அனந்த் அம்பானி - ராதிகா: மாதக்கணக்கில் நீண்ட திருமணம் பற்றிய முடிவுறாத விவாதங்கள்

அனந்த் அம்பானி - ராதிகா: மாதக்கணக்கில் நீண்ட திருமணம் பற்றிய முடிவுறாத விவாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முகமது ஹனீஃப்
    • பதவி, பாகிஸ்தானை சேர்ந்த மூத்த செய்தியாளர் மற்றும் எழுத்தாளர்

பழைய பாலிவுட் திரைப்படங்களில் ஒரு வழக்கமான திருமணக் காட்சி இடம்பெறும்.

ஆடம்பரமான ஊர்வலங்களுடன் ஆரம்பிக்கப்படும் திருமண கொண்டாட்டங்களில், ஏழு சபதங்களுடன் (சப்தபதி) திருமணம் நடைபெறும் நேரத்தில், வருத்தம் தோய்ந்த நபர் ஒருவர் நொறுங்கிய இதயத்துடன் வருவார்.

அந்த நபர், “இந்தத் திருமணம் நடக்கக் கூடாது” என்று கூறுவார்.

பிற்காலத்தில் நவீன திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கின. திருமணங்கள், ஆடம்பரமான ஊர்வலங்கள் இல்லாமலும் திரைப்படங்களை உருவாக்கலாம் என இயக்குநர்கள் உணர்ந்தனர்.

திருமணத்திற்குப் பின்னர்தான் உண்மையான, பெரும் கதைகள் இருப்பதாகவும், அதுகுறித்து திரைப்படங்கள் உருவாக வேண்டும் எனவும் சிலர் கருதுகின்றனர்.

இப்போது 2024ஆம் ஆண்டில் பாதிக் காலம் கழிந்துவிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளை இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், அம்பானி மகனின் திருமணம் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நட்சத்திரக் கூட்டம்

அனந்த் அம்பானி - ராதிகா திருமணம் குறித்த முடிவுறாத விவாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

திருமணங்களில் ஆடம்பரத்தை வெளிக்காட்டுவது பணக்காரர்களின் பழைய வழக்கம். முன்பு மெஹந்தி, பராத் (மணமகனின் திருமண ஊர்வலம்), வலீமா (திருமண விருந்து) ஆகியவை நடைபெற்றன.

பணக்கார திருமணங்களில் அமைச்சர் அல்லது கலைஞர்களை அழைக்கலாம். மேலும், நடிகர்கள்/பாடகர்களுக்குப் பணம் கொடுத்து வரவழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பின்னர், உணவு விநியோகிக்கப்படும். வந்திருக்கும் எல்லோருக்கும் வயிறு நிறைய உணவளிக்க வேண்டும். பின்னர், இடத்தைக் காலி செய்துவிட்டு, அவரவர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள்.

அம்பானி உலகளவில் பிரபலமான தொழிலதிபர் என்பதால், அவருடைய பிம்பமும் மிகப்பெரியது. மார்க் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ் ஆகியோரும் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

பாலிவுட்டின் ‘கான்’ நடிகர்கள் பாங்ரா நடனமாடினர். ஜஸ்டின் பீபரும் நடனமாடினார். ரிஹானா, தில்ஜித் தோசான்ஸ் ஆகியோரும் நடனமாடினர், எல்லோரையும் நடனமாடவும் வைத்தனர்.

அம்பானி மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் பாடும், நடனமாடும் வீடியோக்களும் வெளியாகின. நாங்கள் பணக்காரர்களைவிட பணக்காரர் என்றாலும் உங்களைப் போன்றவர்கள்தான் என அவர்கள் நமக்குச் சொல்கின்றனர்.

ஷாருக் கான் மற்றும் கரீனா கபூராக நாமும் மாறி கேமராக்கள் முன்பு உதட்டசைக்க நம் இதயமும் ஆசை கொள்கின்றன.

'நம்முடைய பங்கும் உண்டு'

அனந்த் அம்பானி - ராதிகா திருமணம் குறித்த முடிவுறாத விவாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

பழைய தொழிலதிபர்கள் தொழிலாளிகளின் வியர்வையின் மூலம் லாபம் சம்பாதித்தனர், ஆனால், இப்போது அவர்களைவிடப் பெரும் தொழிலதிபர்கள் வந்துவிட்டனர்.

இந்தக் கட்டுரையை நீங்கள் படிப்பதற்குப் பயன்படுத்தும் வைஃபை அல்லது மொபைல் டேட்டா கட்டணம் அம்பானியின் நிறுவனங்களுள் ஒன்றுக்குச் சென்று கொண்டிருக்கக்கூடும்.

நீங்கள் வைத்திருக்கும் இருசக்கர வாகனம், அதற்கான பெட்ரோல் ஆகியவற்றைக்கூட அம்பானியின் நிறுவனம் உங்களுக்கு விற்றிருக்கலாம்.

அந்த இருசக்கர வாகனத்தில் நீங்கள் பயணிக்கும் சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம்கூட அம்பானி நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புண்டு.

உங்களின் சமையலறைக்குச் சென்றால், அங்குள்ள கேஸ் சிலிண்டரும் அம்பானி நிறுவனத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். சமீப நாட்களில், மாவு, பருப்பு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைக்கூட அவர்கள் விற்பனை செய்வதாக நான் கேள்விப்படுகிறேன்.

அனந்த் அம்பானி - ராதிகா திருமணம் குறித்த முடிவுறாத விவாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

கழிவறையைச் சுத்தம் செய்வதற்கான பொருட்களையும் அம்பானியின் நிறுவனங்களுள் ஒன்று உங்களுக்கு விற்பனை செய்கிறது.

ஐந்து-ஆறு மாதங்களுக்குத் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் பார்த்தால், அம்பானி நம்முடைய பாக்கெட்டுகளில் இருந்து பணத்தை எடுத்து, அதே பணத்தின் மூலம் தனது மகனின் திருமணத்தை நடத்துவது போன்று தெரிகிறது.

இந்த நீண்ட கொண்டாட்டம் இந்தியாவின் மென் சக்தியை வெளியுலகுக்குக் காட்டுவதற்கா அல்லது தனது மகனை மகிழ்ச்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.

பல நூறு கோடி ரூபாய் செலவு செய்தாலும் நீங்களும் இந்தச் செலவுகளில் பங்கெடுத்திருப்பதால், இந்த வீடியோக்களை பார்த்து மகிழுங்கள் என அம்பானி குடும்பம் கூறுவதைப் போன்று உள்ளது.

இதை எங்கள் வீட்டுத் திருமணமாக அல்ல, உங்கள் வீட்டுத் திருமணமாக எடுத்துக்கொள்ளுங்கள் எனக் கூறுவதைப் போன்று உள்ளது.

'ஏழை மக்களின் பிரார்த்தனை'

அனந்த் அம்பானி - ராதிகா: மாதக்கணக்கில் நீண்ட திருமணம் பற்றிய முடிவுறாத விவாதங்கள்

பட மூலாதாரம், Getty Images

அதனால்தான் இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்றோ அல்லது இந்தத் திருமணம் விரைவாக முடிய வேண்டும் என்றோ சொல்வதற்கு யாருக்கும் தைரியம் இல்லை.

இந்தத் திருமண ஜோடி நன்றாக இருக்க வேண்டும், ஆனால் இந்தத் திருமணம் இப்போது முடிய வேண்டும் என்று ஏழை மக்களால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும்.

திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள், திருமண கொண்டாட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டி, அடுத்து திருமணத்திற்குப் பிந்தைய கொண்டாட்டங்களை ஆரம்பித்து விடக்கூடாது. தேன்நிலவு ஹோட்டலுக்கு வெளியே கேமராக்களை பொருத்தி, தலேர் மெகந்தி பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கக் கூடாது. இவற்றை இதோடு முடித்துக்கொள்ள வேண்டும்.

இதைத்தொடர்ந்து, புதிய திருமண ஜோடிகளுக்கு குழந்தைகள் பிறக்கும். அவர்களும் வளர்வார்கள். அவர்களுக்கும் திருமணமாகும். அந்தச் சுமையை யார் தாங்குவது?

எங்களுக்கு வேலை செய்ய நேரம் இல்லையென்றால், மொபைல் டேட்டா கட்டணங்களை உங்களுக்குச் செலுத்த முடியாது. அப்படிச் செலுத்தவில்லை என்றால், எப்படி அந்தக் குழந்தைகளின் திருமணங்களுக்கான செலவுகளைச் சமாளிக்க முடியும்?

(இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே! இதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் கருத்துகள் பிபிசியின் கருத்துகள் அல்ல, பிபிசி அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)