மோதியின் ரஷ்ய பயணத்தை உற்றுநோக்கிய அமெரிக்கா - பென்டகன் கூறியது என்ன?

பிரதமர் மோதி, அதிபர் புதின்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய சுற்றுப்பயணம் முடித்து இந்தியா திரும்பியுள்ளார். இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் இடையே இந்தியா - ரஷ்யா இடையிலான உறவுக் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

மோதியின் இந்தச் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என இந்தியா கூறியுள்ளது. பிரதமர் மோதி தன் எக்ஸ் இணையதளத்தில் ரஷ்யப் பயணம் குறித்து, ‘ரஷ்ய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தை நேர்மறையானதாக இருந்தது. இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து இந்திய - ரஷ்ய ஒத்துழைப்பை பன்முகப்படுத்துவது குறித்து விவாதித்தோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், அமெரிக்க வெளியுறவுத் துறை மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. பென்டகன் இதுகுறித்து, இந்தியா யுக்ரேன் போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு உதவும் என நம்புவதாக கூறியுள்ளது.

மோதி இந்திய பிரதமராக மூன்றாவது முறைப் பதவியேற்றப் பிறகு ரஷ்யா செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

அமெரிக்க வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டது குறித்தும், இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு குறித்தும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், ‘ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுக் குறித்த எங்கள் நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளோம்’ என கூறியுள்ளார்.

‘எங்கள் கவலைக் குறித்து இந்திய அரசிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளோம். இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம், இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து இவர், ‘ஐக்கிய நாடுகளின் சாசனக் கொள்கைகளின் அடிப்படையில் யுக்ரேன் மற்றும் அதன் பிராந்தியத்தில் அமைதி மற்றும் இறையாண்மையை நிலைநாட்ட நாங்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்படி இந்தியாவிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.’ என கூறி இருந்தார்.

நரேந்திர மோதி, விளாடிமிர் புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் சந்திப்பு.

ஆரம்பத்தில், மோதி ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி, இந்தியா ரஷ்யாவிடம் இந்தப் போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன் பியர், ‘இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான நீண்டகால மற்றும் நெருக்கமான உறவு நிலவி வருவதால், ரஷ்யாவை இந்தக் கொடூரமானப் போரை நிறுத்த வலியுறுத்த இந்தியாவிற்கு திறன் இருக்கிறது’ எனக் கூறி இருந்தார்.

இவரைப் பொறுத்தவரையில், ‘இந்தியா நமது முக்கியமான உத்திசார் கூட்டு நாடு, இதனுடன் நாம் முழுமையான மற்றும் திறந்தப் பேச்சுவார்த்தைக் கொண்டிருக்கிறோம். இதில், இந்தியா - ரஷ்யா இடையேயான உறவும் அடங்கும், இதுகுறித்து நாம் முன்பே பேசி இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

“இதில் முக்கியம் என்னவெனில், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் யுக்ரேன் பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்து வருகின்றன. அதிபர் புதின் தான் இந்தப் போரைத் துவக்கினார். இவரால் மட்டுமே இதை நிறுத்த முடியும்”

உண்மையில், ரஷ்யா - யுக்ரேன் இடையேயான போர் பிப்ரவரி 2022 இல் துவங்கியதில் இருந்து நேட்டோ மற்றும் மேற்கத்திய நாடுகளின் இலக்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருந்து வருகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மார்ச் 2023 இல் புதினுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது.

கடந்த திங்கட்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோதி மாஸ்கோ சென்ற போது, ரஷ்ய அதிபர் புதின் அவரை வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து நட்புப் பாராட்டினர்.

நேட்டோ உச்சி மாநாடு

பட மூலாதாரம், Getty Images

பென்டகன் கூறியது என்ன?

