ஆல்ரவுண்டராக இருந்தும் டி20 வாய்ப்பு கிடைக்காத ஜடேஜாவுக்கு ‘சி.எஸ்.கே முகம்’ கிடைத்தது எப்படி?

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி 17 ஆண்டுகால கடின உழைப்புக்குப்பின் 2-வது முறையாக வென்ற மகிழ்ச்சியை, உற்சாகத்தை ரசிகர்கள் முழுமையாக அனுபவிப்பதற்குள் அடுத்தடுத்து அதிர்ச்சி செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றவுடன் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் தோனி செய்தது போன்று, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டி20 போட்டிகளில் இருந்து தான் ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாகச் சேர்ந்து விளையாடிய 3 ஆளுமைகள் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

ஒருபுறம் டி20 உலகக் கோப்பையை வென்றதைக் கொண்டாடுவதா அல்லது இனிமேல் கோலி, ரோகித், ஜடேஜாவின் ஆட்டத்தை டி20 போட்டிகளில் காணமுடியாதே என்று வருத்தப்படுவதா என வேதனையடைந்தனர்.

இவர்கள் மூன்று பேரும் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப இந்திய அணியின் பெஞ்சில் ஏராளமான இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். இருந்தாலும், இவர்கள் 3 பேரின் இடத்தை நிரப்புவது கடினம்தான்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அணி இக்கட்டான நிலையில் சிக்கிவிட்டால் நங்கூரம்பாய்ச்சி பேட் செய்யும் வீரராகவும் ஜடேஜா பரிணமித்தார்

ஆல்-டைம் ஆல்ரவுண்டர்

அதிலும் ‘ராக்ஸ்டார்’ ரவீந்திர ஜடேஜாவின் இடம் அணியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த இடத்திலும் ஜடேஜாவைக் களமிறக்கி பேட் செய்ய வைக்க முடியும். எந்த நிலையிலும் அவரைப் பந்துவீசச் செய்ய முடியும். மைதானத்தின் எந்த இடத்திலும் அவரால் பீல்டிங் செய்ய முடியும் அளவு ஆல்ரவுண்டராக ஜடேஜா ஜொலித்தார்.

ஆல்ரவுண்டர் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்கும் வகையில் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தும் சுழற்பந்து வீச்சாளராகவும், அணி இக்கட்டான நிலையில் சிக்கிவிட்டால் நங்கூரம்பாய்ச்சி பேட் செய்யும் வீரராகவும் ஜடேஜா பரிணமித்தார்.

அதுமட்டுமல்ல ஜடேஜா மைதானத்தில் நிற்கும் திசையில் எதிரணி வீரர் அவ்வளவு எளிதாக பவுண்டரி, சிக்ஸரையும் அடித்துவிட முடியாது. குறிப்பாக பெரிய ஷாட்டுக்கு முயன்று பந்தை தூக்கி அடித்தாலும் ஜடேஜா இருக்கும் திசையில் கேட்சாகிவிடும். பீல்டிங்கில் தனக்குரிய தனித்துவத்தோடு ஜடேஜா செயல்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த 10 பீல்டர்களை வரிசைப்படுத்தினால், அதில் நிச்சயம் ஜடேஜாவுக்கு இடம் உண்டு.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜடேஜா மைதானத்தில் நிற்கும் திசையில் எதிரணி வீரர் அவ்வளவு எளிதாக பவுண்டரி, சிக்ஸரையும் அடித்துவிட முடியாது

தலைசிறந்த பீல்டர் ஜடேஜா

பீல்டிங்கில் சிறந்தவர்கள் தென் ஆப்பிரிக்க அணியினர் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்திய அணியிலிருந்தும் ஒருவர் இருக்கிறார் என்று மார்தட்ட வேண்டுமென்றால் அது ஜடேஜா மட்டும்தான்.

ஜடேஜாவிடம் இருக்கும் தனித்திறமை, பேட்டிங் திறமை, பந்துவீச்சு ஆகியவற்றை கடந்த 2008-ஆம் ஆண்டே கண்டுபிடித்து ‘ராக்ஸ்டார்’ என்று பெயரிட்டவர் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக வரக்கூடியவர் என்று ஷேன் வார்னால் புகழப்பட்டவர் ஜடேஜா என்பது கவனிக்கத்தக்கது.

