இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? கோலி, ரோகித், ஜடேஜா இடத்துக்கு யார் வரலாம்?

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரோகித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 பேர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர்
    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக் கோப்பை எனும் பெரிய அலை ஓய்ந்தபோது, பல அணிகளையும் கலைத்துப்போட்டுள்ளது. பல அணிகளில் தலைமை மாற்றம், வீரர்கள் நீக்கம், அமைப்புரீதியாக மாற்றம் என பல சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது. சில வெற்றிடங்களையும் உருவாக்கியுள்ளது.

இந்த டி20 உலகக் கோப்பை முடிந்தபின்பு இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 ஆளுமைகள் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த 3 பேரும் டி20 கிரிக்கெட்டில், இந்திய டி20 அணியில் ஏற்படுத்திய தாக்கம் சிறிதல்ல. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிக்காகவே இந்திய அணிக்குள் அறிமுகமானவர். 159 டி20 போட்டிகளில் விளையாடிய ரோஹித் சர்மா 4231 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 5 சதங்கள், 32 அரைசதங்கள் அடங்கும். 32 ரன்கள் சராசரியும், 140 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

2-ஆவது இடத்தில் விராட் கோலி, 125 டி20 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்களும், ஒருசதம், 38 அரைசதங்களை விளாசியுள்ளார். 48 ரன்கள் சராசரியும், 137 ஸ்ட்ரைக் ரேட்டும் கோலி வைத்துள்ளார். பேட்டிங்கில் சாம்ராஜ்ஜியம் நடத்திய இருவரும் டி20 போட்டியில் இனிமேல் இல்லை.

சச்சின், கங்குலி, டிராவிட் ஓய்வுக்குப்பின் இந்திய அணி பெரிய சரிவுகளைச் சந்தித்து, பல போராட்டங்களுக்குப்பின் ஓரளவு தாக்குப்பிடிக்கும் வீரர்கள் உருவாகினர். அதுபோன்று இந்த இரு ஜாம்பவான்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இந்திய அணி சிலகாலம் போராட வேண்டியதிருக்கும்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஓய்வு அறிவிப்பால் அதிரவைத்த ஜோடிகள்

கடந்த காலங்களிலும் பல்வேறு அணிகளில் இதுபோன்று ஜாம்பவான்கள் திடீரென ஓய்வு அறிவித்தபின் அந்த அணி சிறிய சலசலப்பு, அதிர்வுக்குப்பின்புதான் இயல்புநிலைக்குத் திரும்பியது.

அந்த வகையில் 1984ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, கிரேக் சேப்பல், ரோட் மார்ஷ், 1991-ல் மேற்கிந்தியத்தீவுகளின் ரிச்சார்ட்ஸ், மால்கம் மார்ஷல், துஜான் ஒரு சேர ஓய்வு பெற்றனர்.

2007ல் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத், ஷேன் வார்ன், ஜஸ்டின் லாங்கர், பாகிஸ்தானில் யூனுஸ் கான், மிஸ்பா உல்ஹக், இந்திய அணியில் ராகுல் டிராவிட், கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகிய மும்மூர்த்திகளும் இந்திய அணியைவிட்டுச் சென்றனர்.

1992ல் இயான் போத்தம், ஆலம் லேம்ப், 1995ல் இங்கிலாந்தின் கிரஹாம் கூச், மைக் கேட்டிங், 2008ல் தென் ஆப்ரிக்காவின் ஷான் போலக், ஹெர்சலே கிப்ஸ், 2018ல் தென் ஆப்ரிக்காவின் ஏபிடி, மோர்கல், 2019ல் தென் ஆப்ரிக்காவின் ஹசிம் அம்லா, டேல் ஸ்டெயின் என பல ஜோடிகள் வெளியேறியபின் அணியில் பெரிய அதிர்வு ஏற்பட்டது.

அதேபோல ரவீந்திர ஜடேஜா 74 டி20 போட்டிகளில் விளையாடி 515 ரன்களும், 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் அதிகபட்சமாக 46 ரன்களும் 21 ரன்கள் சராசரியும், 127 ஸ்ட்ரைக் ரேட்டும் ஜடேஜா வைத்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் 29 சராசரியும், 7.9 எக்னாமியும் உள்ளது.

இதுபோன்ற குறைந்த போட்டிகளில் கடைசி நிலையில் களமிறங்கி இந்த அளவு ரன்கள் சேர்ப்பதும், விக்கெட்டுகளை வீழ்த்துவதும் கடினம். ஜடேஜா பேட்டர், பந்துவீச்சாளர் மட்டுமின்றி, தலைசிறந்த பீல்டர். இவர் இல்லாத நிலையில் ஜடேஜாவைப் போல் பந்துவீச்சு, தேவைக்கு ஏற்றபடி பேட்டிங் செய்யவும், பீல்டிங்கில் சுவர்போன்று நிலைத்திருக்கும் வீரரைத் தேடுவதும் கடினம்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

அடுத்த கேப்டன் யார்?

இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டபின் அணியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி, டி20 சாம்பியன் என இந்திய அணி சாதித்துக் காட்டியது. கேப்டனாக மட்டுமின்றி, தனது பேட்டிங்கிலும் ரோகித் சர்மா அணிக்கு ஏராளமான பங்களிப்பு செய்துள்ளார்.

ஆனால், டி20 சாம்பியனாக இந்திய அணி மாறியவுடன் ரோகித் சர்மா தனது டி20 ஓய்வை அறிவித்தார். அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் புதிய கேப்டனை நியமித்து அவரை அணியை வழிநடத்த பழக்க வேண்டும். அந்த வகையில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தார்போல் கேப்டன் பதவிக்கு 4 வீரர்கள் பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறது.

ஹர்திக் பாண்டியா

ரோஹித் சர்மா அணியில் கேப்டனாக இருந்தபோதே, துணைக் கேப்டனாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. ஆதலால், தானாகவே கேப்டன் பதவி ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்படவும் வாய்ப்புள்ளது.இருப்பினும், ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தால் அவதிப்படக்கூடியவர், கேப்டனாக இருக்கும் வீரர் நல்ல உடற்தகுதியுடன் காயத்தால் அடிக்கடி பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.

அந்த வகையில் ஹர்திக் பாண்டியா பெயர் பரிசீலிக்கப்பட்டாலும் அவரின் உடற்தகுதி அவருக்கு தடையாக மாறலாம். ஐபிஎல் டி20 தொடரில் குஜராத் அணியை வழிநடத்தி ஹர்திக் கோப்பையை வென்று கொடுத்து, மும்பை அணிக்கும் புதிய கேப்டனாக வந்துள்ளார். அந்த அனுபவம் ஹர்திக் பாண்டியாவுக்கு உதவலாம். ஹர்திக் பாண்டியாவுக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவும் இருப்பதால் அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டால் வியப்பில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

ஜஸ்பிரித் பும்ரா

இந்திய அணிக்கு புதிய கேப்டனாக பும்ரா பெயரை யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். அப்படி நடந்தால், அனில் கும்ப்ளேவுக்குப்பின் பந்துவீச்சாளர் ஒருவர் கேப்டனாக வருவார். அயர்லாந்துக்கு எதிராக ஏற்கெனவே பும்ரா கேப்டன்சி செய்து தொடரை வென்று கொடுத்துள்ளார்.

ஆனால், பந்துவீச்சுப் பணி, அடிக்கடி ஏற்படும் காயங்கள், உடற்தகுதி பிரச்சனைக்கு மத்தியில் கேப்டன் சுமையையும் பும்ராவால் ஏற்ற முயலுமா என்ற கேள்வியும் இருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தபடியாக, அவருக்கே போட்டியாக கேப்டன் பதவிக்கு வரக்கூடியவர் சூர்யகுமார் யாதவ். டி20 ஸ்பெஷலிஸ்ட் வீரரான சூர்யகுமார் 65 இன்னிங்ஸ்களில் 2,340 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்களில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு சூர்யகுமார் சிறப்பாகச் செயல்பட்டார். கேப்டனாக வருவதற்கான தேர்விலும் சூர்யகுமார் தேறிவிட்டார் என்பதால், இவரின் பெயரும் பரிசீலிக்கப்படலாம்.

சுப்மான் கில்

இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக சத்தமில்லாமல் பிசிசிஐ ஒருவீரரை உருவாக்கி வருகிறதென்றால் அது சுப்மான் கில்தான். ஜிம்பாப்வேவுக்கு எதிராக வரும் 6-ஆம் தேதி தொடங்கும் தொடருக்கு கேப்டனாக சுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக சுப்மான் கில் சிறப்பாகவே செயல்பட்டார்.

சுப்மான் கில் கேப்டன்சி நுணுக்கங்கள், முடிவுகள், சூழலுக்கு தகுந்தபடி எடுக்கும் விரைவான முடிவை பல முன்னணி வீரர்களும் பாராட்டினர். ரோஹித் சர்மாவுக்குப் பின் “போஸ்டர் பாய்” ஆக வலம்வரக்கூடிய தகுதி சுப்மான் கில்லுக்கு இருக்கிறது. கில்லின் கேப்டன்சி திறமை, பிராண்ட் மதிப்பு, பேட்டிங், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றால் அடுத்த கேப்டனுக்கு பரிசீலிக்கப்படலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

ரோஹித் சர்மா, கோலி இடத்துக்கு யார்?