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சக பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடர், செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தப் போது, “அதிபர் புதின் இந்தச் சுற்றுப்பயணத்தை வைத்து, தான் உலக நாடுகளில் இருந்துத் தனிமைப்படுத்தப்படவில்லை என வெளிப்படுத்திக் கொண்டால், அதைக் கண்டு யாரும் ஆச்சரியப்படத் தேவையில்லை” எனக் கூறியிருந்தார்.

“ஆனால் உண்மை என்னவனில், ரஷ்யா வேண்டுமென்றே நடத்திவரும் இந்த போர் அவரை உலக நாடுகளிடம் இருந்து தனிப்படுத்தியிருக்கிறது. அதற்கு அவர் ஒரு பெரும் விலை கொடுத்துள்ளார். ”

இவர் மேலும், “இந்தியா - ரஷ்யா இடையே நீண்டகாலமாக நல்லுறவு நீடித்து வருகிறது. மற்றும் இந்தியா, அமெரிக்காவின் முக்கிய உத்திசார் கூட்டாளியாகவும் இருந்து வருகிறது. இவ்வுறவு இந்தியாவுடன் தொடரும்” என்றும் கூறியிருந்தார்.

ரைடரை பொறுத்தவரையில், “பிரதமர் மோதி யுக்ரேன் அதிபரையும் சமீபத்தில் சந்தித்திருந்தார் மற்றும் யுக்ரேன் போருக்கு அமைதி வழியில் தீர்வு காண இந்தியா தனது ஆதரவை உறுதியளித்திருக்கிறது. யுக்ரேனில் அமைதி நிலவ மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இந்தியா நிச்சயம் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். புதினிடம், ஐக்கிய நாடுகளின் சாசனக் கொள்கைகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை இந்தியா எடுத்துரைக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தபல வல்லுநர்கள், மோதி - புதின் கட்டியணைத்து அன்புப் பாராட்டியதைக் குறிப்பிட்டு மோதியை விமர்சித்தும் வருகின்றனர்.

வொலோடிமிர் ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி பிரதமர் மோதியின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தார்.

செவ்வாய் கிழமை அன்று, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபரை கட்டியணைத்ததைச் சுட்டிக்காட்டி பிரதமர் மோதியை தாக்கிப் பேசி இருந்தார். அதே நாளில், யுக்ரேன் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

“உலகின் மாபெரும் ஜனநாயக நாடு, உலகின் கொடூரமான குற்றவாளியைக் கட்டித் தழுவுவது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுவும், குழந்தை மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள் அன்று” என ஜெலன்ஸ்கி கூறி இருக்கிறார்.

எனினும், நிறைய வெளியுறவு வல்லுநர்கள் இந்தியா - ரஷ்யா உடனான உறவு வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் இயற்கையானது, மோதி - புதின் இடையேயான சந்திப்பு பலவகைகளில் முக்கியமானது என கருதுகின்றனர்.

அமெரிக்காவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன் மோதி - புதின் சந்திப்பு நடைபெற்றது மற்றொரு சிறப்பம்சமாக காணப்பட்டது.

மேலும், இந்தியா, அதன் பாதுகாப்பு மற்றும் பிற தேவைகளுக்கு மேற்கத்திய நாடுகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை மற்றும் தனது பழையக் கூட்டாளியான ரஷ்யாவை முற்றிலும் கைவிடாது என மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பும் ஒரு குறியீடாக இதை காண்பதாக வல்லுநர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவின் டெலாவேர் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர். முக்தாதர் கான், மோதி - புதின் சந்திப்புக் குறித்துத் தெளிவாகப் பேசி இருந்தார்.

காணொளிப் பதிவில் பேசிய ஆவர், “நேட்டோ சந்திப்புக்கு முன் ரஷ்யா உடனான இந்தியாவின் நிலைப்பாடு பல வகைகளில் முக்கியமானதாக இருக்கிறது. வியூக ரீதியாக முடிவெடுப்பதில் இந்தியா தனது சுதந்திர நிலையை இதன்மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)