ஜடேஜாவுக்கென தனிப்பட்டச் சிறப்பு இருக்கிறது. அதாவது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் ஜடேஜா பங்கேற்ற முதல் இந்திய வீரர் ஜடேஜாதான். 2008-ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் ஜடேஜா இடம் பெற்றிருந்தார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அவரது சகோதரி நைனா அளித்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட் விளையாடி ஜடேஜா தனக்குரிய அங்கீகாரத்தை அடைந்தார்

இளமைக் காலம்

1988-ஆம் ஆண்டு குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் நவாம் கெட் நகரில் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்தவர் ரவிந்திர ஜடேஜா. ஜடேஜாவின் தந்தை அனிருத், தனியார் நிறுவனத்தில் காவலாளியாக இருந்தார். ஜடேஜாவை ராணுவத்தில் சேர்த்து அதிகாரியாக்க வேண்டும் என்ற கனவில் அவரின் தந்தை அனிருத் இருந்தார்.

ஆனால், ஜடேஜாவுக்கு கிரிக்கெட் மீது காதல் இருந்தது. கடந்த 2005-ஆம் ஆண்டு ஜடேஜாவின் தாய் லதா விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கிரிக்கெட் கனவுகளைப் புதைத்துவிட்டு, விலகவிடும் எண்ணத்தில் ஜடேஜா இருந்தார். ஆனால் அவரது சகோதரி நைனா அளித்த ஊக்கத்தால் மீண்டும் கிரிக்கெட் விளையாடி ஜடேஜா தனக்குரிய அங்கீகாரத்தை அடைந்தார்.

முதல்தரப் போட்டிகளில் முத்திரை

2006-07-ஆம் ஆண்டில் துலீப் டிராவில் ஜடேஜா முதல்தரப் போட்டியில் மேற்கு மண்டலத்துக்காக அறிமுகமாகினார் ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காகக் களமிறங்கினார். இந்திய அளவில் முதல்தரப் போட்டிகளில் 3 முச்சதங்களை அடித்த முதல் வீரர், உலகளவில் 8-வது வீரர் எனும் சிறப்பை ஜடேஜா பெற்றுள்ளார். உலகளவில் டான்பிராட்மேன், பிரையன் லாரா, பில் பான்ஸ்பார்ட், வாலே ஹாமன்ட், கிரேஸ், கிரேம் ஹிக், மைக் ஹசி ஆகியோர் மட்டுமே 3 முச்சதங்களை அடித்துள்ளனர்.

அவர்களுக்கு அடுத்தார்போல் வரலாற்றில் ஜடேஜா இடம் பெற்றார். 2011-ஆம் ஆண்டில் ஒடிசாஅணிக்கு எதிராக 314, 2012-ஆம் ஆண்டு நவம்பரில் குஜராத் அணிக்கு எதிராக 303 நாட்அவுட், அதே ஆண்டு டிசம்பரில் ரயில்வேஸ் அணிக்கு எதிராக 331 ரன்கள் சேர்த்து ஒரே ஆண்டில் 3 முச்சதங்களை ஜடேஜா தனது 23 வயதில் சாதனை படைத்தார். இந்திய அளவில் இதுபோன்ற சாதனையை எந்த வீரரும் இதற்கு முன் நிகழ்த்தியதில்லை.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பிடித்த பந்துவீச்சாளராக ஜடேஜா ஜொலித்தார்

இந்திய அணியில் அறிமுகம்

2008-09-ஆம் ஆண்டு ரஞ்சிக் கோப்பையில் ஜடேஜா 42 விக்கெட்டுகளையும், 739 ரன்களையும் குவித்தவுடன் பி.சி.சி.ஐ தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 2009-ஆம் ஆண்டு ஒருநாள், டி20 தொடரில் ஜடேஜா இந்திய அணியில் அறிமுகமாகினார்.

2012-ஆம் ஆண்டில் 3 முச்சதங்களை ஜடேஜா அடித்ததைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு ஜடேஜா அழைக்கப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் ஜடேஜா அறிமுகமாகினார். முதல் போட்டியிலேயே ஜடேஜா 70 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உள்நாட்டு டெஸ்ட் தொடரை 4-0 என இந்திய அணி கைப்பற்றுவதில் ஜடேஜாவின் பந்துவீச்சு முக்கியப் பங்களித்தது. அதிலும் ஆஸ்திரேலியக் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை 6 இன்னிங்ஸில் 5 முறை ஜடேஜா ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் 2013-ஆம் ஆண்டில் இந்திய அணி ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது அதில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஜடேஜா ஜொலித்தார். 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடம் பிடித்துச் சாதித்தார். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தார்போல் ஐ.சி.சி தரவரிசையில் முதலிடம் பிடித்த பந்துவீச்சாளராக ஜடேஜா ஜொலித்தார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அது மட்டுமல்லாமல் 2022-இல் இங்கிலாந்து பயணத்தில் முதல்முறையாக வெளிநாட்டில் ஜடேஜா சதம் அடித்தார்

திறமையை கூர்தீட்டத் தயங்காதவர்

இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் தங்களின் பேட்டிங் ஃபார்ம், பந்துவீச்சு ஃபார்ம் குறைந்து அணியிலிருந்து நீக்கப்பட்டால் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதில் தயக்கம் காட்டுவார்கள். ஆனால், ஜடேஜா சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராக இருந்தாலும் உள்ளூர் போட்டிகள், ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி போன்றவற்றில் ஆடும் வழக்கத்தை வைத்து தனது திறமையை மெருகேற்றும் வித்தை தெரிந்தவர்.

2015ஆம் ஆண்டு வங்கேதசத் தொடரில் மோசமான பந்துவீச்சு, பேட்டிங் காரணமாக இந்திய அணியில் ஜடேஜா சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஆனால், ஜடேஜா மனம் தளரவில்லை, அடுத்த ரஞ்சிக் கோப்பையில் சவுராஷ்டிரா அணிக்காக ஆடி, 238 ரன்களும் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனால் அடுத்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றார். தனது திறமையைில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் அதைச் சரி செய்து கொள்வதில் சிறிதும் தயக்கம்காட்டாதவர் ஜடேஜா.

இந்திய டெஸ்ட் அணி 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றது. இந்திய அணியில் இடம் பெற்ற ஜடேஜா 25 விக்கெட்டுகளை வீழ்த்தி, இரு அரைசதங்களை விளாசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2019-ஆம் ஆண்டு நடந்த 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஒருநாள் போட்டியில் 2,000 ரன்களையும், 150 விக்கெட்டுகளையும் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்

2019-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஜடேஜா தனது 200-வது டெஸ்ட் விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 2022 மார்ச் 5-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 175 ரன்கள் சேர்த்தும், 9 விக்கெட்டுகளை வீழ்த்தியும் கபில் தேவின் சாதனையை ஜடேஜா முறியடித்தார்.

அது மட்டுமல்லாமல் 2022-இல் இங்கிலாந்து பயணத்தில் முதல்முறையாக வெளிநாட்டில் ஜடேஜா சதம் அடித்தார். அந்த ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய ஒருநாள் அணிக்கு துணைக் கேப்டனாகவும் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஃபார்ம் நிலையானது அல்ல, திறமைதான் நிலைாயனது என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனது ஆட்டத்தின் மூலம் ஜடேஜா நிரூபித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதுவரை 74 டி20 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 515 ரன்களும், 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்

3 ஃபார்மெட்டுக்கும் தகுதியாக உழைத்தவர்

ஜடேஜா இதுவரை ஒருநாள், மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ற வீரராக ஜொலித்துள்ளாரேத் தவிர டி20-க்கு ஏற்ற வீரராகப் பெரிதாக இன்னும் பரிணமிக்கவில்லை என்றாலும், தன்னை மூன்று விதமான ஃபார்மெட்டுக்கும் தகுதியாக மாற்ற ஜடேஜா தொடர்ந்து உழைத்தவர்.

2009-ஆம் ஆண்டு உலக டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்விக்கு ஜடேஜாவின் மந்தமான பேட்டிங் காரணம் என விமர்சிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் உள்ளூர் போட்டிகளில் விளையாடி தன்னுடைய பேட்டிங் ஃபார்மை ஜடேஜா நிரூபித்தவுடன், இந்திய அணிக்குள் மீண்டும் ஜடேஜா இடம் பெற்றார்.

அதன்பின், இங்கிலாந்து தொடரில் இடம் பெற்ற ஜடேஜா, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கேப்டனாக இருந்த தோனியுடன் சேர்ந்து 112 ரன்களும், அஸ்வினுடன் சேர்ந்து 5 ஓவர்களில் 59 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களுக்கு ஜடேஜா உயர்த்தி தன்னை ஆல்ரவுண்டர் என்பதை ஆழமாகப் பதிவயவைத்தார்.

டி20 போட்டிக்கு ஏற்றவரா ஜடேஜா?

