விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

விக்கி டோனர்: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

பட மூலாதாரம், NETFLIX

படக்குறிப்பு, ஜொனாதன் ஜேகப் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்
    • எழுதியவர், ஸ்டீவன் மாக்கென்டோஷ்
    • பதவி, சினிமா செய்தியாளர்

சில குடும்பங்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் அதே வேளையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகிறார். இங்கு நாம் பேசுவது ஜொனாதன் ஜேகப் மெய்ஜேர் பற்றித்தான்.

கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானம் செய்யக்கூடாது என்று 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது 43 வயதான இவர் வெளிச்சத்திற்கு வந்தார்.

நெதர்லாந்தில் விந்தணு தானம் செய்பவர்கள், 25 குழந்தைகளின் பிறப்புகளில் மட்டுமே பங்கு வகிக்கும் வகையில் சட்ட விதி அமலில் உள்ளது. ஆனால், அந்நாட்டில் மட்டும் 100 குழந்தைகள் பிறப்பதற்கு ஜொனாதன் 'பங்காற்றினார்' என்பதுதான் அவர் மீது சுமத்தப்பட்ட 'குற்றச்சாட்டு'.

மறுபுறம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தான் விந்தணுக்களை தானம் செய்த காரணத்தால் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் ஜொனாதன் கூறுகிறார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் அவர் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை என்று தகவல் வெளியானபோது ஜொனாதன் விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஜொனாதன் தொடர்ந்து விந்தணுக்களை விற்றார் என்றும் அந்த ஆண்டு உலகம் முழுவதும் சுமார் 1,000 குழந்தைகளின் பிறப்பில் அவர் 'பங்களித்தார்' என்றும் டச்சு அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் எத்தனை குழந்தைகளின் கரு உருவாக விந்தணுக்களை அவர் தானம் செய்துள்ளார் என்பது பற்றிய தகவல்களைப் பொறுத்தவரை, நூற்றுக்கணக்கான குடும்பங்களிடம் தெரிந்தே பொய் சொன்னார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

விக்கி டோனர்: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நெதர்லாந்தில் ஒருவர் 25 குழந்தைகள் பிறப்பதற்காக மட்டுமே விந்தணு தானம் செய்ய முடியும்.

சில நாட்களுக்கு முன்பு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான புதிய ஆவணத் தொடரில், ஜொனாதனின் விந்தணுவைப் பயன்படுத்திய பல பெண்கள் இந்த விஷயத்தில் தங்கள் தரப்பை முன்வைத்துள்ளனர்.

ஜொனாதனின் தந்திரம் எப்படி பிடிபட்டது என்பதை இந்தப் பெண்கள் ஆவணப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

ஜொனாதனுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்பதைக் கண்டுபிடித்த பிறகு தாம் ஏமாற்றப்பட்டதாக உணர்வதாக அந்தப் பெண்களில் ஒருவர் கூறினார். தான் மிக வருத்தமாகவும் கோபமாகவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஜொனாதன் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத் தொடல் பங்கேற்க மறுத்துவிட்டார். ஆனால் ’தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை’ பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் நிராகரித்தார். ’தனது விந்தணுவைப் பெற்றதன் காரணமாகப் பலர் மகிழ்ச்சியாக உள்ளனர்' என்று கூறி அவர் தனது செயலை நியாப்படுத்தினார்.

ஜொனாதனின் விந்தணு தானம்

விக்கி டோனர்: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜொனாதன் ஜேக்கப்பின் விந்தணு தானத்தால் சுமார் 1,000 குழந்தைகள் பிறந்ததாக நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜொனாதன் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக விந்தணுக்களை தானம் செய்து வந்தார். பல நேரங்களில் அவர் ரகசியமாக இதைச் செய்தார். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு செல்வதற்குப் பதிலாக விந்தணுவுக்கான தேடலில் உள்ள குடும்பங்களை நேரடியாகத் தொடர்புகொண்டார்.

நெதர்லாந்தில் அவர் 102 குழந்தைகளின் பிறப்புக்குப் பங்களித்தார். இதற்காக 11 கருத்தரிப்பு கிளினிக்குகள் அவரிடம் இருந்து விந்தணு தானம் பெற்றன. 2017ஆம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் அவர் விந்தணு தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவர் 2023ஆம் ஆண்டு வரை தனது விந்தணுக்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதைத் தொடர்ந்தார்.

அதே ஆண்டில் ஒரு பெண்மணியும், அமைப்பு ஒன்றும் அவருக்கு எதிராக சிவில் வழக்கு பதிவு செய்தது. ஜொனாதனின் இந்த நடவடிக்கையானது தங்கள் குழந்தைகளுக்கு ’இன்ஸெஸ்ட்’ (உறவினர்களுக்கு இடையிலான பாலியல் தொடர்பு) அபாயத்தை அதிகரித்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தில், 550 முதல் 600 குழந்தைகள் பிறந்ததற்குத் தானே காரணம் என்று ஜொனாதன் ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும் ஜொனாதனுக்கு பல துணைக் கண்டங்களில் சுமார் ஆயிரம் குழந்தைகள் இருப்பதாக நீதிமன்றம் கூறுகிறது.

