விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுக்கு வந்துள்ளது. 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அன்னியூர் சிவா பெற்றுக் கொண்டார். அப்போது அவருடன் ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் அமைச்சர் பொன்முடி இருந்தனர்.

மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1,24,053. பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்
படக்குறிப்பு, அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

திமுக வேட்பாளர் வெற்றி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

பட மூலாதாரம், ANI

கடந்த 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. 276 வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 1,95,495 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 82.48. இதில் ஆண்களின் வாக்குகள் 95,536, பெண்களின் வாக்குகள் 99,944, மூன்றாம் பாலினத்தவரின் வாக்குகள் 15.

இன்று காலை 8 மணிக்கு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகளை எண்ணும் பணி முடிவடைந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.

முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் இருந்தார். இரண்டாம் இடத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியும், மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவும் இருந்தனர்.

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அண்ணா அறிவாலயம், விக்கிரவாண்டி உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

'பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க வெற்றி'

'பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றி'

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பாஜக அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. இந்த வீணர்களை விக்கிரவாண்டி மக்கள் விரட்டியடித்து விட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அதோடு, தோல்விகளில் இருந்து பாஜக பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

'இடைத்தேர்தலில் அத்துமீறல்' - பாஜக தலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

பட மூலாதாரம், K.ANNAMALAI / TWITTER

படக்குறிப்பு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "இந்தத் தேர்தலில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் ஒவ்வொரு பகுதியாகக் களமிறங்கி வேலை செய்துள்ளனர். அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் சர்வசாதாரணமாக மாறிவிட்டது" என்று கூறினார்.

இடைத்தேர்தல் முடிவுகள் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்காது என்றும், கண்டிப்பாக 2026இல் மாற்றம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

"ஆனால், மக்கள் முடிவை ஏற்றுக்கொள்கிறோம். பணபலம், அதிகார பலம் என அனைத்தையும் தாண்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கூட்டணிக் கட்சியினர் சிறப்பாகப் பணியாற்றினார்கள். முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு இதுகுறித்துப் பேசுகிறேன்" என்று அண்ணாமலை கூறினார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள்: 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி
வாக்கு எண்ணும் பணி
படக்குறிப்பு, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

வாக்குகளை எண்ணும் பணி

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட தகவலின்படி விக்கிரவாண்டி தொகுதியில் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1,15,608 பேரும், பெண் வாக்காளர்கள் 1,18,268 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 25 பேரும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு கண்டமங்கலம் (தனி) தொகுதி கலைக்கப்பட்டு, தொகுதி மறுசீரமைப்பில் விக்கிரவாண்டி தொகுதி புதிதாக உருவானது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புகழேந்தி, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை நேரத்தில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்.

சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகழேந்தி, குணமடைந்து வீடு திரும்பிய பிறகு, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே முதல்வர் ஸ்டாலினின் தி.மு.க பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி மரணமடைந்தார். புகழேந்தியின் மறைவைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

களத்தில் உள்ள வேட்பாளர்கள்

பட மூலாதாரம், X- NAAMTAMILARORG/UDHAYSTALIN

படக்குறிப்பு, பாமக வேட்பாளர் அன்புமணி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா

இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராகக் களம் கண்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிட்டார்.

மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சி, ஹோமியோபதி மருத்துவர் அபிநயாவை களமிறக்கியது.

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.க-வினர் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதோடு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.

செய்தியாளர் க.மாயகிருஷ்ணன், பிபிசி தமிழுக்காக

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)