இரு கட்சிகளின் துணை அதிபர் வேட்பாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாக செலிண்டா லேக் கூறுகிறார். இவர் 2020இல் பைடனின் பிரசாரத்தில் பணியாற்றிய ஜனநாயகக் கட்சி கருத்துக்கணிப்பாளர்.

குடியரசுக் கட்சி, இதுவரை டிரம்ப் துணை அதிபர் வேட்பாளர் யார் என்று குறிப்பிடவில்லை. எனினும், டிரம்ப் வடக்கு டகோட்டாவின் ஆளுநர் டக் பர்கம் அல்லது ஒஹையோ செனட்டர் ஜே.டி.வான்ஸ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமலாவுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகள்

சில ஜனநாயகக் கட்சியினருக்கு, அதிபர் வேட்பாளராக ஹாரிஸ் வலிமையாகத் தென்பட்டாலும், 2020இல் அவர் கட்சி நியமனத்தின்போது அடைந்த தோல்வியானது பெரும் கவலையாக முன் நிற்கிறது.

விமர்சகர்கள், ஒரு வேட்பாளராகத் தன்னை நிலைநிறுத்தவே ஹாரிஸ் தடுமாறுவதாகக் கூறுகின்றனர். மேலும், வெள்ளை மாளிகையில் இவரது துவக்கம் தடுமாற்றத்துடன் இருந்தது, குறைவான ஆதரவு போன்றவையும் முக்கியக் காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

அமெரிக்க தெற்கு எல்லையில் இடம்பெயர்தலைக் குறைக்க நிர்வாகத் திட்டங்களில் இவரது தலையீடு, கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகரிக்கச் செய்தது, இந்த பிரசாரத்தின் முக்கியப் பிரச்னையாக எழுந்துள்ளது.

ஆரம்பக் காலங்களில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் இவர் பொதுவெளிகளில் தோன்றும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட உந்தியது. ஆனால், பல வாக்காளர்கள் இதை இவரது செயலற்ற தன்மையாக உணர்ந்தனர்.

'மக்கள் இவரைப் பற்றி இன்னமும் நிறைய தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், ஹாரிஸ் என்ன பொருளாதாரப் பிரச்னைகளைக் கையாள்வதில் வலுவாக இருக்கிறார், இவர் ஆற்றிய பங்கு குறித்து நினைவுபடுத்த வேண்டும்' எனவும் லேக் கூறுகிறார்.

பெண்கள் மற்றும் இளம் வாக்காளர்களை ஈர்த்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஓராண்டில், கமலா ஹாரிஸ் கருக்கலைப்பு உரிமையில் நிர்வாகத்தின் முன்னணிக் குரலாக ஒலித்தார். இதன் மூலம் ஜனநாயகக் கட்சியினர் 2022ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலின் வெற்றி மற்றும் வரும் நவம்பர் மாதத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் முனைப்புக்கு வலு சேர்த்துள்ளது.

முன்னாள் வழக்கறிஞராகப் பாலியல் வன்முறை வழக்குகளைக் கையாண்ட இவர், பல்வேறு காரணங்களால் கருக்கலைப்புக்கு ஆளான பெண்களின் உண்மைக் கதைகளை வெளிக்கொண்டு வந்தார். இவர் இந்தப் பிரச்னையைச் சுற்றி வாக்காளர்களைத் திரட்ட முயன்றார்.

மேலும் பிரசாரத்தின்போது, இளம் வாக்காளர்களை ஈர்க்கும் வகையில், மாணவர் கடன் தள்ளுபடி, காலநிலை மாற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறை போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசினார். ஆகவே, வெள்ளை மாளிகையும் இவரது முயற்சிகளை ஊக்குவித்தது

குறைவான ஆதரவு விகிதம் பெற்றுள்ள கமலா ஹாரிஸ்

ஃபைவ்தெர்டிஎய்ட் வெளியிட்ட அறிக்கையில் இவருக்கான ஆதரவு வெறும் 37% மட்டுமே இருந்ததால், ஹாரிஸ் மீது வாக்காளர்களுக்கு இன்னமும் சந்தேகம் வலுக்கச் செய்கிறது. ஆயினும் இந்த சதவீதம் பைடன் மற்றும் டிரம்ப் உடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ சமமாகவே இருக்கிறது.

அதோடு அதிகரித்து வரும் கட்சி அழுத்தம் காரணமாக பைடன் வேட்பாளர் நிலையில் இருந்து விலகாவிட்டால், ஜனநாயகக் கட்சியின் அடிமட்ட ஆதரவாளர்கள் அவர்களாகவே பைடனை ஆதரிப்பதில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்படலாம்.

கமலா ஹாரிஸ் மீதான பொதுமக்கள் கருத்து என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தல்: பைடனுக்கு பதிலாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் டிரம்பை வீழ்த்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

நியூ ஆர்லியன்ஸில் நடைபெறும் எசன்ஸ் திருவிழாவில் நியூ ஆர்லியன்ஸ் சேர்ந்த 41 வயது சிறு தொழில் உரிமையாளர் அயம் கிறிஸ்டியன் டக்கர் என்பவர் யார் வேட்பாளராக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை எனக் கூறுகிறார்.

தாம் கமலா ஹாரிஸ் மீது விருப்பம் கொண்டிருப்பதாகவும், இருப்பினும் ஒரு கறுப்பினப் பெண் தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகம்தான் என்றும் கருதுகிறார் இவர். எதுவாக இருந்தாலும் "நான் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்க உள்ளேன்" என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் மேடிசன், விஸ்கான்சினில் நடைபெற்ற அதிபர் பைடனின் பேரணியில் பங்கெடுத்த 67 வயது கிரெக் ஹோவல் 2020ஆம் ஆண்டே தான் ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து இருந்ததாகவும், தான் அவரது ரசிகர் எனவும் கூறினார்.

இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான உணர்வுகள் அதிகம் உள்ளதாகக் குறிப்பிட்ட ஹோவல், கமலா ஹாரிஸ் ஒரு சிறந்த அதிபராக இருப்பார் எனக் கருதுவதாகவும் கூறினார். மேலும், பைடன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் அதிகம் இருப்பதாகத் தாம் கருதுவதாக ஹோவல் கூறியுள்ளார்.

கூடுதல் தகவல்கள்: மேடிசன், விஸ்கான்சினில் இருந்து மைக் வெண்ட்லிங்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)