இந்திய அணியில் டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா, கோலி களத்தில் இருந்தாலே எதிரணிகளுக்கு சிக்கல் ஏற்படும். இருவரில் ஒருவர் களத்தில் ஆங்கர் ரோல் செய்துவிட்டாலே ஸ்கோர் பற்றி கேட்கத் தேவையில்லை. இதில் இருவருமே ஆட்டமிழக்காமல் இருந்தால் எதிரணியின் நிலை பலவீனமாகிவிடும். இருவரும் மிகப்பெரிய தாக்கத்தை டாப்ஆர்டரில் ஏற்படுத்தினர். ஆனால் இருவரும் இல்லாத நிலையில் இந்த இடத்தை நிரப்ப சில வீரர்களைக் கூறலாம்.

ஜெய்ஸ்வால்

இடதுகை தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இதுவரை 17 டி20 போட்டிகளில் ஆடி 502 ரன்கள் குவித்து, 33 சராசரி வைத்துள்ளார். 161 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவதுதான் ஜெய்ஸ்வாலின் பலம். உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில்கூட ஜெய்ஸ்வால் இருந்தும் தன்னை நிரூபிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. தொடக்க வீரராக எதிரணியின் பந்துவீச்சை உருக்குலைத்து, பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையை உடைத்தெறியும் பிளாஸ்டராக ஜெய்ஸ்வால் திகழ்கிறார்.

மேற்கிந்தியத்தீவுகள், தென் ஆப்ரிக்கா ஆடுகளங்களிலும் ஜெய்ஸ்வால் தன்னை நிரூபித்துள்ளதால், அனைத்து விக்கெட்டுகளிலும் ஆடும்வகையில் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் தொடக்க வீரர்கள் வலது, இடது கூட்டணியாக இருந்தால் எதிரணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் ஜெய்ஸ்வால் வருகை பலம் சேர்க்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இடதுகை தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இதுவரை 17 டி20 போட்டிகளில் ஆடி 502 ரன்கள் குவித்து, 33 சராசரி வைத்துள்ளார்.

சுப்மான் கில்

வலதுகை ஆட்டக்காரரான சுப்மான் கில் இதுவரை 14 டி20 போட்டிகளில் ஆடி 335 ரன்களும், 35 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.147 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஆடும் கில், சதமும் அடித்துள்ளார். 2023 ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் கில்லுக்கு இருக்கிறது.

டாப் ஆர்டரில் அவசரப்படாமல் நிதானமாக ஆடக்கூடிய பேட்டர், கால்களை நன்றாக நகர்த்தி, நேர்த்தியான ஷாட்களை ஆடி, மெல்ல ஸ்கோரை உயர்த்தும் கில்லுக்கு, டி20 போட்டிகளில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் ஜிம்பாப்வே தொடருக்கு கேப்டனாக கில் நியமிக்கப்பட்டிருப்பது அவர் அணிக்குள் வருவதையே தெளிவுபடுத்துகிறது. ஜிம்பாப்வே தொடரில் கில் பேட்டராகவும், கேப்டனாகவும் நிரூபித்தால், டாப் ஆர்டரில் கண்டிப்பாக இடம் இருக்கும்.

அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா இன்னும் சர்வதேச போட்டிகளிலும், இந்திய அணியிலும் அறிமுகமாகவில்லை. ஆனால், 2018ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அபிஷேக் இடம் பெற்றிருந்தார்.

அதிரடியாக தொடக்க வரிசையில் பேட் செய்யக்கூடியவர். 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பெற்று 484 ரன்கள், 204 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். தொடக்க வரிசை, ஒன்டவுனில் சிறப்பாக ஆடக்கூடியவர் அபிஷேக். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் கால்களை நகர்த்தி, பிரன்ட்ஃபுட், பேக்ஃபுட்களில் ஆடும் பேட்டர்களை கண்டறிவது கடினமாக இருக்கிறது. அந்த குறையைப் போக்கக்கூடியவர் அபிஷேக். வேகப்பந்துவீச்சு எதிராக மட்டுமல்ல, இடதுகை சுழற்பந்துவீ்ச்சை துவம்சம் செய்யக்கூடியவர் அபிஷேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐபிஎல் டி20 தொடரில் தோனியால் அடையாளம் காணப்பட்ட, தோனியால் வளர்க்கப்பட்ட இளம் வீரர் கெய்க்வாட்.

கே.எல்.ராகுல்

இந்திய அணியில் திடீரென மறக்கப்பட்ட வீரர் என்றால் கே.எல்.ராகுல். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியநிலையிலும், அவரை டி20 உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கவில்லை. 72 போட்டிகளில் ஆடிய ராகுல் 2265 ரன்கள் குவித்து, 37 சராசரியும், 179 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். டாப்ஆர்டரில் களமிறங்கிய அனுபவம் அதிகம் இவருக்கு உண்டு. ரோகித், கோலி ஓய்வு பெற்ற நிலையில் அனுபவமான பேட்டர் தேவையென நினைத்தால் ராகுல் உள்ளே வரலாம்.

