மணிப்பூர் கலவரம்: ஓராண்டுக்குப் பிறகும் ஆறாத வன்முறையின் காயங்கள் - கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC
- எழுதியவர், மயூரேஷ் கொன்னூர் மற்றும் திலீப் குமார் சர்மா
- பதவி, மணிப்பூர் மற்றும் மிசோரமில் இருந்து
கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த அசம்பாவிதம் ஏற்பட்டு ஒரு வருடம் ஆன நிலையிலும் மணிப்பூர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், "மணிப்பூர் அமைதிக்காக ஒரு வருடமாகக் காத்துக் கொண்டிருக்கிறது. அம்மாநிலம் 10 ஆண்டுகளாக அமைதியாகவே இருந்தது. திடீரென ஏற்பட்டதோ இல்லை உருவாக்கப்பட்டதோ, ஆனால் அந்தக் கலவரத்தின் தீ இன்னும் எரிந்து கொண்டு தான் இருக்கிறது," என்றார்.
இந்த அறிக்கைக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்புக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான குக்கி மற்றும் மெய்தேய் இன மக்கள் இன்னும் முகாம்களில் தான் வசித்து வருகின்றனர். ஒரு சிலர், கலவரத்தில் இருந்து தப்பித்து அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்துள்ளனர்.
மெய்தேய் இன மக்களுக்குப் பட்டியல் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையே வன்முறைக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த கோரிக்கையை மணிப்பூரின் மலைப்பிரதேசங்களில் வசித்து வரும் குக்கி இன மக்கள் எதிர்த்தனர்.
இப்போது சூழல் எப்படி உள்ளது?
தன் மகன்களுடன், லாங்ச்சிங் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 52 வயதான நெங்னெய் சாங் (Nengnei Chong). கலவரத்துக்குப் பின் மணிப்பூரில் இருந்து வெளியேறி மிசோரமில் தஞ்சம் புகுந்து, நிவாரண முகாம்களில் வசித்து வரும் 12,000 நபர்களில் அவரும் ஒருவர்.
மிசோரம் தலைநகர் அஸ்வாலில் இருந்து 15கி.மீ. தொலைவில் உள்ள நகர்ப்புற ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்பு வளாகத்தில் தங்கியிருக்கும் நெங்னெய் மீண்டும் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை ஏதுமின்றி இருக்கிறார். அவரிடம் இப்போது வேலையும் இல்லை, வாழ்க்கை நடத்தத் தேவையான பணமும் இல்லை.
தங்கள் வாழ்க்கையை அவர்கள் இங்கே கழித்து வருகின்றனர். குக்கி - ஜோமி இனக்குழுவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கே வசித்து வருகின்றனர்.
இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்த நெங்னெய்யின் கணவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC
"கல்வியையும் நல்ல வாழ்க்கையையும் எங்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் கலவரத்துக்குப் பிறகு நாங்கள் எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டோம். குடும்ப உறுப்பினர்களின் உணவு தேவைக்காக இப்போது என்னுடைய மகன் வேலைக்குச் செல்கிறான். பேசாமல் நாங்கள் இறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்," என்று மனம் உடைந்தபடி பேசுகிறார் நெங்னெய்.
மணிப்பூர் கலவரத்தின் காரணமாக கிட்டத்தட்ட 50,000 நபர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
"நாங்கள் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். வெளியே தீ எரிந்து கொண்டிருந்தது. பின்பு எங்களின் வீடுகளும் கொளுத்தப்பட்டன. அன்று தான் எங்களின் இறுதி இரவு என்று நாங்கள் முடிவுக்கே வந்துவிட்டோம்," என்று நினைவு கூறுகிறார் நெங்னெய்.
"என்னுடைய கணவர் இந்நாட்டின் ராணுவத்தில் பணியாற்றினார். ஆனால் நாங்கள் இன்று அகதிகளாக இருக்கிறோம்," என்று கூறுகிறார் நெங்னெய்.

பட மூலாதாரம், Getty Images
'அங்கே எந்த நம்பிக்கையும் இல்லை'
மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கை அழிக்கப்பட்டுவிட்டது. குக்கிகளும், மெய்தேய்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மெய்தேய்கள் அதிகம் வாழும் இம்பாலின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அகம்பத்தில் அமைந்திருக்கும் ஐடியல் பெண்கள் கல்லூரி நடத்தும் நிவாரண முகாமில் ஆயிரக்கணக்கானோர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக பிபிசி-யிடம் கூறினார்கள்.
