அக்னிவீர்: முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹரியாணாவில் உள்ள ஒரு அகாடமியில் எடுக்கப்பட்ட படம், அங்கு இளைஞர்கள் அக்னிவீர் ஆவதற்குத் தயாராகி வருகின்றனர்.

மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் முன்னாள் `அக்னிவீர்’ வீரர்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), சாஸ்த்ரா சீமா பால் (SSB), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் ரயில்வே போலீஸ் படை (RPF) போன்ற பாதுகாப்புப் படைகளுக்கான ஆட்சேர்ப்பு இதில் அடங்கும்.

அதன்படி, `அக்னிவீர்’ பணியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கு வயது வரம்பு மற்றும் உடல் திறன் தேவைகளும் தளர்த்தப்படும். 2022ஆம் ஆண்டில், ராணுவத்தின் மூன்று பிரிவுகளில் வீரர்கள், விமானப் படையினர் மற்றும் மாலுமிகள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

'அக்னிவீர்' திட்டத்தின் கீழ், ராணுவத்தில் சேர்பவர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள். அதன் பிறகு அவர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள், 75 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டும்.

இத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பயிற்சி எடுத்த அக்னிவீரர்கள் என்ன செய்வார்கள் என்பது குறித்துத் திட்டமிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற பிறகு, `அக்னிவீர்’ விவகாரம் குறித்து மீண்டும் விவாதத்தைத் தொடங்கினார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் `அக்னிவீர் யோஜனா’ திட்டம் ஒழிக்கப்படும் என்றார்.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அறிவிப்பு

மத்திய பாதுகாப்புப் படைகளில் முன்னாள் அக்னி வீரர்களை பணியமர்த்துவது தொடர்பாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக `சிஐஎஸ்எஃப்’ இயக்குநர் ஜெனரல் நீனா சிங் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "முன்னாள் அக்னி வீரர்களை பணியில் சேர்ப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிஐஎஸ்எஃப் செய்துள்ளது. கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் சிஐஎஸ்எஃப் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடங்களை ஒதுக்கியுள்ளது" என்றார்.

"முன்னாள் அக்னி வீரர்களுக்கு உடல் திறன் தேர்வில் (Physical Efficiency Test PET) தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் (முதல் ஆண்டில்) மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். அக்னி வீரர்கள் இந்த வசதியைப் பெறுவதை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை உறுதி செய்யும்" என்று அவர் கூறினார்.

முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், SCREEN SHOT

படக்குறிப்பு, பிஎஸ்எஃப் டைரக்டர் ஜெனரல் நிதின் அகர்வால்

எல்லைப் பாதுகாப்புப் படை அறிவிப்பு

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) இயக்குநர் ஜெனரல் நிதின் அகர்வால், இந்திய அரசின் செய்தி சேனலான தூர்தர்ஷனிடம், பிஎஸ்எஃப் ஆட்சேர்ப்பில் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் அக்னி வீரர்கள் குறித்து அவர் கூறுகையில், நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து அனுபவம் பெற்றுள்ளனர். அவர்கள் கடுமையான ஒழுங்குமுறைக்கு உட்பட்டுள்ளனர். எனவே அவர்கள் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஏற்றவர்கள். ஏற்கெனவே பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களை எங்கள் படையில் பணியமர்த்துவதில் மகிழ்ச்சி” என்றார்.

மேலும் "குறுகிய காலப் பயிற்சி அளித்த பிறகு அவர்கள் எல்லையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார்.

பிஎஸ்எஃப் படையின் மொத்த காலியிடங்களில் 10 சதவீதம் இவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

`சாஸ்த்ரா சீமா பால்’ அறிவிப்பு

`சாஸ்த்ரா சீமா பால்’ பாதுகாப்பு படையின் இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சௌத்ரி இதுகுறித்த கூடுதல் தகவல்களை பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"முன்னாள் அக்னி வீரர்களுக்குப் பணி நியமனங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. `சாஸ்த்ரா சீமா பால்’ படையில் பணி நியமனம் தொடர்பான விதிகளிலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

"முதல் பேட்ச் ஆட்சேர்ப்பில் ஐந்து ஆண்டுகள் வயது தளர்வு இருக்கும். அவர்களுக்கு உடல் திறன் தேர்வு நடத்தப்படாது" என்றும் குறிப்பிட்டார்.

ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அறிவிப்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல், மனோஜ் யாதவ் கூறுகையில், "எதிர்காலத்தில் கான்ஸ்டபிள் தர நிலையில் எந்தப் பணி நியமனம் நடந்தாலும், அனைத்துப் பிரிவுகளிலும் முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இட ஒதுக்கீடு மட்டுமின்றி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்" என்றார்.

"டிசம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் அக்னி வீரர்களின் முதல் குழுவுக்கு, வயது தளர்வு ஐந்து ஆண்டுகள் வரை இருக்கும். அதே நேரம் அடுத்தடுத்த பேட்ச்களுக்கு, வயது வரம்பு மூன்று ஆண்டுகள் வரை தளர்த்தப்படும்."

"அவர்களது வருகை ரயில்வே பாதுகாப்புப் படைக்கு புதிய வேகத்தையும், புதிய ஆற்றலையும், புதிய மன உறுதியையும் தரும்" என்றார்.

இதற்கிடையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல் அனிஷ் தயாள் சிங் கூறுகையில், ``முன்னாள் அக்னி வீரர்களைப் பணியமர்த்துவதன் மூலம் சிஆர்பிஎஃப் பயனடையும். ஏனெனில் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட வீரர்களைப் பெறுவது எல்லா விதத்திலும் பயனளிக்கக் கூடியது. இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து, பணி நியமனம் தொடர்பான விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இளைஞர்களின் கருத்து என்ன?

முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Manish Kumar

படக்குறிப்பு, ராணுவத்தில் சேர இளைஞர்கள் பயிற்சி எடுக்கின்றனர்

ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிகாரில் உள்ள மோதிஹாரியில் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார் மணீஷ் குமார். அவரது பயிற்சி முகாமில், உடற்பயிற்சி மட்டுமின்றி, ராணுவம், போலீஸ் மற்றும் பிற வேலைகளுக்கான ஆட்சேர்ப்புகளில் வெற்றி பெற மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

மணீஷ் குமார் பிபிசி செய்தியாளர் சந்தன் குமார் ஜாஜ்வாடேவிடம் கூறுகையில், "தற்போது என் பயிற்சி முகாமில் 70 மாணவர்கள் வெவ்வேறு வேலைகளுக்குப் பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது முசாஃபர்பூரில் 18 இளைஞர்களின் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ளது. அரசின் புதிய அறிவிப்பு, அக்னிபத் திட்டத்தில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாது" என்று கூறினார்.

மணீஷ்குமாரிடம் பயிற்சி பெறும் இளைஞர் அமர்ஜீத் குமார் கூறுகையில், "தனிப்பட்ட முறையில் இந்த முடிவு சரியல்ல என்று நினைக்கிறேன். ராணுவத்தில் பழைய ஆள்சேர்ப்பு முறையே சரி. முன்னாள் அக்னி வீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அல்லது 50 சதவீத இட ஒதுக்கீடுகூடக் கொடுக்கட்டும். ஆனால் அவர்களுக்குப் பல்வேறு துறைகளில் நேரடியாக வேலை கொடுத்திருந்தால் அதுதான் சரியானதாக இருந்திருக்கும்" என்றார்.

மணீஷ்குமார் அருகில் பயிற்சி எடுத்து வரும் மற்றொரு இளைஞர் சித்தரஞ்சன் குமார் கூறுகையில், "இப்போதுதான் அரசு அறிவித்துள்ளது. இதனால் நமக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்.

``சிஐஎஸ்எஃப், சிஆர்பிஎஃப் போன்றவற்றில் பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 23. அப்படியிருக்க 25 வயதில் ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு இந்தப் புதிய வேலைக்குத் தயாராகும் வாய்ப்பு, நேரம் எந்த அளவுக்குக் கிடைக்கும்?” என்பது சித்தரஞ்சனின் கேள்வி.

ரவி ரஞ்சன் என்ற மற்றோர் இளைஞர், "இது நல்ல முடிவு. ஓய்வு பெற்ற பிறகு, அக்னி வீரர்கள் நீண்டகாலம் வீட்டில் உட்கார மாட்டார்கள். மீண்டும் பணியில் தொடர்வார்கள். 10 சதவீத இடஒதுக்கீடு குறைவுதான் என்றாலும், வேலை கிடைக்கும் நபர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும்” என்றார்.

