ஜூன் 25 'அரசியலமைப்பு படுகொலை தினம்' - மத்திய அரசின் அறிவிப்பை 'பாசாங்குத்தனம்' என விமர்சிக்கும் காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியல் சாசனப் படுகொலை தினமாக’ அனுசரிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலில் போட்டு மிதிக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தும் என பிரதமர் நரேந்திர மோதி வெள்ளிக்கிழமை (ஜூலை 12) தெரிவித்தார்.
ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்பு படுகொலை தினமாக’ (சம்விதான் ஹத்யா திவாஸ்) அனுசரிக்கப்பட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோதி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
“மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது” என காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தப் பிரதமரின் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு, அதன் தத்துவங்கள், விழுமியங்கள் மற்றும் நிறுவனங்களின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் அறிவிப்பாணை

பட மூலாதாரம், Amit Shah
ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்புப் படுகொலை தினமாக’ இந்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் அரசிதழில் வெளியாகியுள்ள அறிவிப்பாணையில், “ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் அரசாங்கத்தால் அதிகார அத்துமீறல் மற்றும் இந்திய மக்களுக்கு எதிராக மிகுதியான அட்டூழியங்கள் நிகழ்ந்தன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்திய மக்கள் அரசியலமைப்பு மீதும் ஜனநாயகத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, அவசரநிலை காலகட்டத்தில் அதிகார அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கு எதிராகப் போராடியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25ஆம் தேதியை ‘அரசியலமைப்புப் படுகொலை தினமாக’ இந்திய அரசு அறிவித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் இந்திய மக்கள் இத்தகைய அதிகார அத்துமீறலை எந்த வடிவத்திலும் ஆதரிக்கக்கூடாது என உறுதியேற்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா கூறியது என்ன?

பட மூலாதாரம், ANI
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த அறிவிப்பாணையைத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “ஜூன் 25, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகார மனநிலையின் மோசமான வெளிப்பாடாக, நாட்டில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தினார். இதன்மூலம், அவர் நமது ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.
“எந்தத் தவறும் செய்யாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஊடகங்களின் குரல் ஒடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதியை அரசியலமைப்புப் படுகொலை தினமாகக் கடைபிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.”
மேலும், “இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளை அனுபவித்த அனைவரின் மகத்தான பங்களிப்பையும் நினைவுகூரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சர்வாதிகார அரசாங்கத்தின் கைகளில் விவரிக்க முடியாத துன்புறுத்தலை எதிர்கொண்ட போதிலும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடிய லட்சக்கணக்கான மக்களின் ஆன்மாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக” அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அரசியலமைப்புப் படுகொலை தினம் அனுசரிக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியரிடமும் தனிமனித சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உதவும். இதனால் காங்கிரஸ் போன்ற சர்வாதிகார சக்திகள், அந்தக் கொடூரங்களை மீண்டும் செய்வதைத் தடுக்கும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்வினை

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் முடிவு குறித்து அக்கட்சி சார்பாக எதிர்வினையாற்றியுள்ளார்.
அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமர் மேற்கொள்ளும் தலைப்புச் செய்திக்கான மற்றுமொரு பாசாங்குத்தனமான முயற்சியே இது," என்று விமர்சித்துள்ளார்.
"கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிறப்பித்தவர் அவர். அதன் காரணமாகவே, இந்தத் தேர்தலில் மக்கள் அவருக்குத் தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக தோல்வியை வழங்கினர். தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4, மோதி விடுதலை நாளாக வரலாற்றில் பதிவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டம், அதன் கொள்கைகள், மதிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்திய பிரதமர் இவர். இந்திய அரசியலமைப்பு சாசனம் மனுஸ்மிருதியில் இருந்து உத்வேகம் பெறவில்லை என்பதால் அதை நிராகரிக்கிறோம் எனக் கூறியவர்களின் கருத்தியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர்.”
“மனிதர் மூலம் பிறப்பெடுக்காத பிரதமருக்கு, டெமாக்ரசி என்பது டெமோ-குர்சி (பதவி) மட்டுமே" என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு என்ன அர்த்தம்?

பட மூலாதாரம், ANI
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி எமர்ஜென்சி தொடர்பாக காங்கிரஸை தாக்கி வருவதால், வெள்ளியன்று மத்திய அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு முக்கியமானது.
அரசியல் சாசனம் காப்பாற்றப்பட வேண்டுமானால், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தல் முழுவதும் காங்கிரஸ் கூறியது. ராகுல் காந்தி தனது பேரணிகளில் அடிக்கடி அரசியல் சட்டத்தின் நகலைக் காட்டிப் பேசினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை மாற்றுவார்கள் என ராகுல் காந்தி தனது கூட்டங்களில் தொடர்ந்து கூறி வந்தார்.
கடந்த மே மாதம், தனது உரை ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவின் பழங்குடியினருக்கு எது கிடைத்ததோ, பட்டியல் சாதியினருக்கு எது கிடைத்ததோ, பிற்பட்டோருக்கு எது கிடைத்ததோ, உங்கள் தண்ணீர், காடு, நிலம் மீதான உரிமை என அனைத்து உரிமைகளையும் அரசியல் சாசனம் அங்கீகரித்துள்ளது."
"ஆனால், இதைப் புறந்தள்ளிவிட்டு, உங்கள் உரிமைகளைப் பறித்துவிட்டு ஆட்சி நடத்த வேண்டுமென்று பாஜக நினைக்கிறது. அவர்களைத் தடுத்து நிறுத்த நாங்கள் முயல்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்றால் இந்தப் புத்தகத்தை (அரசியல் சாசனத்தை) மாற்றுவதாக பாஜக தலைவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். அதனால்தான் அவர்கள் 400 தொகுதிகள் என்ற முழக்கத்தையே முழங்கினார்கள்,” என்றார்.
புதிய நாடாளுமன்றத்தில்கூட, அவசரநிலையின்போது அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைத்த விவகாரத்தை, பாஜக எழுப்பியது. கடந்த 1975 ஜூன் 25 அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் உரையில் அவசர நிலை பற்றிக் குறிப்பிட்டது என்ன?