கல்லூரி வகுப்பறைகள் இப்போது வீடுகளாக மாறிவிட்டன. இரண்டு முதல் நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே அறையில் தங்கியிருக்கின்றனர். குழந்தைகள் எங்கேயோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். உணவு வேறெங்கோ சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மொரே (Moreh) நகரில் கலவரம் பரவ ஆரம்பித்த போது தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள லம்பி சிங்தம், அவரின் அம்மா, இரண்டு தங்கைகள், தம்பி மற்றும் வயதான பாட்டி என அனைவரும் தப்பித்து இந்த முகாமை வந்தடைந்தனர்.
லம்பி 12-ஆம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்தார். மருத்துவர் ஆகும் கனவில் அவர் நீட் தேர்வுக்காக தன்னை தயார் செய்து வந்தார். நிவாரண முகாமில், ஒரு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார் லம்பியின் அம்மா. லம்பியின் படிப்பு பாதியில் நின்றுவிட, தற்போது முகாமில் உள்ள சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாடங்கள் எடுத்துவருகிறார்.
"நான் மிகவும் மனச்சோர்வு அடைந்துவிட்டேன். ஆனால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால், என்னுடைய குடும்பம் எப்படி வாழும்?" என்று கேள்வி எழுப்புகிறார் லம்பி.

பட மூலாதாரம், MAYURESH KONNUR/BBC
கலவரத்தால் பிரிந்த குடும்பங்கள்
நெங்னெய் தற்போது மிசோரமில் வசித்து வர, அவரின் உறவினரும், ஒரே ஊர்க்காரருமான பொய்னு ஹாவோகிப் (Boinu Haokip) குக்கிகள் அதிகமுள்ள சுராசந்த்பூரில் தங்கிவிட்டார். கலவரம் தீவிரமான பின் இரண்டொரு நாட்களில் ஆயிரக்கணக்கான குக்கிகள் இங்கே வந்து சேர்ந்தனர்.
தன் குடும்பத்துடன் சுராசந்த்பூரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் பொய்னு, மணிப்பூரில் இனக்கலவரமும், மன அழுத்தமும் என்ற தலைப்பில் முனைவர் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.
"நாங்கள் இங்கே சிறிய தொழில் ஒன்றைத் துவங்கினோம். சிலர் காய்கறி விற்கச் செல்கின்றனர். சிலர் தினக்கூலிகளாக வேலைக்குச் செல்கின்றனர். வேலை கிடைப்பது மிகவும் கடினமாகிவிட்டது. என்னுடைய குடும்பத்தினர் மற்றவர்களின் தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர். அதில் இருந்து கிடைப்பது தான் எங்களுக்கான வருமானம்," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், MAYURESH KONNUR/BBC
பொய்னுவின் குடும்பத்தினர் நெங்னெய் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள வழியில்லை. ஆனால் அடிக்கடி தொலைபேசி வழியாக உரையாடிக் கொள்வார்கள். இரு வேறு மாநில எல்லைகளில் பிரிந்திருக்கும் இந்தக் குடும்பத்தினரின் காலம் நகராமல் அப்படியே நிற்கிறது.
நம்போல் எல்.சனோய் கல்லூரியில், அரசியல் அறிவியல் பிரிவில் உதவிப் பேராசிரியராகவும், மணிப்பூர் பெண்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவருமான ஷ்ரிமா நிங்கோம்பம் (Shrima Ningombam), "இரண்டு தரப்பு பெண்களிடமும் கலவரம் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் வெளிப்படையானவை. அது அவ்வளவு எளிதாக மறையாது," என்கிறார்.
"நிறைய பெண்கள் வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டனர். பாதுகப்பற்றதாக உணர்கின்றனர். பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, குடும்ப வன்முறை, பாலியல் ரீதியான வன்முறைகளுக்கும் அவர்கள் ஆளாகியுள்ளனர். முகாம்களில் இந்த பெண்களுக்குத் தனியுரிமை என்பதே இல்லை. இந்தச் சூழலில் இருந்து மீள்வது ஒரு நாளில் நடக்காது. இதற்கு வெகு காலம் தேவைப்படும்," என்கிறார் ஷ்ரிமா.

பட மூலாதாரம், MAYURESH KONNUR/BBC
சொத்துகள் அனைத்தையும் இழந்த லாலாசங்கேட்
மிசோரமில் உள்ள நிவாரண முகாம் ஒன்றில் தங்கியிருக்கிறார் லாலாசங்கேட். அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்கள் மற்றும் மூன்று பேரக்குழந்தைகளும் இதே முகாமில் தான் தங்கியிருக்கின்றனர்.
ஒரு காலத்தில், மணிப்பூரில் கோடிகளில் மதிப்புமிக்கச் சொத்துக்கு அதிபதியாக இருந்தார் லாலாசங்கேட். இன்று, அவரின் மகன்கள் ராபர்ட், ஹிலாரி தினக்கூலிகளாக மிசோரமில் வேலைக்கு செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்துப் பேசிய லாலாசங்கேட், "கலவரத்தில் அனைத்தையும் இழந்துவிட்டேன்," என்று கூறுகிறார்.
"என்னுடைய மகன்களுக்காக துணிக்கடை ஒன்றை விமான நிலையத்திற்கு அருகே ரூ.80 லட்சம் செலவில் துவங்கினேன். ரூ.40 லட்சம் மதிப்புள்ள கார்களை வைத்திருந்தோம். இன்று எங்களிடம் ஒன்றும் இல்லை," என்கிறார் லாலாசங்கேட்.
நாங்கள் மிசோரமில் பாதுகாப்பாக இருக்கிறோம். அரசு எங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளது. யங் மிசோரம் அசோசியேசன் எங்களுக்கு உணவு மற்றும் ஆடைகளை வழங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் எங்களை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் அவர்.

பட மூலாதாரம், MAYURESH KONNUR/BBC
லாலாசங்கேட்டின் மைத்துனர் ராம்தங் மணிப்பூரின் சுராசந்த்பூரில் உள்ளார். இந்திய ராணுவத்தில் 28 ஆண்டுகள் பணியாற்றிய அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை பிரிந்து தனியாக இருக்கிறார். கடந்த கால புகைப்படங்களை நம்மிடம் காண்பித்து மிகவும் வேதனையுற்றார்.
"சில சமயம் மிகவும் சோகமாக உணர்கிறேன். நல்லதோ கெட்டதோ சேர்ந்தே வாழ்வோம் என்று கூறி நான் லாலாசங்கேட்டை மணிப்பூருக்கே திரும்பி வந்துவிடுமாறு அடிக்கடி வற்புறுத்துகிறேன். ஆனால் தற்போது அங்கேயே இருக்க விரும்புவதாக லாலாசங்கேட் கூறி வருகிறார்," என்று கூறினார் ராம்தங்.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்ட ராம்தங் தன்னுடைய பதக்கங்கள் அனைத்தையும் கலவரத்தில் இழந்துவிட்டதை நினைத்து மிகவும் வருத்தத்தில் உள்ளார். சூழல் மாறுபட்டிருக்கின்ற நிலையில், அவரும் தற்போது வேலைக்குச் செல்கிறார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகள் கிடைத்ததா?

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC
மாநில-மத்திய அரசுகள் மணிப்பூரை இயல்பு நிலைக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறுகின்றனர். ஆனால் இன்றும் கூட அது இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. சிதறடிக்கப்பட்ட குடும்பங்கள் மிசோரமில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்கும் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் இருந்து வந்த 12,000 நபர்கள் தவிர, மியான்மரில் இருந்து வந்த 35,000 நபர்களும் மிசோரமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மிசோ பழங்குடிகளுடனான இனத்தொடர்பைக் கருத்தில் கொண்டு உள்ளூர் மக்கள் அவர்களுக்கு உதவி வருகின்றனர். அகதிகளுக்கு உதவும் குழுவில், யங் மிசோ அசோசியேசன் என்ற புகழ்பெற்ற கிறிஸ்துவ அமைப்பும் அடங்கும்.
அந்த அமைப்பின் தலைவரான டாக்டர் சவமா வாய், “நிவாரண முகாம்களில் வசித்து வரும் பலரும் தங்களின் குடும்பத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வேலைக்குச் செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் வேலைக்கு செல்லலாம் என்று தான் நாங்களும் கூறியிருக்கிறோம். ஆனால் மிசோரம் மிகச்சிறிய மாநிலம். இங்கு வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன," என்று மேற்கோள் காட்டினார்.
அஸ்வாலில் உள்ள சில நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்றது பிபிசி. அரசாங்கத்திடம் இருந்து ரேஷன் பொருட்கள் முறையாகக் கிடைக்கவில்லை என்று புகார் எழுப்பினார்கள் அகதிகள். ராய் காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் முகாம்களில் குழந்தைகள் முதியவர்கள் என வசிக்கும் 62 குக்கி - ஜோமி குடும்பங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அரசாங்கம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள்.

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA/BBC
தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகத் தற்போது வேலைக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் ஜான் லால் ஸூ.