ஜொனாதனின் வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் மேலும் பெற்றோர்களுக்கு விந்தணு தானம் செய்யத் தடை விதித்தார். ஒவ்வொரு விந்தணு தானத்திற்கும் அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

'தி மேன் வித் 1000 கிட்ஸ்'

விக்கி டோனர்: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

பட மூலாதாரம், NETFLIX

நெட்ஃப்ளிக்ஸில் அவர் குறித்து வெளியாகியுள்ள ஆவணத் தொடரின் தலைப்பு 'தி மேன் வித் 1000 கிட்ஸ் (The Man with 1000 Kids)'.

தங்களுக்கு விந்தணு தானம் செய்த ஜொனாதன் ஜேக்கப்பிற்கு ஏற்கெனவே நூற்றுக்கணக்கான குழந்தைகள் இருப்பதைத் தெரிந்துகொண்ட குடும்பங்கள் மற்றும் பெண்களின் நேர்காணல்கள் இந்த ஆவணப்படத்தில் உள்ளன.

விந்தணுவை தானம் செய்யும்போது ஜொனாதன் தங்களிடம் இருந்து இந்தத் தகவலை மறைத்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

"விந்தணுவை தானம் செய்யும்போது ​​ஐந்து குடும்பங்களுக்கு மட்டுமே இதுவரை விந்தணு தானம் செய்ததாக அவர் கூறினார். எனவே இப்போது நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்" என்று ஒரு பெண் குறிப்பிட்டார்.

நதாலி என்ற அந்தப் பெண் பிபிசியிடமும் பேசினார். தனது டோனர் என்ன செய்தார் என்பதை ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டதாக அவர் கூறினார்.

"என் மிகப்பெரிய கவலை என்னவென்றால் இந்தக் குழந்தைகள் ஒரு நாள் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கக்கூடும். மேலும் தாங்கள் ஒரே டோனர் மூலம் பிறந்தவர்கள் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்," என்று நதாலி குறிப்பிட்டார்.

ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத்தொடர் தனது விந்தணு தானத்தில் மகிழ்ச்சி அடையாதவர்களின் கதையில் அதிக கவனம் செலுத்துவதாகக் கூறும் ஜொனாதன், தன் மீது நன்றியுடன் இருக்கும் பல குடும்பங்களை இந்த ஆவணத்தொடர் புறந்தள்ளியுள்ளதாகவும் கூறுகிறார்.

விக்கி டோனர்: விந்தணு தானம் மூலம் 1000 குழந்தைகளுக்கு தந்தையான நபர் - வழக்கு தொடுத்த தாய்மார்கள்

பட மூலாதாரம், NETFLIX

படக்குறிப்பு, ஜொனாதன் தானம் செய்த விந்தணு மூலம் கருத்தரித்த பெண்களில் சூசன் (இடது), நதாலி ஆகியோரும் அடங்குவர்.

”ஆவணத் தொடருக்கு 'தி மேன் வித் 1000 கிட்ஸ் (The Man with 1000 Kids)' என்று தலைப்பு வைத்துள்ளனர். ஆனால் உண்மையில் ’550 குழந்தைகள் கருத்தரிக்கப் பல குடும்பங்களுக்கு விந்தணு தானம் செய்து உதவியவர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே பொய் சொல்லி வந்திருக்கிறார்கள், வேண்டுமென்றே பொய் சொல்கிறார்கள்,” என்று ஜொனாதன் பிபிசியிடம் கூறினார்.

நூற்றுக்கணக்கான குழந்தைகளை உருவாக்க உதவிய விந்தணு தானத்தில் "எந்தத் தவறும் இருப்பதாக” தான் கருதவில்லை என்றும் ஜொனாதன் பிபிசியிடம் கூறினார்.

தனது விந்தணுவில் இருந்து பிறந்த குழந்தைகளிடையே பாலியல் தொடர்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் மறுக்கிறார். ஏனெனில் தனது அடையாளத்தைத் தாம் ஒருபோதும் மறைத்ததில்லை என்று அவர் தெரிவித்தார்.

"இப்போது மலிவான விலையில் டிஎன்ஏ சோதனைக் கருவிகள் கிடைக்கின்றன. என் ரெக்கார்ட் டிஎன்ஏ தரவுத் தளத்தில் உள்ளது. அதனால் யார் வேண்டுமானாலும் என்னைக் கண்டுபிடிக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.

நெட்ஃப்ளிக்ஸ் மீது வழக்கு தொடரப் போவதாக ஜொனாதன் கூறியுள்ளார். ஜொனாதனின் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க நெட்ஃப்ளிக்ஸ் மறுத்துவிட்டது.

இந்த ஆவணப்படத்திற்காக தான் நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததாகவும், பாதிக்கப்பட்ட சுமார் 50 குடும்பங்களுடன் பேசியதாகவும் இந்தத் தொடரின் நிர்வாகத் தயாரிப்பாளரான நதாலி ஹில் கூறினார்.

"ஐம்பது குடும்பங்கள் அவரது பொய்கள் குறித்து நீதிமன்றத்தில் அதிர்ச்சி தரும் வாக்குமூலங்களை அளித்துள்ளன. ஜொனாதன் விந்தணு தானம் செய்வதைத் தடை செய்ய வேண்டுமென்று நீதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஜொனாதன் தரப்பை ஆவணப்படத்தில் சேர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று நதாலி குறிப்பிட்டார்.

(இந்தக் கட்டுரை பிபிசியின் ஸ்பானிஷ் மொழி இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)