அமெரிக்காவின் ரகசிய ராணுவ தளத்தில் சிக்கிக் கொண்ட இலங்கைத் தமிழர்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆலீஸ் கட்டி
- பதவி, பிபிசி நியூஸ்
``டியாகோ கார்சியா” - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு.
இந்தத் தீவில் புலம்பெயர்ந்தோர் குழுவை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணை, பயோட் (British Indian Overseas Territory BIOT) எனப்படும் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் இந்த வாரம் நடைபெறவிருந்தது. இதில் பிபிசி செய்தியாளர்கள் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த வழக்கு பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அமெரிக்க அரசாங்கம் பிரிட்டனில் விசாரணை நடத்துவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
பிபிசிக்கு கிடைத்த நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தடை செய்துள்ளனர்.
பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் அமைந்துள்ள இந்தத் தீவு, மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்து பல நூறு மைல் தொலைவில் அமைந்துள்ளது என்பதுடன், முன் அனுமதி பெறாத நபர்கள் அந்தப் பகுதிக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்ற ஆவணங்களின்படி, கடந்த வாரம், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்கள் மற்றும் "செய்தியாளர்கள்" (பிபிசி) தீவை அணுகுவதற்குக் கொடுத்த தங்களின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றதாக அறிவித்தனர்.
விசாரணையின் பங்கேற்பாளர்களை டியாகோ கார்சியாவிற்கு அமெரிக்க ராணுவ விமானங்களில் அழைத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களின் செயல்பாடுகள் போதுமான அளவு கவனிக்கப்படும் வரை, தீவுக்குள் போக்குவரத்து, தங்குமிடம் அல்லது உணவு அவர்களுக்கு வழங்கப்படாது என்று பிராந்தியத்தின் துணை ஆணையர் நிஷி தோலாகியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு பற்றிய கவலைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்தப் பயணம் இருந்ததாக கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அபாயங்கள்

பட மூலாதாரம், COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA
புலம்பெயர்ந்தோர் குழு ஒன்று அக்டோபர் 2021இல் ஒரு மீன்பிடிப் படகில் டியாகோ கார்சியா தீவுக்குள் நுழைந்தது.
அவர்கள் தஞ்சம் கோருவதற்காக கனடாவுக்கு செல்ல முயன்றபோது,அவர்களது படகு டியாகோ கார்சியா அருகே சிக்கி கொண்டது. அதன் பிறகு அவர்கள் அதிகாரிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினர்.
கடந்த வியாழன் இரவு - நீதிபதி, பிரிட்டன் அரசு வழக்கறிஞர்கள், புலம்பெயர்ந்தோருக்கான பிரதிநிதிகள் மற்றும் பிபிசி பிரதிநிதிகள் ஆகியோர் விசாரணையில் கலந்துகொள்ள விமானத்தில் ஏறுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு - விசாரணையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
புலம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் டியாகோ கார்சியாவின் பிற பகுதிகளை உள்ளடக்கிய விசாரணையில் பங்கேற்பதற்காக திட்டமிடப்பட்ட பயணத்தைக் குறிப்பிட்டு, அமெரிக்கா பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
புலம்பெயர்ந்தவர்களில் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டிஷ் நிறுவனமான லீ டேயின் வழக்கறிஞரான டாம் ஷார்ட், ``விசாரணையை ரத்து செய்தது அங்கு பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கும் எங்கள் வழக்குதாரர்களுக்கு ஒரு பேரழிவைத் தரும் செயல்பாடு” என்று கூறி, மீண்டும் வழக்கு விசாரணையைத் திட்டமிடுமாறு கேட்டுக் கொண்டார்.
பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்ய செவ்வாயன்று மெய்நிகர் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. லண்டனில் இருந்து வழக்கறிஞர்கள் மற்றும் டியாகோ கார்சியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சர்ச்சைக்குரிய பிரதேசம்

டியாகோ கார்சியா சாகோஸ் தீவுகளின் ஒரு பகுதி, இது 1965இல் பிரிட்டன் அரசு அதன் காலனியான மொரிஷியஸில் இருந்து தனது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தது. பின்னர் ராணுவ தளத்தை அமைப்பதற்காக 1,000க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றியது.
கடந்த 1966ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள், 50 ஆண்டுகளுக்கு இப்பகுதியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதித்தது. அதன் பின்னர் கூடுதலாக 20 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. பயோட் இணையதளத் தகவலின்படி, ஒப்பந்தம் 2016இல் நீட்டிக்கப்பட்டது மற்றும் 2036இல் காலாவதியாகிறது.
இந்தப் பிரதேசம் லண்டனில் இருந்து நிர்வகிக்கப்படுகிறது, ஆனால் பிரிட்டனில் இருந்து "அரசமைப்பு ரீதியாக வேறுபட்டது" என்று விவரிக்கப்படுகிறது.
கடந்த 1968இல் சுதந்திரம் பெற்ற மொரிஷியஸ், இந்தப் பவளத் தீவு தனக்கு சொந்தமானது என்று கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் உயர்நீதிமன்றம் "பிரிட்டனின் நிர்வாகம் சட்டவிரோதமானது. தீவில் அதன் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்று தீர்ப்பளித்தது.
அதே நேரம் டியாகோ கார்சியாவின் பெரும்பாலான ஊழியர்கள் மற்றும் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தங்குமிடம், போக்குவரத்து உணவகங்கள், கடைகள் என அனைத்தையும் நிர்வகிப்பது அமெரிக்காதான்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்க ராணுவத்தால் இயக்கப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் மக்களை அனுமதிக்க அமெரிக்கா மறுத்து வருகிறது.
அதிகாரப்பூர்வ பயோட் இணையதளம், "ராணுவ நிறுவல் அல்லது தீவின் அரசு நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டவர்களுக்கு" மட்டுமே இங்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.
முக்கியமான போர் தளம்
டியாகோ கார்சியா அமெரிக்காவின் முக்கியமான ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான மூலோபாய தளமாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு பி-52 குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சிக்காக டியாகோ கார்சியா பகுதிக்கு அனுப்பப்பட்டன.
சமீபத்திய ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் மீது குண்டு வீசுவதற்காக அமெரிக்க விமானங்கள் இந்தத் தளத்திலிருந்துதான் புறப்பட்டுச் சென்றன.
கடந்த 2002ஆம் ஆண்டில் குறைவான சட்டக் கட்டுப்பாடுகளுடன் பயங்கரவாத குற்றங்களில் சந்தேகத்திற்குரிய நபர்களை மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரகசிய `ரெண்டிஷன் விமானங்கள்’ (rendition flights) நாட்டில் தரையிறக்கப்பட்டதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் டியாகோ கார்சியாவில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப் படுபவர்களுக்கு அடைக்கலம் அல்லது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் சிஐஏ இயக்குநர் மைக் ஹைடன் மறுத்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் முகாம்

பட மூலாதாரம், COURTESY OF MIGRANTS IN DIEGO GARCIA
கடந்த 2021 அக்டோபரில் 50க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இந்தத் தீவில் தரையிறங்கினர். இந்த பிரிட்டிஷ் பிரதேசத்தில் புகலிட விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த முதல் மக்கள் குழு அவர்கள்தான்.
குறைந்தபட்சம் 16 குழந்தைகள் உட்பட சுமார் 60 பேர் இங்கு தங்கியுள்ளனர். இங்கு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பல்வேறு சிக்கலான சட்ட மோதல்கள் நடந்து வருகின்றன.
தனியார் பாதுகாப்பு நிறுவனமான `G4S’ இன் கண்காணிப்பின் கீழ் வேலி அமைக்கப்பட்ட முகாமுக்குள், அவர்கள் கூடாரங்களில் தங்கியுள்ளனர்.
இந்தத் தீவில் பல தற்கொலை முயற்சிகள் நடந்திருப்பதாகவும் முகாம்களுக்குள் புலம்பெயர் மக்களுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
சில புலம்பெயர்ந்தோர் தற்கொலை முயற்சிகளுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவிற்கு விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் "பாதுகாப்பான மூன்றாம் நாட்டில்" (safe third country) மீள்குடியேறுவதற்காகக் காத்திருக்கின்றனர்.
'கூண்டுக் கிளிகள்' போன்ற முகாம் வாழ்க்கை
கடந்த ஆண்டு இறுதியில் ஐநா குழு இந்த முகாமுக்குச் சென்று ஆய்வு செய்தது. ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் அங்குள்ள நிலைமைகள் சிறைவாசத்திற்குச் சமம் என்று கருதினர்.
பிபிசி உடனான நேர்காணல்களில், புலம்பெயர்ந்தோர் அந்தத் தீவின் நிலைமைகளை ``நரகம் போன்றது’’ என்று விவரித்துள்ளனர். "நாங்கள் ஒரு கூண்டுக் கிளிகளாக அடைப்பட்டு இருக்கிறோம்" என்று குறிப்பிட்டு முகாமில் தங்கியிருக்கும் ஒருவர் கடந்த ஆண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை நடந்த மெய்நிகர் விசாரணையின் போது, தீவிலுள்ள முகாமில் வசிக்கும் ஒருவர் மயங்கி சரிந்து விழுந்தார். பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் முன்பு பிபிசியிடம் இந்தப் பகுதி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் இல்லை என்று கூறியது.
மேலும் "புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு விண்ணப்பங்களைச் செயல்படுத்தவும், விண்ணப்பங்கள் ஏற்கப்படுபவர்களுக்குப் பொருத்தமான மூன்றாவது நாட்டைக் கண்டறியவும் அயராது உழைத்து வருவதாகவும்" கூறியது.
"பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் புலம்பெயர்ந்தோரின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு எப்போதும் எங்களின் முதன்மையான முன்னுரிமை," என்றும் அவர் கூறினார்.
கூடுதல் தகவல்கள்: சுவாமிநாதன் நடராஜன்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