ரேஷன் பொருட்கள் பற்றிய புகார்களுக்கு பதில் அளித்த மிசோரம் முதல் அமைச்சரின் நிதி மற்றும் திட்ட ஆலோசகரும், உள்ளூர் எம்.எல்.ஏ-வுமான லால்வெச்சுங்கா, "எங்கள் அரசாங்கம் புதியது. வாய்ப்புகளும் குறைவாகத் தான் உள்ளன. புதிய அரசாங்கம் நிதி தொடர்பாக நிறைய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. புதிதாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாங்கள் கூறுவதை கேட்டால், இம்மக்களுக்கு அதிகமாக எங்களால் உதவ முடியும்," என்று குறிப்பிட்டார்.
மிசோரம் மாநில பா.ஜ.க தலைவர் வன்லால் ஹமவுகா, "புதிய மாநில அரசு இங்கே தேர்வு செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் மணிப்பூரில் இருந்து வந்து இங்கே தஞ்சம் புகுந்த மக்கள் குறித்த போதுமான தகவல்களை இந்த அரசால் வழங்க முடியவில்லை. மத்திய அரசு உதவ வேண்டுமெனில் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சரியாக அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர் பட்டியலை அனுப்ப வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
33 வயதான ஜோசப் லூலூனின் வாழ்வில் இந்த அரசியல் விவாதம் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
மழை காரணமாக இரண்டு நாட்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. சுராசந்த்பூரில் இருந்து கடந்த ஆண்டு கர்ப்பிணியான தன் மனைவியுடன் மிசோரமுக்கு வந்தார். தற்போது ஒரு ஆண்டுக்கும் மேலாக நிவாரண முகாமில் தங்கியுள்ளனர்.
"வேலை தேடி நாள் ஒன்றுக்கு பல கிலோ மீட்டர்கள் நான் நடக்க வேண்டியதாக உள்ளது," என்று கூறுகிறார் ஜோசப்.
மெய்தேய் முகாம்களில் நிலைமை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், MAYURESH KONNUR/BBC
மணிப்பூரின் தலைநகரான இம்பாலின் பல்வேறு பகுதிகளில் இடம் பெயர்ந்த மக்கள், ஊதுபத்திகளையும் டிடெர்ஜெண்ட் பவுடர் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்து வருகின்றனர். தங்கள் முகாம்களில் இவற்றை உற்பத்தி செய்து, வெளியே சென்று விற்பனை செய்து வருகின்றனர். தற்போதைக்கு இப்படித் தான் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வேண்டியதாக உள்ளது.
இப்படி விற்பனை செய்பவர்களில், குக்கிகள் அதிகம் வாழும் சுராசாந்த்பூரில் இருந்து தப்பித்த தோனவுஜம் ரமேஷ் பாபு என்பவரும் ஒருவர். கிராம பெண்கள் சிலருக்கு சோப், ஊதுபத்திகள், மெழுவர்த்திகளை அவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
"எங்கள் அம்மாக்களும், சகோதரிகளும், உறவினர்களும் இரவும் பகலும் முகாம்களில் இதனை உற்பத்தி செய்து வருகின்றனர். நாங்கள் அதை நகரத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்கிறோம். எங்களுக்கு வேறேதும் வழி இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
மிசோரமில் வாழும் நெங்னெய் ஆகட்டும், சுராசந்த்பூரில் வசிக்கும் பொய்னுவாகட்டும், கல்விக்காக ஏங்கும் லம்பி ஆகட்டும், இரண்டு தரப்புப் பெண்களுக்கும் இந்தக் கலவரமும் இடம்பெயர்தலும் தீவிரமான மனநல, பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
மணிப்பூர் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் மயங்கலபம் சுரேஷ், "முகாம்களில் உணவும் பணமும் தருவதால் மட்டும் யாருக்கும் மகிழ்ச்சி ஏற்படப்போவதில்லை என்பது அரசுக்கும் தெரியும். இடம் பெயர்ந்த ஒவ்வொருவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உதவிகள் செய்ய முயன்று வருகிறோம். உண்மையாக சொல்லப் போனால் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, யார் தான் முகாம்களில் வசிக்க விரும்புவார்கள்," என்கிறார்.
ஓராண்டுக்கு முன்பு, கிராமங்கள், வீடுகள் வன்முறையால் அழிக்கப்பட்டு, குடும்பங்கள் பிரிந்தன. அரசாங்கம் நல்ல எதிர்காலத்திற்காக நிறைய முயற்சிகளை எடுத்து வருகிறது என்று கூறினாலும், இது தான் மணிப்பூரின் உண்மையான நிலவரம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