பட மூலாதாரம், ANI
இந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி எமர்ஜென்சியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில், “அவசரநிலையை எதிர்த்த மாமனிதர்களுக்கும் பெண்களுக்கும் இன்று அஞ்சலில் செலுத்தும் நாள். அதன் இருண்ட நாட்கள் காங்கிரஸ் எப்படி இருந்தது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. கட்சி அடிப்படை சுதந்திரங்களை மீறியது மட்டுமின்றி, அனைத்து இந்தியர்களும் மதிக்கும் இந்திய அரசியலமைப்பை மிதித்தது,” என்று தெரிவித்தார்.
மேலும், “எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு அரசியல் சாசனத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. நாட்டின் பல மாநிலங்களில் 356வது பிரிவை பயன்படுத்தியவர்கள் இவர்கள்தான். பத்திரிகை சுதந்திர மசோதாவை நிறைவேற்றி, கூட்டாட்சிக் கட்டமைப்பைச் சேதப்படுத்தியவர்கள், எல்லா அம்சங்களையும் மீறினார்கள். அவசரநிலையை அறிவித்த கட்சி இன்னும் அதே எமர்ஜென்சி மனநிலையைக் கொண்டுள்ளது,” என்று கூறினார் பிரதமர் நரேந்திர மோதி.
ஜூன் 24ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அவசரநிலைப் பிரச்னை ஆதிக்கம் செலுத்தியது. ராகுல் காந்தி எம்.பி.யாக பதவியேற்கும்போது அரசியல் சாசன நகலைக் கையில் வைத்திருந்தார். காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பதவியேற்ற பிறகு ஜெய் சம்விதான் என்றார்.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர் உரையில், அவசரநிலை குறித்துக் குறிப்பிடப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தனது உரையில், “இன்று ஜூன் 27. ஜூன் 25, 1975 அன்று அவசரநிலையை அமல்படுத்தியது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலின் மிகப்பெரிய மற்றும் இருண்ட அத்தியாயம். இதனால் நாடு முழுவதும் கோபமடைந்தது. ஆனால், அத்தகைய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாடு வெற்றி பெற்றது. ஏனெனில், ஜனநாயகத்தின் மரபுகள் இந்தியாவின் மையக் கருவாக உள்ளது,” என்று குறிப்பிட்டார்.
அவசரநிலை குறித்த காங்கிரஸின் நிலைப்பாடு

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2021ஆம் ஆண்டு அவசரநிலை குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டை முன்வைக்கும்போது, அந்த முடிவு தவறானது எனக் கூறினார்.
பிரபல பொருளாதார நிபுணரான பேராசிரியர் கௌசிக் பாசுவுடனான உரையாடலில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்த முடிவு செய்தது தவறு என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 1975 மற்றும் 1977 வரையிலான 21 மாத அவசரநிலையின்போது என்ன நடந்ததோ அது தவறு என்றும் ராகுல் கூறியிருந்தார்.
எமர்ஜென்சியின்போது, அரசியல் சாசன உரிமைகள் மற்றும் குடியுரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகைகள் தடை செய்யப்பட்டன, ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் ராகுல் காந்தி கூறினார். ஆனால், இவையனைத்தும் இன்றைய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “அது தவறு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். முற்றிலும் தவறான முடிவு. என் பாட்டியும் (இந்திரா காந்தி) அப்படித்தான் கூறினார். அதற்குப் பிறகு காங்கிரஸ் இந்தியாவின் அரசு நிர்வாக அமைப்பைக் கைப்பற்ற முயலவில்லை. உண்மையைச் சொல்வதானால், அதற்கான திறன் காங்கிரஸிடம் இல்லை. காங்கிரஸின் சித்தாந்தம் எங்களை அவதூறு செய்ய அனுமதிக்கவில்லை” என்றார்.
“எமர்ஜென்சிக்கும் இன்று நடப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அரசு நிறுவனங்களை அதன் ஆட்களைக் கொண்டு நிரப்புகிறது. தேர்தலில் பாஜகவை தோற்கடித்தாலும், அரசு நிறுவனங்களில் அவர்களின் ஆட்களை நம்மால் அகற்ற முடியாது.”
“நவீன ஜனநாயக அமைப்பு என்பது அரசு நிறுவனங்களின் சமநிலையை அடிப்படையாகக் கொண்டது. அரசு நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்பட வேண்டும். ஆனால், அவற்றின் சுதந்திரத்தை இந்தியாவின் மிகப்பெரிய அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தாக்குகிறது. இது திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. ஜனநாயகம் பலவீனமடைவதாகச் சொல்ல மாட்டோம். ஆனால், அது அழிக்கப்படுகிறது,” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












