அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு

அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய் உண்டாவதற்கு தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Junk food cancer

பட மூலாதாரம், wildpixel

கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவற்றை அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.

அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை?

  • தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் மற்றும் பன்கள்
  • மொருகலான நொறுக்குத் தீனிகள்
  • இனிப்புப் பண்டங்கள் மற்றும் பிற தின்பண்டங்கள்
  • சோடா மற்றும் குளிர்பானங்கள்
  • இறைச்சி உருண்டைகள்
  • இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மற்றும் சூப் வகைகள்
  • குளிர் பதன வசதியில் சேமிக்கப்பட்ட இறைச்சி
  • சர்க்கரை, எண்ணெய் மற்றும் கொழுப்பில் செய்யப்பட்ட உணவுகள்

இந்த ஆய்வு முடிவுகள் குறித்த எச்சரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டாலும், ஆரோக்கியமான உணவு முறையே புற்றுநோய் அபாயத்தைத் தவிர்ப்பதற்கான வழி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Supermarket-sliced loaves and fresh bread from a bakery

பட மூலாதாரம், Getty Images

புகையிலைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கத்துக்கு அடுத்தபடியாக புற்றுநோய் வருவதற்கு இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை ஓரளவு அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பாரிஸில் உள்ள சோர்போன் பாரிஸ் சைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில் நடுத்தர வயதில் உள்ள பெண்களின் உணவுமுறை ஐந்து ஆண்டு காலம் கண்காணிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் சஞ்சிகையில் பதிப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு முடிவுகளில், அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள், அவர்கள் உண்ணும் உணவுகளின் விகிதத்தில் 10% அதிகரித்தது என்றும் கண்டறியப்பட்ட புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை 12% அதிகரித்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

முடிவுகளில் முக்கிய புள்ளிகள்

  • சராசரியாக 18% மக்கள் உட்கொண்ட உணவுகள் அதிக அளவு பதப்படுத்தப்பட்டிருந்தன.
  • சராசரியாக, ஆண்டொன்றுக்கு 10,000 பேரில் 79 பேருக்கு புற்றுநோய் வந்தது.
  • உட்கொள்ளும் உணவுகளில் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை 10% அதிகரித்தால் ஆண்டுக்கு 10,000 மக்கள் தொகையில் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையில் ஒன்பது கூடியது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் வழக்கம் வேகமாகா அதிகரித்து வரும் நிலையில், வரும் ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்புகளின் அதிகரிக்கும் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இன்னும் பெரிய அளவில் ஆய்வு செய்யப்பட்டு இந்த முடிவுகளை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

cancer

பட மூலாதாரம், EPA

"பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். உடல் பருமன் புற்றுநோயை உண்டாக்கும்," என்று கூறியுள்ள பிரிட்டனைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி வல்லுநரான பேராசிரியர் லிண்டா பால்ட், "ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதற்கான எச்சரிக்கை மணியாகவே இந்த ஆய்வு முடிவுகள் உள்ளன," என்று கூறியுள்ளார்.

நார்விச்சில் உள்ள குவாட்ரம் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த ஐயான் ஜான்சன் இந்த ஆய்வுகள் சில வலுவற்ற தொடர்புகளையே முன்வைப்பதாகக் கூறுகிறார்.

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதற்கான வரையறை தெளிவாக இல்லை என்கிறார் அவர்.

காணொளிக் குறிப்பு, புற்றுநோய் எவ்வாறு பரவுகிறது என்பதை காட்டும் காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: