பாஜகவில் யோகி ஆதித்யநாத் ஓரங்கட்டப்படுகிறாரா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
2019 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பெற்ற மாபெரும் வெற்றியை 2024 இல் தக்க வைக்க தவறிவிட்டது.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பாஜகவை விட அதிக தொகுதிகளை வென்றது. பல முக்கியமான இடங்களில் பாஜக தோல்வியை சந்தித்தது.
உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட இந்த பின்னடைவு குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. உண்மையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருப்பது யோகி ஆதித்யநாத்தின் அரசியல் வாழ்க்கை தான்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடப்பதற்கு முன்புவரை, ஆதித்யநாத் மிகப்பெரிய அரசியல் சக்தியாகப் பார்க்கப்பட்டார். குறிப்பாக உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சமயத்தில், அவர் எதிர்கால தேசிய தலைவராக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்பட்டார். ஆனால், பாஜக-வுக்கு மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் இழப்பால் கடந்த காலம் போலல்லாமல் அவர் சரிவை சந்திக்க நேரிடுமா என்பதுதான் இப்போதைய விவாதம்.
யோகி ஆதித்யநாத்தின் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதற்கு முன், கோரக்பூர் மடத்தின் தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி.யின் அரசியல் பயணத்தைப் பற்றி பார்ப்போம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
யோகி ஆதித்யநாத் முதல்வரானது எப்படி?
இந்த சம்பவம் நிகழ்ந்தது 17 மார்ச் 2017. உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 6 நாட்கள் ஆகியும், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படவில்லை.
அப்போதைய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவும், மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மௌரியாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருப்பதாக செய்தி சேனல்களில் ஊகங்கள் வெளிவந்தன.
முதல்வராக பதவியேற்க மனோஜ் சின்ஹா லக்னோ செல்ல தயாராகி வருகிறார் என்று கூட செய்திகள் வெளியாயின. கேசவ் பிரசாத் மௌரியாவின் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதை அறிந்ததும், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த சமயத்தில் டெல்லியிலிருந்து கோரக்பூர் திரும்பிய யோகி ஆதித்யநாத்தின் மொபைல் போன் ஒலித்தது. மறுமுனையில் இருந்த அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, `` நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?’’ என்று யோகியிடம் கேட்டார்.
கோரக்பூரில் இருப்பதாக யோகி கூறியதும், அவரை உடனடியாக டெல்லிக்கு வர வேண்டும் என்று அமித்ஷா கூறினார். தற்போது டெல்லிக்கு விமானமோ, ரயிலோ எதுவும் இல்லை என்று யோகி தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.
மறுநாள் காலை, யோகி ஆதித்யநாத் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த போது, அவர் விமான நிலையத்திலிருந்து அமித்ஷாவின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படாமல், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். யோகியை சந்திக்க அமித்ஷா அங்கு வந்தார். அதன் பின்னர் ``நீங்கள் உ.பி.யின் முதல்வராக வேண்டும்” என்று தான் விரும்புவதாக அமித்ஷா யோகியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
உ.பி. முதல்வராக யோகி தேர்வானது எப்படி?
சமீபத்தில் வெளியான 'அட் தி ஹார்ட் ஆஃப் பவர், தி சீஃப் மினிஸ்டர்ஸ் ஆஃப் உத்தர் பிரதேஷ்' புத்தகத்தின் ஆசிரியரும், இந்தியன் எக்ஸ்பிரஸின் மூத்த பத்திரிகையாளருமான ஷியாம்லால் யாதவிடம், பாஜக யோகியை உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக்கியதற்கு என்ன காரணம் என்று கேட்டேன்.
அவர் கூறுகையில், "யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மெளரியா, லக்ஷ்மிகாந்த் வாஜ்பாய், மனோஜ் சின்ஹா மற்றும் தினேஷ் சர்மா உள்ளிட்ட ஐந்து பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கேசவ் பிரசாத் மெளரியா தனது சமூகம் சார்ந்த செயல்பாடுகளை கணிசமாக அதிகரித்தார். அந்த வகையில் "ஓபிசி பிரிவை சேர்ந்தவர் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பது” ஆகிய காரணங்களால் முதல்வர் ஆகும் வாய்ப்பு அவருக்கு அதிகமாக இருந்தது.
ஆனால் தீவிர ஆலோசனைக்குப் பிறகு, பாஜக, யோகியை தேர்வு செய்தது. ஷியாம்லால் கூறுகையில், “அவர்கள் பல சமன்பாடுகளை, சாத்தியங்களை ஆராய்ந்தனர். யோகி அனைத்து வகையிலும் ஒத்துப்போகும் வேட்பாளராக உருவெடுத்தார். ஏனெனில் அவர் ஒரு ஆன்மீக குருவாக இருந்தார், இரண்டாவதாக, அவர் தீவிர இந்துத்துவாவை வளர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். அவருடன் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இருந்தது.
யோகி முதல்வராவார் என ஆதரவாளர்கள் முன்பே யூகம்
இருப்பினும், யோகிக்கு நெருக்கமானவர்கள் சில நாட்களுக்கு முன்பே இதை யூகித்தனர். உத்தரப்பிரதேச தேர்தலில் ஆறாம் கட்டமாக, மார்ச் 4 ஆம் தேதி கோரக்பூர் தேர்தல் முடிந்தவுடன், யோகிக்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் இருந்து போர்ட் ஆஃப் ஸ்பெயினுக்கு (Port of Spain) வருமாறு அழைப்பு வந்தது.
யோகியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிரவீன் குமார் தனது புத்தகத்தில் "இந்திய எம்.பி.க்கள் குழு நியூயார்க் வழியாக டிரினிடாட் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினுக்கு சென்று கொண்டிருந்தது. யோகியின் பாஸ்போர்டில் டிரினிடாட் விசா சேர்க்கப்பட்டது. ஆனால் பயணம் மேற்கொள்ளும் எம்.பி.க்களின் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பிரதமர் அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இது நடந்ததாக தெரிய வந்தது.
கடைசி நேரத்தில் தனது பெயர் நீக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்ததாக யோகி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஆனால் பின்னர் தான் அதன் உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டார்.
யோகியை முதல்வராகத் தேர்வு செய்வதற்கு முன்பு வரை, நரேந்திர மோதி, செல்வாக்கு குறைந்தவர்களை தான் மாநில முதல்வராக தேர்வு செய்வார். ஆனால் வலிமையானப் பின்னணியை கொண்ட யோகியை தேர்வு செய்தது அவருக்கு அசாதாரணமானதாகப்பட்டது. ஏனென்றால் அவரைப் போலவே யோகியும் ஒரு வெகுஜன பின்னணி கொண்ட இந்துத்துவா தலைவர். ஆனால் அவரது வயது மற்றும் இந்துத்துவா மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

இன்னிங்ஸ் ஆரம்பம்
'மத்தியில் மோதி, உ.பி.யில் யோகி' என்ற கோஷத்துடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கினார் யோகி ஆதித்யநாத். அவர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் உத்தரபிரதேச செயலக இணைப்பு கட்டடத்துக்கு காவி வர்ணம் பூசினார்.
அதன் பிறகு அவர் ஒரு அரசாணையைப் பிறப்பித்தார், அதன்படி வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இடையேயான திருமணம் மற்றும் மத மாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ள குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி பெற வேண்டும்.
அவர் இதுபோன்ற பல விரைவான முடிவுகளை எடுத்தார், இது அவரது இந்துத்துவா பிம்பத்தை தொடர்ந்து வலுப்படுத்தியது.
அக்டோபர் 16, 2018 அன்று, அலகாபாத் மாவட்டத்தை `பிரயாக்ராஜ்’ என்றும், மூன்று வாரங்களுக்குப் பிறகு, பைசாபாத் மாவட்டத்தை `அயோத்தி’ என்றும் மறுபெயரிட்டார்.
பிஜ்னோரில் ஆற்றிய உரையில், 'இனி எந்த ஜோதாபாயும் அக்பருடன் செல்ல மாட்டார்' என்று குறிப்பிட்டார். யோகி அரசு மற்றொரு புதிய பரிசோதனையை மேற்கொண்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களுக்கு அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததற்காக அபராதம் விதித்தார்.
'யோகி ஆதித்யநாத், மதம், அரசியல் மற்றும் அதிகாரம், தி அன்டோல்ட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில், சரத் பிரதான் மற்றும் அதுல் சந்திரா, "மார்ச் 2019 இல், லக்னோ காவல்துறை 57 போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அவர்கள் போராட்டக்காரர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் முகவரிகளை பொதுவில் வெளியிட்டனர். யோகியின் இந்த செயல்பாடுகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்ஸின் கண்களுக்கு மிகவும் சிறந்த நடவடிக்கைகளாக கருதப்பட்டது.”
இருப்பினும், இந்த செயல்பாடுகளை அலகாபாத் உயர்நீதிமன்றம் `தவறு’ என்று கண்டறிந்தது. மார்ச் 2020 இல் இந்த விளம்பர அறிவிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டுவது குடிமக்களின் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகவும், போராட்டம் நடத்துவது மக்களின் அரசியலமைப்பு உரிமை என்றும் கூறியது.
