பானிபூரியில் சேர்க்கப்படும் கண்கவர் நிறமிகளால் புற்றுநோய் ஆபத்து - எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் விற்கப்படும் பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருக்கலாம் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அச்சம் கொள்கிறது.

கடந்த வாரம் கர்நாடக மாநிலத்தில் பானிபூரி, கோபி மஞ்சுரியன் உள்ளிட்ட துரித உணவுகளின் மாதிரிகளை அம்மாநில சுகாதாரத்துறை பரிசோதித்தபோது, அவற்றில் 22 சதவீத மாதிரிகள் பாதுகாப்பற்றவை என்பது தெரிய வந்துள்ளது. அந்த உணவுப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருந்ததாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகளில் பல பாதுகாப்பான தரத்தில் இல்லை. அவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருந்தன” என்று தினேஷ் குண்டு ராவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கர்நாடகா போன்று தமிழ்நாட்டிலும் பலரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக பானிபூரி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையும், மாநிலம் முழுவதும் விற்கப்படும் பானிபூரியின் தரத்தைச் சோதித்துப் பார்க்கத் தொடங்கியுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வட இந்திய உணவு, தமிழ்நாட்டில் 90ஸ் கிட்ஸ்களின் பள்ளிப் பருவத்தில் அறிமுகமானது. தற்போது வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும்கூட மிகவும் பிடித்த மாலைநேர உணவாக பானி பூரி இருக்கிறது.

மூன்று சக்கர சிறிய வாகனத்தில் சிகப்புத் துணி போர்த்தியிருக்கும் தள்ளுவண்டிகள் முதல், சிறு கடைகள், பெரிய உணவகங்கள் வரை பானிபூரி தமிழ்நாட்டு மக்களின் மெனு கார்டில் இடம் பெற்றுவிட்டது.

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

சென்னை மெரினா கடற்கரையில் தனது நண்பர்களுடன் மாலையில் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பிரவீன் குமார். தான் ஏழு ஆண்டுகளாக பானிபூரி சாப்பிட்டு வருவதாகக் கூறிய பிரவீன், “இந்த ரசம் எனக்கு மிகவும் பிடிக்கும். மிளகுப் பொடி தூவி, காரமாக இருக்கும். எனக்கு சளித் தொந்தரவு ஏற்பட்டால், இந்த ரசத்தைக் குடிப்பது வழக்கமாகிவிட்டது” என்கிறார்.

கோவையைச் சேர்ந்த திவ்யா முதன்முதலில் தனது அம்மா, வீட்டில் செய்து கொடுத்தபோது பானிபூரி அறிமுகமானதாகக் கூறுகிறார்.

“அதைச் சாப்பிட்டுப் பழகிய பிறகு பிறகு பானி பூரிக்கு அடிமையாகிவிட்டேன். இப்போது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக நண்பர்களுடன் அதைச் சாப்பிட்டுவிடுவேன். பூரியும் ரசமும் சேர்த்துச் சாப்பிடும்போது, அது உடலுக்கு மட்டுமல்ல மனதுக்கும் உற்சாகமாக இருக்கிறது” என்றார்.

கல்லூரிப் படிப்பை முடித்திருக்கும் சாருலதா, “எனது பள்ளிக்கு அருகில் இருந்த கடையில் பானிபூரி சாப்பிட ஆரம்பித்தேன். இப்போது எங்கு சென்றாலும் பானிபூரி சாப்பிடுகிறேன். இந்த உணவு வைக்கப்பட்டிருக்கும் நிலையைப் பார்க்கும்போது சுகாதாரமாக இல்லை என்பது தெரிகிறது. ஆனாலும் ருசியாக இருக்கிறதே!” என்றார்.

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

பானிபூரி ஏன் ஆபத்தாக இருக்கலாம்?

பானிபூரியில் மூன்று விதமான வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. கண்கவர் நிறங்களுடன் இருப்பதற்காகவும், நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. அவை,

  • பச்சை நிற பானியில் சேர்க்கப்படும் ‘ஆப்பிள் கிரீன்’ நிறமி
  • பூரியில் சேர்க்கப்படும் ‘சன்செட் யெல்லோ’ நிறமி
  • டார்ட்ரசைன் என்னும் நிறமி
பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

பச்சை நிற பானியில் ‘ஆப்பிள் கிரீன்’ நிறமி

பூரியுடன் வழங்கப்படும் புளிப்பான பானி பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, புளி கரைசலுடன் சேர்த்து அந்த பானியை தயாரிக்க வேண்டும்.

ஆனால் அதில் பச்சை நிறத்தைக் கூடுதலாக்கிக் காட்டுவதற்காக, ‘ஆப்பிள் கிரீன்’ எனும் நிறமி சில இடங்களில் சேர்க்கப்படுவதாகக் கூறுகிறார் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமார்.

“கால் லிட்டர் நீரில் சிறிதளவு கலந்தாலே மிகப் பளிச்சென பச்சை நிறம் கிடைக்கும்” என அவர் எச்சரிக்கிறார்.

பூரியில் ‘சன்செட் யெல்லோ’ நிறமி

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

“அந்த பூரிகள் வெகு நாட்கள் கெடாமல், சட்டென உடையும் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், பளிச்சென மஞ்சள் நிறத்தில் இருப்பதற்காகவும் சன்சட் யெல்லோ என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது. இதில் வழங்கப்படும் மசாலாவில் ஆரஞ்சு போன்ற நிறத்தை வழங்க ‘டார்ட்ரசைன்’ என்ற நிறமி பயன்படுத்தப்படுகிறது” என்கிறார் சதீஷ்குமார்.