`அக்னிவீர்’ விவகாரத்தில் அரசிடம் கேள்வி எழுப்பும் ராகுல் காந்தி

முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், ANI PHOTO/SANSAD TV

படக்குறிப்பு, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீர் விவகாரத்தில் அரசைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார்

மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால், அக்னிவீர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என இந்தியா கூட்டணியின் முக்கிய எதிர்க்கட்சிகள் பலமுறை வாக்குறுதி அளித்துள்ளன.

இந்தியா கூட்டணியின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலுக்கான தனது அறிக்கையில் ராணுவத்தில் தொடங்கப்பட்ட 'அக்னிபத்' ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை ரத்து செய்யத் தயார் எனக் குறிப்பிட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாடாளுமன்றத்தில் அக்னிவீர் யோஜனா திட்டம் குறித்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி தனது உரையில் அக்னிவீர் பற்றிப் பேசுகையில், ``அரசு அவர்களைத் தியாகி என்று கூறவில்லை, 'அக்னிவீர்' என்று அழைக்கிறது. அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது, இழப்பீடு கிடைக்காது, தியாகி அந்தஸ்து கிடைக்காது. சாதாரண ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்கும், ராணுவ வீரர்களுக்கு அரசு பல சலுகைகளைக் கொடுக்கிறது. ஆனால் அக்னிவீரர்களை ஒரு ராணுவ வீரராக அரசு கருதுவதில்லை” என்று பேசினார்.

ராகுல் காந்தியின் கருத்துக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டினார். பின்னர், பிரதமர் மோதியும் ராகுல் சொல்வது தவறானது என்றார்.

அக்னிவீர் ஆட்சேர்ப்பு திட்டத்தில் மாற்றங்கள் தேவை என்றால், அது செய்யப்படும் என்று கடந்த ஆண்டு ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். மோதி அரசின் மூன்றாவது பதவிக் காலம் தொடங்குவதற்கு முன்பே, அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான `ஐக்கிய ஜனதா தளம்’ பகிரங்கமாகக் கோரியது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி கூறுகையில், "அக்னிவீர் திட்டம் தொடர்பாக வாக்காளர்களில் ஒரு பகுதியினருக்கு அதிருப்தி உள்ளது. எனவே இந்தத் திட்டத்தின் குறைபாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கட்சி விரும்புகிறது. ஏனெனில் இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்” என்றார்.

'அக்னிவீரர்கள்' யார்?

`அக்னிபத்’ திட்டம் ஜூன் 2022இல் அறிவிக்கப்பட்டது. ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளில் உள்ள வீரர்கள், விமானப் படையினர் மற்றும் மாலுமிப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் திட்டம் இது.

அக்னிவீர் திட்டத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் இந்தப் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மற்ற திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வீரர்கள் 'அக்னிவீர்' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் நான்கு ஆண்டுகள்.

இந்தியாவின் அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட ராணுவ வீரர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர பணியில் இருக்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. மீதமுள்ள 75 சதவீதம் பேர், நான்கு ஆண்டுகளில் ஓய்வுபெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

​​நாட்டின் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பிகார், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களுக்குப் பிறகு, ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் ஊடகங்களில் தோன்றி தங்கள் விளக்கத்தை அளித்தனர்.

முன்னாள் அக்னி வீரர்களுக்கு மத்திய ஆயுதப் பாதுகாப்புப் படைகளில் 10% இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், ANI

நேபாளத்திலும் அக்னிவீர் திட்டத்துக்கு எதிரான போராட்டம்

அக்னிவீர் யோஜனா குறித்த இந்திய எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு மக்களவைத் தேர்தலின்போது பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலும் இந்தத் திட்டம் பற்றிய விவகாரம் மீண்டும் தீவிரமடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசாங்கம் இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பைத் தொடங்கியபோது, ​​நேபாளம் தனது இளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.

நேபாள அரசு அக்னிபத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதற்குத் தடை விதித்துள்ளது.

இந்தத் திட்டம் இரு நாடுகளுக்கும் இடையிலான 200 ஆண்டுகால ராணுவ உறவுகளின் பாரம்பரியத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)