யோகிக்கு எதிரான முயற்சி தோல்வி

பட மூலாதாரம், TIMES GROUP BOOKS
ஷியாம்லால் யாதவ் தனது புத்தகத்தில், 2022 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, யோகியை நீக்குவதற்கு பாஜக மேலிடம் ஏறக்குறைய முடிவெடுத்துவிட்டதாகவும், ஆனால் அதைத் தடுத்து நிறுத்துவதில் அவர் வெற்றி பெற்றதாகவும் எழுதியுள்ளார்.
ஷ்யாம்லால் யாதவ் கூறுகையில், "யோகி பதவியில் இருந்து நீக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருந்தது. துணை முதல்வர் மெளரியாவுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன, ஆனால் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் தலையீட்டால், பின்னர், யோகி திடீரென மெளரியாவின் வீட்டுக்கு சென்று பிரச்னைகளை சரி செய்ய முயன்றார். அதற்குள் யோகியின் புகழ் கட்சியைத் தாண்டி பரவியது, அவர் மற்ற மாநிலங்களுக்கும் பிரசாரத்திற்கு அழைக்கப்பட்டார்.
ஷியாம்லால் மேலும் கூறுகையில், " அதன் பிறகு, யோகியை நீக்குவது இது சரியான நேரம் அல்ல என்று கட்சியின் உயர்மட்டத் தலைமை உணர்ந்தது. லக்னோவில் பிரதமர் நரேந்திர மோதியும் யோகியும் சந்தித்த போது இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. யோகி மோதியை சந்தித்துவிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டார். பிரதமர் மோதி தன் தோள் மீது கைபோட்டிருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, 'நாங்கள் உடல் மற்றும் மனதை அர்ப்பணித்து, ஒரு உறுதிமொழி ஏற்று கொண்டோம். நாங்கள் தேசத்தில் சூரிய உதயத்தை சாத்தியப்படுத்த வேண்டும். நாங்கள் ஆகாயத்தை விட உயரமான வளர்ச்சியை எட்ட வேண்டும்” என்று பதிவிட்டார்.
அதன்பிறகு 2022 தேர்தலில் யோகி தலைமையில் பாஜக வெற்றி பெற்றது.
புல்டோசர் மற்றும் என்கவுன்டர்
2022 சட்டமன்றத் தேர்தலில், உத்தரபிரதேசத்தில் யோகியின் தலைமையில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. முதலமைச்சராக, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதையும், குற்றவாளிகளை ஒடுக்குவதையும் தனது அடையாளமாக மாற்றினார்.
மாநிலத்தின் சொல்லகராதியில் 'புல்டோசர்' மற்றும் 'என்கவுன்டர்' ஆகியவை முக்கிய வார்த்தைகளாக அதிகம் உச்சரிக்கப்பட்டது. ராம்பூரில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் முக்கிய தலைவர் அசம் கான் மீதும் யோகி அரசு நடவடிக்கை எடுத்தது.
யோகியின் `புல்டோசர்’ அரசியல் அவரது முக்கிய அடையாளமாக மாறியது. பல பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் யோகியின் பாணியைப் பின்பற்றினர்.
ஷியாம்லால் யாதவ் கூறுகையில், "சௌத்ரி சரண் சிங் காலத்தில் இருந்து, மேற்கு உத்தப்பிரதேசத்தில் ஜாட் மற்றும் முஸ்லிம்களின் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் 2013 இல் முசாபர் நகர் கலவரத்தால் அது உடைந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) எதிர்ப்பாளர்களின் சொத்துகளை கைப்பற்றுவது பற்றி யோகி பேசினார். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அவரின் செல்வாக்கை அதிகரித்தது. கட்சியின் தொண்டர்களுடன் அவரை நெருக்கமாக்கியது. அது தேர்தலில் அவருக்கு பலனளித்தது.
உத்தரபிரதேச வரலாற்றில் தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தது மட்டுமின்றி அடுத்த முறை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முதல்வர் என்ற பெருமையை பெற்றார்.
கட்சியில் அவரது அந்தஸ்து அதிகரித்து தேசிய அளவிலான தலைவராக பார்க்கப்பட்டார். சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், பாஜகவின் தலைமை பிரசார முகவராக அவர் செயல்பட்டார், ஆனால் எதிர்பார்த்தபடி பலன் கிடைக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பாஜக மேலிடத்துடன் மோதலா?
பாஜகவின் மேலிடத்திற்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையேயான உறவில் மீண்டும் பதற்றம் உருவாகி வருவது போன்ற விவாதங்கள் வலுப்பெறத் தொடங்கியது.