அது மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பருக்கென தனியாக ஒரு வீரரைத் தேர்ந்தெடுக்காமல் ராகுல் மட்டும் அணியில் இருந்தால், விக்கெட் கீப்பிங் பணியையும் கவனிப்பார் இதனால் கூடுதலாக அணியில் ஆல்ரவுண்டரோ அல்லது பந்துவீச்சாளரோ, அல்லது பேட்டரோ சேர்க்க முடியும். ஐசிசி உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய 452 ரன்கள் குவித்து 75 சராசரி வைத்தவர் ராகுல் என்பதால், தொடக்க ஆட்டக்காரர், ஒன்டவுனுக்கு சிறந்த வீரர்.

ருதுராஜ் கெய்க்வாட்

ஐபிஎல் டி20 தொடரில் தோனியால் அடையாளம் காணப்பட்ட, தோனியால் வளர்க்கப்பட்ட இளம் வீரர். 19 டி20 போட்டிகளி்ல் ஆடி 500 ரன்கள் சேர்த்துள்ள கெய்க்வாட்,35 சராசரியும், 140 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

ருதுராஜ் மெதுவான பேட்டர் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள சிறிது நேரம் எடுப்பார் ஆனால், களத்தில் நின்றுவிட்டால் பெரிய ஸ்கோர் கிடைக்கும். ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கெய்க்வாட்டுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கிடைத்து அவர் விளையாடுவதை வைத்து அணிக்குள் வரலாம்.

இஷான் கிஷன்

இடதுகை பேட்டர் விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் அதிரடியான தொடக்க ஆட்டக்காரர், பிஞ்ச் ஹிட்டர். 32 போட்டிகளில் ஆடிய இஷான் கிஷன் 796 ரன்கள் சேர்த்து, 25 சராசரியும், 124 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

அதிரடியான தொடக்கத்தை அளிக்கக்கூடிய இஷான் கிஷனிடம் இருக்கும் குறையே நிலைத்தன்மைதான். இஷான் கிஷன் அணியில் இருக்கும் போது விக்கெட் கீப்பருக்கென இடம் ஒதுக்க வேண்டும். தொடக்க வரிசையில் அதிரடியாகத் தொடங்க வேண்டுமென்றால்,ஜெய்ஸ்வாலுக்கு அடுத்தபடியாக இடதுகை பேட்டரில் இஷன் கிஷன் நல்ல தேர்வு. சர்வதேச அனுபவமும் இருப்பதால் இஷான் கிஷன் குறித்து தேர்வாளர்கள் பரிசீலிக்கலாம்.

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?

பட மூலாதாரம், Getty Images

ஜடேஜாவுக்கு பதிலாக யார்?

இந்திய அணியில் ஜடேஜாவின் இடம் மிகவும் முக்கியமானது. நடுவரிசையில் ஸ்திரத்தன்மையை வழங்கியவர் ஜடேஜா. தேவைப்படும் நேரத்தில் அதிரடியாகவும் பேட் செய்து, ஆங்கர் ரோலும் எடுக்கக்கூடியவர் ஜடேஜா. பந்துவீச்சிலும் மின்னல் வேகத்தில் சுழற்பந்துவீசி முடித்துவிடக்கூடியவர். பீல்டிங்கில் ஜடேஜா வேகமாகச் செயல்படக்கூடியவர். இவரின் இடத்துக்கு, பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட 3 வீரர்கள் உள்ளனர்

குர்னல் பாண்டியா, தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேட்டியா ஆகிய 3 பேரும் நடுவரிசையில் ஓரளவு சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்கள். 3 பேரும் சுழற்பந்துவீச்சிலும் நன்றாக பந்துவீசக்கூடியவர்கள்.

இந்த 3 பேரில் சுந்தர், குர்னலுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் அதிகம். ராகுல் திவேட்டியா நன்றாக பேட் செய்யக்கூடியவர் என்றாலும், பந்துவீச்சில் ஜடேஜாவுக்கு இணை எனக் கூற முடியாது. ஆனால், சுந்தர் நன்றாக ஆப் ஸ்பின் வீசக்கூடியவர், ஆனால், சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஸ்கோர் செய்ததில்லை.

ஆனால், குர்னல் பாண்டியா சுழற்பந்துவீசக்கூடியவர், உள்நாட்டில் நடந்த பல போட்டிகளில் இந்திய அணியில் இடம் பெற்று சிறப்பாக பேட் செய்துள்ளார். ஆதலால், இந்த 3 பேரில் ஒரு வீரரை தேர்வுக் குழுவினர் பரிசீலிக்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)