விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் எந்தக் கட்சிக்குச் சென்றன?

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க. வாக்குகள் சென்றது யாருக்கு?

பட மூலாதாரம், UDHAYSTALIN

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் வாக்குகள் அதிகரித்திருந்தாலும் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வாக்கு வித்தியாசமும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. அ.தி.மு.க இந்தத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சியின் வாக்குகள் யாருக்குச் சென்றிருக்கக்கூடும்?

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் தி.மு.க 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா என்ற சிவசண்முகம் 1,24,053 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சி. அன்புமணி 56,296 வாக்குகளையே பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதனால் 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அன்னியூர் சிவா வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா, வெறும் 10,602 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருக்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்ந்து 2007-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது விக்கிரவாண்டி தொகுதி. இந்தத் தொகுதியில் 2011-இல் முதன் முதலில் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆர்.ராமமூர்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க. வாக்குகள் சென்றது யாருக்கு?

கடந்த தேர்தல்கள்

2016-இல் நடந்த தேர்தலில் தி.மு.க-வின் கே.ராதாமணி வெற்றிபெற்றார். ஆனால், அவர் இறந்துவிடவே, 2019-இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஆர்.முத்தமிழ்ச் செல்வன் வெற்றிபெற்றார்.

2021-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்.புகழேந்தி வெற்றிபெற்றார். 2024-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நடைபெற்ற போது, உடல்நலக் குறைவால் புகழேந்தி காலமானார். இதையடுத்து, இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத் தேர்தலில் தி.மு.க-வின் சார்பில் அன்னியூர் சிவா என்ற சிவசண்முகமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சி. அன்புமணியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயாவும் போட்டியிட்டனர். இந்த இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.கவும் அதன் தோழமைக் கட்சியான தே.மு.தி.கவும் அறிவித்தன. ஆகவே, சுயேச்சைகள் உட்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஜூலை 10-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 82.48% வாக்குகள், அதாவது சுமார் 1.95 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ஆம் தேதி காலை 8 மணியளவில் துவங்கியது. ஆரம்பத்திலிருந்தே தி.மு.க-வின் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

பிற்பகல் ஒரு மணியளவில் அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. 21 சுற்றுகளின் முடிவில் 1,24,053 வாக்குகளைப் பெற்றிருந்த அன்னியூர் சிவா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. பதிவான வாக்குகளில் 63.22% வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

இந்தத் தேர்தலில் சுமார் 1.95 லட்சம் வாக்குகள் பதிவான நிலையில், இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தனது டெபாசிட்டைப் பெற ஆறில் ஒரு பங்கு வாக்குகளை, அதாவது சுமார் 33,000 வாக்குகளைப் பெற வேண்டும். அந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறாததால் நாம் தமிழர் கட்சி உள்பட 27 வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க. வாக்குகள் சென்றது யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு முதல் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது, என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்

'மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்'

தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களோடு நாங்கள் இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்.

"நாடாளுமன்றத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அ.தி.மு.க, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதே படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது. பா.ஜ.க, தனது அணியில் இருக்கும் பா.ம.க-வை நிறுத்தியது. 'இடைத்தேர்தலிலேயே நிற்பது இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பா.ம.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன் வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை,” என்றார்.

மேலும், "தோற்கப் போகிறோம் என்று தெரிந்தே போட்டியிட்டது பா.ஜ.க அணி. அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 விழுக்காடு தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது,” என்றார்.

"பொய்வேஷக்காரர்களின் பகல் வேஷப் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை."

"இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பா.ஜ.க தோல்வியைத் தழுவி இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சி தான் பா.ஜ.க. இறங்கி வந்து சில கட்சிகளின் தயவால் ஒன்றியத்தில் ஆட்சி அமைத்துள்ளது பா.ஜ.க. அத்தகைய தோல்வி முகமே பா.ஜ.க-வுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது,” என்றார்.

"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2019-ஆம் ஆண்டு முதல் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி தொடர்கிறது. மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்," என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க. வாக்குகள் சென்றது யாருக்கு?

'அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் வெவ்வேறு அல்ல'

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய நா.த.க. வேட்பாளர் அபிநயா, "அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் வெவ்வேறு அல்ல என்று சீமான் சொல்வதை முடிவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. பணம் கொடுத்தால் அங்கேயும் வாக்களிப்போம் என்று காட்டியிருக்கிறார்கள். கடந்த தேர்தலைவிட 2 ஆயிரத்துச் சொச்சம் வாக்குகள் கூடுதலாக வாங்கியதில் பெருமைப்படுகிறோம். கள்ளச்சாராய மரணங்கள் இதில் பிரதிபலிக்கவில்லை என்றால் அதற்குப் பணம்தான் காரணம்," என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசும் இதே குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

"250 கோடி ரூபாய் பணத்தை இந்தத் தொகுதியில் தி.மு.க. செலவழித்தது. பெரிய அளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுதத்து. இதனை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் பெற்ற வாக்குகள் நேர்மையாகப் பெற்ற வாக்குகள். அ.தி.மு.க-வினர் பணம் வாங்கிக்கொண்டு தி.மு.க-வுக்கு வாக்களித்திருக்கிறார்கள். வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது," என்று சொல்லியிருக்கிறார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல், அ.தி.மு.க

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தத் இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணிக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்

அ.தி.மு.க வாக்குகள் யாருக்குச் சென்றன?

விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த வி.சி.க-வின் வேட்பாளர் து. ரவிக்குமார் 72,188 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான களஞ்சியம் 8,352 வாக்குகளைப் பெற்றார். பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க வேட்பாளரான முரளி சங்கர் 32,198 வாக்குகளைப் பெற்றது.

பா.ம.க-வைப் பொறுத்தவரை இந்தச் சட்டமன்றத் தொகுதியில் கடைசியாகப் போட்டியிட்டது 2016-ஆம் ஆண்டில்தான். அப்போது தனித்துப் போட்டியிட்ட பா.ம.க-வின் சார்பில் இதே சி.அன்புமணிதான் போட்டியிட்டார். அவர் 41,428 வாக்குகளைப் பெற்றார். ஆகவே, இந்தத் தொகுதியில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டுப் பெற்ற 41,428 வாக்குகளை அக்கட்சியின் வாக்குகளாகக் கொள்ளலாம்.

இந்நிலையில் அ.தி.மு.க பெற்ற சுமார் 65,000 வாக்குகளை எந்தக் கட்சி பெறப்போகிறது என்பதுதான் இந்த இடைத் தேர்தலில் முக்கியமான கேள்வியாக இருந்தது.

இந்தத் தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்திருப்பதால், தங்களது தொண்டர்களும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பார்கள் என்றார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், வாக்குப்பதிவில் சுமார் 82% வாக்குகள் பதிவானபோதே அ.தி.மு.க-வினரும் இந்தத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்திருப்பது தெளிவானது.

பா.ம.க மேடையில் ஜெயலலிதா படம்

இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் இணைந்திருப்பதால், பா.ம.க-வின் பிரசார மேடை ஒன்றில் ஜெயலலிதாவின் படம் பயன்படுத்தப்பட்டதை அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி விமர்ச்சித்தார்.

ஆகவே, அ.தி.மு.க-வினர் பா.ம.க-வுக்கு வாக்களிக்கக்கூடாது என்று சுட்டிக்காட்டுவதாக அது கருதப்பட்டது. இதனால், கணிசமான அ.தி.மு.க-வினரின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்குச் செல்லக்கூடும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த காலத்தில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா இந்த விஷயத்தை வெளிப்படையாகவே பிபிசி-யிடம் தெரிவித்தார்.

இப்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளில் பாட்டாளி மக்கள் கட்சி 56,296 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2016-ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி பெற்ற 41,428 வாக்குகளைவிட இந்த முறை 14,868 வாக்குகள் கூடுதலாகக் கிடைத்திருக்கின்றன. அதேபோல நாம் தமிழர் கட்சி 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8,216 வாக்குகளைப் பெற்றது. ஆனால், இந்த முறை 10,602 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆகவே, நா.த.கவுக்கு கூடுதலாக 2,386 வாக்குகள் கிடைத்திருக்கின்றன.

கடந்த முறை 93,730 வாக்குகளைப் பெற்ற தி.மு.க, இந்த முறை 1,24,053 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட 30,323 வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கின்றன.

ஆனால், இதனையெல்லாம் வைத்து அ.தி.மு.க-வின் வாக்குகள் எந்தக் கட்சிக்குப் போயிருக்கின்றன என விவாதிக்க முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம். "எல்லா கட்சிக்குமே தீவிரமான கட்சி உறுப்பினர்கள் என்பவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் மிகக் குறைவாகவே இருப்பார்கள். அதாவது பத்தாயிரம், 15,000 இருக்கலாம்,” என்றார்.

விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க. வாக்குகள் சென்றது யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களோடு நாங்கள் இருக்கிறோம், மக்கள் எங்களோடு இருக்கிறார்கள் எனக் கூறியிருக்கிறார்

மேலும் பேசிய ஷ்யாம், "மற்றவர்கள் எல்லாம் கட்சியின் ஆதரவாளர்கள்தான். அந்தத் தீவிரமான அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்று இந்த எண்களை வைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் வாக்களிக்காமல் கூட இருந்திருக்கலாம். கட்சியின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, தாங்கள் விரும்பும் கட்சி போட்டியிடாத நிலையில், அவர்கள் ஏதாவது ஒரு கட்சிக்கு வாக்களிப்பார்கள், அவ்வளவுதான்," என்கிறார் ஷ்யாம்.

அவர் ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்டுகிறார். "2015-இல் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையான பிறகு சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது 88.43% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன் வெறும் 9,710 வாக்குகளையே பெற்றார். அப்படியானால், அந்தத் தொகுதியில் இருந்த தி.மு.க வாக்குகள் என்னவாயின, யாருக்குச் சென்றன என்று விவாதிக்க முடியுமா? அதுபோலத்தான் இப்போதும்," என்கிறார் ஷ்யாம்.

ஆனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அடுத்த வரவிருந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும் வெற்றியைக் குறிப்பதாக இருந்தது. ஆனால், இந்த விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தலை அப்படிக் கருத முடியாது, ஏனென்றால் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்கிறார் அவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)