13 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்: 'இந்தியா கூட்டணி' 10 இடங்களில் வெற்றி, பா.ஜ.க-வுக்கு பின்னடைவு

ராகுல் காந்தி

பட மூலாதாரம், FB/INC

படக்குறிப்பு, ராகுல் காந்தி (கோப்பு படம்)

நாட்டின் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று (சனி, ஜூலை 13) வெளிவந்துள்ளன. இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெறும் 2 இடங்களே கிடைத்துள்ளன. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 4 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும், தி.மு.க மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த இடைத்தேர்தலில், இமாச்சல பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார். பா.ஜ.க-வின் ஹோஷியார் சிங்கை 32,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் கமலேஷ் தோற்கடித்துள்ளார்.

கமலேஷ் தாக்கூர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இமாச்சல பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றார்

ஆனால் சுகுவுக்கு அவரது சொந்த மாவட்டமான ஹமிர்பூரில் பா.ஜ.க அதிர்ச்சி அளித்துள்ளது. இந்தத் தொகுதியில் பா.ஜ.க-வின் ஆஷிஷ் குமார் ஷர்மா சுமார் 1,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரத்தில், இமாச்சலப் பிரதேசத்தின் நாலாகர் தொகுதியில் காங்கிரஸின் ஹர்தீப் சிங் பாவா வெற்றி பெற்றார்.

2022-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தனர். அவர்கள் ராஜினாமா செய்த பிறகு இந்த இடங்கள் காலியாயின.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் இந்த மூன்று எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த முறை மூன்று வேட்பாளர்களும் பா.ஜ.க சார்பில் தேர்தலில் போட்டியிட்டனர்.

அதே நேரம் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில், சிந்த்வாரா அமர்வாடா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா 3,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பிகாரின் ருபெளலி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் இது குறித்து சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

அமர்வாடா இடைத்தேர்தல், பா.ஜ.க வேட்பாளர் கமலேஷ் பிரதாப் சிங்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமர்வாடா இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கமலேஷ் பிரதாப் சிங்குக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் முதலமைச்சர் மோகன் யாதவ்

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி

மத்தியப் பிரதேசத்தின் அமர்வாடா தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றது

மத்தியப்பிரதேச மாநிலம் சிந்த்வாரா அமர்வாடா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா 3,252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இங்கு 17-வது சுற்று வரை காங்கிரஸ் வேட்பாளர் தீரன் ஷா முன்னிலை வகித்தார். ஆனால் அதன் பிறகு அவர் பின்தங்கத் தொடங்கினார் என்று போபாலில் இருந்து பிபிசியின் ஷுரைஹ் நியாசி தெரிவித்தார்.

வாக்கு எண்ணிக்கையின் முதல் மூன்று சுற்றுகளில் பா.ஜ.க முன்னிலை வகித்தது. இருப்பினும் கடைசி இரண்டு சுற்றுகளில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கமல்நாத்தின் வலுக்கோட்டையான அமர்வாடாவில், கமலேஷ் பிரதாப் ஷா, காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவுக்கு சென்றதால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

இங்கு மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த 14 தேர்தல்களில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதியான அமர்வாடாவில் இதுவரை இரண்டு முறை மட்டுமே பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. கோண்ட்வானா குடியரசு கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

மக்களவை தேர்தலுக்கு முன் கமலேஷ் பிரதாப் ஷா, காங்கிரஸில் இருந்து விலகி, பா.ஜ.க-வில் இணைந்தார்.

கடந்த சட்டப்பேரவைத்தேர்தலில் சிந்த்வாராவின் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் மாநிலத்தில் தோல்வியைச் சந்திந்தது.

திரிணமுல் காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கொல்கத்தாவில் மாணிக்தலா தொகுதியில் முன்னாள் அமைச்சர் சாதன் பாண்டேவின் மனைவி சுப்தி பாண்டேவை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்தியது. (படத்தில் தனது மகள் ஸ்ரேயா பாண்டேவுடன் சுப்தி பாண்டே)

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் வெற்றி

மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது முதல் வெற்றியை ராய்கஞ்ச் தொகுதியில் பெற்றது.

இங்கு கிருஷ்ண கல்யாணி, பாஜகவின் மானஸ் குமார் கோஷை 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கு வங்கத்தில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் பிரபாகர் மணி திவாரி கொல்கத்தாவில் இருந்து தெரிவித்தார்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தாவின் மாணிக்தலா தொகுதியைத் தவிர வடக்கு தினாஜ்பூரின் ராய்கஞ்ச், புருலியா மாவட்டத்தின் பாக்தா மற்றும் நாதியா மாவட்டத்தின் ராணாகாட் தெற்கு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதில் மாணிக்தலாவைத் தவிர்த்து மீதமுள்ள மூன்று இடங்களை பாஜகவிடம் இருந்து அக்கட்சி பறித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

கொல்கத்தாவில் உள்ள மாணிக்தலா தொகுதியில் முன்னாள் அமைச்சர் சாதன் பாண்டேவின் மனைவி சுப்தி பாண்டேவை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக நிறுத்தியது. சாதன் பாண்டேவின் மறைவு காரணமாக இங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் கல்யாண் செளபேயை சுமார் 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

ராய்கஞ்ச் தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க-வின் மானஸ் குமார் கோஷை வென்றார்.