உத்தரபிரதேசத்தில் பாஜக பின்னடைவுக்கு யோகி ஆதித்யநாத் எந்த அளவிற்கு பொறுப்பேற்க முடியும் என்று அரசியல் ஆய்வாளர் அபய் குமார் துபேயிடம் கேட்டேன்.
இந்த தேர்தலில் யோகி ஆதித்யநாத்தின் பங்கு இருந்திருந்தால் அவர் மறுபரிசீலனை செய்ய முடியும். ஆனால் இந்த மக்களவைத் தேர்தல் முழுவதுமாக பாஜக மேலிடத்தின் கட்டுப்பாட்டில் நடந்தது. தேர்தல் முழுக்கமுழுக்க அமித் ஷா கையில் தான் இருந்தது. தொகுதி ஒதுக்கீட்டை அவரே முடிவு செய்தார். அவரது விருப்பப்படி ஒவ்வொரு தொகுதியையும் அமித்ஷா நிர்வகித்து வந்தார்.
துபே கூறுகையில், "யோகியின் ஒரே வேலை நட்சத்திரப் பிரசார முகவராக உ.பி. முழுக்க சுற்றுப்பயணம் செய்வதும், மத அடிப்படையில் பிரிவினை சார்ந்த உரைகளை நிகழ்த்துவதும் மட்டுமே. அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றினார், எனவே இந்தத் தோல்விக்கு அவர் முழுமையாகப் பொறுப்பேற்க முடியாது. இந்த தோல்வியின் பொறுப்பை யோகி மீது சுமத்த யாராவது முயற்சி செய்தால் அது சதியாக தான் இருக்கும்.” என்றார்.
யோகி ஓரங்கட்டப்படுவாரா?

இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்த போதிலும், பாஜக தலைமையால் உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளை ஜீரணிக்க முடியவில்லை. உத்தரகாண்ட், பிகார், மத்தியப் பிரதேசம், டெல்லி போன்ற உ.பி.க்கு அருகில் உள்ள மாநிலங்களில் பாஜக சிறப்பாக செயல்பட்டது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2022 சட்டமன்றத் தேர்தல்களில் மகத்தான வெற்றிக்குப் பிறகு, சில வட்டாரங்களில் யோகி ஆதித்யநாத்துக்கு தேசியளவில் அதிகாரம் கிடைக்கும் சாத்தியக்கூறுகளைப் பற்றிய விவாதம் துவங்கியது. அவர் அடுத்த தலைமுறை பாஜக தலைவராகவும் அவர் பார்க்கப்பட்டார்.
ஆனால் சமீபத்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்த சாத்தியக்கூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதா?
இதுகுறித்து அபய் குமார் துபே கூறுகையில், “யோகிக்கு எதிராக அனுப்ரியா படேல் எழுதிய கடிதம், மீடியாக்களுக்கு வழங்கப்பட்ட விதமே, யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் இது நடந்துள்ளது என்பதற்கு சான்றாகும். இத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரப்பிரதேசம் எவ்வளவு முன்னோடியாக உள்ளது என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் ஒரு செய்தி வெளியிடப்பட்டது.” என்றார்.
உத்தரபிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று மத்திய அமைச்சர் அனுப்ரியா பட்டேலின் பகிரங்க கடிதத்தை அபய் துபே குறிப்பிட்டார்.
துபே மேலும் கூறுகையில், "யோகியின் அரசியல் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுகின்றன. `புல்டோசர்’ அல்லது `என்கவுன்டர்’ அரசியல் செயல்பாடுகள் பொருத்தமானதாக இருக்கும் வரை, அவரது நம்பகத்தன்மை வீழ்ச்சியடையாது." என்றார்.
யோகியைப் பற்றி பாஜக எப்போதும் மதிப்பீடு செய்து கொண்டே இருக்கிறது, இன்று மீண்டும் அந்த மதிப்பீட்டின் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது என்று அபய் துபே கூறுகிறார்.
அவர் கூறுகையில், "இன்றைக்கு அவர் மீது நிறைய எதிர்மறையான கருத்துகள் நிலவுகின்றன. தேர்தலில் வெற்றி பெற யோகி உதவவில்லை என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவர் பாஜகவின் வட்டத்தில் சிக்கியுள்ளார். அதேசமயம் பாஜகவால் அவரை வெளியேற்றவும் முடியவில்லை”
வரும் நாட்களில் பாஜக மேலிடத்திற்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் இடையேயான உறவுகள் மேம்படுமா அல்லது விரிசல் அதிகரிக்குமா என்று அரசியல் பார்வையாளர்களால் உற்றுநோக்கப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












