ஒரே ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளி - தமிழ்நாடு முழுவதும் கள்ளர் பள்ளிகளின் நிலை என்ன?

- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஜூன் மாதம் 10ஆம் தேதி துவங்கி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தேனி மாவட்டம் அணைப்பட்டி கள்ளர் அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த ஆண்டு மாணவர்கள் யாரும் சேரவில்லை.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவேண்டும் என்ற நோக்கில் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 300 ரூபாய் வரவு வைப்பதாக அறிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, ஆட்டோவில் ஒலிபெருக்கி கட்டி தினமும் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஏன் இல்லை? தமிழ்நாட்டில் உள்ள கள்ளர் அரசுப் பள்ளிகளின் நிலைமை என்ன?

கள்ளர் பள்ளிகளின் நிலை
நூறு ஆண்டுகளுக்கும் முன்பாக, ஆங்கிலேயர்களால் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளர் பள்ளிகள் துவங்கப்பட்டன. இந்தப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் நேரடியாக காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தன. அதன் பின் வருவாய்த் துறையிடமும் தற்போது கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழும் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 213 ஆரம்பப் பள்ளிகள், மற்றவை நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளாகச் செயல்பட்டு வருகின்றன. துவக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே இங்கு பயின்று வந்தனர்.
ஆனால், தற்பொழுது அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கள்ளர் அரசு ஆரம்பப் பள்ளிகளில் அண்மைக் காலமாக மாணவர்களின் சேர்க்கை குறையத் தொடங்கியுள்ளது.
நூற்றாண்டை நெருங்கும் பள்ளியில் ‘0’ மாணவர்கள்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டி கள்ளர் ஆரம்பப் பள்ளி கடந்த 1924ஆம் ஆண்டு நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. இந்த ஆண்டுடன் அப்பள்ளி நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ பூஜ்ஜியமாக இருக்கிறது.
இப்பள்ளிக்கு பணி மாறுதலாகி வந்திருக்கும் ஆசிரியர் சுந்தர், மாணவர்கள் இல்லாததால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய ஊராட்சி கிராம சபைகளில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு செய்கிறார். ஆனால் இந்த முயற்சிக்கு தற்போதுவரை பலன் கிடைக்கவில்லை.
இதையடுத்து அரசுப் பள்ளியில் மாணவர் சேர்ந்தால் அந்த மாணவரின் பெயரில் மாதம் 300 ரூபாய் வங்கியில் வரவு வைக்கப்படும் என்றும் பள்ளியில் சேரும் மாணவருக்கு அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்வதாகவும் ஒரு மாதத்தில் மாணவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் என்ற உத்தரவாதம் அடங்கிய துண்டு சீட்டை அந்த பகுதி முழுவதும் அளித்து வருகிறார். தினமும் ஆட்டோவில் ஒலிபெருக்கி வாயிலாக இதை அறிவிப்பாக வெளியிட்டும் விழிப்புணர்வு செய்து வருகிறார். இதற்காக தினசரி 500 ரூபாய் வரை தனது சொந்த பணத்தை செலவு செய்வதாக பிபிசியிடம் ஆசிரியர் சுந்தர் தெரிவித்தார்.
“கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த பள்ளிக்கு மாறுதலாகி தலைமையாசிரியராக பொறுப்பேற்று இருக்கிறேன். கடந்த கல்வியாண்டில் பயின்ற மூன்று மாணவர்கள் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளியில் சேர்ந்து விட்டனர். ஆனால் இந்த ஆண்டு புதிதாக மாணவர்கள் யாரும் இதுவரை சேரவில்லை.”
இந்த பள்ளியில் குறைந்தபட்சம் நான்கு மாணவர்களையாவது சேர்த்து நூற்றாண்டை நெருங்கும் இந்த பள்ளியை இயங்க வைக்க முயற்சி செய்து வருவதாக ஆசிரியர் சுந்தர் பிபிசி தமிழிடம் கூறினார்.
அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலானோர் கேரளாவில் தோட்ட வேலைக்குச் செல்வதால் காலையில் செல்லும் பெண்கள் மாலையில்தான் வீடு திரும்புவார்கள். காலை முதல் மாலை வரையில் பள்ளியில் இருக்கும் இவர் பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்குச் சென்று அங்கிருந்து ஆட்டோ பிடித்து தனது மனைவியுடன் சேர்ந்து பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க வீடுவீடாக விழிப்புணர்வு செய்கிறார்.
ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது தான் பள்ளி மாணவர் சேர்க்கை குறைய காரணம் என்கிறார் அப்பள்ளியின் முன்னாள் மாணவரான 70 வயதாகும் ராமு.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நானும் இதே பள்ளியில் தான் படித்தேன். அப்பொழுது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றார்கள். இந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாது அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்த பள்ளியில் பயின்றார்கள். ஆனால் கடந்த 10 வருட காலமாக முறையாக ஆசிரியர் நியமனம் இல்லாததால் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது,” என்றார்.
‘கள்ளர் பள்ளியில் ஆசிரியர் பற்றாகுறை’

கடந்த 10 ஆண்டுகளாக கள்ளர் ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களை நிரப்பாமல் அப்படியே விட்டுள்ளதாகக் கூறுகிறார் தமிழ்நாடு கள்ளர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பே. தீனன்.
"நூற்றுக்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகளில் ஒற்றை ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்து வருகிறார். ஒரே ஆசிரியர் எப்படி ஐந்து வகுப்புகளுக்கும் பாடம் எடுக்க முடியும்?" என தீனன் கேள்வி எழுப்புகிறார்.
தொடர் கோரிக்கைகளுக்குப் பிறகு தற்போது சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு காலிப் பணியிடங்களை அரசு நிரப்பியுள்ளது.
“ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் பாதுகாப்பில் கேள்வி எழுகிறது. இதனால் பெற்றோர் அரசுப் பள்ளியை நாடாமல் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியையும் நாடிச் செல்கின்றனர். இதை கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை முடக்கும் நோக்கமாகவே பார்க்க வேண்டும்,” என்கிறார் தீனன்.
அரசுப் பள்ளியைத் தொடர்ந்து இயங்கச் செய்ய எந்த மாதிரியான திட்டங்களைத் தீட்டலாம் என்பதைப் பார்க்க வேண்டுமே தவிர பள்ளிகளை மூட வழி பார்க்கக் கூடாது என்று அவர் கூறினார்.
‘கள்ளர் மறுவாழ்வு’, ’ஆதி திராவிடர் நல’ போன்ற சாதிய அடையாளம் கொண்ட சொற்களை பள்ளிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டும் என்று அண்மையில் பள்ளி வளாகங்களில் சாதிய பாகுபாட்டைக் களைவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்திருந்த ஒரு நபர் கமிட்டி தனது பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளுமே ’அரசுப் பள்ளி’ என்றழைக்கப்பட வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து பள்ளி எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு அளித்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளிகள் அந்தந்தத் துறைகளின் கீழ் அல்லாமல், அனைத்துப் பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அந்த ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.
‘ஒரு பள்ளியில் மட்டுமே மாணவர் இல்லை’

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் இணை இயக்குநர் ஜெயக்குமார், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும் குறைந்த ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளில் தற்பொழுது ஆசிரியர்கள் பணி நிரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
"தமிழ்நாட்டில் மொத்தமாக 299 கள்ளர் பள்ளிகள் உள்ளன. இதில் 213 துவக்கப் பள்ளிகளில் 10 பள்ளிகளில் மட்டுமே ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். ஒரேயொரு பள்ளியில் மட்டுமே மாணவர் சேர்க்கை எதுவும் இல்லாமல் இருக்கிறது. மற்ற பள்ளிகளில் அதற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். கள்ளர் பள்ளிகளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
ஒரு சில இடங்களில், தனியார் பள்ளி மீதான ஈர்ப்பு காரணமாகப் பெற்றோர் அரசுப் பள்ளிகளை நோக்கி வருவது குறைந்துள்ளது. ஆனாலும் அரசின் திட்டங்களையும், சலுகைகளையும் பெற்றோரிடம் எடுத்துரைத்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்கத் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறோம்" என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