திரிணமுல் காங்கிரஸ்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ராய்கஞ்ச் தொகுதியில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மானஸ் குமார் கோஷை தோற்கடித்தார் (கோப்பு படம்)

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் கிருஷ்ண கல்யாணி சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மக்களவைத் தேர்தலுக்கு முன் ராஜினாமா செய்து திரிணாமூலில் இணைந்து ராய்கஞ்ச் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியடைந்தார்.

மத்துவா சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழும் பாக்தா தொகுதியைத்தவிர, நாதியா மாவட்டத்தின் ராணாகாட் தெற்கு தொகுதியிலும் பா.ஜ.க தோல்வியைச் சந்தித்துள்ளது. பாக்தா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மதுபர்ணா தாகூர் 33,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேசமயம் ராணாகாட் தெற்கு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முகுட்மணி அதிகாரி 39,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ஜ.க-வின் மனோஜ் குமார் விஸ்வாஸை அவர் தோற்கடித்தார். மதுபர்ணா, திரிணாமூல் எம்.பி மஹுபாலா தாக்கூரின் மகள்.

கடந்த 2021 சட்டப்பேரவைத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் முகுட்மணி வெற்றி பெற்றார். ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு முன் திரிணாமூலில் சேர்ந்தார். மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக ராணாகாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகள் குறித்து பா.ஜ.க இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

"சந்தேஷ்காலி உள்ளிட்ட எல்லா பிரச்னைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் மக்கள் திரிணாமுல் காங்கிரஸ் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க மக்கள் இடதுசாரி முன்னணி, அல்லது பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களை விடச் சிறந்த நிலையில் வாழ்கின்றனர். பா.ஜ.க மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை," என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ் கூறினார்.

இம்முறை பாக்தா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் மதுபர்ணா தாக்கூர் பா.ஜ.க-வின் பினய் குமார் பிஸ்வாஸை 33,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

லக்பத் சிங் புடோலா

பட மூலாதாரம், FB/LAKHPAT SINGH BUTOLA

படக்குறிப்பு, லக்பத் சிங் புடோலா

உத்தராகண்டில் பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி

உத்தராகண்ட் மாநிலம் மங்களோர் தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ சர்வத் கரீம் அன்சாரி காலமானதால் இந்த இடம் காலியானது.

பத்ரிநாத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேந்திர பண்டாரி பா.ஜ.க-வில் இணைந்த பிறகு அந்த இடம் காலியானது.

பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸின் லக்பத் சிங் புடோலா வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பா.ஜ.க-வின் ராஜேந்திர சிங் பண்டாரி அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மங்களோர் தொகுதியில் காங்கிரஸின் காஜி முகமது நிஜாமுதீன் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தொகுதியில் அவர் பா.ஜ.க-வின் கர்தார் சிங் படானாவை தோற்கடித்தார்.

மொஹிந்தர் பகத்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத்

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் மொஹிந்தர் பகத், பா.ஜ.க-வின் ஷீத்தல் அங்கூரலை 37,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சுரீந்தர் கெளர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஷீத்தல் அங்கூரல் வெற்றி பெற்றார், ஆனால் மார்ச் மாதம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.

அவர் கட்சியில் இருந்து விலகியதால் இந்த இடம் காலியானது.

பீமா பாரதி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பிகாரின் ருபெளலி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பீமா பாரதி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்

பிகாரில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி

பிகாரின் ருபெளலி தொகுதியின் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ பீமா பாரதி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்த பிறகு இந்த இடம் காலியானது.

மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், பீமா பாரதியை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால் அவர் தேர்தலில் தோல்வியடைந்தார்.

இந்த முறை அவர் ருபெளலி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார்.

இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளத்தின் காலாதர் பிரசாத் மண்டல் இரண்டாவது இடத்திலும், பீமா பாரதி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
படக்குறிப்பு, தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

தமிழகத்தில் வெற்றி பெற்ற தி.மு.க

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி முடிவுக்கு வந்துள்ளது. 20-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அன்னியூர் சிவா பெற்றுக் கொண்டார். அப்போது அவருடன் ஜெகத்ரட்சகன் எம்.பி மற்றும் அமைச்சர் பொன்முடி இருந்தனர்.

மொத்தமாக அன்னியூர் சிவா பெற்ற வாக்குகள் 1,24,053. பா.ம.க வேட்பாளர் அன்புமணி 56,296 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

நாம் தமிழர் கட்சியின் அபிநயா 10,602 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)