ஜடேஜா ஒருநாள், டி20 போட்டிகளில் ஜொலித்த அளவுக்கு டி20 போட்டிகளில் மிளர வாய்ப்புகள் போதுமான அளவு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இதுவரை 74 டி20 போட்டிகளில் விளையாடிய ஜடேஜா 515 ரன்களும், 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் அதிகபட்சமாக 46 ரன்களும் 21 ரன்கள் சராசரியும், 127 ஸ்ட்ரைக் ரேட்டும் ஜடேஜா வைத்துள்ளார். அதேபோல பந்துவீச்சில் 29 சராசரியும், 7.9 எக்னாமியும் ஜடேஜா வைத்துள்ளார்.

இதுவரை ஆறு டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் ஜடேஜா இடம் பெற்றநிலையில் 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில்தான் அவரால் கோப்பையை வெல்ல முடிந்தது.

இதுவே டெஸ்ட் போட்டிகளில் 72 போட்டிகளில் 3,036 ரன்களும், 294 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 197 போட்டிகளில் 2,756 ரன்களும் ஜடேஜா சேர்த்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 4 சதங்களையும், 20 அரைசதங்களையும், ஒருநாள் போட்டிகளில் 13 அரைசதங்களையும் ஜடேஜா விளாசியுள்ளார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜடேஜாவின் திறமையை அருகே இருந்து மதிப்பிட்டவர்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் தோனி

ஜடேஜாவை அரவணைத்த ஐ.பி.எல்

இந்திய அணியில் டி20 போட்டிகளில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தான் டி20 போட்டிகளுக்குச் சிறந்த வீரர் என்பதை ஐ.பி.எல் டி20 லீக் மூலம் ஜடேஜா நிரூபித்தார். 2008-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜடேஜா இடம் பெற்றார். இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணியைத் தோற்கடிக்க ஜடேஜாவின் ஆட்டம் முக்கியப் பங்காற்றியது. 14 போட்டிகளில் 135 ரன்களை சேர்த்து 131 ஸ்ட்ரைக் ரேட்டில் ஜடேஜா பேட் செய்தார். ஜடேஜாவின் திறமையைப் பார்த்து, மறைந்த ஜாம்பவான் ஷேன் வார்ன், ‘ராக்ஸ்டார்’ ஜடேஜா என்று பட்டமளித்தார். அது மட்டுமல்லாமல் இந்திய அணிக்கு கிடைத்துள்ள சூப்பர்ஸ்டார் என்றும் வர்ணித்தார்.

2012-ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணியால் ரூ.9.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஜடேஜா, கடந்த சீசன்வரை சி.எஸ்.கே அணியோடும், தோனியோடும் இணைந்து பயணித்து வருகிறார். ஜடேஜா இல்லாத சி.எஸ்.கே இல்லை, ஜடேஜா இல்லாமல் சி.எஸ்.கே அணி களம்காண்பது அரிதினும் அரிது என்ற ரீதியில் இணைந்து ஆடி வருகிறார்.

ஜடேஜாவின் திறமையை அருகே இருந்து மதிப்பிட்டவர்களில் ஒருவர் முன்னாள் கேப்டன் தோனி. அதனால்தான் சி.எஸ்.கே அணிக்குள் ஜடேஜாவை இழுத்துப் போட்டு அவரை கறுப்புக் குதிரையாக சி.எஸ்.கே-வில் பயன்படுத்தினார். விக்கெட் தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்துபவராகவும், இக்கட்டான நேரத்தில் கேமியோ ஆடுபவராகவும், பீல்டிங்கில் முடிசூடா மன்னராகவும் சி.எஸ்.கே அணியில் ஜடேஜா ஜொலித்தார். ஐ.பி.எல் டி20 தொடர்தான் ஜடேஜாவின் பீல்டிங் திறன், பேட்டிங் திறன், பந்துவீச்சு ஆகியவற்றை பட்டைதீட்டும் பட்டறையாக விளங்கியது.

காலம் நிரப்புமா?

உலகளில் தலைசிறந்த ஆல்ரவுண்டர், பீல்டர், பேட்டரை இந்திய அணி இழந்துள்ளது. காலியான இடத்தை நிரப்ப நிச்சயம் மற்றொருவரை காலம் கொண்டுவரும் என்பது நியதி. ஆனால், அந்த இடத்தை நிரப்பப் புதிதாக வரக்கூடியவர் எத்தனை காலம் எடுத்துக்கொள்ளப் போகிறார் என்பதில்தான் ஜடேஜா விட்டுச் சென்ற வெற்றிடம் உணரப்படும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)