இதுதவிர, புளியை இரவெல்லாம் ஊற வைத்து புளி கரைசலை தயாரிப்பதற்குப் பதிலாக, உடனடி புளிப்புத்தன்மைக்காக சாப்பிடத் தகுதியற்ற சில உப்பு வகைகளும் சேர்க்கப்படுகின்றன.

ஆப்பிள் கிரீன் டை, துணிகளுக்கும் உலோகங்களுக்கும் பச்சை நிறம் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சோப், ஷவர் ஜெல் போன்ற குளியலுக்குத் தேவைப்படும் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

சண்செட் யெல்லோ குளிர்பானங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருந்து தயாரிப்பு துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துவது உடலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதே போன்று டார்ட்ரசைன் எனும் நிறமியும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. எலிகளில் செய்யப்படும் சோதனையில் இந்த நிறமி நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடும் என்று தெரிய வந்தது.

'நீண்ட நாள் உட்கொண்டால் புற்றுநோய் ஏற்படலாம்'

பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

இந்த வேதிப்பொருட்கள் உடலுக்குத் தீங்கானவை என்றும் நீண்ட நாள் உட்கொள்ளும்போது புற்றுநோயை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுபோன்ற நிறமிகள் பானிபூரி மட்டுமல்லாமல், பஞ்சுமிட்டாய், ஜெல்லி, ஐஸ்கிரீம், சாக்லேட் எனப் பல வகையான உணவுகளில் சேர்க்கப்படுகின்றன.

உடலுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, அதிகபட்சமாக இவற்றை எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்று அளவுகளை சில மேற்கத்திய உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன. அதன்படி, “ஒருவர் தனது ஒவ்வொரு கிலோ எடைக்கும் 4 மி.கி முதல் 7.5 மி.கி வரை இவற்றை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். அதுவே எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்க, ஒருவர் 1.4 .மி.கி. மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். அதாவது 60 கிலோ எடை கொண்ட ஒருவர், ஒரு நாளில் 60 முதல் 80 மி.கி வரை எடுத்துக் கொள்ளலாம்" என்று மருத்துவர் அதிதி கூறுகிறார்.

இந்த அளவைத் தாண்டி உட்கொண்டால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

அவரது கூற்றுப்படி, உடனடி பாதிப்பாக வயிற்று வலி, வாந்தி, பேதி, அஜீரணம், தூக்கமின்மை போன்றவை ஏற்படலாம்.

அதுவே, இந்த வேதிப்பொருட்களை நெடுநாள் தொடர்ந்து உட்கொண்டால் "சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கக்கூடும். உடலிலுள்ள சிவப்பு அணுக்கள், தட்டணுக்கள் எண்ணிக்கை குறையலாம், கொழுப்புச் சத்து அதிகரிக்கலாம். கர்பிணிப் பெண்கள் உட்கொண்டால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பிற்காலத்தில் நரம்பு வளர்ச்சி நோய்கள் ஏற்படலாம். இந்த வேதிப்பொருட்கள் மரபணுப் பிறழ்வை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பதால், மிக அதிகமாக உட்கொள்ளும்போது உடலில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி, புற்றுநோய் உண்டாக்கவும் வாய்ப்புண்டு" என எச்சரிக்கிறார் மருத்துவர் அதிதி.

பானிபூரி விற்பவர்களுக்கு பயிற்சி

பானிபூரியில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் உள்ளனவா?

பட மூலாதாரம், Getty Images

சென்னையில் 1000க்கும் மேற்பட்ட பானிபூரி கடைகள் இருக்கின்றன. மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளிலேயே பானிபூரி கடைகள் அதிகம் காணப்படுகின்றன.

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழுக்கள் சென்னை முழுவதும் நடத்திய சோதனைகளில் 350க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகள் சேகரிப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பானிபூரி விற்பவர்கள் பலரும் வெறும் கைகளால் உணவைக் கையாள்வதால் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக சோதனை செய்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

“கைகளால் தொட்ட மசாலாவையும் பானியையும், பானிபூரி விற்பவர் மறுநாள் பயன்படுத்துகிறார் என்றால், நோய்த்தொற்று ஏற்பட 100க்கு 90 சதவீதம் வாய்ப்புண்டு. இவை எதுவும் சூடாக வழங்கப்பட வேண்டிய உணவில்லை. எனவே உணவில் உள்ள பாக்டீரியாக்கள் அழிய வாய்ப்பில்லை” என்கிறார் சதீஷ்குமார்.

"பானிபூரி விற்பவர்களுக்கு என பிரத்யேகப் பயிற்சியை உணவுப் பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது. பானிபூரி விற்பவர்களைக் கண்டறிந்து, பட்டியலிட்டு அவர்களுக்கான பயிற்சி நடத்தப்படுகிறது. பெரும்பாலானவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர்களுக்குத் தெரிந்த இந்தி மொழியிலேயே வகுப்புகள் எடுக்கப்படுகின்றன."

“இந்த நிறமிகளைப் பயன்படுதுவதால் ஏற்படும் உடல் விளைவுகளை அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறோம். வாடிக்கையாளரின் உடல்நலம் பாதித்தால், அவர்களின் தொழிலும் பாதிக்கப்படும் என்று உணர்கிறார்கள். பயிற்சி முடிப்பவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதுவரை 70 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்” என்று விளக்கினார் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)